நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, May 31, 2019

செங்கம் டிராவல்ஸ் - 12

பகுதி - 12
இரண்டு பேர் அமரும் இருக்கையில் அமர்ந்திருந்த மலர்விழியின் மடியில் தன்ஷிகாவின் தலையும் பாதி உடலும் இருக்க, அருகில் அமர்ந்திருந்த அர்ச்சனாவின் மடியில் தன்ஷிகாவின் கால்கள் இருந்தன.
வரதராஜன் பேருந்தை ஸ்டார்ட் செய்து ‘டக்’கென்ற சப்தத்துடன் கியரைப் போட்டு பேருந்தை மெதுவாக நகர்த்தி, மண்டப வளாகத்தை விட்டு பிரதான சாலைக்கு ஓட்டி வந்தான்.
புறநகர் மின்சார ரயில்கள் வெடுக்கென்று எதிலிருந்தோ பிடுங்கிக் கொண்டு போவது போல்தான் கிளம்பும். அதே போல் வேகம் குறைந்து நிற்கும் போதும் பயணிகள் முன்னால் இருப்பவர்கள் மீது மோதும் வகையில்தான் திடுக் என்று நிற்கும்.
ஆனால் டீசல் எஞ்சின் கொண்ட ரயில்கள் நிற்கும்போது படீரென்று பயணிகளை ஆட வைத்தாலும், ஸ்டேஷனிலிருந்து புறப்படும்போது கண்களை மூடிக் கொண்டிருந்தால் வேகம் பிடிக்கும்போதுதான் ரயில் ஓடிக்கொண்டிருப்பதே தெரியும். அதுவும் தொட்டி ஆடுவதைப் போல் ரயில் லேசாக ஆடுவதால்தான் தெரியும்.
அந்த லாவகத்துடன் வரதராஜன் பேருந்தை நகர்த்தும்போதே, நல்ல அனுபவசாலி அல்லது தொழில் மீது அக்கறை கொண்ட ஓட்டுநரால்தான் இவ்வாறு செய்ய முடியும் என்பது மலர்விழிக்கு புரிந்து விட்டது.
அட... நம்ம தங்கம் இவன் பஸ் ஓட்டுற ஸ்டைல்லதான் இப்போ மயங்கி தவிக்கிறீங்கிளோ... டூவீலரை ஓட்டத் தெரியாம ஓட்டுனவன் இப்போ பஸ் ஓட்டுறான்... அதுல நாம பயணம் பண்றோம்... ஏதோ சினிமாவுலயும் நாவல்லயும் வர்ற மாதிரி ட்விஸ்ட்...’’ என்று அர்ச்சனாவுக்கு மட்டும் கேட்கும் வகையில் மலர்விழி கிசுகிசுத்தாள்.
ச்சேச்சே... அவன் வண்டி ஓட்டுற ஸ்டைலைப் பார்த்து மயங்குறதுக்கு நான் டீன் ஏஜ்ல இருக்குற பொண்ணா... திருவாரூர் போறதுக்குள்ள முழுசா கவனி... என் குழப்பம் என்னன்னா...’’ என்ற அர்ச்சனாவை தடுத்து,
அம்மா தாயே... இதோட அம்பது தடவை உன் சந்தேகத்தை சொல்லிட்ட... வெயிட் பண்ணு... இவன் பஸ் ஓட்டும்போது வேற என்னவெல்லாம் செய்யுறான்னு நானே கவனிச்சுக்குறேன்... மத்ததை வீட்டுக்கு போய் பேசுவோம்...’’என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் மலர்விழி.
செல்லும் வழியில் ஒருசில ராமேஸ்வரம் செல்லும் அரசுப்பேருந்துகளும், சில தனியார் பேருந்துகளும் ஹாரனை அலற விட்டுக்கொண்டு ஓவர்டேக் செய்ய முயற்சிக்கும்போது, நான்கு வழிச்சாலையாக இருப்பதால் அதே வேகத்தில் சென்றால் கூட அந்த வண்டிகள் முந்த முடியாமல் பின்னால் சென்றுவிடும். ஆனால் வரதராஜன் அப்படி செய்யாமல் லேசாக வேகம் குறைத்து, மற்ற பேருந்துகள் ஓவர்டேக் செய்ய அனுமதித்தான்.
