நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, July 05, 2019

திருவாரூரில் திருவிழா - 3

(2010ல் எழுதப்பட்ட ஏழு வார தொடர்கதை)
அத்தியாயம் – 3
"ஆயிரம் ரூபாய்க்கா சோப்பு வாங்கிப் போட்டுக் குளிக்கப்போற?...ரொம்ப பில்டப் கொடுக்காம சொல்லு..."என்று பேராசிரியர் சாதாரணமாகத்தான் கேட்டார்.
"ரின் சோப்."என்று துணிக்குரிய சலவை சோப்பின் பெயரை சொன்னதும் மற்ற மாணவர்களும் மாணவிகளும் சிரிக்க, பேராசிரியரின் முகம் சுருங்கி விட்டது.
"என்ன கிண்டலா?"
"இல்ல சார். உங்க மிசஸ் கிட்ட வேணுன்னா கேளுங்க... காஸ்ட்லியான புடவையைத் துவைக்க பயன்படுத்துற காஸ்ட்லியான சோப்." என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னதும் உடனடியாக வெற்றியை என்ன செய்வது என்று புரியாமல் திகைத்தார்.
"அது சரி...நீ குளிக்கிறதே இல்லைன்னு சொன்னாங்களே...ஆனா ரின் சோப் போட்டு குளிக்கிறேன்னு நீ ராங் டேட்டாதானே கொடுக்குற?"என்று சமாளிக்கப் பார்த்தார்.
"குருநாதரான நீங்க குளிச்சே பல வருஷம் ஆகுது. நான் உங்களுடைய உண்மையான சிஷ்யன் சார்." என்ற வெற்றி எதற்கும் துணிந்து விட்டதாகத் தோன்றியது.
'இவன் பேசுறதுலயே பி.ஹெச்.டி பண்ணிட்டு வந்துருப்பான் போலிருக்கே.' என்று தனக்குள்ளேயே முணுமுணுத்த பேராசிரியர், இவனிடம் நேரடியாகப் பேசி புண்ணியம் இல்லை என்று உணர்ந்தார்.
"ஏய்...வெற்றி...இந்த மாதிரி வெட்டித்தனமா பேசி நேரத்தை வீணடிக்கிறியா... ஹெச். ஓ. டி ரூமுக்கு வா. உனக்கு தண்டனை கொடுத்தாதான் மத்தவங்களுக்கு பயம் இருக்கும்." என்று சொன்னதும் மற்ற மாணவர்களும் மாணவிகளும் வெற்றிக்கு ஆப்புதான் என்று முடிவு செய்துவிட்டார்கள்.
"ஓ...நான் ரெடி...வாங்க...நீங்க பேசுனதை நானும் சொல்றேன்.யார்மேல நடவடிக்கை எடுக்குறதுன்னு அவரே முடிவு பண்ணட்டும்." என்ற வெற்றி அவன் அமர்ந்திருந்த இடத்தை விட்டு பேராசிரியரின் அருகில் சென்றான்.
"நான் என்ன பேசினேன்...ரின் சோப் போட்டு குளிக்கிறேன் அப்படின்னு திமிரா பேசினது யாரு... பக்கத்துல ஒரு பொண்ணு இருந்தாலே உங்க சவுண்டு அதிகமாயிடும். இப்ப கேட்கவா வேணும்..."
"சார்...எங்க வயசுக்கு இந்த மாதிரி தோணலைன்னாதான் அது அப்நார்மல். பொண்ணுங்களைப் பார்த்ததும் பசங்க ரத்தம் சுறுசுறுப்பாகும். பொண்ணுங்களுக்கு பசங்களைப்பார்த்ததும் உள்ளுக்குள்ள பொங்கும்.
இதெல்லாம் அவங்க செய்யலை. ஹார்மோன் பண்ற வேலை. இப்படி எல்லாம் நடக்கலைன்னாதான் எதோ கோளாறுன்னு அர்த்தம். என்ன...எதுக்கும் ஒரு வரையறை உண்டு. அத்துமீறினா யாராச்சும் அடங்க வெச்சிடுவாங்க. இது எனக்கு தெரியும்.
