நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, April 12, 2019

செங்கம் டிராவல்ஸ் - 5


பகுதி 5

12–04–2019

திருவாரூர் சரவணன்
அர்ச்சனா பத்து ஆண்டுகளுக்கு பிறகு அவனை சந்தித்த விஷயத்தை மலர்வழியிடம் சொன்னதும் அவள், ’’ஆக, உன் அண்ணன் கல்யாணத்துக்கு வர்றப்பவே உன் கல்யாணத்தையும் பார்த்துடலாம்னு சொல்லு.’’ என்று போனிலேயே அர்ச்சனாவை கிண்டலடித்தாள்.
‘‘விடியற்காலையில அவனைப் பார்த்ததுல இருந்து எனக்கு பழசு மொத்தமும் ஒவ்வொண்ணா நினைவுக்கு வந்துகிட்டு இருக்கு... அப்பதான் அவன் ஒரு வார்த்தை கூட என்கிட்ட பேசுனதே கிடையாது. இப்பவும் என்னையப் பார்த்து அதிர்ச்சி அடைஞ்சதோட சரி... கிட்டக்கயே வரலை. அதனாலதான் அவன் என்ன செய்யப்போறானோன்னு பயமா இருக்கு.



ஏண்டி பேயறைஞ்ச மாதிரி இருக்கன்னு அம்மா கேட்குற கேள்விக்கு பதில் இல்லை. சுத்தி நம்ம சொந்தக்காரங்க இருக்குறாங்களே, அவங்க ஒரு பக்கம் ஏன் இப்படி கனவு கண்டுகிட்டு இருக்கன்னு கிண்டல் பண்றாங்க...
உன் கிட்ட பேசினா தெளிவு கிடைக்கும்னு பார்த்தா நீயும் உன் பங்குக்கு ஓட்டுற...’’ என்றாள் அர்ச்சனா.
‘‘சரி சரி கோபிக்காத... அந்த மாதிரி நடந்து உன் உடம்புல ரத்தத்தை பார்த்ததும் கோபத்துல ரெண்டு வார்த்தை கத்துனேன். அன்னைக்கு ஓடுனவன். இத்தனை வருசம் கழிச்சு அதுவும் எதார்த்தமாத்தான் இந்த பயணத்துக்குள்ள வந்துருக்கான். இவ்வளவு வீரதீர பரமாக்கிரமசாலி உன் கிட்ட வந்து பேசலைன்னு கவலைப்படுற... என் ஒருத்தி பேச்சுக்கே பயந்து ஓடுனவன் உன்னைச் சுத்தி முக்கால்வாசிப்பேர் உன் சொந்தக்காரங்க இருக்கும்போது எப்படி தைரியமா வந்து பேசுவான்?’’ என்று மலர்விழி எதிர்க்கேள்வி எழுப்பினாள்.
‘‘நீதானடி இப்படி அவமானப்பட்டு போற பசங்க ஆசிட் அடிச்சாங்க, கத்தியால குத்துனாங்கன்னு கதை கதையா சொன்ன... இப்ப இப்படி பேசுற?’’
‘‘ஆமா... சொன்னேன். யார் இல்லைன்னு சொன்னா? அந்த மாதிரி தப்பு காரியம் செய்யுறதுக்கு ஒண்ணு துணிச்சல் வேணும்... இல்லன்னா கிறுக்கு புடிச்சவனா இருக்கணும். உன் ஆள் ரெண்டு லிஸ்ட்டுலயுமே இருக்க முடியாது.
ஏன்னா, துணிச்சல் உள்ளவன்னா நான் ஒரு நாள் மிரட்டுனதுக்கே உன் கண்ணுல படாம காணாமப் போயிருக்க மாட்டான். தொடர்ந்து உன்னைய ஆஸ்பத்திரியிலயோ, வேற எங்கேயோ பார்த்து உடம்பு எப்படி இருக்கு... நீ என்ன ஆனன்னு தெரிஞ்சுகிட்டு, நீ தேறி வந்ததுக்கு அப்புறம் உன்னைய தொடர்ந்து பார்த்து காதலை சொல்ல முயற்சி பண்ணியிருப்பான்.