பரமக்குடி புறநகர்ப்பகுதியை அடைந்ததுமே விஜயகுமார் எழுந்து வரதராஜன் அருகில் சென்று விட்டார்.

தம்பி... நான் சொல்ற வழியா போங்க... அந்த கோயிலுக்கு மாலை, அர்ச்சனை சாமான்களை வாங்கினதும் வீட்டுக்கோ, வேற எங்கேயுமோ எடுத்துட்டுப் போகாம, நேரே கோவிலுக்கு கொண்டு போகணும்னு ஒரு ஐதீகம்.
இதோ, அந்த ராமேஸ்வரம் பஸ் போகுதுல்ல... அது பின்னாலயே போங்க... இந்த இடத்துக்கு ஓட்டப்பாலம்னு பேரு...’’ என்று சொன்னதும் அந்த வழியாகவே பேருந்தை இயக்கினான் வரதராஜன்.
இந்த பஸ் ரைட் சைடுல போய் ஐந்து முனை ரோடு வழியா பஸ் ஸ்டாண்ட் போயிடும்... நாம லெப்ட்ல அதோ.... காரைக்குடி பஸ் யு டர்ன் எடுத்து போகுது பாருங்க... அந்த ரோட்டுல போகணும்...
மார்க்கெட்டுக்குள்ள நம்ம பஸ் போக சான்சே இல்லை... அதனால அதோ... அந்த என்.ஆர் மஹாலுக்கு எதிர்ல இடம் இருக்கு பாருங்க... அங்க நிப்பாட்டிக்குங்க... நாங்க யாராச்சும் போய் மாலை, பூஜை சாமான்களை வாங்கிட்டு வந்துடறோம்...’’ என்றதும் வரதராஜன் முழுவதுமாக வேகத்தைக் குறைத்து அவர் சொன்ன காலி இடத்தில் போக்குவரத்திற்கு இடையூறின்றி நிறுத்தினான்.
நாங்க போயிட்டு வந்துடுறோம்... அரை மணிநேரம் அல்லது முக்கால் மணிநேரத்துக்கும் மேலேயே வெயிட் பண்ண வேண்டி வரலாம்...’’ என்ற விஜயகுமார் பேருந்தை விட்டு இறங்கப் போனார்.
சார்... வெயிட் பண்றதைப் பத்தி பிரச்சனை இல்லை... ஏன் நடந்து போறீங்க... ஆட்டோ பிடிச்சுக்கலாமே... டிராபிக் அதிகமா இருக்குற குறுகலான வீதிகள்தான்னு சொல்றீங்க... ஆட்டோல போனா சீக்கிரம் வரமுடியுதோ இல்லையோ... ரெண்டு நாளா டிராவல், கல்யாண வேலைன்னு அலைஞ்சவங்களுக்கு கால் வலி இன்னும் அதிகமாகாம இருக்குமே...’’ என்றான்.
அட... ஆமா... இதை நாம யோசிக்கலையே...’’ என்று விஜயகுமாரின் முகம் மகிழ்ச்சி அடைந்தது.
உன் பெரியப்பாவை கவுத்துட்டாண்டி...’’ என்றாள் மலர்விழி.
அப்போது விஜயகுமாரின் மைத்துனர் அன்பழகன், (அம்மாப்பேட்டையில் பஸ் ஏறியவர்) ’’மச்சான்... நீங்க உட்காருங்க... நானும் என் மாப்பிள்ளையும் போய் வாங்கிட்டு வந்துடறோம்...’’ என்று கிளம்பினார்.