ஆனா எங்களுக்கு வழிகாட்டியா இருந்து நாங்க தப்பா வார்த்தைகளை விட்டா கண்டிக்க வேண்டிய நீங்க பேசுன வார்த்தை எதுவும் சரியில்லையே." என்று வெற்றி சொன்னதும் அடுத்து அவன் என்ன சொல்லப்போகிறான் என்று மாணவர்கள் மாணவிகளுடன் பேராசிரியரும் ஆர்வமானார்.

"ராம்குமார் கறுப்பா பிறந்தது அவன் தப்பா.அவங்க இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிகிட்டு இருக்காங்க.வகுப்புல நாங்க இத்தனை பேரு இருக்கும்போது இவன் கலரைப் பார்த்தா குளிக்கவே மாட்டான்னு தெரியுதுன்னு நீங்க எப்படி சொல்லலாம்.
இந்த மாதிரி வார்த்தைகளை நாங்க பயன்படுத்தினா எங்க தலையில தட்ட வேண்டிய நீங்களே இப்படின்னா நான் ஹெச் .ஓ.டி கிட்டதான் போகணும்னு நினைச்சிருந்தேன். பரவாயில்லை. நீங்களே கூப்பிட்டுட்டீங்க...வாங்க போகலாம். ஹெச். ஓ.டி என்ன சொல்வாரோ...
ஆனா நான் இந்த பிரச்சனையை வெளியில கொண்டு போனா சாதிக்கலவரம் வருமேன்னுதான் கொஞ்சம் யோசிக்கிறேன்." என்றவன் சட்டென்று ராம்குமார் பக்கம் திரும்பி, "டேய்...நான் உனக்காக இவரைப் பகைச்சுக்குறேன். நாளைக்கு ஏதாவது ஒரு பிரச்சனைன்னா சார் என்னைய நல்லவரு... வல்லவருன்னுதான் சொன்னாரு. வெற்றி கொஞ்சம் செவிடு... அவன் தப்பா காதுல வாங்கியிருக்கான்னு சொல்லி எனக்கே ஆப்பு வெச்சுடமாட்டியே."என்றான்.
"எது நடந்தாலும் நான் உன் பக்கம் இருப்பேண்டா..."என்று அவன் மறுபடி கண்கள் கலங்கினான்.
"இப்படியே நின்னுகிட்டே இருந்தா எப்படி...வாங்க சார்...போகலாம்."என்று வெற்றி வகுப்பறையை விட்டு வெளியேறப் போனான்.
"என்னைக்காவது நீ என் கிட்ட வசமா சிக்காமயா போயிடுவ?...அன்னைக்கு கவனிச்சுக்குறேன்...இப்ப போய் உட்கார்." என்று பேராசிரியர் எங்கேயோ பார்த்துக்கொண்டு சொன்னார்.
"எஸ்கேப்..."என்று வெற்றி ஒரு சத்தம் கொடுத்தான்.
பேராசிரியர் இவனைப் பார்த்து முறைக்கவும்,"நான் என்னைச் சொன்னேன்." என்று கூறிவிட்டு ஏற்கனவே அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்றான்.
இந்த ஒரே ஒரு காரணத்தால்தான் வணிகவியல் துறையில் உள்ள பெரும்பாலான  பேராசிரியர்கள் வெற்றியை எதுவும் கேட்பதில்லை.
சிலர் அவன் மீது வன்மமாக இருப்பதால் சின்ன பிரச்சனையிலாவது சிக்க மாட்டானா என்றுதான் காத்திருந்தார்கள்.
ஆனால் வெற்றி அந்த வயதுக்கே உரிய குறும்புகளோடு இருந்தாலும் அவன் அதிகமாக மூக்கை நுழைக்கும் சம்பவங்களில் எதிராளியின் மீதே முழுத் தவறும் இருந்தது. இதனால் எல்லாப் பேராசிரியர்களும் இவன் விஷயத்தில் செயலற்றவர்களானார்கள்.
முதல் செமஸ்டர் முடிந்து தேர்வு முடிவுகளும் வந்தன. இருபத்தெட்டு மாணவிகளும் எழுபது சதவீதத்துக்குமேல் மதிப்பெண் எடுத்திருந்தார்கள். மாணவர்களில் வெற்றியைத் தவிர மற்ற அனைவரும் அறுபது சதவீதத்தை எட்டவில்லை.
