நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Saturday, March 23, 2019

செங்கம் டிராவல்ஸ் - 1


ஆசிரியர் : திருவாரூர் சரவணன்
பகுதி 1
பத்து வருசத்துக்கு முன்னால பார்த்தப்ப எப்புடி இருந்தியோ... அப்படியேத்தாண்டி இன்னமும் இருக்க... கொஞ்சம் கூட மாறவே இல்லை... ஏதாவது லேகியம் திங்கிறியா?" என்று அர்ச்சனாவின் முகத்தை தடவி  ராமாயி பாட்டி திருஷ்டி கழித்தாள். அதை புன்சிரிப்புடன் ஏற்றுக் கொண்ட அர்ச்சனாவின் முகத்தில் லேசான வெட்கப்புன்னகை.
அடுத்த நொடி அவள் இதயத்துடிப்பு தறிகெட்ட வேகத்தில் பயணிக்கத் தொடங்கியது. பத்து ஆண்டுகளாக முகமும், உடலமைப்பும் மாறவில்லை என்று அந்த பாட்டி சொன்னதற்காக வெட்கப்பட்டவள், அவனும் இவளை அடையாளம் கண்டு கொண்டுவிட்டான் என்பதை உணர்ந்ததும், நம்முடைய உருவமும் முகமும் வேற மாதிரி மாறியிருக்கக்கூடாதா என்று தவித்தாள்.


டேய்... சரிகாஷா சாவுக்கப்புறம் ஈவ் டீசிங் புகாருக்கு கடுமையான தண்டனைன்னு எல்லாருக்கும் தெரியும். அப்படி இருந்தும் நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்கிளா? இவ அண்ணன்கிட்ட சொல்லி முதல் வேலையா உன் பேர்ல ஈவ்டீசிங் புகார் கொடுத்து உன்னைய உள்ள தூக்கி வெச்சி மிதிக்க வெக்கிறோம் பார்..." என்று அர்ச்சனாவின் தோழி மலர்விழி கத்தியதும் திரும்பிப்பார்க்காமல் அங்கிருந்து சென்றவன்தான் இல்லை, இல்லை... ஓடிப்போனவன்தான் இவன். அதன் பிறகு இந்த பத்து ஆண்டுகளில் ஒரு நாள் கூட அவனை அர்ச்சனாவோ, அவளுடைய தோழி மலர்விழியோ பார்க்கவே இல்லை. ஆனால் இன்று...
***
அதிகாலை 3.45 மணி.
திருவாரூர் நகரின் மையப்பகுதியில் தேரோடும் வீதி ஒன்றிலிருந்து பிரிந்திருந்தது கைலாசநாதர் கோயில் தெரு. முதல் நாள் காணும் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றதற்கு அடையாளமாக கடந்த ஆண்டைப் போலவே வீதியெங்கும் குப்பைகள். ஆனால் ஒரு வித்தியாசம். ஜனவரி 1-ம் தேதி முதல் நெகிழிப்பைகளுக்கு அரசு தடை விதித்திருந்ததால் குவிந்திருந்த குப்பைகளில் 90 சதவீதத்திற்கு மேல் காகிதக்குப்பைகள்.
கைலாசநாதர் கோயில் தெருவில் கடை விரித்திருந்த தரைக்கடை வியாபாரிகள் நிறைய பேர் இரவே மூட்டை கட்டிக்கொண்டு புறப்பட்டு சென்றிருக்க, ஒரு சிலர் மட்டும் மூட்டை முடிச்சுக்களுடன் அருகிலேயே சாலை ஓரத்திலும், சாக்கடை ஓரத்திலும் கொசுவலை கட்டிக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தார்கள். மற்ற தெருக்களைப் போல் இந்த தெருவிலும் குழல் விளக்குகள் அனைத்தும் எல்.இ.டி விளக்குகளாக மாற்றப்பட்டிருந்தாலும், தெருவின் மையப்பகுதியில் ஒரு மின் கம்பத்தில் மட்டும் சோடியம் விளக்கு மஞ்சள் நிற ஒளியை பாய்ச்சிக் கொண்டிருந்தது.