அதைக்கேட்ட விஜயகுமார், மாப்ள... மானாமதுரைகிட்ட வரும்போதே இதைத்தானே நான் சொன்னேன்... அதுக்கு நீங்கதான் பஸ்சை ஒண்ணு திரௌபதி அம்மன் கோயில்தெருவுலயே நிறுத்தணும்... இல்லன்னா ஆத்துப்பாலம் தாண்டி மஞ்சப்பட்ணத்துகிட்ட நிறுத்தணும்... எவ்வளவு தூரம் நடந்து மார்க்கெட்டுக்குள்ள போயிட்டு வர்றதுன்னு அலுத்துகிட்டீங்க... அப்போ ஆட்டோவுல போயிட்டு வந்துடலாம்னு தோணலியா...’’ என்று சிரித்தார்.
சரி சரி... மானத்த வாங்காதீங்க மச்சான்... நீங்க உட்காருங்க...’’ என்று அன்பழகனும் அவருடைய மாப்பிள்ளையும் இறங்கியதும், அந்த வழியாக சென்று கொண்டிருந்த காலி ஆட்டோவைப் பிடித்து ஏறிச் சென்றார்கள்.
முதல் நாள் காலையில் முதல் தேங்காயை விஜயகுமார் இரண்டாக உடைத்ததை கிண்டலடித்தும், வரதராஜன் இரண்டு தேங்காய்களை சிதற விட்டதை பாராட்டியும் பேசிய வேதாச்சலம், விஜி... நான்கூட நேத்து இந்த பையனை பார்த்ததும், குடும்பத்தோட நல்ல காரியத்துக்கு போறோம்... அனுபவசாலியான டிரைவரை அனுப்பாம இப்படி பண்ணிட்டாங்களேன்னு சந்தேகப்பட்டுதான் உன்கிட்ட பஸ், டிரைவர் ஏற்பாடு யாருன்னு கேட்டேன்.
நீயும் கோபாலகிருஷ்ணன்தான் கியாரண்டி கொடுத்து அனுப்பியிருக்காப்ல... அதுவும் நாலைஞ்சு வருசமா ஸ்கூல் பஸ் ஓட்டுற டிரைவர்தான்னு சொன்னதும்தான் வேற எதுவும் கேட்கலை.
ஆனா இப்ப வரைக்கும் இந்த தம்பி பஸ் ஓட்டுனதைப் பார்க்கும்போது, நாம கொஞ்சம் கூட கவலையே பட வேண்டாம்னு தோணுது.
பயணம் செய்யுறவங்க டிரைவர் எப்படி எல்லாம் வண்டியை ஓட்டுனா பாதுகாப்பா உணருவாங்களோ அந்த மாதிரியே கச்சிதமா ஓட்டுறாப்ல...’’ என்றார்.
முதல்ல பெரியப்பா அவுட்... இப்போ பெரிசும் காலி...’’ என்று கிசுகிசுத்தாள் மலர்விழி.
மாமா... இந்தப் பையன் பத்து பன்னண்டு வருசத்துக்கு முன்னால நம்ம காலனியில ஒரு வீட்டுக்கு பேப்பர் போட்டுருக்காப்ல... அப்போ அடிக்கடி நம்ம தெருவுல பார்த்துருக்கேன்... அதுக்கப்புறம் நேத்து பார்த்தப்ப எனக்கு உடனே அடையாளம் தெரியலை...
ஆனா எங்கேயோ பார்த்திருக்கோமேன்னு நேத்து அப்பப்ப யோசிச்சு பார்த்தேன்... ஞாபகமே வரலை... அப்புறம் நேத்து ராத்திரி, உங்களை திருவாரூர்ல அடிக்கடி பார்த்த மாதிரி இருக்கு... ஆனா இப்போ மன்னார்குடியில இருந்து வந்துருக்கீங்க... சொந்த ஊர் எதுன்னு கேட்டதுக்கப்புறம் பேப்பர் போட்ட விவரத்தை சொன்னாப்ல...’’ என்று சிரித்தார்.
அப்போது அந்த பெரியவர், ஸ்கூல் பஸ் ஓட்டுறதால எல்லா ரூல்சையும் கச்சிதமா சொல்லிக் கொடுத்துட்டாங்களா... இல்லன்னா இவ்வளவு பக்குவம் வராதே... உன் வயசுப் பசங்க டூவீலர் ஓட்டும்போதே என்னென்ன சர்க்கஸ் காட்டுறாங்கன்னு பார்க்கத்தானே செய்யுறோம்...’’ என்று சொல்லவும் வரதராஜன் ஒரு நொடி அர்ச்சனாவைப் பார்த்தான்.