கிறுக்கு புடிச்சவனா இருந்தா அப்பவே உன் மேலயாச்சும் என் மேலயாச்சும் ஏதாவது தாக்குதல் நடத்தியிருப்பான்.
ஆக, இவன் டீன் ஏஜ்ல இருக்குற கோடிக்கணக்கான பசங்க செய்யுற வேலைக்கு மேல எதையும் செய்யாத அல்லது செய்யுறதுக்கு தைரியம் இல்லாத சராசரியான ஒரு ஆள்.
டீன் ஏஜ் வயசுல கிட்டத்தட்ட ஒரு வருசம் அந்த சம்பவம் தவிர வேறு எந்த வகையிலயும் நம்மை டிஸ்டர்ப் பண்ணாம ஃபாலோ பண்ணின ஒருத்தன் ஒரே நாள்ல காணாமப் போனதும் உன் ஆழ் மனசுல அவன் நினைவு பதிஞ்சிருக்கலாம்... உனக்கும் வீட்டுல எத்தனையோ மாப்பிள்ளை பார்த்தும் எதுவும் திருப்தியா தெரியலைன்னு சொல்ற... ஒருவேளை இவன்தான் உனக்குன்னு பிறந்தவனோ என்னவோ... நாங்களும் இங்க கோயம்புத்தூர்ல இருந்து பஸ் ஏறிட்டோம். மதியம் வந்துடுவேனே... வாய்ப்பு இருந்தா அவன்கிட்ட நான் பேச முடியுதான்னு பார்த்து அதுக்கப்புறம் முடிவு செய்வோம்...
இந்த வயசுல நீ எடுக்குற முடிவுக்கு அவ்வளவு சீக்கிரம் பேரண்ட்ஸ்கிட்ட இருந்து எதிர்ப்பு வரும்னு சொல்ல முடியாது... நாம நேர்ல பேசுவோமா...’’ என்று அலைபேசி இணைப்பை மலர்விழி துண்டித்தாள்.
‘‘என்னம்மா அர்ச்சனா... வெந்நீரை ஆறிப்போனதுக்கு அப்புறம் குடிச்சா நல்லாவா இருக்கும்...’’ என்று விஜயகுமார் சொல்லவும் கையில் இருந்த காப்பி டம்ளரைப் பார்த்தாள்.
அது சுத்தமாக ஆறிப்போய் இருந்தது.
‘‘பெரியப்பா... கடைக்காரன்கிட்ட சொன்னா உங்களை இங்கேயே கட்டி வெச்சி உரிச்சிடுவான்...’’ என்றவாறு ஒரு வாய் குடித்துப்பார்த்தாள்.
பெரியப்பா சொன்னது உண்மைதான். ஏதோ அழுக்குத் தண்ணியை குடிப்பது போல் இருந்தது. அப்படியே ஓரமாக கீழே ஊற்றி விட்டு டம்ளரை அருகிலிருந்த மேஜையில் வைத்து விட்டு பேருந்துக்கு சென்றாள்.
‘‘வாங்குன காப்பித்தண்ணியை குடிக்காம அப்படி யார்கிட்டடி போன்ல அரட்டை...’’ இது சித்ரா.
‘‘மலர்விழிகிட்டதாம்மா பேசுனேன்...’’
‘‘ஆங்... கிளம்பிட்டாளாம்மா? அவ பொண்ணு, அதான் அந்த குட்டிப்பொண்ணு தன்ஷிகா எப்படி இருக்காளாம்... யார் யார் வர்றாங்களாம்...’’ என்று கேள்விகளை அடுக்கினாள் சித்ரா.
‘‘அவ பஸ் ஏறிட்டாளாம்... மத்த எதையும் நான் கேட்கலை... வேற செய்தி பேசுனோம்...’’ என்று எரிச்சலாக அர்ச்சனாவிடமிருந்து பதில் வந்தது.
‘‘கல்யாணத்துக்கு கிளம்பி வர்றவகிட்ட அதைப்பத்தி கேட்காம, கல்யாணமாகி புள்ளை பெத்தவகிட்ட பேசுறதுக்கு உனக்கு அப்படி என்ன இருக்குது?’’ என்று கேட்ட சித்ராவைப் பார்த்து முறைத்தாள்.
