நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, March 29, 2019

சோலைமலை வார இதழ் 29-03-2019


சோலைமலை வார இதழ் இங்கே JPEG Format பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.









செங்கம் டிராவல்ஸ் - 3


தொடர்கதை
திருவாரூர் சரவணன்
பகுதி 3
29–03–2019
முன்கதை சுருக்கம்:
அர்ச்சனா உறவினர் திருமணத்திற்கு மணமகன் வீட்டாருடன் மதுரைக்கு செல்கிறாள். அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ள பேருந்தில் ‘அவனை’ பார்த்ததும் அதிர்ச்சியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பழைய சம்பவங்கள் தொடர்ந்து கண் முன் தோன்றி அவள் மனதை அலைக்கழிக்கிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு- அர்ச்சனா பள்ளியில் இறுதி ஆண்டு படிக்கும்போது அவன் சுற்றி வந்த நாட்களில் நடந்த சில சம்பவங்கள் இவள் நினைவுக்கு வருகின்றன.
அர்ச்சனாவின் தோழிகள் கூட அவனைப் பற்றிக் குறிப்பிட்டு கிண்டல் செய்கிறார்கள்.
*****
பிரேக் போட்டு திடீரென இவர்கள் பேருந்து நின்ற நொடி எதிரில் ஒரு டேங்கர்லாரி இந்த பேருந்தை மோதுவது போல் நெருங்கி வந்து வலது பக்கம் விலகிச் சென்றது பின்னாலேயே வேளாங்கண்ணி செல்லும் மூன்று அரசு விரைவுப்பேருந்துகளும் சர்... சர்... சர்ரென கிராஸ் செய்து சென்றன.
‘‘டிரைவர்... ஹெட்லைட்டைப் போட்டுட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதானே...
ஓவர்டேக் பண்ணி வர்ற லாரிக்கு ஏன் வழி விடுறீங்க... எதிர்ல நாம வர்றதைப் பார்த்ததும் அவன்ல வேகத்தைக் குறைச்சு பஸ்சுங்களுக்கு பின்னால போயிருக்கணும்?’’ என்று முன் சீட்டில் முட்டிக்கொண்ட ஒருவர் கொதித்தார்.
 ‘‘ஒரு பஸ்சா இருந்தா அவனே பின்னால ஒதுங்கியிருப்பான்... இங்க மூணு பஸ்சு. அதோட எவ்வளவு தூரம் முயற்சி பண்ணி டாப் கியருக்கு பிக்கப் ஆயிருந்தானோ... இப்போ நாம வழி மறிச்சிருந்தா அடுத்து அஞ்சு கிலோ மீட்டர் தூரத்துக்கு அவனால வண்டியை நார்மல் ஸ்பீடுக்கு கூட கொண்டு போக முடியாது...
நானும் எழுபது எண்பதுல போய் சடன் பிரேக் போடலியே... இருபத்தஞ்சுல போனப்பதான குத்துனேன்....’’ என்றார் ஓட்டுநர்.
‘‘அது சரி... பள்ளிக்கூட பஸ் ஓட்டுன ஆள்னுங்குறது சரியாத்தான் இருக்கு... அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்காதீங்கப்பு...’’ என்றவரின் குரலில் கொதிப்பு அடங்கியிருந்தது.
‘‘வெளியில இருக்குற டேங்கர்லாரி டிரைவருக்கு இரக்கப்பட்ட நீங்க, பஸ்சுக்குள்ள எழுந்து நின்னுகிட்டு இருந்த சிங்கத்தைப் பத்தி யோசிக்காம மூக்கை உடைச்சுட்டீங்கிளே...’’ என்று ஒருவன் சொல்லவும்,
‘‘நீ வேற ஏண்டா மானத்தை வாங்குற...’’ என்று வைத்தியலிங்கம் அவனைப் பார்த்து பல்லைக்கடித்தான்.
பேருந்தினுள் இருந்தவர்கள் ஆளாளுக்கு ஏதோ கதை பேசிக் கொண்டு வர, அர்ச்சனாவின் மனதில் இப்போதைக்கு ஒரே ஒரு கேள்விதான்.
‘பஸ்சுல இருக்குறதுல பாதிப்பேருக்கு மேல சொந்தக்காரங்கதான். இவனை எந்த பழக்கத்துல பெரியப்பா உள்ள விட்டிருக்காரு... நமக்கு தெரிஞ்சவரை இவனோட நம்ம பெரியப்பாவுக்கு எந்த பழக்கமும் இல்லையே...’என்ற கேள்வி அர்ச்சனாவின் மனதில் வெகு நேரமாக ஓடிக்கொண்டே இருந்தது.
‘‘நாலு வேன் புடிச்சாகூட நெருக்கியடிச்சு உட்காரணும்... அதோட பயங்கரமா குலுக்கி எடுத்துடும். அக்கம் பக்கம் உட்கார்ந்துருக்குறவங்க கிட்ட நல்லா பேசக்கூட முடியாது. அதுக்காகத்தான் தாராளமா உட்கார்ந்து போகலாம்னு பஸ்சைப் பிடிச்சேன்...
நான் நினைச்ச மாதிரியே எல்லாரும் சகஜமா பேசி அரட்டை அடிச்சுகிட்டு வர்றீங்க... ஆனா அர்ச்சனாவுக்குதான் என்னாச்சுன்னு தெரியலை... நீ வேலைக்கு போறதும் கம்பெனி பஸ்சுலதானே... அதுல வாயைத் திறந்தா மூட மாட்டேன்னு இண்டர்போல் ஆபிசர்ஸ் சொன்னாங்க... இப்ப என்னாச்சு...?’’ என்று சிரிக்காமல் விஜயகுமார் பேசவும் இதைக் காதில் வாங்கியவர்கள் சிரித்தார்கள்.
‘‘அய்யோ... பெரியப்பா... மானத்தை வாங்காதீங்க... ஏதோ கம்பெனி ஞாபகம்... அதான்...’’ என்று சமாளித்தாள்.
‘‘என்னது... கம்பெனி ஞாபகமா?... உன்னை மாதிரி வெளியூர்ல தங்கி வேலை பார்க்குற பொண்ணுங்க வீட்டு நியாபகம்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்... நீ குடும்ப விசேசத்துக்கு வந்தும் வேலை ஞாபகத்துலயே இருக்க... உன் கம்பெனி ரொம்ப கொடுத்து வெச்சதும்மா...
ஆனா ஒரு சின்ன விண்ணப்பம்... இது நம்ம வீட்டு கல்யாணம்... மாப்பிள்ளைக்கு நீயும் ஒரு தங்கச்சி. அதை மனசுல வெச்சு இந்த சந்தோஷத்துல பங்கெடுத்துக்க... இந்த பயணமும் நினைவுகளும் ரொம்ப நாளைக்கு நம்ம மனசுல இருக்கும்ணு நம்புறேன்...’’ என்று விளையாட்டாக கும்பிட்டார்.
‘‘ஸ்....யப்பா... போதும் பெரியப்பா... தாங்கலை...’’ என்று அவளும் கைகூப்பினாள்.
‘‘இந்த டிரிப் முடியுறதுக்குள்ள டிம் பிரைட் ஸ்விட்ச் மாத்த வேண்டியதான்னு நினைக்குறேன்... நானும் கிளம்புனதுல இருந்தே பார்க்குறேன் டொப்பு டொப்புன்னு ஆயிரம் தடவையாச்சும் அடிச்சிருப்பீங்க போலிருக்கே...’’ என்றான் வைத்தியலிங்கம்.
‘‘ஸ்விட்ச் போனா வாங்கிக்கலாம் சார்...’’ என்ற ஓட்டுநர் அடுத்த வார்த்தை பேசவில்லை.  கிண்டலடித்தவனும்தான்.
‘‘அவர் வேலையை அவர் பார்க்குறாரு... நீ ஏண்டா எதையாச்சும் பேசி மொக்கையாகிட்டே இருக்க...’’ என்றான் அவன் நண்பன்.
கோவில்வெண்ணி பொறியியல் கல்லூரியைக் கடந்ததும் விஜயகுமார் எழுந்து ஓட்டுநர் அருகே சென்றார்.
‘‘என் மச்சான் பேமிலி அம்மாப்பேட்டை பஸ் ஸ்டாப்புகிட்டயே நிப்பாங்க சார்... மெதுவாவே போங்க...’’ என்று சொல்லவும்,
‘‘செஞ்சுடலாம் சார்...’’ என்று சுருக்கமாக பதிலளித்தார் ஓட்டுநர்.
அம்மாப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் விஜயகுமாரின் மைத்துனர் அன்பழகன், அவர் மனைவி, மகன், மகள், மருமகன் ஆகிய ஐந்து பேரை ஏற்றிக்கொண்டு பேருந்து தஞ்சையை நோக்கி விரைந்தது. நடுவில் இரண்டு வழிச்சாலைப் பணிகள் முடிந்த இடத்தில் எழுபது கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் பேருந்து, சாலைகளுக்கும் வயல்வெளிக்கும் வித்தியாசம் தெரியாத இடங்களில் ரோடு ரோலரின் வேகத்தை பயன்படுத்திக் கொண்டது.
தஞ்சை புறநகர்ப்பகுதியை அடைந்ததும் வேகம் பிடித்த பேருந்து புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் நுழைவாயில் எதிரே ஓரம் கட்டி நின்றது.
‘‘விஜி... நீ என்னதான் மாப்பிள்ளையைப் பெத்தவனா இருந்தாலும் கல்யாணம் நடந்து முடியுற வரை ஏதோ இனம்புரியாத பதட்டம் உன் மனசுல இருக்கத்தான் செய்யும்... அதனால இப்பவும் டிரைவரையே அடிக்கச்சொல்லுப்பா... ஆங்... அப்புறம் ரெண்டு தேங்காயா அடிக்கச்சொல்லு... கணக்குக்கு ஒத்தப்படையா அஞ்சு தேங்காயா இருக்கட்டும்...’’ என்றார் விஜயகுமாரின் தந்தை வேதாச்சலம்.
இங்கேயும் தேங்காய்கள் சிதறின.
தேங்காய்களை சிதறச்செய்து விட்டு இருக்கைக்கு வந்த டிரைவர், ‘‘விஜயகுமார் சார்... தஞ்சாவூர் - புதுக்கோட்டை ரோடு அகலப்படுத்திகிட்டு இருக்காங்க. அடுத்து திருப்பத்தூர்ல இருந்து மேலூர் வரைக்கும் அகலப்படுத்துற வேலை இன்னமும் நடக்குது. அதனால திருச்சி, திருச்சியில இருந்து மதுரைன்னு முழுக்க நாலு வழிப்பாதையிலேயே போயிடுவோமா? முப்பதுல இருந்து முப்பத்தைந்து கிலோ மீட்டர் தூரம் அதிகமாகும். அதோட மூணு நாலு இடத்துல டோல் பணம் கட்டுற மாதிரி இருக்கும்... நீங்க சொல்றதை வெச்சுதான் இப்போ எந்த பாதையிலே போறதுன்னு தீர்மானிக்கணும்...’’ என்றபடியே பேருந்தை ஓட்ட ஆரம்பித்தார்.
‘‘என்னப்பா இது... இவர் சொல்றதை வெச்சுதான் தீர்மானிக்கணும்னு சொல்லிட்டு நீங்க பாட்டுக்கு மேம்பாலத்துல வண்டியை விடுறீங்க?’’ இது வைத்தியலிங்கம்.
‘‘பட்டுக்கோட்டை பைபாஸ் தாண்டி திருச்சி புதுக்கோட்டை ரோடு பிரியுற இடம் வரை ஏழெட்டு கிலோ மீட்டருக்கு மேல இந்த பாதைதான்... நீங்க உங்க தீர்மானத்தை சொல்லுங்க சார்...’’
விஜயகுமார் பதில் சொல்வதற்கு முன்பே,
‘‘இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு... திருவாரூர்ல இருந்து தஞ்சாவூர் வந்ததுலயே பாதிப்பேரோட இடுப்பு கழன்டு போச்சு. மீதி பேருக்கு எப்ப என்ன ஆகுமோன்னு தெரியலை...