அர்ச்சனாவும், மலர்விழியும் அதே நொடி வரதராஜனைப் பார்த்தார்கள்.
ஸ்கூல் பஸ்சுன்னு இல்லை சார்... சைக்கிள் ஓட்டும்போதும், அவ்வளவு ஏன்? நடந்து போகும்போது கூட ரூல்சை ஃபாலோ பண்ணினாத்தான் எல்லாருக்குமே நல்லது.’’ என்றான் அவன்.
இப்படி பொசுக்குன்னு ஒரு வரில திருக்குறள் மாதிரி பதில் சொன்னா எப்படி...’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே குறுக்கே புகுந்த ஒரு வைத்தியலிங்கம், தாத்தா... திருக்குறள் ரெண்டு அடி...’’ என்றான்.
இல்லப்பா... ஒண்ணேமுக்கால் அடி’’  என்று அவனுக்கு பதிலடி கொடுத்த வேதாச்சலம், கொஞ்சம் விளக்கமா சொல்லு தம்பி... பஸ் ஓட்ட ஆரம்பிச்சதுல இருந்து நூறு சதவீதம் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிச்சுதான் ஓட்டுறீங்கிளா... இல்ல... சின்ன சின்ன தப்பு செஞ்சு அதை யாராச்சும் திருத்துனாங்களா...
எதுக்கு விவரமா கேட்குறேன்னா, இந்த பஸ்சுக்குள்ள உட்கார்ந்துருக்குறதுங்கள்ல ஆம்பளை பொம்பளை வித்தியாசம் இல்லாம டூவீலரைக்கூட இஷ்டத்துக்கு ஓட்டிட்டு போய் அடுத்தவங்களை கவுத்து விடுற அரை டிக்கட் ஏகப்பட்டது இருக்கும். இப்ப நீங்க விபரம் சொன்னா அதுங்களுக்கு கொஞ்சமாச்சும் புத்தி வரும்... டிரைவிங் ஸ்கூல்ல காசு கொடுத்தா லைசென்ஸ் எப்படி வாங்குறதுன்னுதான் சொல்லிக்குடுக்குறாங்களே தவிர எப்படி வண்டி ஒட்டணும்னு கத்துக்கொடுக்குற மாதிரி தெரியலை. இப்படி உன்னை மாதிரி ஆளுங்க பிராக்டிக்கலா தியரியை சொன்னா கொஞ்சமாச்சும் புரியுதான்னு பார்க்கலாம்.
ஏன்னா, புத்தகத்துல படிக்கிறது, என்னை மாதிரி பெரிசுங்க அறிவுரை சொல்றதை விட, பிராக்டிக்கலா நீ சொன்னா அதுக்கு வீரியம் அதிகம்...’’ என்றார்.
அர்ச்சு... உன் ஆவி தாத்தா உடம்புல பூந்துடுச்சா... நீ கேட்க நினைச்ச கேள்விகளை அவர் ஒண்ணு விடாம கேட்டுட்டு இருக்கார்...’’ என்று மீண்டும் கிசுகிசுத்தாள் மலர்விழி.
மீண்டும் ஒருநொடி அர்ச்சனாவைக் கவனித்த வரதராஜன், ஸ்கூல் படிச்சுகிட்டு இருந்தப்ப டூவீலர் ஓட்டுறதை எல்லாம் பெரிய பந்தாவா நினைச்சு அலப்பறை கொடுத்து சொதப்பியிருக்கேன்...’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே,
புது மாப்பிள்ளை சதீஸ்குமார், அப்படி விழுந்தப்ப அடி ரொம்ப பலமோ...’’ என்று கேட்டதும்,
ஸ்...’’ என்றான் வரதராஜன்.