அப்போது தேரோடும் வீதியிலிருந்து முகப்பு கண்ணாடியில் ‘செங்கம் டிராவல்ஸ்’ என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த ஒரு தனியார் பேருந்து கைலாசநாதர் கோயில் தெருவுக்குள் மெதுவாக நுழைந்தது. பேருந்தின் முகப்பு விளக்குகள் உமிழ்ந்த மஞ்சள் நிற ஒளி அங்கே உறங்கிக் கொண்டிருந்தவர்களின் தூக்கத்தை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. ஆனால் சோடியம் விளக்கு பொருத்தப்பட்டிருந்த மின் கம்பத்திற்கு எதிரில் இருந்த காலனி வீடுகளின் வாசலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
பேருந்து வருவதற்காகவே இவ்வளவு நேரமும் எங்கோ மறைந்திருந்தது போல் பேருந்து வந்து நின்று அதன் இஞ்சின் ஆஃப் செய்யப்படுவதற்குள் ஆறேழு ஆட்டோக்கள், நாலைந்து இருசக்கர வாகனங்களில் திருமணத்திற்கு செல்லும் உறவினர்கள், நண்பர்கள் வந்து இறங்கினார்கள்.
அந்த காலனியில் தரை தளத்திலும் முதல் மற்றும் இரண்டாம் தளத்திலும் தலா 4 வீடுகள் வீதம் 12 வீடுகள் இருந்தன. அவற்றில் தரை தளத்தில் மூன்றாவது வீட்டில் இருந்த விஜயகுமாரின் மகனுக்கு மதுரையில் திருமணம். மூன்று நாட்கள் கழித்து திருவாரூரில் வரவேற்பு.
மதுரையில் நடைபெறும் திருமணத்திற்கு முக்கிய உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்து வீட்டினர் சிலரை பேருந்து மூலம் அழைத்துச் செல்வதற்காகத்தான் அந்த பேருந்து இங்கே வந்திருக்கிறது. வேன், கார் என்று தனித்தனியாக சென்றால் செலவு கூடுதலாகும் என்பதுடன், நம்மால் முடிந்த சிறிய அளவிலான சூற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்கட்டும் என்று பேருந்தை ஒப்பந்தம் செய்திருந்தார் விஜயகுமார்.
மாமா... பஸ் பிடிச்சிருக்கேன்னு சொன்னதும் அட்லீஸ்ட் செமி ஸ்லீப்பர் பஸ்சா இருக்கும்னு பார்த்தா மன்னார்குடிக்கும் திருவாரூக்கும் டிரிப் போன சாதாரண பஸ்சை கொண்டு வந்து நிறுத்திருக்கீங்கிளே...
என்ன கொடுமை மாமா இது..."
நீ சொல்ற மாதிரி பஸ் பிடிச்சா முப்பதுல இருந்து முப்பத்தஞ்சு பேர்தான் உட்கார முடியும். ஆனா மாமா சிக்கனம் பண்றேன்னு அம்பத்தஞ்சு பேர் உட்கார்ந்து போகணும்னு கேட்டா வால்வோ பஸ்சா வரும்... இதுதான் வரும்..." என்று இளைஞர்கள் கமெண்ட் அடித்துக் கொண்டிருக்க,
ஏம்பா... பையனுக்கா இருக்கட்டும், பொண்ணுக்கா இருக்கட்டும்... கல்யாணம் செஞ்சு முடிக்கிறது சாதாரண விசயம் இல்லை... ஏதாவது குறை சொல்லிகிட்டு இருக்காம ஏறுங்க... சாதாரண பஸ்சா இருந்தாலும் சீட் நல்லாத்தானே இருக்கு..." என்றார் ஒரு பெரியவர்.
விஜயகுமார் வீட்டாருக்கும், ஒரு சில வயதானவர்களுக்கும், நடுத்தர வயதினருக்கு மட்டும்தான் அனைவரையும் அடையாளம் தெரிந்திருந்தது. முதலில் சில நிமிடங்கள் வரை ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் பொதுப் பேருந்தில் இருக்கும் பயணிகளைப் போல்தான் தனித்தீவு மன நிலையில் அமர்ந்திருந்தார்கள்.