என்றா பசுபதி வண்டியை உடுறா திருச்சி ரோட்டுல...’’ என்று சொன்னான் வைத்தியலிங்கம்.
பொதுவாக இளைஞர்கள் நான்கு பேர் சேர்ந்தால் அங்கு உற்சாகமாகி விடுவார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் பல நேரங்களில் சிரிப்பை வரவழைக்கும் ஜோக் சொன்னாலும் சிரிப்பதைப் பற்றி யோசிக்கவே முடியாத அளவுக்கு ஜோக் சொல்லும்போதுதான் அவர்கள் அத்தனை பேரும் சிரிப்பார்கள். இப்போதும் அதுதான் நடந்து கொண்டிருந்தது.
‘‘என்ன சார்... பதிலையே காணோம்...’’ என்று ஓட்டுநர் சொன்னது விஜயகுமாரைப் பார்த்து.
‘‘இடுப்பு போச்சுன்னு சொந்தக்காரங்கள்லாம் சொல்லிட்டாங்களே... இதுல நேயர் விருப்பம்தான் முக்கியம்... அப்புறம் ஏன் என்கிட்ட கேட்கணுமா என்ன?’’
‘‘வண்டியை ஒப்பந்தம் செஞ்சது, நாளைக்கு பணம் செட்டில்பண்ணப்போறது நீங்கதானே சார்... உங்க உத்தரவுதானே முக்கியம்...’’ என்று ஓட்டுநர் சிரித்தார்.
‘‘அடச்சை... நம்ம வார்த்தைக்கு இவ்வளவுதான் மரியாதையா... இப்படி அசிங்கப்படுத்திட்டாரே டிரைவர்...’’ என்று நாட்டாமை பட வசனம் பேசிய வைத்தியலிங்கத்திடமிருந்து சோர்வுடன் வார்த்தைகள் வெளிப்பட்டன.
‘‘கல்யாண வீட்டுல எப்படி எல்லாம் பிரச்சனை உருவாகுதுன்னு புரிஞ்சுகிட்டீங்கிளா டிரைவர்... இனிமே இப்படி வம்புல மாட்டி விட்டுடாதீங்க... திருச்சி வழியாவே மதுரைக்கு போகலாம்...’’ என்று சொல்லி முடித்தார் விஜயகுமார்.
அவர் சொல்லி முடித்ததுதான் தாமதம், சட்டென்று கியரை மாற்றி, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தை நோக்கி முன்னால் சென்று கொண்டிருந்த தேனி செல்லும் பேருந்தை முந்திச்சென்று மேம்பாலத்தில் ஏற்றினார். அங்கிருந்து வேகம் பிடித்த பேருந்து வாழவந்தான் கோட்டை டோல்கேட்டை நெருங்கும்வரை வேகம் குறையவேயில்லை.
திருச்சியைக் கடந்து மதுரை செல்லும் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, விஜயகுமார், ‘‘சார்... ஓரளவு நல்ல ஹோட்டலா பார்த்து நிறுத்துங்க... காலை டிபனுக்கு மண்டபத்துக்கு வந்துடுறோம்னு சொல்லியாச்சு... இப்போ டீ, ஸ்நாக்ஸ், பிஸ்கட் எதாச்சும் சாப்பிட்டாத்தான் எல்லாருக்கும் தெம்பா இருக்கும்...’’ என்றார்.
‘‘ஹைவேஸ் பக்கம் இருக்குற பெரும்பாலான ஹோட்டல் என்ன நிலையில இருக்கும்னு நல்லாவே புரிஞ்சு வெச்சிருக்கீங்க சார்... கொஞ்சம் நேரமானாலும் பரவாயில்லை... பக்கத்துல ஏதாவது ஊருக்குள்ள போய் பார்த்துடுவோம்...’’ என்ற ஓட்டுநர் விராலிமலையில் ஊருக்குள் சென்று ஒரு இடத்தில் ஓரம்கட்டி நிறுத்தினார்.
‘பத்து வருசத்துக்கு முன்னால ரெண்டு பேருமே ஸ்கூல்ல பிளஸ்டூ படிச்சுகிட்டு இருந்தோம். ரெண்டுங்கெட்டான் வயசுல என்ன செய்யணும்னு அவனுக்கும் தெரியாது... எனக்கும் புரியாது. 
இத்தனை வருசத்துல நடந்ததை எல்லாம் மறந்துட்டு வேலையில கவனம் செலுத்திகிட்டு இருந்தாலும் அவனைப் பார்த்ததுமே பழசு எனக்கு ஞாபகம் வந்தது மாதிரி அவனுக்கும் வந்துருக்குமா?
இப்படி மிரட்டுனா இனிமே பின்னால வர்றது, வேற வகையில இடைஞ்சல் பண்றதெல்லாம் இருக்காதுன்னுதான் மலர்விழி அப்படி கத்துனா... கொஞ்ச நாள் தலைமறைவா இருந்துட்டு மறுபடி கோவிலுக்கு தண்ணி எடுக்க போறப்ப வழக்கம்போல வருவான்னு நினைச்சேன்...
சரியான பயந்தாங்கொள்ளியா இருந்துருக்கான். மூணு வருசம் திருவாரூர் கல்லூரியில படிச்சப்ப கூட ஒரு நாள் கூட அவனை பார்க்கவே இல்லை. அதுக்கப்புறம் ஒரு வருசம் திருவாரூர்லயே நாம ஒரு தனியார் கம்பெனியில இருந்தப்பவும் அவனைப் பார்க்கலை. ஆனா அவன் எங்கயாச்சும் வந்து மறைஞ்சிருந்து என்னைய பார்த்துகிட்டு இருந்தானான்னு தெரியலை.
அவனைப் பத்தி எனக்கு வேணுன்னா முழுசா தெரியாம இருக்கலாம். ஆனா என்னைப் பத்தியும், இந்த கல்யாணத்துக்கு நான் கண்டிப்பா வருவேன்னும் அவனுக்கு தெரியாம இருக்காது.
பத்து வருசத்துக்கு முன்னால டீன் ஏஜ்ல ஏற்பட்ட ஈர்ப்பு காரணமா பார்த்த ஒருத்தியை, அதுலயும் ஒரு தப்பு பண்ணிட்டு அதுக்காக என் தோழி மிரட்டுன மிரட்டலுக்கே கண்ணுல படாம ஓடிப்போனவன், என்னைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைஞ்சதை வெச்சுப் பார்க்கும்போது அவன் பழசை மறக்கலைன்னும் தெரியுது. அதேசமயம் இங்க என்னைய அவன் எதிர்பார்க்கலையோன்னும் குழப்பமா இருக்கு.
ஏற்கனவே பேசிப் பழகி இருந்தா அது வேற விசயம். முதன் முதல்ல பேசுறதுன்னா இப்ப இத்தனை சொந்தக்காரங்க இருக்கும்போது நான் போய் பேசுறதோ, அவன் வந்து என் கிட்ட பேசுறதோ நடக்குற கதை இல்லை.
பேசாம மலர்விழிக்கே போன் போட்டு பேசிட வேண்டியதுதான்... என்று அர்ச்சனா நினைத்துக் கொண்டிருக்கும்போதே சித்ரா அவளைப் பிடித்து உலுக்கினாள்.
‘‘ஏய்... எவ்வளவு நேரமா உன்னைய கூப்பிடுறேன்... எந்த உலகத்துலடி இருக்க... நானும் காலையில பஸ்சுல ஏறுனதுல இருந்தே பார்க்குறேன்... ஏகப்பட்ட சிந்தனையிலதான் இருக்க... இப்ப என்ன உன் பிரச்சனை...?’’
‘‘ஸ்... சாரிம்மா... சரி, பஸ் ஏன் இங்க நிக்கிது?’’ என்றாள் அர்ச்சனா.
‘‘ம்... சுத்தம்... வண்டி நின்னு அஞ்சு நிமிசமாச்சு... பாதிப்பேர் காபி குடிச்சே முடிச்சுட்டாங்க... நீ வர்றியா... இல்ல நான் மட்டும் போகவா...’’ சித்ரா குரலில் லேசான எரிச்சல்.
அர்ச்சனா இருக்கையை விட்டு எழுந்து முன்பக்க கண்ணாடி வழியாக வெளியே பார்த்தாள். அங்கு ஒரு பேக்கரி வாசலில் அவன் எதையோ தின்று கொண்டிருந்தான்.
‘முடிஞ்சா பொதுவா எதையாச்சும் அவன்கிட்ட பேசுவோம்... இல்லன்னா கொஞ்சம் ஓரமா நின்று மலர்விழிகிட்ட போன்ல பேசி யோசனை கேட்கலாம்.’ என்ற முடிவிற்கு வந்தவளாய்,
‘‘நானும் வர்றேம்மா...’’ என்று கிளம்பினாள்.
இறங்கி பேக்கரியை நோக்கி நடக்கும்போதே அவள் மனதில் வேறு பல எண்ணங்கள். ஆறு மாசம் பின்னால சுத்தி, அப்படி ஒரு காரியத்தை செஞ்சிட்டு போனவனை நினைச்சு ஏன் என் மனசு இப்படி அலைபாயுது...
டீன் ஏஜ்ல முதன் முதல்ல மனசுல பதிஞ்சவன்னுங்குறதுதான் காரணமா? அப்படியா அவன் என் ஆழ்மனசுல பதிஞ்சிருக்கான்...? ஒருவேளை அவன் என் மனசுக்குள்ள இருந்ததாலதான் ஆறு வருசமா வேலை பார்க்குற இடத்துல ஒரு ஆண் மேல கூட ஈர்ப்பு வரலையா?
அப்படி இருந்தா அவனை காலையில பார்த்ததும் பத்துவருசமா உருவம் மாறாம இருக்குற என்னைய அவன் அடையாளம் கண்டுபிடிச்சுட்டான்னு தெரிஞ்சதும் ஏன் அப்படி காரணமில்லாம பயந்தேன்...?
அவன் என்னைய பழிவாங்கணும்னு நினைச்சு அரைவேக்காட்டுத்தனமா ஏதாவது செய்ய நினைச்சிருந்தா அடுத்து நாலு வருசம் நான் திருவாரூர்லயே இருந்தப்ப வந்து செஞ்சிருக்கலாமே... ஏன் ஒரு நாள் கூட என்னைத் தேடி வரலை? இன்னைக்கு அவனோட நடவடிக்கையை பார்த்தா அவன் தப்பானவனா தெரியலையே என்று மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்து விட்டாள்.
‘‘உன்னையப் போய் கூட்டிகிட்டு வந்தேன் பாரு... நீ கனவு கண்டுகிட்டே இருன்னு பேசாம நான் மட்டும் வந்து எதையாச்சும் வாங்கித் தின்னுட்டு காபியைக் குடிச்சுட்டு வந்துருக்கணும்...’’ என்று சித்ரா கடுப்படித்ததும்தான் மீண்டும் நனவுலகிற்கு வந்தாள் அர்ச்சனா.
‘‘எதுக்கும்மா இப்படி கத்துற?’’
‘‘பின்ன என்னடி... உனக்கு கேக் வேணுமா, பன், பப்ஸ் என்ன வேணுன்னு கேட்டுகிட்டே இருக்கேன்... ஆனா நீ மறுபடி கனவு கண்டுகிட்டு இருக்க...’’
‘‘சாக்லேட் கேக்தாம்மா வேணும்...’’
‘‘எனக்கு ஒரு பன் கொடுங்க... அவளுக்கு சாக்லேட் கேக் கொடுங்க...’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அர்ச்சனா லேசாக திரும்பி அவனைக் கவனித்தாள்.
இவனும் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆக, இவளுடைய தடுமாற்றங்களை அவன் புரிந்து கொண்டிருப்பான் என்பதை அர்ச்சனாவும் தெரிந்து கொண்டாள்.
கேக்கை தின்று முடித்து விட்டு காபியை கையில் வாங்கிய அர்ச்சனா, மெதுவாக அம்மாவை விட்டு நகர்ந்து சுற்றிலும் பார்த்துக் கொண்டே மலர்விழிக்கு போன் செய்தாள்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு கடைசியாக அவன் செய்த காரியத்தை சொல்லி அவன் இப்போது இந்த பயணத்தில் உடன் இருப்பதை ஒரே வரியில் சொன்னாள்.
அதற்கு மலர்விழி...
தொடரும்...