இல்ல... ஸ்கூல் படிக்கும்போதுன்னு சொன்னதும், என் தங்கச்சி கூட பிளஸ்டூ ல மார்க் குறைஞ்சா வீட்டுல அடி வாங்கக்கூடாதுன்னு முதல்நாள் ஸ்கூட்டியில இருந்து விழுந்து கால்ல அஞ்சாறு தையல் போட்டது என் ஞாபகத்துக்கு வந்துடுச்சு...
அடிபட்டதால, காலேஜ் சேர்ற வரை ஏதாவது கம்ப்யூட்டர் கோர்ஸ், அது இதுன்னு போகாம வீட்டுலயும் ஒரு வேலையும் பார்க்காம சித்தியை வேலை வாங்கிட்டே ஜாலியா பொழுதைப் போக்கிட்டா...’’ என்று கம்பெனி ரகசியங்களை போட்டு உடைக்கவும்,
அண்ணா... இது ரொம்ப முக்கியம்?... உனக்குன்னு பக்கத்துல ஆள் இருக்குற தைரியத்துல என்னைய வாரி விடுறியா? அப்புறம் நான் பேச ஆரம்பிச்சா அவ்வளவுதான்...’’ என்று ஆள்காட்டி விரலைக் காட்டி எச்சரித்தாள்.
பாசமலரே... மன்னிக்கவும்...’’ என்று இருகரம் கூப்பி கும்பிட்டு விட்டு, வரதராஜனைப் பார்த்து, ஸ்கூல் படிக்கும்போதுன்னா எங்க காலனியில பேப்பர் போட்டதா அப்பா சொன்னாங்களே அந்த பீரியட்தானே... பிளஸ் ஒன், பிளஸ்டூ படிக்கிற வயசுல யாரும் ஒரே ஆக்சிடெண்ட்ல திருந்துறதெல்லாம் சினிமா தவிர வேற எங்கயும் நடக்காதே...’’
என்னடி அவன் உன்னைய கவுத்து தையல் போட வெச்சது தெரியாம உன் ஆளே கவுந்துட்டதா நினைச்சு உங்கண்ணன் பரிதாபமா கதை கேட்டுகிட்டு இருக்கான்?’’ என்று மலர்விழி மீண்டும் கிசுகிசுக்க,
ம்ப்ச்... சும்மா இருடி...’’ என்று அவளை அர்ச்சனா அடக்கினாள்.
அப்போது வேதாச்சலம், தம்பி... இந்த காலத்து பசங்களுக்கு அறிவுரையே பிடிக்கிறதில்லை... ஆளாளுக்கு ஏதோ ரகசியம் பேசிகிட்டு இருக்காங்க... ஆனாலும், நீங்க சொல்லுங்க தம்பி...’’ என்றார்.
நாம பேசுற ரகசியமே டிரைவரைப் பத்திதான் தாத்தா...’’ என்று முணுமுணுத்தாள் மலர்விழி.
ஐயா... போர் அடிக்காம சுருக்கமா என் கதையை சொல்லிடுறேன்... அது வரைக்கும் கொஞ்சம் குறுக்க பேசாம இருங்க...
நான் ஸ்கூல்ல படிக்கிறப்ப சொதப்பினதை நினைச்சு பயந்துகிட்டுதான் இருந்தேன். ஆனா அந்த தப்பை திருத்தணும்னோ, வண்டி ஓட்டுறப்ப கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளையும், மனுசனா நடந்துக்க வேண்டிய அடிப்படை விஷயங்களை தெரிஞ்சுக்கணும்னோ நான் நினைக்கலை.
நான் மன்னார்குடி காலேஜ்ல படிக்கும்போது மூணு வருஷமும் எங்க அப்பா தோட்டக்காரரா வேலை பார்த்த ஸ்கூல் பஸ்சுல பசங்களை பாதுகாப்பா இறக்கி அனுப்பி வைக்கிற உதவியாளர் வேலை பார்த்தேன்.
