நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, July 05, 2019

வசந்த மாளிகை – ராஜபார்ட் ரங்கதுரை

கர்ணன் படம் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு திரையிடப்பட்டபோது கிடைத்த வரவேற்பின் காரணமாக சிவாஜிகணேசனின் வசந்தமாளிகை படமும் டிஜிட்டலில் திரையிடப்பட்டுள்ளது. இந்தப் படமும் சில ஊர்களில் சிவாஜிகணேசன் ரசிகர்களால் (60+ வயது?) கொண்டாடப்படுவதாக செய்திகளில் பார்த்து தெரிந்து கொண்டேன்.
அந்தப் படத்தை நானும் 1990களி்ல் திருவாரூர் தைலம்மை தியேட்டரில் காலைக்காட்சியாக திரையிடப்பட்டபோது, அம்மாவின் கட்டாயத்தால் சென்று பார்த்துள்ளேன்.
படம் திரையிடுவதற்காக முன்னால் உள்ள கலர் திரை வண்ண விளக்குகளுடன் மேலெழும்போது கூட ஆப்ரேட்டர் பெட்டியை மாற்றி மற்ற மூன்று காட்சிகள் ஓடிய புதிய படத்தை திரையிடமாட்டாரா என்று எதிர்பார்த்தேன். ஆனால் வசந்தமாளிகை படம்தான் திரையிடப்பட்டது. அந்த படம் என் மனதை கவரவில்லை. அப்போது எனக்கு வயது 10க்குள்தான் இருக்கும்.




பிறகு 6ஆம் வகுப்போ 7ஆம் ஆம் வகுப்போ படிக்கும்போது திருவாரூர் நடேஷ் தியேட்டரில் காலைக்காட்சியாக ராஜபார்ட் ரங்கதுரை திரையிடப்பட்டிருந்தது. அப்போது மற்ற மூன்று காட்சிகளும் பாரத் பந்த் என்ற மொழிமாற்றுப்படம் ஓடிக்கொண்டிருந்தது. அன்றும் அப்படித்தான் அம்மாவின் கட்டாயத்தால் படம் பார்க்க சென்றிருந்த நான் வேறு படம் திரையிடப்படுமா என்று காத்திருந்தேன். ஆனால் போஸ்டர் ஒட்டியிருந்தது போல் ராஜபார்ட் ரங்கதுரைதான் திரையிடப்பட்டது.
படத்தின் துவக்கத்தில் சிறுவயது சிவாஜி கதாபாத்திரம் அம்மம்மா... தம்பி உன்னை நம்பி பாடல் ஒலித்தபோதே படம் என்னை ஈர்க்கத் தொடங்கியது. படத்தின் இறுதியில் சிவாஜி கதாபாத்திரம் உயிரிழக்கும் காட்சி சோகமாக இருந்தாலும் இந்தப்படம் என்னுடைய பதிமூன்று பதினான்கு வயதிலேயே மிகவும் கவர்ந்தது.

No comments:

Post a Comment