கண்ணே கலைமானே...


சினிமா – ஒரு பார்வை
திருவாரூர் சரவணன்
29–03–2019
இளைய சமுதாயத்தையும் குழந்தைகளையும் தவறான பழக்கவழக்கங்களுக்கு இட்டுச் செல்லும்படியான படங்கள்தான் அதிகமாக வருகின்றன என்ற குற்றச்சாட்டை முழுவதுமாக மறுப்பதற்கில்லை. இத்தகைய சூழ்நிலையில் கண்ணே கலைமானே திரைப்படத்தில் பல்வேறு வசனங்கள் கவனம் பெறுகின்றன.
முக்கியமாக இரண்டு காட்சிகளில் வரும் வசனங்கள் இன்றைய வாழ்வியலில் முக்கியமான இரண்டு பிரச்சனைகளுக்கு சாதாரணமாக எளிமையான தீர்வுகளை சொல்லிச் செல்கிறது.
கந்துவட்டி வசூல் செய்பவரிடம் வரும் பாட்டி,’மூணு லட்ச ரூபாயை ஒருத்தன் கேட்டா வட்டி கிடைக்குதேன்னு யாருக்கும் தெரியாம தூக்கி கொடுத்துடுவீங்கிளா? கொடுக்குறதுக்கு முன்னால அவன் வீட்டுல உள்ள பெரியவங்க இல்லன்னா வேற யார்கிட்டயாச்சும் கேட்க மாட்டீங்கிளா?’ என்று கேட்பார்.
இன்று கந்து வட்டி காரணமாக நிகழும் குற்றங்களின் ஆரம்ப புள்ளிக்கு சென்று பார்த்தால் வீட்டுக்கே தெரியாமல் அந்த நபர் கடன் வாங்கி, தொடர்ந்து வட்டியை மட்டும் கட்டி, அந்த வட்டி கட்ட முடியாமல் மீண்டும் கடன் வாங்கி இப்படியே முழுவதும் மூழ்கும் நிலை வந்த பிறகுதான் சம்மந்தப்பட்ட குடும்பத்திற்கே தெரிகிறது. இதற்குள் நிலைமை சீரமைக்க முடியாத அளவுக்கு அபாய கட்டத்திற்கு சென்று விடுகிறது.

கடன் பெறுபவரின் வீட்டுக்கு தெரிந்து கடன் வாங்கும்போது, பெரும்பாலும் தவறான நோக்கத்திற்கு அந்த நபர் கடன் பெற்று சிக்கலில் மாட்டிக் கொள்வது தவிர்க்கப்படும். அப்படி இல்லாமல் இவ்வளவு தொகை உயிர்காக்கும் அவசரம் என்ற சூழ்நிலையில் குடும்ப உறுப்பினர்கள் நகை, வேறு அடமானம் உள்ளிட்ட வகையில் உதவும்போது கந்து வட்டி நபர்களிடம் பெரிய தொகை பெற்று சிக்கிக் கொள்ளும் அவலமும் நேராது.
நாயகனின் தந்தை, மகனுக்கு தனிக்குடித்தனம் ஏற்பாடு செய்வார். ஏம்ப்பா என்று கேட்கும்போது, திருமணமான முதல் ஒரு ஆண்டு மகிழ்ச்சியான வாழ்க்கை ஒவ்வொரு தம்பதிக்கும் முக்கியம். அந்த நாட்கள் திரும்ப கிடைக்காத ஒன்று. அந்த கால கட்டத்தில் உங்களுக்குள் பிரச்சனை வேண்டாமே என்றுதான் தனிக்குடித்தனம் ஏற்பாடு செய்துவிட்டேன் என்று சொல்வார்.
இது யோசிக்க வேண்டிய தகவல். அதற்காக எல்லாரும் எடுத்த எடுப்பிலேயே தனிக்குடித்தனம் அனுப்பி விட வேண்டும் என்று சொல்லவில்லை. இந்த இடத்தில் நிறைய பெரியவர்கள் செய்யும் தவறு ஒன்று இருக்கிறது. நமக்கு மட்டும்தான் முக்கியத்துவம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அதை உணர்த்தும் விதம்தான் அடக்குமுறையாக மாறி குடும்பத்தில் முந்தைய தலைமுறைக்கும் இன்றைய தலைமுறைக்கும் இடைவெளியை ஏற்படுத்தி தனித் தீவாகவே மாற்றி விடுகிறது.
திருமணமான ஆரம்ப கால கட்டங்களில் இளம் தம்பதியர் வீட்டில் தனியாக இருப்பதற்கும், இயன்றவரை வெளியில் செல்வதற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துப்பாருங்கள். அதையும் பழைய காலம் மாதிரி அவர்களாகவே புரிந்து கொள்ளட்டும் என்று அமைதியாக இருக்காமல், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பிறகு குடும்ப பொறுப்புகள், அடுத்தது குழந்தை என்று வரும்போது அந்த வேலைகளையும் நீங்கள்தான் கவனிக்க வேண்டும். அதனால் இப்போது அளவுக்கு தனிமையில் இருக்கும் நேரம் கிடைக்காது என்பதையும் நாசூக்காக உணர்த்தி விட்டால் குடும்பங்களில் பெரும்பாலும் நல்லதே நடக்கும்.

10-11-12


துணுக்கு
திருவாரூர் சரவணன்
29–03–2019
கணிணி தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் இணைய இணைப்பு வேகத்தினால் ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள் முன் கூட்டியே அறிவிக்கப்படுகின்றன. 2019ம் ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29 ஆம் தேதியும் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 20 ஆண்டுகளுக்குப் முன்பு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவதே ஏப்ரல் கடைசி வாரமாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொடை வள்ளல்


