நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, April 26, 2019

செங்கம் டிராவல்ஸ் - 7

பகுதி 7
‘‘இது என்னடி டிரஸ்சு?’’ என்று மலர்விழி கேட்டதும் தன்னைத் தானே ஒருமுறை பார்த்துக்கொண்ட அர்ச்சனா, ’’ஏண்டி சம்மந்தம் இல்லாம இப்படி பயமுறுத்துற... நீ கேட்டதைப் பார்த்ததும் எக்குத்தப்பா டிரஸ் கிழிஞ்சிடுச்சோன்னு நினைச்சு ஆடிப்போயிட்டேன்...’’
‘‘நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு... இது என்ன டிரஸ்...’’
‘‘ஜீன்ஸ், மேல டாப்ஸ். இதுக்கென்ன, டீசன்டாத்தானே இருக்கு...?’’
‘‘அதான் பிரச்சனையே...’’ என்று மலர்விழி சொல்லவும், அர்ச்சனாவுக்கு விபரம் புரியவில்லை. அதற்குள் சித்ரா, ‘‘ஏண்டி... பஸ்சை விட்டு இறங்கி பாதையிலேயே நின்னு பேசிகிட்டு இருக்கீங்க... உள்ள வந்து உட்கார்ந்து ஆற அமர ஆலோசனை பண்ணக்கூடாதா?... வாரம் ரெண்டு மூணு நாள் போன்ல பேசிகிட்டுத்தான் இருந்தீங்க... அப்படி இருந்தும் அவ்வளவு தலை போற செய்தியா... ஏதோ நாட்டைக் காப்பாத்தப்போற பொறுப்புல இருந்து ஆலோசனை செய்யுற மாதிரில்ல தெரியுது...’’ என்றாள்.
‘‘அம்மா... ஒரு ரெண்டு நிமிஷம்... இதோ உள்ள வந்துடுறோம்... நீங்க போங்கம்மா...’’ என்று மலர்விழி சொல்லவும், சித்ரா, ’’என்னமோ பண்ணுங்க...’’ என்று சொல்லி விட்டு நகர்ந்தாள்.


இப்போது மலர்விழி அர்ச்சனாவிடம், ‘‘அப்படியே பிளாஷ்பேக் ஓட்டிப்பாரு... பத்து வருசத்துக்கு முன்னால நாம பிளஸ்டூ படிச்சிகிட்டு இருந்தப்ப நமக்கு என்ன யூனிபார்ம்?...’’
‘‘பாவாடை தாவணி...’’
‘‘கரெக்ட்... அதுவும் எப்படி?... ஏதோ சாக்குத்துணி மாதிரியான மெட்டீரியல்ல பச்சைக் கலர் பாவாடை, தாவணி. போனாப் போகுதுன்னு கொஞ்சம் டீசன்டா இருக்கட்டும்னு வெள்ளை ஜாக்கெட் கொடுத்திருந்தாங்க.’’
‘‘ஆமா... இப்போ அதுக்கு என்ன?’’
‘‘இரு... லீவுநாள்ல டியூசன் போகும்போதோ அல்லது கோயிலுக்குப் போகும்போதோ சுடிதார் போடுவோம்... அதுவும் எப்படி, அயன் பண்ணாம சுருக்கம் விழுந்த டிரஸ்...’’
‘‘இப்போ எதுக்குடி இதையெல்லாம் சொல்லிகிட்டு இருக்க?’’
’’அது மட்டுமில்லை... தினமும் காலையில காலனி வாசல்ல தண்ணி புடிச்சப்ப இருந்ததும் நைட்டி. சாயந்திரம் நாம எல்லாரும் பெரிய கோயிலுக்கு தண்ணி தூக்கப் போனதும் நைட்டியிலதான்...
உன் ஆளு நம்மள இந்த கெட்டப்லதான் பார்த்துருக்கான்... தீபாவளி, பொங்கல் மாதிரி விசேச நாட்கள்ல மட்டும்தான் நாம ரிச்சா டிரஸ் பண்ணியிருக்கோம்... காலேஜ் படிக்கும்போது நமக்கு தெரிஞ்சு அவன் நம்மளை பார்க்கவே இல்லை. கரெக்டா சொல்லணும்னா, பிளஸ்டூ ஃபேர்வெல் பார்ட்டி அன்னைக்கு நாம எல்லாரும் புடவை கட்டியிருந்த அன்னைக்கு உன்னைய முழுங்குற மாதிரி பார்த்தான். அதைத் தவிர என்னைக்கு அவன் உன்னைய ரிச்சான டிரஸ்ல பார்த்துருக்கான்னு சொல்லு...’’