‘‘எனக்கு ஏண்டிம்மா வம்பு... சம்மந்தம் இல்லாம நீ எரிஞ்சு விழறதைப் பார்த்ததும்தான் உனக்கு இருபத்தேழு வயசு முடியப்போகுதே... இன்னும் கல்யாணம் செஞ்சு கொடுக்காம வீட்டுலயே வெச்சுகிட்டு இருக்குறதை நினைச்சு கவலை வருதுடி...
நான் என்ன பண்றது... நேரம் காலம் கூடி வரணும்... ஜாதகப் பொருத்தம் இருக்கணும்... ரெண்டு வீடும் ஒத்துப் போகணும்... மாப்பிள்ளைக்கு உன்னையப் பிடிக்கணும்... உனக்கு மாப்பிள்ளையை பிடிக்கணும்... எவ்வளவோ இருக்கு... ம்... ஆண்டவன் கண்ணைத் தொறக்க மாட்டெங்குறானே...’’ என்று வழக்கமான புலம்பலை ஆரம்பித்தாள் அவள்.
‘‘அம்மா... உன்கிட்ட இப்ப கல்யாணம் பண்ணி வையின்னு அழுதேனா... நாலு பேர் இருக்குற இடத்துல இப்படி எதையாச்சும் பேசி நான் கல்யாணத்துக்கு அலையுற மாதிரி பேசி மானத்தை வாங்காத...’’ என்று சிடுசிடுத்தாள்.
‘‘பஸ் ஓடுற சத்தத்துல பக்கத்துல இருக்குறவங்களுக்கு என்ன காதுல விழப்போகுது? நீ ஏன் இப்படி சீறி விழறே... நான் எதுவும் சொல்லலை தாயே...’’ என்று சொல்லிவிட்டு முகத்தை திருப்பி ஜன்னல் பக்கம் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் அவள்.
மதுரை மாநகரத்துக்குள் நுழைந்த பேருந்து தினமும் பழக்கப்பட்ட பாதையில் செல்வது போல் வளைந்து நெளிந்து சென்று மேல ஆவணிமூல வீதியில் இருந்த மண்டப வளாகத்துக்குள் நுழைந்து நின்றது.
‘‘எல்லா விதிமுறைகளையும் மதிச்சு கட்டின மண்டபம் போலிருக்கு.’’ என்றான் வைத்தியலிங்கம்.
‘‘எப்படி சொல்ற மாப்ள...’’
‘‘அதான் மண்டபத்துக்கு முன்னால பதினஞ்சு பஸ் நிறுத்துற அளவுக்கு இடம் இருக்கு. இல்லன்னா வாசல்ல டூவீலர் நிறுத்தக்கூட இடம் இருக்காதே...’’ என்று அவன் அடித்த ஜோக்கிற்கு அவனே சிரித்துக் கொண்டான். அக்கம் பக்கத்தில் இருந்த ஒரு சிலர் வேறு வழியின்றி சிரித்து வைத்தார்கள்.
‘‘சிம்பிளா டிபன் செஞ்சி வெச்சிருக்கோம்... எல்லாரும் சாப்பிட வாங்க...’’ என்று பெண் வீட்டாரின் வரவேற்பு வாய் நிறையவே இருந்தது. அசோகா அல்வா, இட்லி, சம்பா கோதுமை உப்புமா, மூன்று வகை சட்னி, சாம்பார், பூண்டு மிளகாய்ப்பொடி, போண்டா, ஆனியன் தோசை, பொங்கல், காபி என்று காலை அமர்க்களமாக இருந்ததைப் பார்த்து விட்டு வைத்தியலிங்கம், கவுண்டமணி ஒரு படத்தில் சொல்வதைப்போலவே, ‘‘இது சிம்பிளுங்களா உங்களுக்கு... இதை சாப்பிட்டாலே இன்னைக்கு பூராவும் பசி எடுக்காது போலிருக்கே...’’ என்று சொன்னவனை, ‘‘பேசாம இருடா’’ என்றான் சதீஸ்குமார்.
