நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, May 10, 2019

காலைக்காட்சி பேட்டா...

பல ஆண்டுகளுக்கு முன்பு ஏதாவது ஒரு படம் தினசரி 4 காட்சிகளும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும். இரண்டு மூன்று வாரங்களுக்குப் பிறகு இரவுக்காட்சி அல்லது காலைக்காட்சியில் கூட்டம் குறைந்துவிட்டால் அந்த ஒரு காட்சிக்கு மட்டும் வேறு ஒரு படத்தை திரையிடுவார்கள்.
எனக்கு ஏழு, எட்டு வயதாக இருக்கும்போது அப்படி ஒரு முறை வசந்த மாளிகை படம் திருவாரூர் தைலம்மை தியேட்டரில் காலைக் காட்சியாக திரையிடப்பட்டிருந்தது.
அம்மா என்னை கட்டாயப்படுத்தி அந்த படத்திற்கு அழைத்துச் சென்றார்கள். எனக்கா அப்போதெல்லாம் ரஜினி, கமல், சத்யராஜ், கார்த்திக், விஜயகாந்த் படங்களை பார்க்க விரும்பும் மனநிலை.
அதனால் தியேட்டருக்குள் சென்று அமர்ந்த போது கூட பெட்டியில் உள்ள பிலிமை மாற்றி திரையிட மாட்டார்களா என்று எதிர்பார்த்து அமர்ந்திருந்தேன்.
ஆனால் ஆப்ரேட்டர் மிகச் சரியாக வசந்த மாளிகை படத்தைதான் திரையிட்டார்.
பிறகு 1993 வாக்கில் திருவாரூர் நடேஷ் தியேட்டரில் பாரத் பந்த் என்ற படம் ஓடிக் கொண்டிருந்தபோது காலைக் காட்சியாக ராஜபார்ட் ரங்கதுரை படம் திரையிடப்பட்டிருந்தது. அப்போது தாயார் என்னை தனியாகத்தான் அனுப்பி வைத்தார். அன்று கூட ராஜபார்ட் ரங்கதுரை படத்துக்கு பதிலாக பாரத் பந்த் படத்தின் பிலிமை மாற்றி ஓட்ட மாட்டார்களா என்று எதிர்பார்த்து ஏமாந்த நாட்கள் அவை.
பேபி டாக்கீசில் அம்மன் கோயில் கிழக்காலே அல்லது வைதேகி காத்திருந்தாள் படம் பின்பு ஒரு முறை திரையிடப்பட்டபோது இரவுக் காட்சிக்கு வைத்திருந்த மலையாளப் படத்தின் ரீலை போதையில் இருந்த ஆப்ரேட்டர் மாற்றி ஓட்டியதாக சொன்னார்கள். அது உண்மையா இல்லையா என்று தெரியவில்லை.
ஆனால் நான் ஆப்ரேட்டர் உதவியாளராக இருந்தபோதும் சரி, பிறகு தனியாக ஒரு சில முறை படங்கள் திரையிட்டபோதும் சரி... இத்தகைய தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொண்டேன். சீனியர் ஆப்ரேட்டர்களும் வேலையை கடவுளாக மதித்து செயல்பட்டார்கள். அதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
ரீலை மாற்றி திரையிடாததற்கு இன்னொரு முக்கிய காரணம், 1996 முதல் 1999 வரை பெரும்பாலும் காலைக் காட்சி, இரவுக்காட்சிகளில் வேறு படம் எதுவும் இல்லாமல் நான்கு காட்சிகளும் ஒரே படங்கள்தான் திரையிடப்பட்டன.
அப்போது மூன்றுவாரங்களுக்கு மேல் ஓடிய படங்கள் 50 நாளுக்கு மேல் ஓடிய படங்களைத்தான் மூன்று காட்சிகளாக குறைத்து விட்டு ஒரு காட்சியில் வேறு படங்கள் திரையிடுவார்கள். சென்னையைப் பொறுத்த வரை ஒரே திரையரங்கில் நான்கு காட்சிகளுக்கும் ஒரு காட்சிக்கு ஒரு படம் திரையிடப்படும். அதனால் சென்னை நகர திரையரங்குகள் விதிவிலக்கு.