அந்த நேரத்தில்தான், அர்ச்சனாவின் அருகில் அமர்ந்திருந்த ராமாயி பாட்டி அர்ச்சனாவைப் பார்த்து பத்து வருசத்துக்குப் பிறகும் அப்படியே இருக்கியே என்று திருஷ்டி கழித்தாள். அப்போது பேருந்தில் அவனைப் பார்த்த அர்ச்சனாவுக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த மோசமான சம்பவம் நினைவுக்கு வந்து பயமுறுத்தியது. அவனும் இவளை அடையாளம் கண்டு கொண்டதை அவன் முகபாவனைகளில் இருந்தே அர்ச்சனாவும் புரிந்து கொண்டாள்.
மலர்விழி மிரட்டியது போல் அன்று நடந்த சம்பவத்தை அர்ச்சனா தன் அண்ணன் முரளியிடமோ, தாயார் சித்ராவிடமோ சொல்லவில்லை. அடுத்த நாளும் அவன் வந்து ஏதேனும் பிரச்சனை செய்தால் அப்போது சொல்லிக் கொள்வோம் என்றுதான் நினைத்திருந்தார்கள். ஆனால் அவன், அன்று ஓடியவன்தான், அதன் பிறகு மூன்று ஆண்டுகள் அர்ச்சனா திருவாரூர் கல்லூரியில் படித்தபோதும் ஒருநாள் கூட அவள் கண்களில் அவன் படவே இல்லை. சரியான பயந்தாங்கொள்ளி என்று அவனை நினைத்து அர்ச்சனாவும், மலர்விழியும் பலமுறை பேசி சிரித்திருக்கிறார்கள்.
இதோ, அவள் சென்னையில் வேலைக்கு சென்றும் ஆறு ஆண்டுகள் ஆகி விட்டது. அப்போதும் அவனை எங்கேயுமே சந்திக்கவில்லை. இடையில் ஒருமுறை ஏதோ பேச்சு வந்தபோது, மலர்விழி,
பேப்பர்ல வர்ற செய்திகளை நினைச்சா எனக்கு அந்த பழைய ஞாபகம் வருதுடி... சிலபேர் உண்மையாவே நாம மிரட்டுனா பயந்து ஓடிடுவாங்க. ஆனா வேறு சிலர் எத்தனை வருஷம் ஆனாலும் அந்த அவமானத்தை மனசுல வெச்சிருந்து ஆசிட் வீசுறது, கத்தியால குத்துறதுன்னு பழிவாங்குவானாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லை.
அவனை நாம மறுபடி எங்கயாச்சும் பார்த்தா எச்சரிக்கையா இருக்கணும்..." என்று பீதியை கிளப்பியிருந்தாள்.
இப்போது இந்த பயணத்தின்போது இரண்டு நாட்கள் அவன் இவளுடன் பயணிக்கப் போகிறான். மலர்விழி குரலை உயர்த்தி மிரட்டியதற்கே இத்தனை ஆண்டுகள் தலைமறைவானவன் இவ்வளவு பேர் உடன் இருக்கும்போது எதுவும் செய்யத் துணிய மாட்டான் என்று மனதிற்கு சமாதானம் சொன்னாலும், சில நேரங்களில் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழியைப் பற்றி படித்ததும் நினைவுக்கு வந்தது.
பழி வாங்க வேண்டும் என்ற நோக்கம் இல்லாமலேயே திடீரென ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பில் காயப்படுத்தி விட்டோ, கொலை செய்து விட்டோ, ‘அய்யய்யோ இப்படி செஞ்சிட்டேனே...’ என்று சிறையில் புலம்புபவர்கள் பற்றியும் படித்திருக்கிறாள். குழந்தைகளுக்கே விஷம் வைத்துக் கொன்றதால் சிறையில் இருக்கும் ஒருத்தி, ஏதோ ஒரு உந்துதலில் அந்த மாபாதகத்தை செய்து விட்டு இப்போது அதை நினைத்து வருந்துவதாகக்கூட சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. அதனால் இவன் இப்போது என்ன மனநிலையில் இருக்கிறான் என்று புரிந்து கொள்வது அர்ச்சனாவுக்கு சுலபமாக இல்லை.