குட்டிக்கதை
திருவாரூர் சரவணன்
29-03-2019
அழைப்பு மணியோசை கேட்டதுமே என் மனதில் குழப்பம். 
"இங்க குடி வந்து ரெண்டு நாள்தானே ஆகுது. வேண்டியவங்களுக்கு எல்லாம் இனிமேதான் முகவரியை தெரியப்படுத்தணும். அதுக்குள்ள யாரா இருக்கும்"என்று நினைத்துக் கொண்டே கதவைத்திறந்தேன்.
ஆறு நடுத்தர வயது ஆண்கள் காவியுடை, நெற்றியில் விபூதி குங்குமம், நோட்டீஸ், மஞ்சள் பை என்று நின்றதுமே, "இந்த மாதிரி ஆளுங்களோட தொல்லை தாங்காதே..."என்று மனதுக்குள்ளேயே முணுமுணுத்தபடி "என்ன விஷயம்?" என்றேன்.
ஒருவர் தன் பற்களை எல்லாம் என்னிடம் காட்டியே தீருவது என்ற முடிவுடன் ஒரு சிரிப்பையும் உதிர்த்துவிட்டு, "சார்...பத்து நாள்ல நம்ம தெரு அம்மன் கோயில் திருவிழா..."என்றவாறு நோட்டீசை என் கையில் திணித்தார். மற்றொருவர் ரசீதுப் புத்தகத்தில் எழுதத் தயாரானார்.
'என் மனைவிக்கு பக்தி அதிகம்னு இவங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா...பர்சை விட்டு பறந்துடுச்சுடா பெரிய தொகை' என்று நான் மனதுக்குள் அதிர்ந்த  நேரத்தில்தான் அந்த திருப்பம்.
"என்னங்க...நான் பேசிக்குறேன்..." என்று அருகே வந்த என் மனைவி,
"அய்யா...இந்த மாதிரி கோயிலுக்கெல்லாம் பணம் கொடுக்குறது என் வீட்டுக் காரருக்கு சுத்தமா பிடிக்காது. இருந்தாலும் வீடு தேடி வந்த உங்களை வெறும் கையோட அனுப்ப எனக்கு மனசில்லை. இந்தாங்க...இருபது ரூபாய்..."என்று அவர்களிடம் கொடுத்தாள்.
வந்தவர்கள் எதுவும் பேசாமல் பணத்தைப் பெற்றுக்கொண்டு ரசீது தந்துவிட்டுச் சென்றார்கள்.
'புது வீட்டுக்கு வந்ததும் என் மனைவி இப்படி மாறிட்டாளே' என்ற சந்தோஷம் எனக்கு. அவளிடமே என் சந்தேகத்தைக் கேட்டுவிட்டேன்.
"நீங்க ஏதேதோ கற்பனை பண்ணீக்காதீங்க. நான் அவங்களை இருபது ரூபாயோட அனுப்பக் காரணமே வேற. நேற்றே அந்தக் கோயிலைப் பற்றி விசாரிச்சுட்டேன். இங்க ரெகுலரா பூஜை செய்ய ஆள் கிடையாதாம். வருஷம் ஒரு முறை திருவிழாவுக்கும், தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களுக்கு மட்டும் ஒரு குருக்களை வெச்சு பூஜை செய்யுறாங்களாம். மற்ற நாட்களில் சரியா  விளக்கு கூட எரியுறது இல்லைன்னு சொன்னாங்க.
ஆனா இந்த ஆட்கள் ஒவ்வொரு வருடமும் வசூல் பண்ணி பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சின்னு செலவழிக்கிறாங்களாம். இந்த மாதிரி வசூல் செய்த பணத்தை வெச்சு தினமும் ஒருகால வழிபாடு நடக்க ஏற்பாடு பண்ணின பிறகு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தினா பரவாயில்லை.
வருஷம் பூராவும் பட்டினி போட்டுட்டு ஒரே ஒரு நாள் விருந்து வைக்கிற செயலுக்கு நாம் ஏன் அதிகமா கொடுக்கணும்னு நினைச்சுதான் இருபது ரூபாயோட அனுப்பினேன். இந்த திருவிழா முடிஞ்ச பிறகு தினமும் வழிபாடு நடக்க கண்டிப்பா நான் ஏற்பாடு செய்வேன்...
அப்ப ஒரு பெரிய தொகையை நீங்கதான் தரணும்..." என்று என் மனைவி சொல்லி முடிப்பதற்குள் 'தடால்' என்று ஒரு சத்தம்...
என்னவோ ஏதோன்னு பயந்துடாதீங்க...நான் தான்  மயக்கம் போட்டு விழுந்துட்டேன்.

நச்சு வாயுவிடமிருந்து தேவை எச்சரிக்கை


திருவாரூர் சரவணன்
கட்டுரை
29–03–2019
சமீபத்தில் சென்னையில் ஸ்ரீபெரும்புதூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து சென்ற பிறகு உள்ளே பார்த்த வீட்டின் உரிமையாளரும், அவரை காப்பாற்றலாம் என்று நினைத்து இறங்கிய அவரது மகன்கள், அந்த வீட்டில் குடியிருப்பவர்கள் கடைசியாக சாலையில் நடந்து சென்றவர் கூட உயிரிழந்திருக்கிறார்கள். 

அவர்களது உடல்களை மீட்கச் சென்ற தீயணைப்பு வீரரும் துணியை மட்டும் முகத்தில் கட்டிக் கொண்டு இறங்கியதால் நச்சு வாயுவை சுவாசித்ததன் காரணமாக மயங்கி, உடனடியாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதால் காப்பாற்றப் பட்டிருக்கிறார்.
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதில் முழுவதும் இயந்திரம் பயன்படுத்த வேண்டும், மனிதர்கள் ஈடுபடுத்தப் படக்கூடாது என்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் அதிகமாக தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 அப்படி இருந்தும் செயற்கைக்கோள், விண்வெளி என்று எவ்வளவோ சாதனைகளை செய்து வரும் நம் நாட்டில் கழிவுநீர் சுத்தம் செய்வதில் முழுவதுமாக இயந்திரங்களை பயன்படுத்துவதில் இன்னும் தேக்க நிலை நீடிக்கிறது.
கழிவுநீர் தேக்கத் தொட்டியில் மீத்தேன் உள்ளிட்ட ஆபத்து விளைவிக்கும் பல்வேறு நச்சு வாயுக்கள் இருக்கும் என்றும், சரியான பாதுகாப்பு ஏற்பாட்டுடன்தான் அத்தகைய தொட்டிக்குள் இறங்க வேண்டும் அடிப்படையான விழிப்புணர்வும் எச்சரிக்கை ஏற்பாடுகளும் படித்தவர்களுக்கே சரியாக தெரியவில்லை என்பதே உண்மை.
எனவே இது போன்ற பாதுகாப்பு விதிகள், விழிப்புணர்வு தகவல்களை பள்ளி மாணவர்கள், மாணவிகள் முதல் சாமானியர்கள், அதிகம் படித்தவர்கள் என்று அனைவருக்கும் சென்று சேரும் வகையில் பரப்புரை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும் இத்தகைய கழிவுநீர் தொட்டிகளை அதற்குரிய வாகனங்கள் மூலம் இயந்திரங்களை வைத்து சுத்தம் செய்தால் மட்டும் போதாது. அதற்குள் உள்ள நச்சு வாயுக்களையும் முழுமையாக பாதுகாப்பான முறையில் வெளியேற்றும் தொழில்நுட்பத்தை பரவலாக ஒவ்வொரு நகராட்சி, ஊராட்சி அளவில் கூட பயன்படுத்த அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்வார்களா?
-லெட்சுமிபிரியா.  

திண்ணையும் தவித்த வாயும்...


திருவாரூர் சரவணன்
கட்டுரை
29–03–2019
வலைதளங்களில் சமீப காலமாகவே யாரும் திண்ணை வைத்து வீடு கட்டுவதில்லை. தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்கவும் மறுக்கிறார்கள் என்ற தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இது உண்மைதான். திண்ணைகள் காணாமல் போவதற்கு முக்கிய காரணம் நிலத்தின் மதிப்பு செயற்கையாக உயர்த்தப்பட்டதும், ஒரு திண்ணை இருக்கும் இடத்தினை படுக்கை அறையாகவே கட்டி விடலாம் என்ற மனப்போக்கும் அடிப்படையான காரணங்கள் என்றாலும் இந்த எண்ணங்கள் மக்கள் மனதில் ஒரே நாளில் பொருளாதார காரணங்களால் மட்டும் ஏற்பட்டதாக கருத முடியாது.
அப்படி என்னால் இந்த நிலைக்கு யார் காரணம் என்று பார்த்தால் இதற்கெல்லாம் அரசியல்வாதிகளை குற்றம் சொல்ல முடியாது. பொதுமக்கள்தான் காரணம். வேண்டுமானால் சமூகவிரோதிகள் என்று இனம் பிரித்து சொல்லலாம்.
முன்பெல்லாம் திண்ணைகளில் பலரும் கூடி பேசினாலும் அது ஏதோ வெட்டிப்பேச்சு என்ற அளவில்தான் இருக்கும். உண்மையில் வழிப்போக்கர்கள், அடுத்தடுத்த வீடுகளில் ஏதாவது சுப நிகழ்வு நடைபெறும்போது சம்மந்தப்பட்ட வீடுகளின் விருந்தினர்கள் அங்கே இடம் போதாமல் எதிர்வீடுகள், அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள திண்ணைகளில் தஞ்சமடைந்தார்கள்.
1990 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஏன், தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பு தமிழில் துவங்கிய 1993ஆம் ஆண்டு வரை இந்த நிலைதான்.
பிறகுதான் தொலைக்காட்சிகளில் சென்னை தொலைக்காட்சி அலைவரிசை 1 என்ற காட்சி மாறியது. வீடுகளின் முகப்பும் மாறத் தொடங்கியது.
யாரும் மாலை வேளைகளிலோ, பகல் நேரத்தில் தலைச்சுமை வியாபாரிகளுடனோ அமர்ந்து உரையாடும் போக்கு குறையத் தொடங்கியது. அதற்கு தொலைக்காட்சி மட்டும் காரணமில்லை. உலகமயமாக்கல் காரணமாக பல்வேறு தொழில்கள், கடைகள் பெருகியதன் விளைவும் இதனால் மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களும் முக்கிய காரணம்.
வீட்டைச் சேர்ந்தவர்களும் அக்கம்பக்கத்தினரும் பயன்படுத்தாமல் விட்ட திண்ணைகளை வேறு ஒரு பகுதியினர் வேறு மாதிரியாக பயன்படுத்த தொடங்கினார்கள்.
ஆம். முன்பெல்லாம் ஒருவன் குடிக்கிறான் என்றால் அவனை மிகவும் மட்டமாக பார்த்து, ஏளனமாக மதித்த காலம் காணாமல் போய், யாராவது குடிக்காமல் இருக்கிறார்கள் என்றால் அவர்களை மனநோயாளியாக இருப்பார்களோ என்று சந்தேகிக்கும் காலம் தொடங்கியது.
இதனால் ஊருக்கு ஒதுக்குப்புறம், புதர் மறைவு, சுடுகாட்டு மண்டபம் என்று பதுங்கி பதுங்கி குடித்தவர்கள் எங்கே அமர்ந்து கொள்ள வசதியான இடம் இருக்கிறதோ அது சாலை ஓரம், பள்ளி வளாகம், திண்ணை, மாடிப்படி என்று எந்த வடிவில் இருந்தாலும் அமர்ந்து குடித்துவிட்டு பாட்டில், துணை உணவு இருந்த பொட்டலங்கள் என்று குப்பைகளை போடுவதுடன் சமயத்தில் வாந்தி எடுத்து வைத்துவிட்டும் செல்லத் தொடங்கினார்கள்.
இதுதான் திண்ணைகள் காணாமல் போவதற்கு முக்கியமான காரணம்.
இப்போது குற்றவாளிகள் அதிகரித்திருப்பதையும் மறுக்க முடியாது. முகவரி கேட்டு வருபவர்களும், குடிக்க தண்ணீர் கேட்டு வாசலில் அமர்பவர்களும் கூட வீட்டில் உள்ள பெண்களையும் வயதானவர்களையும் தாக்கி விட்டு (சமயங்களில் உயிரையும் போக்கிவிட்டு) கொள்ளை அடிக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
நான் நல்லவனாக இருக்க தயார்தான். ஆனால் அந்த மனநிலையை பயன்படுத்தி என்னை அழித்து விட்டு ஒருவன் என் செல்வத்தை கொள்ளையடித்துச் செல்ல தயாராக இருக்கும்போது நான் எப்படி திண்ணை வைத்து வீடு கட்டுவதையும், தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பதையும் அச்சமின்றி செய்ய முடியும்?
ஆனால் வேறொரு விசயம் செய்யலாம்.
வீட்டு வாசலில் மரம் வளர்த்து, அதன் நிழலில் ஒரு பானையில் குடிக்க தண்ணீர் வைத்து விடலாம். ஆனால் மதியம் 12 மணிக்கு மதுக்கடைகள் திறந்தாலும், காலை 6 மணிக்கே கள்ள மார்க்கெட்டில் தாங்கள் தேடுவது கிடைக்கிறதா என்று அலையும் நபர்கள் இப்படிப்பட்ட இடத்தை 24 மணி நேரமும் திறந்த வெளி மது அருந்தும் கூடமாக பயன்படுத்தும் ஆபத்தும் இருப்பதை மறுப்பதற்கில்லை.
முன்பெல்லாம் குற்றம் செய்வது மிகவும் ஆபத்தான விசயமாக இருந்தது. ஆனால் இப்போது நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று செயல்படுவதுதான் சிக்கல் நிறைந்தது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள்.
இது போன்ற நடைமுறை சிரமங்களை தாண்டியும் சமூகத்துக்கு உதவி செய்பவர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
அந்த நம்பிக்கையும், செயல்பாடுகளும்தான் உலகம் இந்த அளவுக்கு நல்லவிதமாக இயங்க வைத்துக் கொண்டிருக்கும் அச்சாணி. 