2010ஆம் ஆண்டு இந்த கதையை எழுதிய போது 
ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாயமாக 
வலைப்பூவில் வெளியிட்டபோது
தினம் ஒரு போஸ்டராக வடிவமைத்திருந்தேன்
மதிப்பெண் பட்டியலை வாசித்த பேராசிரியர், எதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க என்று சொன்னதும் முதல் ஆளாக மதிப்பெண்ணை மீண்டும் மீண்டும் கேட்டது வெற்றிதான். ஒரு நிலையில் வெறுத்துப்போன அந்த பேராசிரியர், "இந்தா...லிஸ்ட்...நல்ல பூதக்கண்ணாடியை வெச்சு பார்த்துட்டு கொடு..." என்று அவனிடமே மதிப்பெண் பட்டியலைத் தந்துவிட்டார்.
விஷயம் இதுதான். வெற்றி, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களில் மட்டும் பார்டரில் பாஸ் பண்ணியிருந்தான். ஆனால் கணக்கு உள்ளிட்ட பிரதான பாடங்கள் மற்றும் துணைப்பாடங்களில் மிக அதிக மதிப்பெண் பெற்றிருந்ததுதான் அவனாலேயே நம்ப முடியவில்லை.சராசரி எண்பத்தாறு சதவீதம் வந்தது.
அந்த வகுப்பு நேரம் முடிந்து ஆசிரியர் வெளியில் சென்றதும், "மாப்ள...நம்ம மானத்தைக் காப்பாத்திட்டடா..."என்று வெற்றியை சூழ்ந்து கொண்டார்கள்.
அடுத்த வகுப்பு, சோப்பு பேராசிரியர்.
வந்ததுமே வெற்றியை எழுந்து நிற்க சொன்னார்.
"நீ பரிட்சை எழுதுன ஹாலுக்கு நான் மட்டும் சூப்பர்வைசரா வந்திருக்கணும்...கண்டிப்பா நீ மாட்டிருப்படா..."
"கடைசி பெஞ்ச்ல இருந்தா மார்க் வாங்க கூடாதுன்னு உங்களுக்கு யாரு சார் சொன்னா...ரவிஷங்கர் சார்கிட்ட போய்தான் அக்கவுண்ட் ரூல்ஸ் கத்துகிட்டேன். இந்த அடிப்படையை ஒழுங்கா புரிஞ்சுகிட்டா உலகத்துல எந்த கம்பெனி கணக்கா இருந்தாலும் போட்டுடலாம்னுதானே சொல்லுவாங்க. அவரு எனக்கு தெளிவா புரிய வெச்சுட்டாரு. மார்க் எடுத்துட்டேன்."வெற்றி தன்னம்பிக்கையுடன் பதில் சொன்னான். ரவிஷங்கர் பெயரை சொன்னதும் இந்த பேராசிரியரின் முகத்தில் எரிச்சல். மாணவர்களுக்கு பாடம் நடத்தினால் மட்டும் போதாது. நம்முடைய சில அலட்சியம்தான் அவர்கள் வீணாப்போவதற்கு காரணம் என்று அழுத்தமாக சொல்பவர்தான் ரவிஷங்கர். அதனால் சக பேராசிரியர்களுக்கே இவரைப் பிடிக்காது.
"அப்புறம் ஏன் பத்து தடவை மார்க் ஷீட் வாங்கிப்பார்த்த?"
"மெயின் பேப்பர்கள்ல எடுத்த மார்க்குல ஒண்ணும் சந்தேகம் இல்ல சார்.தமிழ் கூட ஓ.கே. ஆனா ஆங்கிலத்துல எப்படி பாஸ் பண்ணினேன்னு எனக்கே புரியலை."என்றதும் மாணவர்கள் மத்தியில் உற்சாக கூச்சல்.
இதற்கு அந்த பேராசிரியரால் எதுவும் பதில் சொல்ல முடியவில்லை. அப்போது ஹெச்.ஓ.டி இந்த வகுப்புக்குள் நுழைந்தார். எல்லாரும் எழுந்து நின்று வணக்கம் சொன்னார்கள்.
