நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Saturday, March 23, 2019

செங்கம் டிராவல்ஸ் - 2

ஆசிரியர் : திருவாரூர் சரவணன்
பகுதி 2
தொடர்கதை
22–03–2019
முன்கதை சுருக்கம்:
அர்ச்சனா உறவினர் திருமணத்திற்கு மணமகன் வீட்டாருடன் மதுரைக்கு செல்கிறாள். அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ள பேருந்தில் ‘அவனை’ பார்த்ததும் அதிர்ச்சியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பழைய சம்பவங்கள் தொடர்ந்து கண் முன் தோன்றி அவள் மனதை அலைக்கழிக்கிறது.
*****
மணல் நிறத்துக்கு மாறியிருந்த பள்ளிச்சீருடையான வெள்ளை சட்டையை கழற்றி வீசியதும் முகம் கழுவி வந்து, கலர் சட்டையை அணிந்து கொண்டிருந்தான் வரதராஜன்.
‘‘டேய்... வரதுகுட்டி... செத்த ரேசன் கடை வரைக்கும் வந்துட்டுப்போடா... அரிசி வாங்கித்தர்றேன்... அதை எடுத்துட்டுபோய் சுந்தரி வீட்டுல போட்டுட்டு வந்துடு...’’
‘‘ஏம்மா... முன்னாலயே சொல்ல மாட்டியா? அவசரமா வெளியில கிளம்பிகிட்டு இருக்கேன்... இப்ப போயி ஏன் உயிரை வாங்குற?... தெட்சிணாமூர்த்தி இன்னும் வரலையா?...’’
‘‘டேய் நாக்குட்டி... அப்பா பேரை இப்படி தலையில அடிச்ச மாதிரி சொல்றதுக்கு ஒரு நாளைக்கு விளக்கமாறு பிய்யப்போவுது பாரு...’’
‘‘ஆமா... நீ மட்டும் வரதராஜன்னு அழகா ஒரு பேர் வெச்சிட்டு, பொம்பளைப் புள்ளை இல்லைன்னு என்னைய வரதுக்குட்டி, நாய்க்குட்டின்னுல்லாம் கூப்பிடு... நான் மட்டும் அப்பா பேர் சொல்ற புள்ளையா இருக்கறதை குத்தம் சொல்லு...’’
‘‘பேர் சொல்லும் பிள்ளைன்னா ஊர் உலகத்துல நல்ல பேர் எடுத்துக் குடுக்குறதுடா... இப்படி மரியாதை இல்லாம அப்பன் ஆத்தாளை கூப்பிடுறது இல்லை... இப்ப வரப்போறியா இல்லையா...’’ என்று குரலில் கடுமையை கூட்டினாள் வசந்தி.
ஆனால் வரதராஜன் ரேசன் கடைக்கு செல்லும் மன நிலையில் இல்லை. ‘‘நாளைக்கு சனிக்கிழமை எனக்கு லீவுதான். காலையில போலாம்...’’ என்று சட்டை பொத்தான்களை போட்டுக்கொண்டே பேசினான்.
‘‘இல்லடா குட்டி... மனுச உசிருகூட இப்ப இருக்கும் நாளைக்கும் இருக்கும்னு சொல்லலாம்... ஆனா ரேசன் கடையில இந்த நொடி இருக்குறது அடுத்த வினாடி இருக்கும்னு சொல்ல முடியாதுடா... மூணாவது வீட்டு சுசீலா இப்பதான் வாங்கிட்டு வந்தா, பத்து பதினஞ்சு பேர்தான் நிக்கிறாங்களாம்... ஆறு மணி ஆயிடுச்சுன்னா கணக்கு முடிக்கணும்னு தர மாட்டாங்கடா... நாளைக்கு காலையில கொடுத்தாதான் நிச்சயம்... அதனாலதான்டா சொல்றேன்...’’ என்று கெஞ்சலாக பேசினாள் வசந்தி.
‘‘நீ போய் வரிசையில நின்னு வாங்குறதுக்குள்ள நான் வந்துடுறேம்மா... அர்ஜண்டா போகணும்...’’ என்று வீட்டை விட்டு கிளம்பி ஓடுவதிலேயே குறியாக இருந்தான் வரதராஜன்.