‘‘அடங்கப்பா... உன் மாமனார் வீட்டை நான் எதுவும் திட்டலியேடா... பாராட்டத்தானே செஞ்சேன்... அதுக்குள்ள புகுந்த வீட்டு மேல பாசத்தப்பாரு...’’ என்று வைத்தியலிங்கம் சொல்லவும் வெட்கப்பட்டது பெண்ணின் தந்தை சுந்தரவடிவேல்.
கூட்டத்தில் ஒரு பாட்டி, ‘‘சரி சரி... வளவளன்னு பேசிகிட்டு இருக்காதீங்க... சீக்கிரம் சாப்பிட்டுட்டு கிளம்புங்க... அழகர்கோவில், பழமுதிர்ச்சோலையை பார்த்துட்டு சரியா மதிய சாப்பாட்டுக்கு வந்துடலாம்... அப்புறம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்படியே மீனாட்சி அம்மனை தரிசனம் பண்ணியாச்சுன்னா, நிம்மதியா பொண்ணு மாப்பிள்ளை ஊர்வலம், நிச்சயதார்த்தத்தை பேஷா நடத்திடலாம்...’’ என்று குரல் கொடுத்தார்.
இதைக்கேட்டதும் எல்லாரும் சிரிப்புடன் சாப்பிடத் தொடங்க, வைத்தியலிங்கம், ‘‘என்னடா இது... ராத்திரி ஏழு மணிக்கு மாப்பிள்ளை அழைப்புன்னு சொன்னா, எட்டு மணிக்கு கூட இதோ புதுக்கோட்டையை தாண்டிட்டோம், திருப்பத்தூர் முனை திரும்பிட்டோம்னு போன்ல லைவ் கமெண்ட்டேட்டரி கொடுக்குற காலத்துல காலையில நாலரை மணிக்கு பஸ் புறப்படும்போதே நினைச்சேன்...
எல்லாரும் உன் கல்யாணத்துல ஓடி ஆடி வேலை பார்க்க வந்துருக்காங்களா? இல்ல... ஒருநாள் ஆன்மீக சுற்றுலா வந்தாங்களா... அந்த உண்மை எனக்கு தெரிஞ்சாகணும்...’’ என்றான்.
‘‘என்ன தம்பி இப்படி சொல்லிட்டீங்க... இந்த காலத்துல இப்படி சொந்தபந்தம் இவ்வளவு பேர் மாப்பிள்ளை வீட்டோட கிளம்பி ஒண்ணா வர்றதே பெரிய விஷயம்...
இவ்வளவு தூரம் வந்துட்டு மண்டபத்துலயே உட்கார்ந்து கதைபேசுறதை விட அக்கம் பக்கத்துல இருக்குற கோயில்களை தரிசனம் செஞ்சா வந்தவங்களுக்கும் ஒரு சந்தோஷம்... இந்த கல்யாணத்துல கலந்துகிட்டதையும் அப்பப்ப நினைச்சு பார்ப்பாங்க...
அவ்வளவு ஏன், நாங்க கூட என் பையன் கல்யாணத்துக்கு சேலம் போனப்ப, முதல் நாள் அங்கிருந்து எழுபது எண்பது கிலோ மீட்டர் தூரத்துல இருக்குற மேட்டூர் டேமுக்கு போனோம்... கல்யாணம் முடிஞ்சு ஏற்காடு மலை ஏறிட்டுதானே ஊருக்கு திரும்புனோம்...
கல்யாண வேலையை எல்லாம் நாங்க பார்த்துக்குறோம்... நீங்க சந்தோஷமா கோயில்களுக்கு போயிட்டு வாங்க...’’ என்றார் சுந்தரவடிவேல்.
‘‘உங்க சம்மந்தி வீட்டுல உங்களை சந்தோசப்படுத்துன மாதிரி இப்போ நீங்க புது சம்மந்தி குடும்பத்தை குதூகலப்படுத்தி பார்க்குறீங்க... மகிழ்ச்சி...
அதுசரி... கல்யாணம் முடிஞ்சதும் எல்லாரும் ஏன் ஏற்காடு போனீங்க... பொண்ணு மாப்பிள்ளையை மட்டும் அனுப்புனா போதாதா?... ஓ... பொண்ணு மாப்பிள்ளையை ஊட்டிக்கு அனுப்பியாச்சோ...’’ என்று சொன்ன வைத்தியலிங்கம், சதீஸ்குமாரிடம், ‘‘கொடுத்து வெச்சவண்டா நீ...’’ என்றதும், இந்த முறையும் சுந்தரவடிவேல்தான் வெட்கப்பட்டார்.