"உட்காருங்கப்பா." என்றவர், வெற்றியைப் பார்த்து "தம்பி...வாழ்த்துக்கள். நம்ம கல்லூரியில இந்த டிபார்ட்மெண்ட் ஆரம்பிச்சு இருபத்தஞ்சு வருஷம் ஆகுது. முதல் செமஸ்டர்லயே யாரும் இவ்வளவு மார்க் எடுத்தது இல்லை. உன் பேர்ல அடிக்கடி பெட்டி கேஸ் மாதிரி ஏகப்பட்ட புகார் வருது. ஆனா எல்லாமும் நேர்மையா நடக்கணும்னு நினைக்கிற பையன்னு ஒரு குற்றச்சாட்டைத் தவிர வேறு எதையும் சொல்லமுடியலை. அதனாலதான் விட்டு வெச்சிருக்கோம்.
இனியாவது படிப்புல முழு கவனம் செலுத்து.ஏன்னா இந்த ஒரு செமஸ்டர்ல நிறைய மார்க் எடுத்தா போதாது. தொடர்ந்து இதே அளவு மார்க் எடுத்தாதான் முதலிடத்தை தக்க வெச்சுக்க முடியும்."என்றார்.
"சார்...என்னைய நம்பாதீங்க. நாங்க எல்லாம் பவுலர் மாதிரி. அடிச்சா சிக்சர். சொதப்புனா கிளீன் போல்டு. இப்ப இவ்வளவு மார்க் வாங்கின நான் அடுத்த செமஸ்டர்லயே எல்லா சப்ஜெக்ட்லயும் அரியர் வைக்க வாய்ப்பு உண்டு.
நம்பகமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்னு சொல்லணும்னா இவங்கதான் சார்." என்று பெண்களைக் காட்டினான்.

"மார்க் எடுக்க மாட்டேன்னு எவ்வளவு அழகா சொல்றான் பாரு..."என்று சிரித்த ஹெச்.ஓ.டி மாணவிகளைப் பார்த்து, "இதுக்குப் பேர்தாம்மா தன்னடக்கம். விளையாட்டுல கூட ஒருத்தர் வெற்றி பெற்றா இன்னொருத்தர் தோல்வி அடைஞ்சுதான் ஆகணும்.
ஆனா படிப்புல அப்படி இல்லை.எல்லாருமே நூறுசதவீதம் எடுக்கலாம். யாருக்கும் பாதிப்பு இல்லை.அதுலயும் உங்க  படிப்பு இருக்கே...இது எல்லா இடங்களிலும் அற்புதமான வேலை வாய்ப்பை அடக்கி வெச்சிருக்குற அமுதசுரபி.
சூப்பர் மார்க்கெட்ல இருந்து விண்வெளி ஆராய்ச்சிமையம், பெரிய மருத்துவமனை, மென்பொருள் நிறுவனம்னு எல்லா இடத்துலயும் அக்கவுண்ட் படிச்சவங்களுக்கு ஒரு வேலையாவது இல்லாம போகாது. அதனால தன்னம்பிக்கையோட படிங்க. எல்லாரும் சூப்பரா மார்க் எடுங்க.
போட்டி இருக்கட்டும். உங்க விஷயத்துல பொறாமை வேண்டாம்."என்று சொன்ன ஹெச்.ஓ.டி கிளம்பிவிட்டார்.
'குருட்டுப்பூனை விட்டத்துல பாய்ந்ததுன்னு சொல்லுவாங்க.அந்த மாதிரி முதல் செமஸ்டர்ல ஓஹோ புரொடக்ஷன்சா மார்க் எடுத்தது தப்பா போச்சே. ஹெச்.ஓ.டி வேற நம்பிக்கையோட சொல்லிட்டுப் போறாரு. அவருகிட்ட என்னைய நம்பாதீங்க... அப்படின்னு கேர்ள்சை காண்பிச்சா தன்னடக்கம்னு சொல்லிட்டுப்போறாரு...சரி...எவ்வளவோ பண்ணிட்டோம். இதைப் பண்ண மாட்டோமா.'என்று வெற்றி தனக்குத்தானே பேசிக்கொண்டான்.