-20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழில் ஒரு மாதத்திற்கு நான்கு படங்கள் ரிலீஸ் ஆகும். தீபாவளி, பொங்கலுக்கு எட்டு முதல் பதினோரு படங்களும், ஆகஸ்ட் 15, தமிழ்ப்புத்தாண்டு ஆகிய நாட்களில் 5 படங்களுக்கு மேல் வெளியாகிக் கொண்டிருந்தது.
ஒரு ஆண்டு முழுவதும் எப்படி கூட்டிப் பார்த்தாலும் 80 படங்களை தொட்டால் பெரிய விசயம். மொழி மாற்றுப் படங்களை பட்டியலில் சேர்த்தால்தான் 100 என்ற எண்ணிக்கையை தொடும்.
ஆனால் இப்போது ஒவ்வொரு வாரமும் வார இதழ் வெளியாவதைப் போன்று வெள்ளிதோறும் நாலைந்து படங்களி வெளியாவதாலும், திரையரங்கங்கள் மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டதாலும் நிறைய தியேட்டர்களில் இரண்டு காட்சிகளுக்கு ஒரு படம் என்று திரையிடும் நிலை அதிகரித்து விட்டது.
திருச்சியில் சிப்பி 70 MM A/C என்று ஒரு திரையரங்கம் செயல்பட்டு வந்தது. ஆங்கில ஆக்ஷன் படங்கள் மட்டும்தான் திரையிடுவார்கள். தினசரி 3 காட்சிகள் என்றுதான் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்படும்.
நான் ஒருநாள் ஆப்ரேட்டரிடம், மூன்று காட்சிகள் திரையிடப்படும் படத்தின் விளம்பரம்தான் வருகிறது. காலைக் காட்சியில் என்ன படம் ஓடுகிறது என்றே தெரியவில்லையே என்று கேட்டேன்.
அதற்கு அவர் அளித்த விளக்கம்: கல்லூரி மாணவர்கள் கூட்டத்தை எதிர்பார்த்துதான் அந்த தியேட்டர் இயங்குகிறது. அதனால் மதியம், மாலை, இரவுக் காட்சிகள்தான் என்றார்.
ஆக, நிறைய கல்லூரி மாணவர்கள் காலையில் மட்டும்தான் கல்லூரிக்கு சென்றிருக்கிறார்கள் என்பதே அதில் இருந்த செய்தி.
கிராமங்களில் உள்ள டூரிங் தியேட்டர்களில் மாலை, இரவுக் காட்சிகள் என இரண்டு காட்சிகளும், நகர்ப்புற தியேட்டர்களில் மதியம், மாலை, இரவுக் காட்சி என மூன்று காட்சிகளும்தான் இருந்தது.
பிறகு நகர்ப்புறங்களில் ஏதாவது திருவிழா நாட்களிலும் சனி ஞாயிறுகளிலும் காலையில் 11 மணிக்கு சிறப்புக்காட்சி என்று திரையிட்டார்கள். அப்போதுதான் கூடுதலாக ஒரு காட்சிக்கு பணிபுரிவதால் பணியாளர்களுக்கு கை செலவுக்கு என்று தரப்பட்ட தொகைதான் பேட்டா.
சம்பளத்தை உயர்த்தி கொடுத்திக் கொடுத்தால் அனைத்து நாட்களுக்கும் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால் இந்த ஏற்பாட்டை செய்து கொண்டார்கள். தியேட்டர்களில் காலைக்காட்சி பேட்டா என்றுதான் எழுதி அந்த தொகையை கொடுப்பார்கள். ரொம்ப நாள் கழித்து காலைக்காட்சி பேட்டா என்று சொல்வதற்கு அப்போதுதான் அர்த்தம் புரிந்தது.

No comments:

Post a Comment