‘‘தயவு பண்ணி விஷயத்துக்கு வாடி... என் தலை வெடிச்சிடும் போலிருக்கு...’’ என்று அர்ச்சனா கிட்டத்தட்ட பொறுமை இழந்து விட்டாள்.
‘‘இப்ப நீ ஜீன்ஸ், டாப்ஸ்ன்னு சாதாரணமா சொல்லிட்ட... ஆனா சூப்பரான ராயல் லுக்கா இருக்கு...’’ என்று மலர்விழி பேசிக்கொண்டிருக்கும்போதே, இடைமறித்த அர்ச்சனா,
‘‘அடடா... உன் வாயால என் டிரஸ் சூப்பர்னு இத்தனை வருசத்துல இப்பதாண்டி சொல்லியிருக்க... மறுபடி சுனாமியே வரப்போகுது...’’ என்றவளின் முகத்தல் வெட்கம்.
‘‘ம்க்கும்... அப்படியே வந்தாலும் மதுரைக்கு வராது... எனக்கு கல்யாணமாகி குழந்தை இருக்குடி... இனிமே உன்னை மாதிரி ஆளு பக்கத்துல இருந்தா எனக்கு வரப்போற வரன் தட்டிப்போயிடுமேன்னு கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.’’
‘‘இன்னும் நீ விஷயத்துக்கே வரலியேடி...’’
‘‘இரு... சொல்லிகிட்டுதானே இருக்கேன்... நீ ஏதோ சென்னையிலயே பிறந்து வளர்ந்தவ மாதிரி ராயல் லுக்குல இருக்க... உன் ஆளைப் பாரு... அவன் இப்போ போட்டிருக்குற டிரஸ், இருக்குற பொசிஷன் என்னன்னு கொஞ்சம் பாரு...’’ என்று மலர்விழி சொல்லவும் அர்ச்சனா அவனை மீண்டும் ஒருமுறை பார்த்தாள்.
மலர்விழி சொன்னது சரிதான். இப்போது அர்ச்சனா இருக்கும் தோற்றத்தைப் பார்த்து அருகில் நெருங்க யோசிக்கக்கூடிய சாதாரண தோற்றத்தில்தான் வரதராஜன் இருந்தான்.
‘‘மலர்... காலையில அவனை நான் பார்த்ததுமே கடைசியா அவன் செஞ்ச காரியம் நினைவுக்கு வந்து ஒரு நொடி ஆடிப்போயிட்டேன். அது மட்டுமில்லாம பத்துவருசத்துக்கு  முன்னால பார்த்த அதே ஆளாத்தான் எனக்கு தெரிஞ்சான்.
நீ சொல்ற தோற்றத்தைப் பத்தி நான் எதுவுமே நினைக்கலையே... அது மட்டுமில்லாம கடைசியா அன்னைக்கு அவன் செஞ்ச காரியத்தை தவிர அதுக்கு முன்னாலயோ பின்னாலயோ என்கிட்ட பேசக்கூட அவன் முயற்சி செய்யலை...
அப்போ அவன் செஞ்ச காரியம்கூட வயசுக்கோளாறுல பக்கத்துல இருந்தவனுங்க உசுப்பேத்தி விட்டு நம்மகிட்ட ஹீரோவா காட்டிக்க நினைச்சுதான் செஞ்சிருப்பானோ என்னவோ?
96 படத்துல விஜய் சேதுபதி அத்தனை வருசம் கழிச்சு த்ரிஷாவைப் பார்க்கும்போதும் ஸ்கூல்ல மயங்கி விழுந்த மாதிரியே இப்பவும் மயங்கி விழுற கதையா, இவனும் நீ அவனை திட்டி மிரட்டுனதை இன்னும் நினைவுல வெச்சிருக்கானோ... இல்லன்னா என்கிட்ட சாதாரணமா பேசக்கூட முயற்சி செய்யாம இருப்பானா? இதயம் பட முரளிக்கு அடுத்தபடியா காதலை சொல்லாம தவிக்கிறது இவனாத்தான் இருக்கும்னு நினைக்குறேன்...’’ என்று அர்ச்சனா தன் சந்தேகத்தை வெளியிட்டாள்.
‘‘அடிப்பாவி... அவன் உன்கிட்ட எப்படா ப்ரபோஸ் பண்ணுவான்னு காத்துகிட்டுதான் இருக்கியா? அப்புறம் என்னடி என்கிட்ட பேச்சு வேண்டி கிடக்கு... நேரடியா அவன்கிட்டயே பேசிட வேண்டியதுதானே...