"அடுத்த செமஸ்ட்டர்ல எப்படி காப்பி அடிக்கிறதுன்னு யோசிக்கிறியா"என்று சோப்பு பேராசிரியர் கேட்டார்.
"உங்களை மாதிரியே நான் இருப்பேன்னு நினைக்காதீங்க சார்.ஒருத்தன் தற்கொலை செஞ்சுக்க நினைச்சு உங்க கிட்ட வந்தா அந்த நொடியே அவன் செத்துடுவான் சார். உங்களை மாதிரி ஒரு அவ நம்பிக்கையை விதைக்கிற ஆசிரியரை நான் பார்த்ததே இல்லை."என்று வெற்றி சொன்னதும் பேராசிரியர் வாயை மூடிக்கொண்டார்.
வெற்றியோட கல்லூரி அனுபவத்தை விவரிச்சுகிட்டே போனா கதை முடிய மாசக்கணக்காயிடும். அதனால முதல் வருஷப் படிப்புல இருந்து மூணாவது வருஷத்துக்கு ஆறு நட்சத்திர எழுத்துலயே மாறிடுவோம்.
******
வெற்றி - வணிகவியல் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறான்.
மூன்று ஆண்டுகளும் வெற்றி சிக்சராக அடித்தது வணிகவியல் தொடர்பான பாடங்களில்தான். இரண்டாவது செமஸ்டரில் இருந்து மூன்று ஆங்கிலத் தாள்களிலும் அவன் பாஸ் மார்க் எடுக்கும் முடிவில் இல்லை என்றுதான் மற்றவர்கள் நினைத்தார்கள்.
வெற்றி சக மாணவிகள் பலரிடமும் நல்ல தோழனாகப் பழகினான்.ஆனால் எப்போதுமே சந்தியாவுக்கும் அவனுக்கும் மட்டும் அடிக்கடி முட்டிக் கொண்டது. சந்தியாவின் உள் மனம் அவனை வெறுக்கச் சொல்லவில்லை என்றாலும் எதோ ஒரு ஈகோ அவனிடம் மனம் விட்டுப் பழக நினைப்பதை தடுத்தது.
அன்று புதன்கிழமை. சந்தியா, கல்லூரிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தாள்.
அவள் அம்மா சிவகாமி,"சந்தியா...சாயந்திரம் சீக்கிரம் வந்துடு.மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்க..."என்றாள்.
"சரிம்மா..." என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்துவிட்டுக் கிளம்பினாள்.
கட் பண்ணினா, வெற்றியின் வீடு. (கட்பண்ணலைன்னா?)
"வெற்றி...இன்னைக்கும் வெட்டித்தனமா சுத்திகிட்டு இருக்காம நேரத்தோட வீடு வந்து சேர்.சாயந்திரம் பொண்ணு பார்க்கப்போறோம்." என்று அவன் அப்பா சொன்னார்.
"இதுக்கெல்லாம் நான் எதுக்குப்பா... நீங்க போய் பார்த்துட்டு வந்தா பத்தாதா?"
"அப்படியே மண்டையில போட்டேன்னா...எங்களுக்கு தெரியாதா... பெரும்பாலும் என் பேச்சைக் கேட்கவே மாட்ட. இப்பவாச்சும் எதிர்த்துப் பேசாம சொன்னபடி செய்." என்று அவரின் குரல் கடுமையானது.
"எந்த ஊருக்குப்பா..."
"வெளியூரா இருந்தா மத்தியானமே கிளம்ப மாட்டோமா?...இங்க ஐயனார் கோயில் தெருவுலதாண்டா. அந்த பாராமெடிக்கல் காலேஜீக்குப் பக்கத்து வீடு." என்ற அவர் அலுவலகம் கிளம்பிவிட்டார்.
வெற்றிக்குதான் சொரேர் என்றது. 
இதைக்கேட்டதும் அவன், "அய்யய்யோ...அது அந்த சந்தியாவோட வீடாச்சே... மாப்பு...உனக்கு வெச்சுட்டாங்கடா ஆப்பு..." என்று சத்தமாகவே பேசிவிட்டான்.
வெளியில் கிளம்பிய அவன் தந்தை, "என்னடா சொன்ன..."என்று திரும்பி வந்துவிட்டார்.
–தொடரும்...

No comments:

Post a Comment