பட்...." டென்று ஏதோ சத்தம் கேட்டது. அதனைத் தொடர்ந்து பேருந்தினுள் சிலருடைய குரல்கள்.
ரெண்டு தேங்காயுமே சில்லு சில்லா செதறிடுச்சு... திருப்தியோட பயணத்தை தொடரலாம்பா..."
ஸ்கூல் பஸ் ஓட்டுனவராம். எந்த வித நடுக்கமுமோ, தயக்கமோ இல்லாம சிதறு தேங்காயை செதற அடிச்சுட்டாரு..."
"பையனுக்கு கல்யாணத்தை வெச்சிகிட்டு விஜி ஏன் இப்படி பதட்டமாவே இருக்காப்லன்னு தெரியல..."
என்று அடுத்தடுத்த உரையாடல்களைக் கேட்டதும், அர்ச்சனாவின் மனதில் குழப்பம்.
அம்மா... பயணம் தொடங்கும்போது ஒரு சிதறு தேங்காதானே அடிப்பாங்க... ரெண்டு பேரு அடிச்ச மாதிரி பேசிகிட்டு இருக்காங்க..." என்றாள்.
பின் வரிசையில் இருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண், அதுக்குள்ள குட்டித் தூக்கம் போட்டுட்டியா... உன் பெரியப்பாவே வீட்டு வாசல்ல சிதறு தேங்கா அடிச்சாரு. அர்ச்சனைக்கு உடைச்ச மாதிரி ரெண்டா உடைஞ்சது...
பஸ் அங்கிருந்து நகர்ந்து, பெரிய கோவில் ராஜ கோபுரம் வழியா வந்து இப்போ தேரடி விநாயகர் கோயிலுக்கும் பழனி ஆண்டவர் கோயிலுக்கும் நடுவுல நிக்கிது. பிள்ளையாருக்கு ரெண்டாவது தேங்காயும், முருகனுக்கு மூணாவது தேங்காயும் டிரைவரைத்தான் உடைக்க சொன்னாங்க. சூப்பரா செதறிடுச்சாம்... அதான் எல்லாருக்கும் திருப்தி, சந்தோசம். ஆனா நீ அதுக்குள்ள ஒரு தூக்கம் தூங்கி எழுந்துட்ட..." என்று சொல்லிச் சிரிக்கவும், அருகில் இரண்டு வரிசைகளில் அமர்ந்திருந்தவர்களும் இந்த சிரிப்பில் சேர்ந்து கொண்டார்கள்.
பேருந்தினுள் அர்ச்சனா உள்ளிட்ட சில இளம்பெண்கள் இருந்தார்கள். கல்யாண மாப்பிள்ளை சதீஸ்குமார் தவிர சில இளைஞர்களும் இருந்தார்கள். எல்லோருமே ஒன்று நெருங்கிய, தூரத்து உறவாக இருந்தார்கள். அல்லது பல வருடப் பழக்கமான குடும்ப நண்பர்கள் என்ற அறிமுகம் இருந்தது.
ஆக இருபாலரும் எதிர்பாலினத்தை ஈர்க்க ஏதாவது செய்யவில்லை என்றால் இறைவன் ஆண், பெண் என்று படைத்ததற்கே அர்த்தமில்லாமல் போயிவிடுமே.
இளைஞர்களில் ஒருவனான வைத்தியலிங்கம், "இது என்ன பெரிய விஷயம்? நான் அடிச்சிருந்தா சில்லு சில்லா என்ன, தூள் தூளா காணாமப் போயிருக்கும்..." என்று சொல்லி முடிக்கும் முன்பே,
மற்றொருவன், ஏன்... கிரிக்கெட் ஆடும்போது யார்க்கர் போடுறேன்னு நேரே கிரவுண்டுக்கு வெளில பந்தை விட்டெறிஞ்சியே... அதே மாதிரி தேங்காயை அடுத்த தெருவுக்குள்ள தூக்கி வீசியிருப்பியா... அப்படி செஞ்சாத்தானே தேங்காய் காணாமப் போகும்..." என்று கேட்கவும் சுற்றி இருந்தவர்களின் குபீர் சிரிப்பைப் பார்த்து வைத்தியலிங்கமும் சிரித்துக் கொண்டான்.