‘‘மாப்ள... ஒவ்வொரு தடவையும் நீ வெட்கப்படுவன்னு நினைச்சு நான் கமெண்ட் அடிச்சிகிட்டு இருக்கேன்... பொண்ணோட அம்மா வெட்கப்பட்டாலும் பரவாயில்லை... ஒவ்வொரு தடவையும் பொண்ணோட அப்பால்ல வெட்கப்படுறாரு...’’
‘‘அத்தை இருந்தா அவங்க வெட்கப்பட்டிருக்கப்போறாங்க... இல்லாததால மாமா அந்த டூட்டியைப் பார்க்குறாரு...’’ என்று சதீஸ் சொல்லவும்,
வைத்தியலிங்கம், ‘‘அதாகப்பட்டது மகா ஜனங்களே... நல்லா கேட்டுக்குங்க... அத்தை, மாமாவாம்... பையன் டோட்டலா சரண்டர் ஆயிட்டாருங்கோ...’’ என்று சொல்லவும்,
‘‘டேய்... சும்மா இருடா...’’ என்று முதல்முறையாக சதீஸ்குமார் வெட்கப்பட்டான்.
அப்போது இன்னொருவன், வைத்தியலிங்கத்திடன் காது அருகில் வந்து, ‘‘டேய் மாப்ள... நீ இப்போ யாரை கரெக்ட் பண்றதுக்காக காலையில திருவாரூர்ல பஸ் கிளம்புனதுல இருந்து ட்ரை பண்ற? ஆளை சொல்லுடா... இல்லன்னா உனக்கு நானோ, எனக்கு நீயோ எதிரியா ஆகிடக்கூடாது பாரு...’’ என்று கிசுகிசுத்தான்.
‘‘எனக்கே தெரியாதே... நான் எப்படி சொல்றது?’’ என்று வைத்தியலிங்கம் சொல்லவும், அவன் நண்பனின் முகத்தில் ஷாக்.
‘‘என்னடா சொல்ற?’’
‘‘தமிழ்லதானே சொன்னேன்... இத்தனை வருஷத்துல எனக்கெல்லாம் எதுவுமே பிக்கப் ஆகலை... இந்த பஸ்லயாச்சும் ஹீரோவாயிட்டா எதாவது ஓ.கே.ஆகுமான்னு பார்க்குறேன்...
எதுவும் செட் ஆகலைன்னா ரெண்டு நாள் ஜாலியா இருந்த சந்தோஷத்தோட ஊருக்கு மூட்டைய கட்ட வேண்டியதுதான். ஒரே நாள்ல லவ்வு வந்துடாதுன்னு தெரியும்... அட்லீஸ்ட், பேஸ்புக் ஐ டி கூடவா கிடைக்காது...’’ என்றான்.
திருவாரூரில் இருந்து வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அழகர்கோவில், பழமுதிர்ச்சோலைக்கு செல்ல கிளம்பியபோது அர்ச்சனா வர மறுத்தாள்.
‘‘நீ மட்டும் இங்க உட்கார்ந்து என்னடி செய்யப்போற... ஊருக்கு போனதும் வேலை, வேலைன்னு சோறு திங்க கூட நேரம் இல்லைன்னு ஓடுவ... இந்த மாதிரி நேரத்துல நாலு இடம் பார்த்தாதானே உண்டு...’’ என்று அவளை கிளம்பச் சொல்லிக்கொண்டிருந்தாள் சித்ரா.
‘‘இல்லம்மா... மலர்விழி வந்துடுவா... அதான்...’’