இதுவே அவன் நண்பர்கள் அருகில் இருந்திருந்தால், ‘அர்ஜண்டாக போகணும்’ என்று வரதராஜன் சொன்னதுக்கு ‘கொல்லைப்பக்கம் கழிவறை இருக்கு... அதை விட்டுட்டு எங்கடா போற?’ என்று கேட்டிருப்பார்கள்.
ஆனால் வசந்தி, ‘‘அவ்வளவு அவசரமா எங்கடா போற... ஒரு நாளைப் பார்த்தாப்புல இந்த நேரத்துக்கு வெளியில சுத்த கிளம்பிடுற... இன்னைக்கு ஒருநாள் அரிசியை வாங்கிக் கொடுத்துட்டு போக வேண்டியதுதானே... உன்னைய தினம் தினம் கூப்பிடப்போறேனா... அடுத்தமாசம் நம்ம ஊர்ல ஏதோ ஒரு கட்சி பத்தாயிரம் மரம் நடுற விழா நடத்தப்போகுதாம்... அதனால உங்க அப்பா கன்னு ரெடிபண்ற வேலை அதிகமா இருக்கு... ஒரு மாசத்துக்கும் என்னைய நேரத்துக்கு எதிர்பார்க்காதன்னு சொல்லிட்டாருடா...
இன்னைக்கு ஒருநாள் லேட்டா போய் கதை பேசினா என்ன... நீ பாட்டுக்கு எப்பவும்போல ராத்திரி எட்டு ஒன்பது மணி வரை கதை பேசிகிட்டு இருந்தா நான் அவ்வளவு நேரமும் அரிசியை எங்க வச்சிகிட்டு நிக்கிறது?’’ என்றாள்.
‘‘அம்மா... என்கிட்ட பேசிகிட்டு நின்ன நேரத்துக்கு போய் வரிசையில நின்னுருந்தா கொஞ்சமாச்சு முன்னேறி இருக்கலாம்... நான் வரிசையை சொன்னேன்...
என்கிட்ட காசைக் கொடுத்தா கமிசன் அடிக்கிறன்னு நீயே கடைக்கி போறீல்ல... அதே மாதிரி அரிசியை வாங்கி வீட்டுக்கு கொண்டு வருவியோ... அடுத்தவங்க கிட்ட விப்பியோ... அதை செஞ்சுக்க வேண்டியதுதானே...’’ என்று சொன்னவாறே வீட்டு வாசலைத் தாண்டிவிட்டான் அவன்.
‘‘எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சா உன்னை ஏன்டா நான் கெஞ்சுறேன்... வீட்டுல தடி மாடு மாதிரி ஒரு புள்ளையை வெச்சிகிட்டு அக்கம்பக்கத்துல இருக்குறவங்களை உதவிக்கு கேட்டா காறி துப்புவாங்க... அதுக்காகதான் உன்னைய துணைக்கட்டுறேன்...’’ என்று தொடர்ந்து பேசினாள் வசந்தி.
‘‘அம்மா... ரொம்ப டார்ச்சர் பண்ணாத... நான்தான் நீ வரிசையில நின்னு பில் போட்டு, அடுத்த வரிசையில நின்னு அரிசி, எண்ணை, சீனியை வாங்குறதுக்குள்ள வந்துடுவேன்னு சொல்றேன்ல... அப்படி நான் வர்றதுக்குள்ள வாங்கிட்டீன்னா பக்கத்துல அண்ணாச்சி கடையில வெச்சிடுங்க... நான் வந்து எடுத்துக்குறேன்...’’ என்ற வரதராஜன் சைக்கிளை எடுத்து உந்தி ஏறி விட்டான்.
‘‘அண்ணாச்சி கடையில ரேசன் அரிசியை வைக்க விடமாட்டாருடா... இப்ப அடிக்கடி ரெய்டு நடக்குதாம்... அதனால சீக்கிரம் ரேசன் கடைக்கே வந்துடு...’’ என்று வசந்தி சொன்னது முழுவதுமாக வரதராஜன் காதுகளில் விழுந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவன் மனம் முழுவதும் ஒரு பெண்ணின் நினைவுகள்.