Saturday, March 23, 2019

சோலைமலை வார இதழ் 22-03-2019


சோலைமலை வார இதழ் இங்கே JPEG Format பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.









கதை

திருவாரூர் சரவணன்
22-03-2019
சார்...டைட்டில்ல கதைன்னு உங்க பேரைப் பார்த்ததும் முகில் எதுவும் பிரச்சனை பண்ணிட மாட்டானே..."
அவன் சொன்னா யாருய்யா நம்புவாங்க?... நாம ரெண்டு பேரும் இருபது வருஷமா சினிமாத்துறையிலதான் இருக்கோம். இதுவரைக்கும் ஒரு படத்துலயாவது நான் சொந்தமா எழுதின கதை இருந்ததா...இல்லைன்னு உனக்கும் எனக்கும்தான் தெரியும்.
ஆனா இதை நானே சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க. அதான்யா நேரம்னுங்குறது. இதுக்காகத்தான் அவனை உதவி இயக்குனரா வெச்சுகிட்டே சினிமாவுக்கு இப்படி இருக்கணும்...அப்படி மாத்தணும்னு சொல்லியே கதையை வேற வடிவத்துக்கு மாத்திட்டேன். விடுய்யா பார்த்துக்கலாம்."என்ற அந்த பிரபல இயக்குனர் மேலும் ஒரு கோப்பை உற்சாக பானத்தை உள்ளே ஊற்றினார்.

அப்போது கதையைத் தந்த அப்பாவி உதவி இயக்குனரான இளைஞன் வந்தான். அவன் கையில் இரண்டு கடிதங்கள்.
வாடா...அடுத்த வாரம் நம்ம படம் வெளியாகப் போகுது. நீயும் இப்ப ஒரு கிளாஸ் ஊத்திக் கொண்டாடு..."என்று அழைத்தார் பிரபல இயக்குனர்.
அதெல்லாம் வேண்டாம் சார். என்னுடைய கதையை நீங்க திரைக்கதையா மாற்றினதும் அது நான் எழுதி தமிழா மாத இதழ்லல வெளிவந்த நாவலாவே மாறிடுச்சு. அதான் அந்த பத்திரிகை நிர்வாகத்துகிட்ட இந்தக் கதையைப் படமாக்க அனுமதிக்கடிதம் வாங்கிட்டு வந்துட்டேன்.
இதுல என்னோட அனுமதிக்கடிதத்தையும் சேர்த்து வெச்சிருக்கேன்.
டைட்டில்ல கதைன்னு என் பேரைப் போடும்போது தமிழா மாத இதழ்லல பிரசுரமானதுன்னும் ஒரு வரி சேர்த்துடுங்க..."என்று அந்த உதவி இயக்குனர் சொன்னதும் பிரபல இயக்குனர் மயங்கிச்சரிந்தார்.

****

ஒரு பிரபல வார இதழ்ல மிகப்பெரிய தயாரிப்பாளர் நாங்க இந்த தெலுங்கு படத்தை பார்த்து அந்த படத்தை சுட்டோம். அந்த ஹிந்தி படத்தை பார்த்து இந்தப் படத்துக்காக நாலு சீன் உருவுனோம்னு வாரக்கணக்குல எழுதிகிட்டு இருந்தாரு. அவரு சொல்லப்போய்தான் எந்த எந்த படத்துல எப்படியெல்லாம் பிற மொழிப்படத்துல இருந்து உருவுன சீன் இருந்துச்சுன்னு அந்த வார இதழ் படிச்ச வாசகர்களுக்கு தெரிய வந்துச்சு.

ஆனா இப்போ படத்துக்கு பூஜை போடப்போற செய்தி வந்த அன்னைக்கு சாயந்திரமே இவங்க எந்த ஒலகப்படத்துல இருந்து உருவிருக்காங்க அப்படின்னு இணையத்துல அடிச்சு தொவைச்சு காயப்போட்டுடுறாங்க. உதவி இயக்குனர் கிட்ட இருந்து திருடப்பட்ட கதையை வெச்சு படம் பண்ணும் இயக்குனர் பற்றி இந்த ஒரு பக்க கதை 2010ஆம் ஆண்டு எழுதப்பட்டது.

எப்படி கதை எழுதுவது?

திருவாரூர் சரவணன்
22–03–2019
நான் 1995 வாக்கிலேயே 9ஆம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே கதை எழுத முயற்சித்தாலும் 2001ல் இவரது எப்படி கதை எழுதுவது?" என்ற புத்தகம் படித்த பின்புதான் பத்திரிகைகளில் பிரசுரமாகும் அளவுக்கு நான் எழுத கற்றுக்கொண்டேன்.
ரா.கி.ரங்கராஜனின் எப்படி கதை எழுதுவது என்ற புத்தகத்தைப் படித்த பின்புதான் எனக்கு கதை எழுதும் உத்திகள் ஓரளவு பிடிபட்டது. டெக்னிக்கலாக அதாவது கதையை எப்படி தொடங்கி எப்படி முடிக்க வேண்டும். எவை எல்லாம் இருக்க வேண்டும். எது கூடாது என்று எளிமையாக சொல்லித்தரும் கையேடு என்று எப்படி கதை எழுதுவது புத்தகத்தைக் கூறலாம்.
***
எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் ஒரு தொலைக்காட்சி பேட்டியில், தயாரிப்பாளர், ஹீரோ உட்பட யாரும் ஸ்கிரிப்டை படித்துப்பார்க்க விரும்புவதில்லை. முதல்ல கதையோட "நாட்" என்னன்னு சொல்லுங்கன்னு கேட்பாங்க. அது நல்லா இருந்ததுன்னா மொத்த கதையையும் நீங்களே சொல்லிடுங்கன்னு கேட்பாங்க... என்று கூறியிருந்தார்.

தெப்ப மண்டபம் ஏன் துர்க்காலயா ரோட்டுல இருக்கு?


அப்டியா?
திருவாரூர் சரவணன்
22–03–2019
திருவாரூர் பெரிய கோவில் தெப்பக்குளம் பகுதியில் 80 வயது பெரியவரும் 7 வயது சிறுவனும்...
‘தாத்தா... கமலாலயகுளக்கரையை விட்டுட்டு துர்க்காலயா ரோட்டுல ஏன் தெப்ப மண்டபம் கட்டியிருக்காங்க?’
‘1956ஆம் வருசம் வரைக்கும் துர்க்காலயா ரோட்டுல தெப்பமண்டபத்துக்கு எதிர்ல இருக்குற குளத்துலதான் தெப்பம் ஓடியதாம். அதுவும் ஒருநாள் மட்டும்.
அதுக்கப்புறம் என்ன காரணங்களாலேயோ தெரியலை, கமலாலயத்துல 3 நாள் திருவிழாவா மாறிடுச்சுன்னு சொல்றாங்க...
உண்மை அந்த தியாகேசனுக்குதாம்பா தெரியும்...’
‘அப்டியா தாத்தா?’
(உறுதிப்படுத்தப்படாத ஆனால் உண்மையாகவும் இருக்குமோ  என்று எண்ணக்கூடிய செய்திகள் அப்டியா தாத்தா பகுதியில் இடம்பெறும்.)

ஜனவரி, பிப்ரவரி, மார்ச்‘வரி’