‘‘அவளுக்கு குழந்தை பிறந்தப்ப பார்த்தது... அதுக்கப்புறம் இப்பதான் நேர்ல பார்க்கப்போறீங்க ஓ.கே... அவ வர்றதுக்கு இன்னும் ரெண்டு மணி நேரமாச்சும் ஆவும்... நாம அதிகபட்சம் மூணு அல்லது நாலு மணி நேரத்துல வந்துடுவோம்... அவ்வளவு அவசரமா அவளைப் பார்த்து என்ன செய்யப்போற... அப்புறம் நாளைக்கு நம்மளோடதான் திருவாரூர் வரப்போறா... அடுத்து ரெண்டு நாளும் நீயும் அவளும் திருவாரூர்லதான் இருக்கப்போறீங்க... பேசப்போறீங்க... அப்படி இருக்கும்போது ரெண்டு மணி நேரம் பெரிய விசயமா?... கிளம்புடி’’ என்று உத்தரவிட்டாள் சித்ரா. இதற்குமேல் அவளை சமாளிப்பது கடினம் என்பதால் வேறு வழியின்றி கிளம்பினாள் அர்ச்சனா.
‘‘என்னாடி... துணியை மாத்தாம அப்படியே வர்ற?... புடவையை கட்ட வேண்டியதுதானே?’’
‘‘ஏம்மா... காலையில குளிச்சிட்டுதான் இந்த டிரஸ்சைப் போட்டிருக்கேன்... சாயந்திரம் ஊர்வலம், நிச்சயதார்த்தத்துக்கு ஒரு புடவை, நாளைக்கு காலையில ஒரு புடவை... ஊருக்கு திரும்பும்போது இதே டிரஸ்... அவ்வளவுதான்... நாம ஒரு வாரம் கேம்ப் போடுறமாதிரியா துணிகளை அள்ளி திணிச்சிகிட்டு வந்துருக்கோம்...’’ என்று அர்ச்சனா கேட்டதும் சித்ரா கப்சிப்.
பெண் வீட்டார் இரண்டு பேர் பேருந்தில் இவர்களுடன் வந்தவர்கள் பேருந்தில் இருந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறோம் என்று இருந்து கொண்டார்கள்.
மதுரை அழகர் கோவிலிலும், பழமுதிர்ச்சோலையிலும் கூட்டம் மிகவும் குறைவாகத்தான் இருந்தது. அந்த சமயத்தைப் பயன்படுத்தி அவன் ஏதாவது பேச முயற்சிப்பான் என்று எதிர்பார்த்தாள் அர்ச்சனா. ஆனால் அவன் பேருந்திலேயே இருந்து விட்டான். ஆக இப்போதும் அர்ச்சனாவுக்கு ஏமாற்றம்.
மண்டபத்துக்கு வந்ததுமே மலர்விழி அர்ச்சனாவை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கிறாள். ஆனால் பழமுதிர்ச்சோலை பகுதியில் டவர் சரியாக கிடைக்காததால் கீழே இறங்கியவுடன் அர்ச்சனாவின் மொபைலுக்கு ஆறு தவறிய அழைப்புகள் என்று செய்தி வந்தது.
அதைப்படித்துவிட்டு இவள் கால் செய்ய முயற்சிப்பதற்குள் மலர்விழியிடமிருந்து அடுத்த அழைப்பு.
போனை ஆன் செய்து இவள் ஹலோ என்று சொல்வதற்குள், ‘‘ஏண்டி கடங்காரி... நான் வர்ற நேரத்துல மண்டபத்துல இருக்காம நீ ஏண்டி கோயிலுக்கெல்லாம் போன... எனக்கு சஸ்பென்ஸ் தாங்கலை... உன் ஆளும் அங்க கூடத்தான் இருக்கானா?’’ என்று படபடவென்று பொரிந்தாள் மலர்விழி.
’’கொஞ்சம் என்னைய பேச விடுறியா? அது சரி... நீ முடிவே பண்ணிட்டியா அவன் என் ஆளுன்னு... நீ அன்னைக்கு மிரட்டுன மிரட்டல்ல ஓடுனவனுக்கு இப்பவும் பயம் போகலையோன்னு சந்தேகமா இருக்கு... அங்கதான் எல்லாரும் ரொம்ப பக்கத்துலயே இருந்தாங்கன்னு பார்த்தா, அழகர்கோவில்லயும் சரி, பழமுதிர்ச்சோலையிலயும் சரி அவன் என் கிட்ட நெருங்கி வரவே இல்லை... நானா போய் பேசுறதுக்கும் என்ன பேசுறதுன்னு தெரியலை...