சுப காரியத்துக்கு உறவினர்கள், நண்பர்கள் ஒன்றுகூடினால் இப்படித்தான். சின்ன காரணம் கிடைத்தால்கூட ஒருவர் மற்றவரை வாரிவிட, ஒரே சிரிப்பும், கும்மாளமுமாக இருக்கும்.
அர்ச்சனா பேருந்து சாளரத்தின் கண்ணாடியை உயர்த்திப் பார்த்தாள். தைமாத குளிர் காற்று அதிலும் அதிகாலை குளிர்காற்று சில்லென்று பேருந்தினுள் ஊடுருவியது. எதிரில் சன்னதி தெருவும், சற்று தொலைவில் ராஜகோபுரத்தில் சிவ சிவ என்ற சிவப்பு நிற எழுத்துக்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தது தெரிந்தது. கீழவீதியில் பழனி ஆண்டவர் கோவில், தேரடி விநாயகர் கோவில் ஆகிய இடங்களுக்கு நடுவில் நின்றால்தான் இந்த காட்சி கிடைக்கும் என்பதை நொடியில் உணர்ந்து கொண்டாள் அர்ச்சனா. திரும்ப கண்ணாடியை இறக்குவதற்குள் சன்னதி தெருவும் ராஜகோபுரமும் பார்வையில் இருந்து மறையத் தொடங்கின.
பேருந்து நகர்ந்ததே தெரியாமல் ஓட ஆரம்பிச்சிடுச்சு... வீட்டு வாசல்லயும் இப்படித்தான் கிளம்புனுச்சு... அதான் உன் தூக்கம் கலையலையோ..." என்று சித்ராவும் மகளை கேலி செய்தாள்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம் மனதில் வேகமாக அறைந்து உருவாக்கிய அச்சத்தினாலும், பழைய நினைவுகள் மீண்டும் தோன்றி மனதை கலக்கியதாலும்தான் பேருந்து வீட்டில் இருந்து கிளம்பி கீழவீதி பழனி ஆண்டவர் கோவில் வரை வந்ததை உணராமல் அமர்ந்திருந்தேன் என்று எப்படி அவளால் சொல்ல முடியும்?
பஸ் அலுங்காம குலுங்காம நகர்ந்து போகுதுன்னு சந்தோசப்படாதீங்க... இது தேரோடுற சிமெண்ட் தளம். ஸ்கேட்டிங் போற மாதிரி வழுக்கிட்டு போகுது... தஞ்சாவூர் சாலையில போறப்பதான் எல்லாரோட இடுப்புக்கும் சத்தியசோதனை இருக்கு..."என்றார் விஜயகுமார்.
ஏன்... மன்னார்குடி வழியா போகக்கூடாதா?" என்று கூட்டத்தில் ஒரு குரல்.
அது எப்புடி... மாப்பிள்ளைக்கு இருக்குறது ஒரே தாய்மாமன் அன்பழகன் அம்மாப்பேட்டையில இருக்காரு. அவரை குடும்பத்தோட பிக்கப் செய்யணும். அப்படியே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு நேரே வண்டியை நிறுத்தி அங்க ஒரு சூறைத்தேங்காயை சிதறடிக்கலைன்னா நாளைக்கு வரலாறு என்ன சொல்லும்..." என்று ஒரு இளைஞன் பேச, பேருந்தினுள் மீண்டும் சிரிப்பலை.
ஓ... ஏற்கனவே ரூட் மேப் போட்டாச்சா... சரிதான்..." என்று தனக்குத்தானே வைத்தியலிங்கம் கேட்டுக்கொண்டான்.