திருவாரூர் சரவணன்
கட்டுரை
22–03–2019
முறைப்படி சம்பளப்பட்டியல் மூலம் மட்டும் ஊதியம் வாங்குபவர்களுக்கு ஜனவரி, பிப்ரவரி என்றாலே மார்ச்சுவரிக்கு அனுப்பும் அளவுக்கு வரிப்பிடித்தம் இருக்கும் என்ற அளவுக்கு பேதியைக் கொடுக்கும் விஷயம் வரிப்பிடித்தம் என்று சொல்வார்கள். 2010 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரையை இன்றும் திருத்தம் செய்வதற்கு அவசியமிருக்கவில்லை.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பது பல விஷயங்களில் இருந்தாலும் பெரும்பகுதி மக்களின் அவல நிலை என்பது மாறாததாகவே இருக்கிறது.
கையெழுத்து போட்டு சம்பளம் வாங்கும் அப்பாவி நடுத்தர வர்க்கத்தின் ஜனவரி, பிப்ரவரி சம்பளங்கள் வருமான வரிக்காகவே பெரும்பாலும் பிடிக்கப்பட்டு விடுவதால் மார்ச்சுவரிக்கே செல்லும் அளவுக்கு பொருளாதார நெருக்கடி இருக்கும் என்று சொல்வார்கள்.
இது பல ஆண்டுகளுக்கு முன்பே பெரும்பாலானவர்கள் அறிந்த விசயம்தான்.  நண்பர் ஒருவர் அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் பள்ளித்தோழன் என்று கூறி நண்பரின் அம்மாவிடம் பேசியிருக்கிறான்.
‘‘எனக்குத் தெரிஞ்ச கவர்மெண்ட் ஆபீஸ்ல தமிழ்- ஆங்கிலம் டைப் அடிக்கிற திறமையோட கம்ப்யூட்டரும் இயக்கத் தெரிஞ்ச ஆள் வேலைக்கு வேணும். உடனடியா இந்த ஆபீசுக்கு வர சொல்லுங்க."அப்படின்னு வேப்பிலை அடிச்சுட்டு போயிருக்கான்.
நண்பரின் அம்மாவுக்கோ, புள்ளைக்கு கவர்மெண்ட் வேலை கிடைக்கப்போகுதுன்னு சந்தோஷம். வீட்டுக்கு வந்ததும் நண்பர்கிட்ட சொல்லியிருக்காங்க. நண்பருக்கு மட்டும் இதுல எதோ ஒரு வில்லங்கம் இருக்குன்னு புரிஞ்சுடுச்சு.
போட்டித்தேர்வுல பாஸ் பண்ணினவங்களுக்கு கூட ஒழுங்கா வேலை கிடைக்குதான்னு தெரியலை. நண்பரோ பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை வேலை வாய்ப்பு அலுவலகத்துல பதிவு பண்ணினதோட சரி. அதை புதுப்பிக்க கூட இல்லை. இப்படி எதாவது போஸ்டிங் போடுறதுன்னா கட்சிக்காரன்லேர்ந்து மேலதிகாரி வரைக்கும் பல லட்சம் பார்க்காம தாகத்துக்கு தண்ணி கூட குடிக்க மாட்டாங்கன்னு நண்பருக்கு தெளிவா புரிஞ்சது.
அப்துல்கலாம் ஐயா சொன்னது இந்த மாதிரி கனவு இல்ல அப்படின்னு சொல்லி நண்பர் தனது அம்மாவோட கனவை கலைச்சுட்டு மறு நாள் பள்ளித்தோழனை பார்க்கப் போயிருக்கார். எந்த ஒரு விஷயத்தையும் சுத்தமா தெரிஞ்சுக்காம நிராகரிக்கிற பழக்கம் அந்த நண்பருக்கு கிடையாது.
அந்த அரசு அலுவலகத்துல இருந்த ஆபீசரில் பலர் ஒரு விஷயத்தை சபிச்சுகிட்டுதான் இருந்தாங்க.
ஒழுங்கா கையால எழுதி வேலையை முடிச்சுகிட்டு இருந்தோம். இந்த சனியனை (கம்ப்யூட்டர்) கொண்டு வந்து வெச்சு எங்க உயிரை எடுக்குறாங்க. இதுல சில ஆவணங்களை தமிழ்ல டைப் பண்ணி இந்த பைனான்சியல் இயருக்குள்ள மேலிடத்துக்கு அனுப்பியாகணும்."அப்படின்னு சொல்லியிருக்கார்.
அவ்வளவு வேலை பாக்கி இருந்தது. நண்பரின் பணித்திறமையை வெச்சு கணக்கு பண்ணி பார்த்திருக்கார். ஆறு மணி நேரம் ஒதுக்கி டைப் செய்தாமுப்பது வேலை நாள் தேவைப்படும்.
எவ்வளவு சார் தருவீங்க. வேலையோட உறுதித் தன்மை எப்படி"ன்னு கேள்வி எழுப்பியிருக்கார்.
இங்க வேலை பார்க்குற ஆபிசருங்க எல்லாரும் கொஞ்ச பணம் போட்டுதான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கணும். எங்களால வேலை செய்ய நேரம் இல்லாததால சேர்ந்து கிடக்குற வேலையைத்தான் உங்களை செய்ய சொல்லப் போறோம். இதுக்கு அட்டனன்ஸ் எதுவும் கிடையாது. உங்க வேலை திருப்திகரமா இருந்தா எங்க ஹெட் ஆபீசுல சொல்லி எதாவது வேலை வாங்கித்தர முயற்சி செய்வோம்." அப்படின்னு ரொம்ப அழகா பேசியிருக்கார் அந்த ஆபிசர்.
நண்பருக்கு விஷயம் புரிஞ்சுடுச்சு. அட்டனன்ஸ் இல்லாம போய் இவங்க இயர் எண்ட் பணிச்சுமையை நான் முடிச்சு கொடுத்தா அத்தோட கழட்டி விட்டுடுவாங்க. அடுத்த வருஷம் அடுத்த அடிமை சிக்காமயா போயிடும்னுங்குறது அவங்க எண்ணம்.
நண்பர் ஒரு நாளைக்கு நூற்றைம்பது ரூபா கேட்டிருக்கார். (சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு) ஆனா அவங்க ஐம்பது ரூபாய்க்கு மேல தரத் தயாரா இல்லை. நண்பரும் அந்த அரசு அலுவலகத்துக்கு வேலைக்குப் போறதா இல்லை. அந்த துறை மட்டுமில்ல. நண்பருக்கு தமிழ் -ஆங்கிலம் டைப், டேலி அக்கவுண்ட்ஸ் எல்லாம் தெரியும்னுங்குறதால வேற சில அரசு அலுவலகங்கள்லயும் கூப்பிட்டிருக்காங்க. எல்லாம் மார்ச்சு ஜூரம்தான்.
நண்பருக்கு அவங்க மேல கோபம் இல்லை. வேலை பார்க்க வேண்டிய நாள்ல வேலை பார்க்க மனசில்லாம இருந்துட்டு வருஷக்கடைசி ஆனதும் தவிக்கிறதை புரிஞ்சிகிட்டார். இன்னும் சில இடங்கள்ல பல பணியிடங்கள் நிரப்பப்படாம இருக்குறதாலயும் பணிகளை உரிய காலத்துக்குள்ள முடிக்க முடியாத அளவுக்கு கஷ்டம். ஆனா கம்ப்யூட்டரை திட்டுன ஒரு அரசு ஊழியரை தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலயும் அந்த நண்பர் பார்த்திருக்கார்.
சில பழமைவாதிங்க புதுசா வந்துருக்குறதை கத்துக்கிட்டா கவுரவக் குறைச்சலா நினைக்கிறது உண்டு. வயசாயிட்டதால இயல்பா இருக்குற சில தயக்கம் காரணமா, இந்த இழவெல்லாம் இப்ப எதுக்கு. நாம இது நாள் வரை ஒழுங்காதான வேலை பார்த்துகிட்டு இருந்தோம்னு நினைச்சே சில தவறுகளை செய்துகிட்டு இருப்பாங்க.
எல்லா ஊர்லயும் அரசு அலுவலகங்கள்ல இப்படி மார்ச் மாசம் வந்தா இளைய சமுதாயத்துக்கு ஆசை காட்டி ஒரு மாசம் புழிஞ்சு எடுத்து வேலை வாங்கிகிட்டு சொற்ப தொகையை கொடுத்து கழட்டி விட்டுடுறதுலயே குறியா இருக்காங்க.
பலருக்கு இந்த அனுபவம் இருக்கும். நண்பர் எஸ்கேப் ஆயிட்டாரு. ஆமா, இந்த அலுவலர்கள் மறு வருஷம் என்ன செய்வாங்க.
சாரி பார்த டிஸ்டபன்ஸ்...உங்களுக்கு தமிழ்ல டைப் அடிக்கத்தெரியுமா?...கவர்மெண்ட் வேலை கிடைக்க நான் ஏற்பாடு பண்றேன். அப்படின்னு அடுத்த ஆளைத் தேடுவாங்க. அவசரப்பட்டு ஏமாந்துடாதீங்கப்பா. அதுக்குன்னு எல்லாத்தையும் சந்தேகப்பட்டு ஒதுக்கிடாதீங்க. பார்த்து பக்குவமா நடந்துக்க வேண்டியது உங்க பொறுப்பு.