நாம படிச்சது கோ எட் காலேஜ். அங்கேயே பசங்ககிட்ட சகஜமாத்தான் பேசி பழகுனோம்... சென்னையில இத்தனை வருசமா வேலைபார்க்குற... ஆம்பளைங்ககிட்ட பேசுனதே இல்லையா... அப்புறம் ஏன் அவன்கிட்ட பேச இவ்வளவு தயக்கம்...
டீன் ஏஜ்லயே மனசுக்குள்ள வந்தவன்னுங்கறதால இவ்வளவு வெட்கமா... இல்ல, உன் ஸ்டேட்டஸ்க்கு அவன் கம்மியா இருக்கானேன்னு உன்னைய யோசிக்க வெக்கிதா?’’
‘‘சேச்சே... ஸ்டேட்டஸ் பார்த்திருந்தா இவனை இந்த பொசிசன்ல பார்த்ததும் அப்படியே இக்னோர் பண்ணிட்டு நான் பாட்டுக்கு ஜாலியா இருந்திருப்பேன். அது இல்ல விசயம்...
அன்னைக்கு அப்படி ஒரு சம்பவம் நடந்ததும் நான் ஒரு வார்த்தை பேசுறதுக்குள்ள நீ அந்த திட்டு திட்டினதுல ஓடுனவன்தான், இத்தனை வருசம் கழிச்சு பார்த்திருக்கோம்... அவன் மனசுல என்ன இருக்குன்னு தெரியணும்ல...
அன்னைக்கு நீ அவ்வளவு கடுமையா திட்டியிருக்க வேணாம்னுதான் தோணுது...’’
‘‘அது சரி... கடைசியா பழியை என் மேல தூக்கி போட்டுட்டியா... எனக்கே திடீர்னு அவ்வளவு ஆவேசம் ஏன் வந்துச்சுன்னு இப்பதான் யோசிச்சு பார்க்குறேன்... அப்படியே நம்ம பிளஸ் டூ ஃபேர்வெல் டே அன்னைக்கு ஸ்கூல்ல நடந்ததை நினைச்சுப்பாரு...’’ என்று மலர்விழி சொன்னதும் அர்ச்சனாவும் யோசிக்க ஆரம்பித்தாள்.
அதுவரை பேசாமல் இருந்த தன்ஷிகா, ‘‘அம்மா... நான் விளையாடணும்... எவ்வளவு நேரம் இங்கேயே என்னைய புடிச்சு வெச்சிருப்ப...’’ என்று மழலை மாறாத குரலில் கேட்டாள்.
‘‘சாரிடா செல்லம்... வா உள்ள போவோம்... அங்க மத்த புள்ளைங்களோட விளையாடலாம்....’’ என்று மகளை தூக்கிக் கொண்டு நடக்கத்தொடங்கிய மலர்விழியிடம் அர்ச்சனா,
‘‘அன்னைக்கு மத்தியானம் ஸ்கூல்ல மீட்டிங், திங்கிறதுக்கு ஏதோ கொடுத்தாங்க... சாயந்திரம் பிரேயர் மாதிரி வரிசையா நிறுத்தி வெச்சு விளக்கேத்தி கையில வச்சிகிட்டு இருந்தோம்... குரூப் போட்டோ எடுத்தாங்க... அவ்வளவுதான்... அதுல எதை நினைச்சுடி நீ பொங்குன...’’ என்றாள்.
அதற்குள் மலர்விழியின் சாவித்ரி அருகில் வந்துவிட, ‘‘அம்மா... இவ விளையாடணும்னு சொன்னா, அந்த பசங்களோட விளையாட விட்டு செத்த பாத்துக்கோயேன்... நானும் இவளும் கொஞ்ச நேரம் பேசிட்டு வந்துடுறோம்...’’ என்று மகளை தன் தாயாரிடம் ஒப்படைத்தாள்.
சித்ராவைப்போல் சாவித்ரி கேள்வி எதுவும் கேட்டுக் கொண்டிருக்கவில்லை. புன்சிரிப்புடன் பேத்தியை தூக்கிக் கொண்டு சென்றாள்.
அர்ச்சனாவும் மலர்விழியும் அந்த மண்டபத்தின் விழாக்கூடத்தில் ஒரு ஓரமாக இரண்டு நாற்காலிகளை எடுத்து போட்டு அமர்ந்தார்கள்.
இப்போது மலர்விழி தொடர்ந்தாள்.
