நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, May 31, 2019

சோலைமலை வார இதழ் 31-05-2019

சோலைமலை வார இதழ் பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.











சோலைமலை வார இதழ் குறித்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்...

செங்கம் டிராவல்ஸ் - 12

பகுதி - 12
இரண்டு பேர் அமரும் இருக்கையில் அமர்ந்திருந்த மலர்விழியின் மடியில் தன்ஷிகாவின் தலையும் பாதி உடலும் இருக்க, அருகில் அமர்ந்திருந்த அர்ச்சனாவின் மடியில் தன்ஷிகாவின் கால்கள் இருந்தன.
வரதராஜன் பேருந்தை ஸ்டார்ட் செய்து ‘டக்’கென்ற சப்தத்துடன் கியரைப் போட்டு பேருந்தை மெதுவாக நகர்த்தி, மண்டப வளாகத்தை விட்டு பிரதான சாலைக்கு ஓட்டி வந்தான்.
புறநகர் மின்சார ரயில்கள் வெடுக்கென்று எதிலிருந்தோ பிடுங்கிக் கொண்டு போவது போல்தான் கிளம்பும். அதே போல் வேகம் குறைந்து நிற்கும் போதும் பயணிகள் முன்னால் இருப்பவர்கள் மீது மோதும் வகையில்தான் திடுக் என்று நிற்கும்.
ஆனால் டீசல் எஞ்சின் கொண்ட ரயில்கள் நிற்கும்போது படீரென்று பயணிகளை ஆட வைத்தாலும், ஸ்டேஷனிலிருந்து புறப்படும்போது கண்களை மூடிக் கொண்டிருந்தால் வேகம் பிடிக்கும்போதுதான் ரயில் ஓடிக்கொண்டிருப்பதே தெரியும். அதுவும் தொட்டி ஆடுவதைப் போல் ரயில் லேசாக ஆடுவதால்தான் தெரியும்.
அந்த லாவகத்துடன் வரதராஜன் பேருந்தை நகர்த்தும்போதே, நல்ல அனுபவசாலி அல்லது தொழில் மீது அக்கறை கொண்ட ஓட்டுநரால்தான் இவ்வாறு செய்ய முடியும் என்பது மலர்விழிக்கு புரிந்து விட்டது.
அட... நம்ம தங்கம் இவன் பஸ் ஓட்டுற ஸ்டைல்லதான் இப்போ மயங்கி தவிக்கிறீங்கிளோ... டூவீலரை ஓட்டத் தெரியாம ஓட்டுனவன் இப்போ பஸ் ஓட்டுறான்... அதுல நாம பயணம் பண்றோம்... ஏதோ சினிமாவுலயும் நாவல்லயும் வர்ற மாதிரி ட்விஸ்ட்...’’ என்று அர்ச்சனாவுக்கு மட்டும் கேட்கும் வகையில் மலர்விழி கிசுகிசுத்தாள்.
ச்சேச்சே... அவன் வண்டி ஓட்டுற ஸ்டைலைப் பார்த்து மயங்குறதுக்கு நான் டீன் ஏஜ்ல இருக்குற பொண்ணா... திருவாரூர் போறதுக்குள்ள முழுசா கவனி... என் குழப்பம் என்னன்னா...’’ என்ற அர்ச்சனாவை தடுத்து,
அம்மா தாயே... இதோட அம்பது தடவை உன் சந்தேகத்தை சொல்லிட்ட... வெயிட் பண்ணு... இவன் பஸ் ஓட்டும்போது வேற என்னவெல்லாம் செய்யுறான்னு நானே கவனிச்சுக்குறேன்... மத்ததை வீட்டுக்கு போய் பேசுவோம்...’’என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் மலர்விழி.
செல்லும் வழியில் ஒருசில ராமேஸ்வரம் செல்லும் அரசுப்பேருந்துகளும், சில தனியார் பேருந்துகளும் ஹாரனை அலற விட்டுக்கொண்டு ஓவர்டேக் செய்ய முயற்சிக்கும்போது, நான்கு வழிச்சாலையாக இருப்பதால் அதே வேகத்தில் சென்றால் கூட அந்த வண்டிகள் முந்த முடியாமல் பின்னால் சென்றுவிடும். ஆனால் வரதராஜன் அப்படி செய்யாமல் லேசாக வேகம் குறைத்து, மற்ற பேருந்துகள் ஓவர்டேக் செய்ய அனுமதித்தான்.