அவ்வளவு அவசரமாக சைக்கிளில் ஏறிச் சென்றவன் நெஞ்சம் படபடக்க, அவங்க வந்துட்டு போயிட்டாங்களா என்னன்னு தெரியலையே என்ற கேள்விக்குறியுடன்தான் சைக்கிளை மிதித்தான். பெரிய கோவிலின் வடக்கு மட விளாகத்திற்குள் நுழைந்ததுமே அவர்களை கவனித்து விட்டான். இவன் மனம் இயல்பு நிலைக்கு திரும்பியது.
கைலாசநாதர் கோயில் தெருவில் அந்த காலனி வீடுகளில் இருந்து ஆறு இளம்பெண்கள் தினமும் மாலை வேளைகளில் குடம், கயிறுடன் கிளம்பிவிடுவார்கள். அவர்களில் அர்ச்சனாவும் ஒருத்தி. மோட்டார் பம்பு மூலம் நிலத்தடி நீர், நகராட்சி மூலம் வினியோகிக்கப்படும் குடிநீர் ஆகியவை இருந்தாலும், பெரியகோயிலுக்குள் விட்ட வாசல் கோபுரம் அருகில் இருந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க செல்வார்கள்.
கிணற்றிலிருந்து ஊறி வரும் நீர் என்பதால் நல்ல தெளிவுடன்தான் இருக்கும். மாலையில் எடுத்துச் செல்லும் ஒரு குடம் நீரை அப்படியே மூடி வைத்திருந்தால் காலையில் இன்னும் நன்றாக தெளிந்திருக்கும். அப்படியே அந்த நீரை வேறு ஒரு அகலமான வாய் கொண்ட பாத்திரத்தில் ஊற்றி   காலையில் ஒரு மணி நேரம் வெயிலில் வைத்து, பிறகு அந்த நீரை ஊற்றி உலை வைத்து சோறு வடிக்க பயன்படுத்துவார்கள். அதற்கு காரணம் இருந்தது. அந்த நீரில் சமைக்கும் சோற்றில் இரவில் அந்த நீரை ஊற்றி வைத்தால் மூன்று நாள் ஆனாலும் அவ்வளவு ருசியாக இருக்கும்.
தினமும் மாலை நான்கு மணியிலிருந்து ஆறரை மணிக்குள் குறைந்தது நூறு பேராவது இந்த கிணற்று நீரை குடத்தில் எடுத்துச்செல்ல வருவார்கள்.
கோவிலுக்குள் நுழைவதை தவிர்க்கும் தினங்கள் தவிர மற்ற நாட்களில் அர்ச்சனாவும், அவள் குடியிருக்கும் காலனியில் உள்ள சில பெண்களும் கட்டாயமாக தண்ணீர் எடுக்க வருவார்கள்.
இந்த ஆறு பேரும் சொல்லி வைத்தாற்போல் நைட்டி, மேலே துண்டு, இடுப்பில் குடம், கையில் கயிறு என்றுதான் காட்சி தருவார்கள்.
அவர்கள் தண்ணீர் எடுக்கச் செல்லும்போதோ அல்லது திரும்ப வரும்போதோ குறைந்தது இரண்டு முறையாவது ஏதோ தீவிரமான வேலைக்காக சென்று கொண்டிருப்பதைப் போன்று சைக்கிளில் அவர்களை கடந்து செல்வான் வரதராஜன். இந்த செய்கை சமீப காலமாக குறிப்பாக சொல்லப்போனால் மூன்று மாதங்களாகத்தான்.
அதே நேரத்தில் இப்படி தண்ணீர் எடுக்க வரும் பெண்களை கவரும் நோக்கில் பத்துப் பதினைந்து விடலைகள் ஏதோ செய்து கொண்டிருப்பார்கள். சிலர் கோவிலுக்கு உள்ளே இந்த கிணறு இருக்கும் பகுதியில் கிரிக்கெட் ஆடுவார்கள்.
இன்னும் நாலைந்து பேர் கல்தேர் அமைந்திருக்கும் பகுதியில் இந்த பெண்களை கவனிக்காதது போல் தீவிரமாக ஏதோ வேறு உரையாடலில் ஈடுபட்டிருப்பார்கள்.