‘‘ஸ்கூல்ல ஃபேர்வெல் பார்ட்டி அன்னைக்கு சிறப்பு விருந்தினரா வந்தது நம்ம ஸ்கூல்ல ஏற்கனவே படிச்ச லேடி சப் இன்ஸ்பெக்டர் மேடம் சுபஸ்ரீ. அவங்க பேசினதை அப்படியே நினைவுபடுத்திப்பாரு...’’ என்றதும், சுபஸ்ரீ பேசிய பேச்சு அர்ச்சனாவின் நினைவுக்கும் வந்தது.
‘‘ஸ்டூடண்ட்ஸ்... எல்லாரையும் போல அதிகமா அட்வைஸ் பண்ணி உங்களை போர் அடிக்க விரும்பலை...
பொதுவாவே இந்த வயசு பொண்ணுங்களுக்கும் பையன்களுக்கும் அலைபாயுற வயசு. டீன் ஏஜ்னு சொல்லப்படுற பதிமூணுல இருந்து பத்தொன்பது வயசு வரைக்கும் பையன்னா பொண்ணை பார்க்கத் தோணும்... பொண்ணுன்னா பையனை பார்க்கத் தோணும்...
நாலு நாள் ஒருத்தன் நம்மளை சுத்தி சுத்தி வந்தா அவன்தான் வாழ்க்கைன்னு அவன் பின்னாலயே போகத் தோணும்... என்று சுபஸ்ரீ பேசிக்கொண்டிருக்கும்போதே மலர்விழி அர்ச்சனாவின் தொடையை கிள்ளினாள்.
யாராச்சும் ஒண்ணு ரெண்டு பொண்ணுங்க லவ் பண்றேன்னு ஒரு பையன்கூட சினிமா அங்க இங்கன்னு வெளில போயிட்டு வந்ததா உண்மை தகவல்களையோ, கற்பனையாவோ சொல்றதைக் கேட்டா நமக்கு ஒரு ஆள் இல்லையே... நாம எப்ப லவ் பண்ணலாம்னு யோசிக்க சொல்லும்...
இதெல்லாம் நீங்க பண்ணலை... உங்க உடம்புல இருக்குற ஹார்மோன்ஸ்தான் செய்ய வெக்கிது...’’ என்று சுபஸ்ரீ காதலைப் பற்றி அது இது என்று பேசவும் எல்லா பிளஸ்டூ மாணவிகள் முகங்கள் மேலும் சிவந்தன.
அதைக் கவனித்த அந்த சுபஸ்ரீ, ‘‘பார்த்தீங்கிளா... இந்த விஷயத்தைப் பத்தி பேசினதுமே உங்களை அறியாம உங்க முகத்துல வெட்கம். இந்த விஷயத்துலதான் ஜாக்கிரதையா இருக்கணும்.
நீங்க இப்போ பிளஸ்டூ பரிச்சை எழுதி முடிச்சதும், அடுத்து மூணுல இருந்து அஞ்சு வருஷம் கல்லூரியில படிக்க வேண்டி இருக்கும். அப்புறம் நல்ல வேலை...
கல்லூரி படிப்பை முடிச்சதுமே திருமணம் செய்து வைக்கிற சூழ்நிலை சில குடும்பங்கள்லதான் இருக்கும்... மத்தவங்க உங்க பெற்றோருக்கு பொருளாதார சுமையை குறைக்கவும், பிற்காலத்துல உங்களையும் உங்க குழந்தைங்களையும் குடும்பத்தையும் நல்ல முறையில் உயர்த்திக்கணும்னா இந்த வயசுல நல்லபடியா படிச்சுக்கணும். வாய்ப்பு இருந்தா வேற கைத்தொழில், தனித்திறமை இருக்குறதை வளர்த்துக்கலாம். இவையும் உங்களை காப்பாத்தப்போற சக்திகள்னுங்குறதை மறந்துடக்கூடாது.
இப்போ கடைசியா ஒரு விஷயம். படிக்கிற வயசுல படிப்புதான் முக்கியம்னு நிறைய பொண்ணுங்க தெளிவாவே இருப்பீங்க... அவங்களுக்கு இடைஞ்சல் கொடுக்கவே நிறைய பசங்க அலையுவாங்க...
சில ஆண்டுகளுக்கு முன்னால சென்னை, எத்திராஜ் கல்லூரி மாணவி சரிகாஷா இப்படி ஈவ்டீசிங் தொல்லையால காயமடைஞ்சு உயிரை விட்ட சம்பவத்தைப் பத்தி உங்கள்ல நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கலாம். இப்பவும் அங்க ஒண்ணு, இங்க ஒண்ணுன்னு நடந்துகிட்டுத்தான் இருக்கு.