பேருந்து தெற்குவீதி, கமலாலயம் தென்கரை, மேல்கரை, துர்க்காலயா ரோடு வழியாக விளமல் கல்லுப்பாலம் செல்லும்வரை கண்ணாடி தரையில் செல்வது போன்று சென்று கொண்டிருந்தது. எல்லாம் சமீபத்திய ஆளுநர் வரவிற்காக வழவழவென்று போடப்பட்டிருந்த சாலையின் கைங்கர்யம்.
ஓடம்போக்கி ஆற்றுப் பாலத்தைக் கடந்து தஞ்சாவூர் சாலையில் பேருந்து பிரவேசித்ததுதான் தாமதம், பேருந்தின் அனைத்து பாகங்களும் கழன்று விட்டதோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு கடகடத்த சத்தத்துடன் டம் டம் என்று பள்ளங்களில் விழுந்து எழுந்து ஓடிக்கொண்டிருந்தது.
இன்னும் அம்பத்தஞ்சு கிலோ மீட்டர்தான். அப்புறம் தொடர்ந்து நாலு வழிச்சாலையிலதான் பயணம் பண்ணப்போறோம்... எல்லோரும் கொஞ்சம் பொறுத்துக்குங்க..." என்று ஒரு இளம்பெண் எழுந்து பேசினாள்.
என்னம்மா... பிரசவ வலியில துடிக்கிறவங்க கையைப் புடிச்சுகிட்டு ஆறுதல் சொல்ற மாதிரியே சொல்றியே..." என்று அவள் தோழி பதில் கொடுக்க, பேருந்தே கலகலப்பானது.
பேருந்து பதினைந்து பதினேழு கிலோ மீட்டர் சென்றிருக்கும். வைத்தியலிங்கம் இருக்கையை விட்டு எழுந்து நின்றதுடன், இரண்டு கைகளையும் தலைக்கு பின்னால் கோர்த்து வைத்து உடலை வளைத்து நெளிவெடுத்தான்.
அதைப்பார்த்த இன்னொருவன், மாப்ள... இந்த ரோட்டுல வடிவேல் மாதிரி முரட்டுத்தனமா ரிஸ்க் எடுக்காத... ஏன்னா, வடிவேல் கண்ணாடியை உடைச்சுகிட்டு பஸ்சை விட்டு வெளியில போய் விழுந்தது சினிமா... நிஜத்துல நீ பக்கத்துல இருக்குற யார் மேலயாச்சும்தான் விழுவ... வயசுப்பொண்ணு மேல விழுந்தா தர்ம அடி கிடைக்கும். வயசான டிக்கட் மேல விழுந்தா பஸ்சை ஆஸ்பத்திரிக்கு விடறது நிச்சயம்... பார்த்துக்க..." என்று சொல்லி வாய் மூடுவதற்குள் 
ஏதோ வயல்வெளிக்குள் டிராக்டரில் அமர்ந்து செல்வது போல் பேருந்தில் அமர்ந்திருந்தவர்கள் குலுங்கிக் கொண்டிருந்தார்கள். வைத்தியலிங்கம் இருக்கைகளுக்கு நடுவில் மண்டியிட்டு நமஸ்காரம் செய்து கொண்டிருந்தான். மிகவும் மிதமான வேகத்தில் ஏதோ பள்ளத்தில் இறங்கி ஏறிக்கொண்டிருந்த பேருந்து திடீரென்று பிடித்து நிறுத்தப்பட்டதும் சிலர் முன் இருக்கையில் மோதிக் கொண்டார்கள். வைத்தியலிங்கம் எழுந்திரிக்க முயற்சித்த நேரத்தில் இப்படி பிரேக் பிடிக்கப்பட்டதால் மீண்டும் அவன் குப்புற விழுந்ததில் மூக்கு போய் பேருந்தின் நடைபாதையில் மோதியது.
அடுத்தநொடி, என்ன ஆச்சு என்ற பதட்டத்திலும், ஆர்வத்திலும் நிறையபேர் இருக்கையை விட்டு எழுந்து பார்த்தார்கள். பேருந்தின் முன்னே...
தொடரும்...

No comments:

Post a Comment