வரதராஜனைப் போல் சிலர் சைக்கிளில் அலைந்து கொண்டிருப்பார்கள். இப்படி அலையும் இளைஞர்கள் (பனிரெண்டாம் வகுப்பு படிப்பவர்களை இளைஞர்கள் என்றும் சொல்லிவிட முடியாது.) யார் யாரை நோக்கி அலைகிறார்கள் என்று பேசிக் கொள்ளும் அளவுக்கு நண்பர்களானது தனிக்கதை.
தினசரி தெருவலம் போகும் வரதராஜன் ஒருநாள் கூட அர்ச்சனாவின் கண்களை நேருக்கு நேராக பார்த்ததில்லை. ஒருமுறை மலர்விழி, ‘‘நாம தண்ணி தூக்க போறோம்... அது நம்ம வேலை. இவனுங்களுக்கு தினமும் என்ன வேண்டுதலா?... அலையுறவனுங்க யாரைப்பார்க்க அலையுறானுங்கன்னே தெரிய மாட்டெங்குது... சுத்துறவனுங்க சொல்லிட்டு சுத்துனாலாச்சும் பரவாயில்லை...
யாரைப்பார்க்க சுத்துறோம்... எதுக்கு சுத்துறோம்னு நோக்கமே இல்லாம சுத்தி யாருக்கு உதவப்போகுது?’’ என்றாள்.
‘‘மத்தவங்க எப்படியோ... இவன் நான் காலையில நம்ம காலனி வாசல்ல முனிசிபல் வாட்டர் பிடிக்கும்போதும் தினமும் கிராஸ் பண்ணுவான்டி...’’ என்று அர்ச்சனா சொல்லவும், மற்ற ஐந்து பேரின் முகங்களிலும் புன்சிரிப்பு.
‘‘நெனச்சேன்... இவனுங்களுக்கு நாலு பேருக்கு நடுவுல பளிச்சுன்னு கலராவும், அழுத்தம் திருத்தமா உடம்பு இருக்குறவளைத்தானே கண்ணுக்கு தெரியும்... அதுசரி... எங்களுக்கெல்லாம் காலையில ஆறு மணிக்கு டியூசன்னு அஞ்சரைக்கெல்லாம் கிளம்பிடுறோம்...
டியூசனை சாக்கு வெச்சு காலையில ரெண்டு குடம் தண்ணி தூக்கி வக்கிறதுல இருந்து தப்பிச்சிட்டீங்கன்னு எங்க எல்லாரையும் அவங்கவங்க அம்மாக்கள் திட்டிகிட்டு இருக்காங்க... உனக்கு ஏழு மணிக்குதான டியூசன்... கூட கொஞ்ச நேரம் தூங்காம தண்ணி பிடிச்சு நல்ல பேர் வாங்கிகிட்டு இருக்கன்னு பார்த்தா இப்படி ஒரு ரூட்டு ஓடுதா?... இந்த வருசம் பப்ளிக் எக்சாம் முடியுற வரைக்கும் தாங்குமா இல்ல அதுக்கு முன்னாலயே.... ம்...ம்...ம்...’’ என்று மலர்விழி பேசவும், உடன் இருந்த மற்ற நால்வரும் ‘‘எங்களை விட செம ஸ்பீடா இருக்கடி...’’ என்று கோரஸ் பாடினார்கள்.
‘‘சேச்சே... அப்படி எல்லாம் எதுவும் இல்லை... அவன் என்னைய பார்க்க வர்றான்னு தெரியுது... நாமளும் அந்த நேரத்துல வந்து வேலையை பார்த்தா என்னன்னு செய்யுறேன்... மத்தபடி எதுவும் இல்லை... அவன் யாரு, என்னன்னு தெரியாது... அநாவசியமா ரெண்டு பேரு நாலு பேரை செட்டு சேர்த்துகிட்டு அலம்பல் பண்ணலை... என்கிட்ட பேச டிரை பண்ணலை... படிப்புக்கு எந்த இடைஞ்சலும் இல்லை... அதனால கண்டுக்காம இருக்கேன்...
அவன் எப்ப நேர்ல பேசவோ வம்பு பண்ணவோ முயற்சி செய்யுறானோ... அப்பவே வீட்டுல சொல்லிடுவேன்... அது மட்டுமில்லை... இப்பவே எதாச்சும் வீட்டுல சொன்னா அவன்கிட்ட எதைச் சொல்லி கண்டிக்க முடியும்?