பையன்களை வளர்த்தவங்க சரியில்லை, காவல்துறை சரியில்லைன்னு குத்தம் சொல்றதை விட்டுட்டு, இப்படிப்பட்ட சூழ்நிலைகள்ல பொண்ணுங்க என்ன செஞ்சு தங்களை காப்பாத்திக்கலாம்னு யோசிக்கணும்.
பெரும்பாலும் பள்ளியில, கல்லூரியில படிக்கிற பசங்கதான் உங்க பின்னாலயே வருவாங்க... உங்களை சீண்டவோ, வேற எதுவும் செய்யவோ முயற்சிப்பாங்க... அந்த மாதிரி நேரத்துல பயந்துபோய் நீங்க ஒதுங்குனா இன்னும் அந்த மாதிரி பசங்களுக்கு தைரியம் அதிகமாகும்.
தைரியம் அதிகமாக வேண்டியது அவனுங்களுக்கு இல்லை... உங்களுக்குதான். முதல்நாள் நீங்களே வீட்டுல பேரண்ட்ஸ் கிட்ட சொல்லிடுவேன்னு எச்சரிக்கலாம். அடுத்தநாள் அதே தப்பை அவன் செஞ்சா தயங்காம உங்க பேரண்ட்ஸ் கிட்ட சொல்லுங்க...
உங்க பேரண்ட்ஸ்க்கு ஸ்மூத்தா ஹேண்டில் பண்ணத்தெரியாதுன்னு ஃபீல் பண்ணினா உங்க கிளாஸ் டீச்சர்கிட்ட சொல்லி பேரண்ட்ஸ்கிட்ட பேச வைக்கலாம்...
இந்த வயசுல அழகை, குறும்பை ரசிக்கலாம்... ரசிக்கச் சொல்ற வயசுதான். அதே நேரத்துல நம்ம உடம்புக்கோ, உடமைக்கோ, உயிருக்கோ பாதிப்பு ஏற்படுத்துற மாதிரி யாராச்சும் பிஹேவ் பண்றது தெரிஞ்சா முதல்ல குரலை உயர்த்தி நாமே மிரட்டலாம் தப்பில்லை...’’ என்று பேசிவிட்டு சுபஸ்ரீ அமர்ந்ததும் ஏதோ கனமழை பெய்து ஓய்ந்ததைப் போல் ஆசிரியைகள், மாணவிகள் என்று அத்தனை பேரிடமும் ஒருவித அமைதி.
அது வரை பள்ளியில் சிறப்பு விருந்தினராக வருபவர்கள் நீங்கள் நன்றாக படித்தால் கலெக்டர் ஆகலாம். சிறப்பாக படித்தால் ஜனாதிபதியாகலாம் என்ற வகையில் அறிவுரை வழங்குவதை மட்டுமே வாடிக்கையாக கொண்டிருந்த நேரத்தில், அந்த காவல் உதவி ஆய்வாளர் சுபஸ்ரீ டீன் ஏஜ் பெண்களின் மனதில் இருப்பதை சொல்லி, எதுவரை நம் எல்லை என்பதை தெளிவாக புரிய வைத்ததால் அந்த பேச்சு அப்படியே இன்றும் நினைவுக்கு வந்தது.
‘‘அவங்க பேசிட்டுப் போன அன்னைக்கே அவன்தான் தெற்கு கோபுர வாசல்ல நின்று ஜொள்ளு விட்டானேடி... அன்னைக்கு விட்டுட்ட. ஆனா சுபஸ்ரீ மேடம் பேசினதை கேட்ட சூட்டோட அப்படியே அந்த ஹால்ல இருந்து வெளியே வந்து பேசின வேகம் மூணு மாசம் கழிச்ச பிறகும் உன்கிட்ட இருந்துச்சே...’’ என்று அர்ச்சனா சொல்லவும்,
மலர்விழி, ‘‘எங்க, உன் வலது முழங்காலுக்கு கீழே போட்ட நாலு தையலோட தழும்பு அப்படியேத்தானே இருக்கு...’’ என்றாள்.
அதைக் கேட்ட அர்ச்சனா அந்த இடத்தை தடவிப்பார்த்தாள்.
அன்று நடந்த சம்பவம் அப்படியே அவள் மனதில் ரீப்ளே ஆனது.
தொடரும்...

No comments:

Post a Comment