பரமக்குடி புறநகர்ப்பகுதியை அடைந்ததுமே விஜயகுமார் எழுந்து வரதராஜன் அருகில் சென்று விட்டார்.

தம்பி... நான் சொல்ற வழியா போங்க... அந்த கோயிலுக்கு மாலை, அர்ச்சனை சாமான்களை வாங்கினதும் வீட்டுக்கோ, வேற எங்கேயுமோ எடுத்துட்டுப் போகாம, நேரே கோவிலுக்கு கொண்டு போகணும்னு ஒரு ஐதீகம்.
இதோ, அந்த ராமேஸ்வரம் பஸ் போகுதுல்ல... அது பின்னாலயே போங்க... இந்த இடத்துக்கு ஓட்டப்பாலம்னு பேரு...’’ என்று சொன்னதும் அந்த வழியாகவே பேருந்தை இயக்கினான் வரதராஜன்.
இந்த பஸ் ரைட் சைடுல போய் ஐந்து முனை ரோடு வழியா பஸ் ஸ்டாண்ட் போயிடும்... நாம லெப்ட்ல அதோ.... காரைக்குடி பஸ் யு டர்ன் எடுத்து போகுது பாருங்க... அந்த ரோட்டுல போகணும்...
மார்க்கெட்டுக்குள்ள நம்ம பஸ் போக சான்சே இல்லை... அதனால அதோ... அந்த என்.ஆர் மஹாலுக்கு எதிர்ல இடம் இருக்கு பாருங்க... அங்க நிப்பாட்டிக்குங்க... நாங்க யாராச்சும் போய் மாலை, பூஜை சாமான்களை வாங்கிட்டு வந்துடறோம்...’’ என்றதும் வரதராஜன் முழுவதுமாக வேகத்தைக் குறைத்து அவர் சொன்ன காலி இடத்தில் போக்குவரத்திற்கு இடையூறின்றி நிறுத்தினான்.
நாங்க போயிட்டு வந்துடுறோம்... அரை மணிநேரம் அல்லது முக்கால் மணிநேரத்துக்கும் மேலேயே வெயிட் பண்ண வேண்டி வரலாம்...’’ என்ற விஜயகுமார் பேருந்தை விட்டு இறங்கப் போனார்.
சார்... வெயிட் பண்றதைப் பத்தி பிரச்சனை இல்லை... ஏன் நடந்து போறீங்க... ஆட்டோ பிடிச்சுக்கலாமே... டிராபிக் அதிகமா இருக்குற குறுகலான வீதிகள்தான்னு சொல்றீங்க... ஆட்டோல போனா சீக்கிரம் வரமுடியுதோ இல்லையோ... ரெண்டு நாளா டிராவல், கல்யாண வேலைன்னு அலைஞ்சவங்களுக்கு கால் வலி இன்னும் அதிகமாகாம இருக்குமே...’’ என்றான்.
அட... ஆமா... இதை நாம யோசிக்கலையே...’’ என்று விஜயகுமாரின் முகம் மகிழ்ச்சி அடைந்தது.
உன் பெரியப்பாவை கவுத்துட்டாண்டி...’’ என்றாள் மலர்விழி.
அப்போது விஜயகுமாரின் மைத்துனர் அன்பழகன், (அம்மாப்பேட்டையில் பஸ் ஏறியவர்) ’’மச்சான்... நீங்க உட்காருங்க... நானும் என் மாப்பிள்ளையும் போய் வாங்கிட்டு வந்துடறோம்...’’ என்று கிளம்பினார்.
அதைக்கேட்ட விஜயகுமார், மாப்ள... மானாமதுரைகிட்ட வரும்போதே இதைத்தானே நான் சொன்னேன்... அதுக்கு நீங்கதான் பஸ்சை ஒண்ணு திரௌபதி அம்மன் கோயில்தெருவுலயே நிறுத்தணும்... இல்லன்னா ஆத்துப்பாலம் தாண்டி மஞ்சப்பட்ணத்துகிட்ட நிறுத்தணும்... எவ்வளவு தூரம் நடந்து மார்க்கெட்டுக்குள்ள போயிட்டு வர்றதுன்னு அலுத்துகிட்டீங்க... அப்போ ஆட்டோவுல போயிட்டு வந்துடலாம்னு தோணலியா...’’ என்று சிரித்தார்.