ஏய்... அம்மா பக்கத்துல வந்துட்டாங்க... நாம நேர்ல பேசுவோம்...’’  என்று இணைப்பை துண்டித்தாள் அர்ச்சனா.
‘‘யாருடி போன்ல... மலரா?... இப்படி தவிக்கிறீங்க ரெண்டு பேரும்... எப்படிடீ இவ்வளவு நாளா பிரிஞ்சு இருந்தீங்க...’’
இது வேற விசயம் என்று தொண்டை வரை வந்த வார்த்தைகளை மிக சிரமத்துடன் விழுங்கிக் கொண்டாள் அர்ச்சனா.
அழகர்கோவில் மலை அடிவாரத்திலிருந்து சுமார் இருபது கிலோ மீட்டர் தூரம் மண்டபத்துக்கு செல்ல வேண்டும். அந்த தூரம் இப்போது அர்ச்சனாவுக்கு இருநூறு கிலோ மீட்டராகத் தெரிந்தது.
பேருந்து மண்டப வளாகத்துக்குள் நுழையும்போதே அர்ச்சனா இருக்கையை விட்டு எழுந்து சரசரவென படிக்கட்டுக்கு வந்து விட்டாள். பேருந்து நின்ற அடுத்தநொடி கீழே குதித்து இறங்கி வெளியேறியவள் எதிரிலேயே மலர்விழி அவளது நான்கு வயது மகள் தன்ஷிகாவுடன் நின்றிருந்தாள்.
‘‘ஹாய்... நல்லாருக்கியா...’’ என்று மலர்விழியைக் கேட்டுவிட்டு, சட்டென்று தன்ஷிகாவை தூக்கி வைத்துக்கொண்டு, ‘‘செல்லம்... சித்தியைத் தெரியுதா?’’ என்று கேட்கும்போதே அந்த குட்டிப்பெண் சிணுங்கிக் கொண்டு இறங்கிவிட்டாள்.
‘‘நான் என்ன பேயா, பூதமா... ஏண்டி உன் பொண்ணு இவ்வளவு விபரம் தெரிஞ்சும் என்கிட்ட வர யோசிக்கிறா... என்னை முதன்முதலா பார்க்குற மாதிரில்ல இவ பிஹேவியர் இருக்கு...’’ என்று அலுத்துக்கொண்டாள் அர்ச்சனா.
‘‘இவ பிறந்த பதினாறாம்நாள் பேர் வெச்சப்ப வந்தது. அந்த ஒரே ஒரு தடவை. அதுக்கப்புறம் எப்பவாச்சும் நேர்ல பார்த்துருக்கியா? வீடியோ கால்லதான் பேசிருக்கோம். சின்ன பொண்ணு இவ... நேர்ல பார்க்குறதும் போன் ஸ்கிரீன்ல பார்க்குறதும் ஒண்ணா...? அதுசரி... ஏண்டி... உன்னையப் பார்த்து விபரம் தெரிஞ்ச பெரிய ஆளே மிரண்டு போய் இருக்குன்னு சொன்ன... இவ எம்மாத்திரம்...’’ என்று சிரித்துக்கொண்டே சொல்லவும் அவளை அடிக்க கையை ஓங்கினாள் அர்ச்சனா.
‘‘அம்மாவை அடிக்காத...’’ என்று அர்ச்சனாவின் தொடையில் அடித்தாள் தன்ஷிகா.
‘‘ஆஹா... அடியாளை கூடவே வெச்சிருக்கியா?’’ என்று சொன்ன அர்ச்சனாவை ஏற இறங்க பார்த்தாள் மலர்விழி.
‘‘என்னடி பார்க்குற?... நான் பத்து வருசமா மாறவே இல்லையாம்... எல்லாருமே சொல்றாங்க... உனக்கு என்ன சந்தேகம்?’’
‘‘இது என்னடி டிரஸ்சு?’’ என்று மலர்விழி கேட்டதும் தன்னைத் தானே ஒருமுறை பார்த்துக்கொண்டாள் அர்ச்சனா.
தொடரும்...

No comments:

Post a Comment