செங்கம் டிராவல்ஸ் - 2

ஆசிரியர் : திருவாரூர் சரவணன்
பகுதி 2
தொடர்கதை
22–03–2019
முன்கதை சுருக்கம்:
அர்ச்சனா உறவினர் திருமணத்திற்கு மணமகன் வீட்டாருடன் மதுரைக்கு செல்கிறாள். அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ள பேருந்தில் ‘அவனை’ பார்த்ததும் அதிர்ச்சியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பழைய சம்பவங்கள் தொடர்ந்து கண் முன் தோன்றி அவள் மனதை அலைக்கழிக்கிறது.
*****
மணல் நிறத்துக்கு மாறியிருந்த பள்ளிச்சீருடையான வெள்ளை சட்டையை கழற்றி வீசியதும் முகம் கழுவி வந்து, கலர் சட்டையை அணிந்து கொண்டிருந்தான் வரதராஜன்.
‘‘டேய்... வரதுகுட்டி... செத்த ரேசன் கடை வரைக்கும் வந்துட்டுப்போடா... அரிசி வாங்கித்தர்றேன்... அதை எடுத்துட்டுபோய் சுந்தரி வீட்டுல போட்டுட்டு வந்துடு...’’
‘‘ஏம்மா... முன்னாலயே சொல்ல மாட்டியா? அவசரமா வெளியில கிளம்பிகிட்டு இருக்கேன்... இப்ப போயி ஏன் உயிரை வாங்குற?... தெட்சிணாமூர்த்தி இன்னும் வரலையா?...’’
‘‘டேய் நாக்குட்டி... அப்பா பேரை இப்படி தலையில அடிச்ச மாதிரி சொல்றதுக்கு ஒரு நாளைக்கு விளக்கமாறு பிய்யப்போவுது பாரு...’’
‘‘ஆமா... நீ மட்டும் வரதராஜன்னு அழகா ஒரு பேர் வெச்சிட்டு, பொம்பளைப் புள்ளை இல்லைன்னு என்னைய வரதுக்குட்டி, நாய்க்குட்டின்னுல்லாம் கூப்பிடு... நான் மட்டும் அப்பா பேர் சொல்ற புள்ளையா இருக்கறதை குத்தம் சொல்லு...’’
‘‘பேர் சொல்லும் பிள்ளைன்னா ஊர் உலகத்துல நல்ல பேர் எடுத்துக் குடுக்குறதுடா... இப்படி மரியாதை இல்லாம அப்பன் ஆத்தாளை கூப்பிடுறது இல்லை... இப்ப வரப்போறியா இல்லையா...’’ என்று குரலில் கடுமையை கூட்டினாள் வசந்தி.
ஆனால் வரதராஜன் ரேசன் கடைக்கு செல்லும் மன நிலையில் இல்லை. ‘‘நாளைக்கு சனிக்கிழமை எனக்கு லீவுதான். காலையில போலாம்...’’ என்று சட்டை பொத்தான்களை போட்டுக்கொண்டே பேசினான்.
‘‘இல்லடா குட்டி... மனுச உசிருகூட இப்ப இருக்கும் நாளைக்கும் இருக்கும்னு சொல்லலாம்... ஆனா ரேசன் கடையில இந்த நொடி இருக்குறது அடுத்த வினாடி இருக்கும்னு சொல்ல முடியாதுடா... மூணாவது வீட்டு சுசீலா இப்பதான் வாங்கிட்டு வந்தா, பத்து பதினஞ்சு பேர்தான் நிக்கிறாங்களாம்... ஆறு மணி ஆயிடுச்சுன்னா கணக்கு முடிக்கணும்னு தர மாட்டாங்கடா... நாளைக்கு காலையில கொடுத்தாதான் நிச்சயம்... அதனாலதான்டா சொல்றேன்...’’ என்று கெஞ்சலாக பேசினாள் வசந்தி.
‘‘நீ போய் வரிசையில நின்னு வாங்குறதுக்குள்ள நான் வந்துடுறேம்மா... அர்ஜண்டா போகணும்...’’ என்று வீட்டை விட்டு கிளம்பி ஓடுவதிலேயே குறியாக இருந்தான் வரதராஜன்.
இதுவே அவன் நண்பர்கள் அருகில் இருந்திருந்தால், ‘அர்ஜண்டாக போகணும்’ என்று வரதராஜன் சொன்னதுக்கு ‘கொல்லைப்பக்கம் கழிவறை இருக்கு... அதை விட்டுட்டு எங்கடா போற?’ என்று கேட்டிருப்பார்கள்.
ஆனால் வசந்தி, ‘‘அவ்வளவு அவசரமா எங்கடா போற... ஒரு நாளைப் பார்த்தாப்புல இந்த நேரத்துக்கு வெளியில சுத்த கிளம்பிடுற... இன்னைக்கு ஒருநாள் அரிசியை வாங்கிக் கொடுத்துட்டு போக வேண்டியதுதானே... உன்னைய தினம் தினம் கூப்பிடப்போறேனா... அடுத்தமாசம் நம்ம ஊர்ல ஏதோ ஒரு கட்சி பத்தாயிரம் மரம் நடுற விழா நடத்தப்போகுதாம்... அதனால உங்க அப்பா கன்னு ரெடிபண்ற வேலை அதிகமா இருக்கு... ஒரு மாசத்துக்கும் என்னைய நேரத்துக்கு எதிர்பார்க்காதன்னு சொல்லிட்டாருடா...
இன்னைக்கு ஒருநாள் லேட்டா போய் கதை பேசினா என்ன... நீ பாட்டுக்கு எப்பவும்போல ராத்திரி எட்டு ஒன்பது மணி வரை கதை பேசிகிட்டு இருந்தா நான் அவ்வளவு நேரமும் அரிசியை எங்க வச்சிகிட்டு நிக்கிறது?’’ என்றாள்.
‘‘அம்மா... என்கிட்ட பேசிகிட்டு நின்ன நேரத்துக்கு போய் வரிசையில நின்னுருந்தா கொஞ்சமாச்சு முன்னேறி இருக்கலாம்... நான் வரிசையை சொன்னேன்...
என்கிட்ட காசைக் கொடுத்தா கமிசன் அடிக்கிறன்னு நீயே கடைக்கி போறீல்ல... அதே மாதிரி அரிசியை வாங்கி வீட்டுக்கு கொண்டு வருவியோ... அடுத்தவங்க கிட்ட விப்பியோ... அதை செஞ்சுக்க வேண்டியதுதானே...’’ என்று சொன்னவாறே வீட்டு வாசலைத் தாண்டிவிட்டான் அவன்.
‘‘எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சா உன்னை ஏன்டா நான் கெஞ்சுறேன்... வீட்டுல தடி மாடு மாதிரி ஒரு புள்ளையை வெச்சிகிட்டு அக்கம்பக்கத்துல இருக்குறவங்களை உதவிக்கு கேட்டா காறி துப்புவாங்க... அதுக்காகதான் உன்னைய துணைக்கட்டுறேன்...’’ என்று தொடர்ந்து பேசினாள் வசந்தி.
‘‘அம்மா... ரொம்ப டார்ச்சர் பண்ணாத... நான்தான் நீ வரிசையில நின்னு பில் போட்டு, அடுத்த வரிசையில நின்னு அரிசி, எண்ணை, சீனியை வாங்குறதுக்குள்ள வந்துடுவேன்னு சொல்றேன்ல... அப்படி நான் வர்றதுக்குள்ள வாங்கிட்டீன்னா பக்கத்துல அண்ணாச்சி கடையில வெச்சிடுங்க... நான் வந்து எடுத்துக்குறேன்...’’ என்ற வரதராஜன் சைக்கிளை எடுத்து உந்தி ஏறி விட்டான்.
‘‘அண்ணாச்சி கடையில ரேசன் அரிசியை வைக்க விடமாட்டாருடா... இப்ப அடிக்கடி ரெய்டு நடக்குதாம்... அதனால சீக்கிரம் ரேசன் கடைக்கே வந்துடு...’’ என்று வசந்தி சொன்னது முழுவதுமாக வரதராஜன் காதுகளில் விழுந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவன் மனம் முழுவதும் ஒரு பெண்ணின் நினைவுகள்.
அவ்வளவு அவசரமாக சைக்கிளில் ஏறிச் சென்றவன் நெஞ்சம் படபடக்க, அவங்க வந்துட்டு போயிட்டாங்களா என்னன்னு தெரியலையே என்ற கேள்விக்குறியுடன்தான் சைக்கிளை மிதித்தான். பெரிய கோவிலின் வடக்கு மட விளாகத்திற்குள் நுழைந்ததுமே அவர்களை கவனித்து விட்டான். இவன் மனம் இயல்பு நிலைக்கு திரும்பியது.
கைலாசநாதர் கோயில் தெருவில் அந்த காலனி வீடுகளில் இருந்து ஆறு இளம்பெண்கள் தினமும் மாலை வேளைகளில் குடம், கயிறுடன் கிளம்பிவிடுவார்கள். அவர்களில் அர்ச்சனாவும் ஒருத்தி. மோட்டார் பம்பு மூலம் நிலத்தடி நீர், நகராட்சி மூலம் வினியோகிக்கப்படும் குடிநீர் ஆகியவை இருந்தாலும், பெரியகோயிலுக்குள் விட்ட வாசல் கோபுரம் அருகில் இருந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க செல்வார்கள்.
கிணற்றிலிருந்து ஊறி வரும் நீர் என்பதால் நல்ல தெளிவுடன்தான் இருக்கும். மாலையில் எடுத்துச் செல்லும் ஒரு குடம் நீரை அப்படியே மூடி வைத்திருந்தால் காலையில் இன்னும் நன்றாக தெளிந்திருக்கும். அப்படியே அந்த நீரை வேறு ஒரு அகலமான வாய் கொண்ட பாத்திரத்தில் ஊற்றி   காலையில் ஒரு மணி நேரம் வெயிலில் வைத்து, பிறகு அந்த நீரை ஊற்றி உலை வைத்து சோறு வடிக்க பயன்படுத்துவார்கள். அதற்கு காரணம் இருந்தது. அந்த நீரில் சமைக்கும் சோற்றில் இரவில் அந்த நீரை ஊற்றி வைத்தால் மூன்று நாள் ஆனாலும் அவ்வளவு ருசியாக இருக்கும்.
தினமும் மாலை நான்கு மணியிலிருந்து ஆறரை மணிக்குள் குறைந்தது நூறு பேராவது இந்த கிணற்று நீரை குடத்தில் எடுத்துச்செல்ல வருவார்கள்.
கோவிலுக்குள் நுழைவதை தவிர்க்கும் தினங்கள் தவிர மற்ற நாட்களில் அர்ச்சனாவும், அவள் குடியிருக்கும் காலனியில் உள்ள சில பெண்களும் கட்டாயமாக தண்ணீர் எடுக்க வருவார்கள்.
இந்த ஆறு பேரும் சொல்லி வைத்தாற்போல் நைட்டி, மேலே துண்டு, இடுப்பில் குடம், கையில் கயிறு என்றுதான் காட்சி தருவார்கள்.
அவர்கள் தண்ணீர் எடுக்கச் செல்லும்போதோ அல்லது திரும்ப வரும்போதோ குறைந்தது இரண்டு முறையாவது ஏதோ தீவிரமான வேலைக்காக சென்று கொண்டிருப்பதைப் போன்று சைக்கிளில் அவர்களை கடந்து செல்வான் வரதராஜன். இந்த செய்கை சமீப காலமாக குறிப்பாக சொல்லப்போனால் மூன்று மாதங்களாகத்தான்.
அதே நேரத்தில் இப்படி தண்ணீர் எடுக்க வரும் பெண்களை கவரும் நோக்கில் பத்துப் பதினைந்து விடலைகள் ஏதோ செய்து கொண்டிருப்பார்கள். சிலர் கோவிலுக்கு உள்ளே இந்த கிணறு இருக்கும் பகுதியில் கிரிக்கெட் ஆடுவார்கள்.
இன்னும் நாலைந்து பேர் கல்தேர் அமைந்திருக்கும் பகுதியில் இந்த பெண்களை கவனிக்காதது போல் தீவிரமாக ஏதோ வேறு உரையாடலில் ஈடுபட்டிருப்பார்கள்.