சரி சரி... மானத்த வாங்காதீங்க மச்சான்... நீங்க உட்காருங்க...’’ என்று அன்பழகனும் அவருடைய மாப்பிள்ளையும் இறங்கியதும், அந்த வழியாக சென்று கொண்டிருந்த காலி ஆட்டோவைப் பிடித்து ஏறிச் சென்றார்கள்.
முதல் நாள் காலையில் முதல் தேங்காயை விஜயகுமார் இரண்டாக உடைத்ததை கிண்டலடித்தும், வரதராஜன் இரண்டு தேங்காய்களை சிதற விட்டதை பாராட்டியும் பேசிய வேதாச்சலம், விஜி... நான்கூட நேத்து இந்த பையனை பார்த்ததும், குடும்பத்தோட நல்ல காரியத்துக்கு போறோம்... அனுபவசாலியான டிரைவரை அனுப்பாம இப்படி பண்ணிட்டாங்களேன்னு சந்தேகப்பட்டுதான் உன்கிட்ட பஸ், டிரைவர் ஏற்பாடு யாருன்னு கேட்டேன்.
நீயும் கோபாலகிருஷ்ணன்தான் கியாரண்டி கொடுத்து அனுப்பியிருக்காப்ல... அதுவும் நாலைஞ்சு வருசமா ஸ்கூல் பஸ் ஓட்டுற டிரைவர்தான்னு சொன்னதும்தான் வேற எதுவும் கேட்கலை.
ஆனா இப்ப வரைக்கும் இந்த தம்பி பஸ் ஓட்டுனதைப் பார்க்கும்போது, நாம கொஞ்சம் கூட கவலையே பட வேண்டாம்னு தோணுது.
பயணம் செய்யுறவங்க டிரைவர் எப்படி எல்லாம் வண்டியை ஓட்டுனா பாதுகாப்பா உணருவாங்களோ அந்த மாதிரியே கச்சிதமா ஓட்டுறாப்ல...’’ என்றார்.
முதல்ல பெரியப்பா அவுட்... இப்போ பெரிசும் காலி...’’ என்று கிசுகிசுத்தாள் மலர்விழி.
மாமா... இந்தப் பையன் பத்து பன்னண்டு வருசத்துக்கு முன்னால நம்ம காலனியில ஒரு வீட்டுக்கு பேப்பர் போட்டுருக்காப்ல... அப்போ அடிக்கடி நம்ம தெருவுல பார்த்துருக்கேன்... அதுக்கப்புறம் நேத்து பார்த்தப்ப எனக்கு உடனே அடையாளம் தெரியலை...
ஆனா எங்கேயோ பார்த்திருக்கோமேன்னு நேத்து அப்பப்ப யோசிச்சு பார்த்தேன்... ஞாபகமே வரலை... அப்புறம் நேத்து ராத்திரி, உங்களை திருவாரூர்ல அடிக்கடி பார்த்த மாதிரி இருக்கு... ஆனா இப்போ மன்னார்குடியில இருந்து வந்துருக்கீங்க... சொந்த ஊர் எதுன்னு கேட்டதுக்கப்புறம் பேப்பர் போட்ட விவரத்தை சொன்னாப்ல...’’ என்று சிரித்தார்.
அப்போது அந்த பெரியவர், ஸ்கூல் பஸ் ஓட்டுறதால எல்லா ரூல்சையும் கச்சிதமா சொல்லிக் கொடுத்துட்டாங்களா... இல்லன்னா இவ்வளவு பக்குவம் வராதே... உன் வயசுப் பசங்க டூவீலர் ஓட்டும்போதே என்னென்ன சர்க்கஸ் காட்டுறாங்கன்னு பார்க்கத்தானே செய்யுறோம்...’’ என்று சொல்லவும் வரதராஜன் ஒரு நொடி அர்ச்சனாவைப் பார்த்தான்.
அர்ச்சனாவும், மலர்விழியும் அதே நொடி வரதராஜனைப் பார்த்தார்கள்.
ஸ்கூல் பஸ்சுன்னு இல்லை சார்... சைக்கிள் ஓட்டும்போதும், அவ்வளவு ஏன்? நடந்து போகும்போது கூட ரூல்சை ஃபாலோ பண்ணினாத்தான் எல்லாருக்குமே நல்லது.’’ என்றான் அவன்.
இப்படி பொசுக்குன்னு ஒரு வரில திருக்குறள் மாதிரி பதில் சொன்னா எப்படி...’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே குறுக்கே புகுந்த ஒரு வைத்தியலிங்கம், தாத்தா... திருக்குறள் ரெண்டு அடி...’’ என்றான்.