அப்போ அந்த டிரைவர் எப்படி வண்டியை ஓட்டுனாரோ அதைத்தான் நான் இப்போ செய்யுறேன். நீங்க மட்டுமில்லை... எல்லாருமே பாராட்டுறாங்க... யாருமே பாராட்டலைன்னாலும் நான் இப்படித்தான் வண்டி ஓட்டுவேன். அதைத்தான் என் குருநாதரா இருந்த அந்த டிரைவர் சொல்லிக் கொடுத்துருக்கார்.
சரியான முறையில கிளட்சைப் பயன்படுத்தி கியர் மாத்துறது, எதிர்ல வாகனங்கள் வரும்போது அது சைக்கிளா இருந்தாலும், டூவீலர், கார், பஸ்சுன்னு எதுவா இருந்தாலும் நம்ம ஹெட்லைட்டை டிம் பிரைட் செஞ்சு ஓட்டணும்.
திரவப்பொருள் ஏத்தி வர்ற டேங்கர்லாரி மாதிரியான வாகனங்கள் சாலை ஓரத்துல பள்ளத்துல இறங்கினா வண்டி ஒரு பக்கமா சாயும்... அப்போ உள்ள இருக்குற தண்ணி, பெட்ரோல், டீசல் எதுவா இருந்தாலும் சலம்பும்போது வண்டியை பேலன்ஸ் பண்றது அந்த வாகனங்களை ஓட்டுற டிரைவருங்களுக்கு கூடுதல் சிரமம் தரும். அதனால நம்ம வண்டியை ஒருபக்கம் ரோட்டை விட்டு இறங்கி ஓட்டலாம். தப்பில்லை.
சரக்கு லாரிகள் எதிர்ல ஏதாவது வாகனத்தை ஓவர்டேக் பண்ணி வரும்போது நமக்கு அவகாசம் இருந்தா, அவங்க வேகத்தை குறைக்காம நம்மை கடந்து போக அனுமதிக்கிற அளவுக்கு நம்ம வேகத்தை குறைச்சிடுறது...
சைக்கிள், டூவீலர்ல முன்னாடி போய்கிட்டு இருந்தாங்கன்னா திடீர்னு அவங்க பக்கத்துல போய் ஹாரனை அலற விடாம சின்ன ஹாரனை லேசா அடிச்சு, அவங்களை தடுமாறாம ஒதுங்க வைக்கணும்... இப்படி எவ்வளவோ விஷயங்களை அவரே செய்யுறது மூலமா எனக்கு கத்துக்கொடுத்துருக்கார்...
அதை நான் வண்டி ஓட்டும்போதும் ஃபாலோ பண்றேன்... அவ்வளவுதான்...’’ என்று சொன்னான் வரதராஜன்.
எழுதப்பட்ட சாலைவிதிகள் ஏராளமா இருக்கு... ஆனா நீ சொன்ன சின்ன சின்ன விஷயத்தை இதெல்லாம் ஒரு விஷயமா... இதனால என்ன ஆயிடப்போகுதுன்னு ரொம்ப பேர் அலட்சியமா இருக்காங்க... நல்லா இரு தம்பி...’’ என்றார் அந்த பெரியவர்.
அர்ச்சு... நேத்து நீ அவனைப் பார்த்ததுல இருந்து எப்படி பேசுறது... என்ன பேசுறதுன்னு தவிச்ச மாதிரியே அவனும், அன்னைக்கு ஆக்சிடெண்ட் வேணுன்னே நடக்கலை... வயசுக்கோளாறுல தெரியாம நடந்தது. இப்போ நான் பொறுப்பான டிரைவர்னு உன்கிட்ட சொல்ல தவிச்சிருக்கான்னு தெரியுது.
அவன் பேசினது தாத்தாகிட்ட இல்ல. உன்கிட்டத்தான்... திருவாரூர் போறதுக்குள்ள விடை தெரிஞ்சுக்க நினைச்சோம்... பரமக்குடியிலயே பதில் தெரிஞ்சுடுச்சு.’’ என்ற மலர்விழி அடுத்து பேசியவைகள் அர்ச்சனாவின் எதிர்காலத்தை மனதில் கொண்டதாகத்தான் இருந்தது.
தொடரும்...

No comments:

Post a Comment