வரதராஜனைப் போல் சிலர் சைக்கிளில் அலைந்து கொண்டிருப்பார்கள். இப்படி அலையும் இளைஞர்கள் (பனிரெண்டாம் வகுப்பு படிப்பவர்களை இளைஞர்கள் என்றும் சொல்லிவிட முடியாது.) யார் யாரை நோக்கி அலைகிறார்கள் என்று பேசிக் கொள்ளும் அளவுக்கு நண்பர்களானது தனிக்கதை.
தினசரி தெருவலம் போகும் வரதராஜன் ஒருநாள் கூட அர்ச்சனாவின் கண்களை நேருக்கு நேராக பார்த்ததில்லை. ஒருமுறை மலர்விழி, ‘‘நாம தண்ணி தூக்க போறோம்... அது நம்ம வேலை. இவனுங்களுக்கு தினமும் என்ன வேண்டுதலா?... அலையுறவனுங்க யாரைப்பார்க்க அலையுறானுங்கன்னே தெரிய மாட்டெங்குது... சுத்துறவனுங்க சொல்லிட்டு சுத்துனாலாச்சும் பரவாயில்லை...
யாரைப்பார்க்க சுத்துறோம்... எதுக்கு சுத்துறோம்னு நோக்கமே இல்லாம சுத்தி யாருக்கு உதவப்போகுது?’’ என்றாள்.
‘‘மத்தவங்க எப்படியோ... இவன் நான் காலையில நம்ம காலனி வாசல்ல முனிசிபல் வாட்டர் பிடிக்கும்போதும் தினமும் கிராஸ் பண்ணுவான்டி...’’ என்று அர்ச்சனா சொல்லவும், மற்ற ஐந்து பேரின் முகங்களிலும் புன்சிரிப்பு.
‘‘நெனச்சேன்... இவனுங்களுக்கு நாலு பேருக்கு நடுவுல பளிச்சுன்னு கலராவும், அழுத்தம் திருத்தமா உடம்பு இருக்குறவளைத்தானே கண்ணுக்கு தெரியும்... அதுசரி... எங்களுக்கெல்லாம் காலையில ஆறு மணிக்கு டியூசன்னு அஞ்சரைக்கெல்லாம் கிளம்பிடுறோம்...
டியூசனை சாக்கு வெச்சு காலையில ரெண்டு குடம் தண்ணி தூக்கி வக்கிறதுல இருந்து தப்பிச்சிட்டீங்கன்னு எங்க எல்லாரையும் அவங்கவங்க அம்மாக்கள் திட்டிகிட்டு இருக்காங்க... உனக்கு ஏழு மணிக்குதான டியூசன்... கூட கொஞ்ச நேரம் தூங்காம தண்ணி பிடிச்சு நல்ல பேர் வாங்கிகிட்டு இருக்கன்னு பார்த்தா இப்படி ஒரு ரூட்டு ஓடுதா?... இந்த வருசம் பப்ளிக் எக்சாம் முடியுற வரைக்கும் தாங்குமா இல்ல அதுக்கு முன்னாலயே.... ம்...ம்...ம்...’’ என்று மலர்விழி பேசவும், உடன் இருந்த மற்ற நால்வரும் ‘‘எங்களை விட செம ஸ்பீடா இருக்கடி...’’ என்று கோரஸ் பாடினார்கள்.
‘‘சேச்சே... அப்படி எல்லாம் எதுவும் இல்லை... அவன் என்னைய பார்க்க வர்றான்னு தெரியுது... நாமளும் அந்த நேரத்துல வந்து வேலையை பார்த்தா என்னன்னு செய்யுறேன்... மத்தபடி எதுவும் இல்லை... அவன் யாரு, என்னன்னு தெரியாது... அநாவசியமா ரெண்டு பேரு நாலு பேரை செட்டு சேர்த்துகிட்டு அலம்பல் பண்ணலை... என்கிட்ட பேச டிரை பண்ணலை... படிப்புக்கு எந்த இடைஞ்சலும் இல்லை... அதனால கண்டுக்காம இருக்கேன்...
அவன் எப்ப நேர்ல பேசவோ வம்பு பண்ணவோ முயற்சி செய்யுறானோ... அப்பவே வீட்டுல சொல்லிடுவேன்... அது மட்டுமில்லை... இப்பவே எதாச்சும் வீட்டுல சொன்னா அவன்கிட்ட எதைச் சொல்லி கண்டிக்க முடியும்?
நான் யாரையும் பார்க்க வரலை... இது கவர்மெண்ட் ரோடு அப்படின்னு சொல்லிட்டா என்ன பண்றது...’’ என்று அவசரமாக பதிலளித்தாள் அர்ச்சனா.
‘‘அதானே பார்த்தேன்... உண்மையிலேயே காதல் அது இதுன்னு இருந்தா அவ்வளவு சீக்கிரம் ஒரு பொண்ணு இன்னொருத்தி எவ்வளவு நெருங்கிய சினேகிதியா இருந்தாலுமே சொல்லிடுவாளா என்ன...
அப்போ அவன் உன்கிட்ட ப்ரபோஸ் பண்ண வந்தா நீ பார்க்குறது பிடிச்சிருந்தது... ஆனா இதெல்லாம் பிடிக்காதுன்னு சொல்லிட்டு விலகிடுவியா?’’
‘‘ஆமா... பிளஸ்டூல படிக்கும்போதே காதலிக்கிறதெல்லாம் சினிமாவுக்குத்தான் சரியா வரும்... நிஜ வாழ்க்கையில இதெல்லாம் ஆவுற கதையா? காலேஜ் படிச்சி முடிக்கிற வருஷம்னாலே யோசிக்கணும்... நாம பள்ளிக்கூடம் முடிக்கிறதுக்குள்ள இதைப்பத்தி யோசிக்கிறதே தப்பு...
அழகை யார் வேணுன்னாலும் ரசிக்கலாம்... அனுபவிக்க நினைக்க கூடாது சரியா...’’
‘‘ஏய்... இவ நிறைய படம் பார்த்து டயலாக்கை எல்லாம் மனப்பாடம் செய்யுறா...’’ என்று சொன்ன மலர்விழியை செல்லமாக அடிக்க கை ஓங்கினாள் அர்ச்சனா.
‘‘அர்ச்சனா... நீ எல்லா படங்களையும் பார்க்காத... ஒண்ணு... காதலர்கள் ஜெயிக்கிற படத்தை பாரு.... இல்லன்னா பள்ளிக்கூட காதல் தப்புன்னு அறிவுரை சொல்ற படத்தையோ அல்லது காதலர்கள் தோற்குற படத்தையோ பாரு... எல்லாத்தையும் பார்த்தா இப்படி குழம்பிப்போய் நிற்க வேண்டியதுதான்....’’
‘‘நீ வாயை மூட மாட்டியா... காதல்னா என்னன்னு எனக்கு புரியலை... அவன் என்னைப் பார்க்க அடிக்கடி வர்றது புடிச்சிருக்கு... எனக்கும் அவனைப் பார்க்கணும்போல இருக்கு அவ்வளவுதான். ஆனா ஒரு விசயம் புரியுதுடி... நிறையபேர் ஸ்கூல்ல படிக்கிறப்பவே காதல் அது இதுன்னு வீட்டை விட்டு ஓடுறதுக்கு பின்னால உன்னை மாதிரி உசுப்பேத்தி விடுற ஒருத்தி கண்டிப்பா இருப்பா...’’ என்று அர்ச்சனா சொல்லி சிரித்தாள்.
‘‘ஏய்... நீ காதல்ல விழுந்தவளா? விழாதவளா?... எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்...’’
‘‘நீ நாயகன் டயலாக் பேசுறியா? இல்ல... முதல் மரியாதை வசனம் பேசுறியா?... அந்த உண்மை எனக்கு தெரிஞ்சாகணும்...’’ என்று அர்ச்சனாவும் மலர்விழிக்கு பதிலடி கொடுத்தாள்.
‘‘இல்ல... படிக்கிறப்ப காதல் அதுவும் பள்ளியில படிக்கிற வயசுல காதல் செஞ்சா எதிர்காலம் வீணாயிடும்னு இவ்வளவு தெளிவா சிந்திக்கிறியே... அதனால கேட்டேன்... எங்கிருந்து இந்த அறிவு உனக்கு வந்தது?’’
‘‘ஏற்கனவே அறிவில்லாம சுத்திகிட்டு இருந்தனா நான்...’’
‘‘எங்க கூட பழகும்போதே தெரிய வேணாம்?....’’
மீண்டும் அர்ச்சனா மலர்விழியை அடிக்க கை ஓங்கினாள்.
‘‘இப்படி சும்மா சும்மா கோபம் வந்தா உன் மனசுல காதல் இருக்குன்னு நினைக்குறேன்...’’
‘‘ஏண்டி... நான் நல்லா இருக்குறது புடிக்கலையா... எங்க அப்பா மாசா மாசம் இந்த வீட்டுக்கு வாடகை கொடுக்குறதுக்கே எவ்வளவு சிரமப்படுறார் தெரியுமா... இன்னும் எவ்வளவோ பிரச்சனைகள்... குடும்பம்னா சாதாரணம் இல்லைன்னு மட்டும் எனக்கு புரியது....’’ என்று அர்ச்சனா சொல்லவும் அதற்கும் மலர்விழி,
‘‘அப்போ அவனுக்கு சொந்த வீடு இருந்தா ஓ.கே பண்ணிடுவியா? ’’பதிலடி கொடுத்தாள். இதைக் கேட்ட அர்ச்சனா இந்த முறை மலர்விழியை அடிக்க முயற்சிக்கவில்லை. தன்னுடைய நெற்றியிலேயே அடித்துக்கொண்டாள்.
அடுத்த நாள் மார்கழி மாதப் பிறப்பு. மார்கழி மாத அதிகாலைக் காற்று உடலுக்கு நல்லது என்று யார் யாரோ சொல்லியதுடன் இன்னும் என்னென்னவோ காரணங்கள் சம்பிரதாயங்கள் என்று நம் முன்னோர்கள் உருவாக்கி வைத்திருக்க, கோலம் போடுவதை வெறும் கடமையாக கருதிய சிலர் அன்று இரவே பத்தரை மணிக்கெல்லாம் வாசல்களில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் சித்ரா, காலையில்தான் எழுந்து கோலம் போடப்போகிறேன் என்று சொன்னதுடன், அப்படியே அஞ்சேகால் மணிக்கு பெரியகோவில் மரகத லிங்க பூஜைக்கும் போயிட்டு வந்தோம்னா சரியா ஆறு மணிக்கு தண்ணி புடிச்சு வெக்கிறதுக்கு சரியா இருக்கும் என்று தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தாள்.
இதைக் கேட்ட அர்ச்சனாவின் மனதில் சலனம். தினமும் காலையில ஆறரை மணிக்குதான் நகராட்சி குழாய் தண்ணீர் பிடிக்கச் செல்வோம். இப்ப ஆறு மணிக்கே புடிச்சு வெச்சிட்டா ஆறரை மணிக்கு என்ன சொல்லிட்டு வெளியே வர்றது...
அந்த வௌக்கெண்ணை ஆறரை மணிக்கு காணலைன்னதும் ஏழு மணிக்கு நாம டியூசன் போற நேரம் வரை இந்த தெருவுலயேவா சுத்திகிட்டு இருக்கும்? என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
‘‘என்னடி ஏதோ சிந்தனையில இருக்க... காலையில நான் எந்திரிக்கும்போதே எழுப்பவா... ரெண்டுபேருமா கோலம் போட்டா சட்டுபுட்டுன்னு முடிச்சு குளிச்சிட்டு கோயிலுக்கு சீக்கிரம் போயிடலாம்... முன்னாடி போனா கிட்டக்க உட்கார்ந்து அபிசேகம் பார்க்கலாம்... இல்லன்னா சாமி கும்புடுறவங்க முதுகைத்தான் பார்க்கணும்...’’ என்று அவள் அம்மா சொல்லி முடித்த வினாடி,
‘‘சரிம்மா... மறக்காம எழுப்பிடு....’’ என்றாள் அர்ச்சனா.
‘‘இது என்னாடி அதிசயம்... காலையில கோலம்போட விடாம மழை ஊத்தப்போகுது பார்...’’ என்று சொல்லிவிட்டு அவள் வேலையை தொடர்ந்தாள்.

அடுத்தநாள் காலை...
தொடரும்...