நான் யாரையும் பார்க்க வரலை... இது கவர்மெண்ட் ரோடு அப்படின்னு சொல்லிட்டா என்ன பண்றது...’’ என்று அவசரமாக பதிலளித்தாள் அர்ச்சனா.
‘‘அதானே பார்த்தேன்... உண்மையிலேயே காதல் அது இதுன்னு இருந்தா அவ்வளவு சீக்கிரம் ஒரு பொண்ணு இன்னொருத்தி எவ்வளவு நெருங்கிய சினேகிதியா இருந்தாலுமே சொல்லிடுவாளா என்ன...
அப்போ அவன் உன்கிட்ட ப்ரபோஸ் பண்ண வந்தா நீ பார்க்குறது பிடிச்சிருந்தது... ஆனா இதெல்லாம் பிடிக்காதுன்னு சொல்லிட்டு விலகிடுவியா?’’
‘‘ஆமா... பிளஸ்டூல படிக்கும்போதே காதலிக்கிறதெல்லாம் சினிமாவுக்குத்தான் சரியா வரும்... நிஜ வாழ்க்கையில இதெல்லாம் ஆவுற கதையா? காலேஜ் படிச்சி முடிக்கிற வருஷம்னாலே யோசிக்கணும்... நாம பள்ளிக்கூடம் முடிக்கிறதுக்குள்ள இதைப்பத்தி யோசிக்கிறதே தப்பு...
அழகை யார் வேணுன்னாலும் ரசிக்கலாம்... அனுபவிக்க நினைக்க கூடாது சரியா...’’
‘‘ஏய்... இவ நிறைய படம் பார்த்து டயலாக்கை எல்லாம் மனப்பாடம் செய்யுறா...’’ என்று சொன்ன மலர்விழியை செல்லமாக அடிக்க கை ஓங்கினாள் அர்ச்சனா.
‘‘அர்ச்சனா... நீ எல்லா படங்களையும் பார்க்காத... ஒண்ணு... காதலர்கள் ஜெயிக்கிற படத்தை பாரு.... இல்லன்னா பள்ளிக்கூட காதல் தப்புன்னு அறிவுரை சொல்ற படத்தையோ அல்லது காதலர்கள் தோற்குற படத்தையோ பாரு... எல்லாத்தையும் பார்த்தா இப்படி குழம்பிப்போய் நிற்க வேண்டியதுதான்....’’
‘‘நீ வாயை மூட மாட்டியா... காதல்னா என்னன்னு எனக்கு புரியலை... அவன் என்னைப் பார்க்க அடிக்கடி வர்றது புடிச்சிருக்கு... எனக்கும் அவனைப் பார்க்கணும்போல இருக்கு அவ்வளவுதான். ஆனா ஒரு விசயம் புரியுதுடி... நிறையபேர் ஸ்கூல்ல படிக்கிறப்பவே காதல் அது இதுன்னு வீட்டை விட்டு ஓடுறதுக்கு பின்னால உன்னை மாதிரி உசுப்பேத்தி விடுற ஒருத்தி கண்டிப்பா இருப்பா...’’ என்று அர்ச்சனா சொல்லி சிரித்தாள்.
‘‘ஏய்... நீ காதல்ல விழுந்தவளா? விழாதவளா?... எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்...’’
‘‘நீ நாயகன் டயலாக் பேசுறியா? இல்ல... முதல் மரியாதை வசனம் பேசுறியா?... அந்த உண்மை எனக்கு தெரிஞ்சாகணும்...’’ என்று அர்ச்சனாவும் மலர்விழிக்கு பதிலடி கொடுத்தாள்.
‘‘இல்ல... படிக்கிறப்ப காதல் அதுவும் பள்ளியில படிக்கிற வயசுல காதல் செஞ்சா எதிர்காலம் வீணாயிடும்னு இவ்வளவு தெளிவா சிந்திக்கிறியே... அதனால கேட்டேன்... எங்கிருந்து இந்த அறிவு உனக்கு வந்தது?’’
‘‘ஏற்கனவே அறிவில்லாம சுத்திகிட்டு இருந்தனா நான்...’’
‘‘எங்க கூட பழகும்போதே தெரிய வேணாம்?....’’
மீண்டும் அர்ச்சனா மலர்விழியை அடிக்க கை ஓங்கினாள்.
‘‘இப்படி சும்மா சும்மா கோபம் வந்தா உன் மனசுல காதல் இருக்குன்னு நினைக்குறேன்...’’
‘‘ஏண்டி... நான் நல்லா இருக்குறது புடிக்கலையா... எங்க அப்பா மாசா மாசம் இந்த வீட்டுக்கு வாடகை கொடுக்குறதுக்கே எவ்வளவு சிரமப்படுறார் தெரியுமா... இன்னும் எவ்வளவோ பிரச்சனைகள்... குடும்பம்னா சாதாரணம் இல்லைன்னு மட்டும் எனக்கு புரியது....’’ என்று அர்ச்சனா சொல்லவும் அதற்கும் மலர்விழி,
‘‘அப்போ அவனுக்கு சொந்த வீடு இருந்தா ஓ.கே பண்ணிடுவியா? ’’பதிலடி கொடுத்தாள். இதைக் கேட்ட அர்ச்சனா இந்த முறை மலர்விழியை அடிக்க முயற்சிக்கவில்லை. தன்னுடைய நெற்றியிலேயே அடித்துக்கொண்டாள்.
அடுத்த நாள் மார்கழி மாதப் பிறப்பு. மார்கழி மாத அதிகாலைக் காற்று உடலுக்கு நல்லது என்று யார் யாரோ சொல்லியதுடன் இன்னும் என்னென்னவோ காரணங்கள் சம்பிரதாயங்கள் என்று நம் முன்னோர்கள் உருவாக்கி வைத்திருக்க, கோலம் போடுவதை வெறும் கடமையாக கருதிய சிலர் அன்று இரவே பத்தரை மணிக்கெல்லாம் வாசல்களில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் சித்ரா, காலையில்தான் எழுந்து கோலம் போடப்போகிறேன் என்று சொன்னதுடன், அப்படியே அஞ்சேகால் மணிக்கு பெரியகோவில் மரகத லிங்க பூஜைக்கும் போயிட்டு வந்தோம்னா சரியா ஆறு மணிக்கு தண்ணி புடிச்சு வெக்கிறதுக்கு சரியா இருக்கும் என்று தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தாள்.
இதைக் கேட்ட அர்ச்சனாவின் மனதில் சலனம். தினமும் காலையில ஆறரை மணிக்குதான் நகராட்சி குழாய் தண்ணீர் பிடிக்கச் செல்வோம். இப்ப ஆறு மணிக்கே புடிச்சு வெச்சிட்டா ஆறரை மணிக்கு என்ன சொல்லிட்டு வெளியே வர்றது...
அந்த வௌக்கெண்ணை ஆறரை மணிக்கு காணலைன்னதும் ஏழு மணிக்கு நாம டியூசன் போற நேரம் வரை இந்த தெருவுலயேவா சுத்திகிட்டு இருக்கும்? என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
‘‘என்னடி ஏதோ சிந்தனையில இருக்க... காலையில நான் எந்திரிக்கும்போதே எழுப்பவா... ரெண்டுபேருமா கோலம் போட்டா சட்டுபுட்டுன்னு முடிச்சு குளிச்சிட்டு கோயிலுக்கு சீக்கிரம் போயிடலாம்... முன்னாடி போனா கிட்டக்க உட்கார்ந்து அபிசேகம் பார்க்கலாம்... இல்லன்னா சாமி கும்புடுறவங்க முதுகைத்தான் பார்க்கணும்...’’ என்று அவள் அம்மா சொல்லி முடித்த வினாடி,
‘‘சரிம்மா... மறக்காம எழுப்பிடு....’’ என்றாள் அர்ச்சனா.
‘‘இது என்னாடி அதிசயம்... காலையில கோலம்போட விடாம மழை ஊத்தப்போகுது பார்...’’ என்று சொல்லிவிட்டு அவள் வேலையை தொடர்ந்தாள்.

அடுத்தநாள் காலை...
தொடரும்...

No comments:

Post a Comment