இல்லப்பா... ஒண்ணேமுக்கால் அடி’’  என்று அவனுக்கு பதிலடி கொடுத்த வேதாச்சலம், கொஞ்சம் விளக்கமா சொல்லு தம்பி... பஸ் ஓட்ட ஆரம்பிச்சதுல இருந்து நூறு சதவீதம் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிச்சுதான் ஓட்டுறீங்கிளா... இல்ல... சின்ன சின்ன தப்பு செஞ்சு அதை யாராச்சும் திருத்துனாங்களா...
எதுக்கு விவரமா கேட்குறேன்னா, இந்த பஸ்சுக்குள்ள உட்கார்ந்துருக்குறதுங்கள்ல ஆம்பளை பொம்பளை வித்தியாசம் இல்லாம டூவீலரைக்கூட இஷ்டத்துக்கு ஓட்டிட்டு போய் அடுத்தவங்களை கவுத்து விடுற அரை டிக்கட் ஏகப்பட்டது இருக்கும். இப்ப நீங்க விபரம் சொன்னா அதுங்களுக்கு கொஞ்சமாச்சும் புத்தி வரும்... டிரைவிங் ஸ்கூல்ல காசு கொடுத்தா லைசென்ஸ் எப்படி வாங்குறதுன்னுதான் சொல்லிக்குடுக்குறாங்களே தவிர எப்படி வண்டி ஒட்டணும்னு கத்துக்கொடுக்குற மாதிரி தெரியலை. இப்படி உன்னை மாதிரி ஆளுங்க பிராக்டிக்கலா தியரியை சொன்னா கொஞ்சமாச்சும் புரியுதான்னு பார்க்கலாம்.
ஏன்னா, புத்தகத்துல படிக்கிறது, என்னை மாதிரி பெரிசுங்க அறிவுரை சொல்றதை விட, பிராக்டிக்கலா நீ சொன்னா அதுக்கு வீரியம் அதிகம்...’’ என்றார்.
அர்ச்சு... உன் ஆவி தாத்தா உடம்புல பூந்துடுச்சா... நீ கேட்க நினைச்ச கேள்விகளை அவர் ஒண்ணு விடாம கேட்டுட்டு இருக்கார்...’’ என்று மீண்டும் கிசுகிசுத்தாள் மலர்விழி.
மீண்டும் ஒருநொடி அர்ச்சனாவைக் கவனித்த வரதராஜன், ஸ்கூல் படிச்சுகிட்டு இருந்தப்ப டூவீலர் ஓட்டுறதை எல்லாம் பெரிய பந்தாவா நினைச்சு அலப்பறை கொடுத்து சொதப்பியிருக்கேன்...’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே,
புது மாப்பிள்ளை சதீஸ்குமார், அப்படி விழுந்தப்ப அடி ரொம்ப பலமோ...’’ என்று கேட்டதும்,
ஸ்...’’ என்றான் வரதராஜன்.
இல்ல... ஸ்கூல் படிக்கும்போதுன்னு சொன்னதும், என் தங்கச்சி கூட பிளஸ்டூ ல மார்க் குறைஞ்சா வீட்டுல அடி வாங்கக்கூடாதுன்னு முதல்நாள் ஸ்கூட்டியில இருந்து விழுந்து கால்ல அஞ்சாறு தையல் போட்டது என் ஞாபகத்துக்கு வந்துடுச்சு...
அடிபட்டதால, காலேஜ் சேர்ற வரை ஏதாவது கம்ப்யூட்டர் கோர்ஸ், அது இதுன்னு போகாம வீட்டுலயும் ஒரு வேலையும் பார்க்காம சித்தியை வேலை வாங்கிட்டே ஜாலியா பொழுதைப் போக்கிட்டா...’’ என்று கம்பெனி ரகசியங்களை போட்டு உடைக்கவும்,
அண்ணா... இது ரொம்ப முக்கியம்?... உனக்குன்னு பக்கத்துல ஆள் இருக்குற தைரியத்துல என்னைய வாரி விடுறியா? அப்புறம் நான் பேச ஆரம்பிச்சா அவ்வளவுதான்...’’ என்று ஆள்காட்டி விரலைக் காட்டி எச்சரித்தாள்.
பாசமலரே... மன்னிக்கவும்...’’ என்று இருகரம் கூப்பி கும்பிட்டு விட்டு, வரதராஜனைப் பார்த்து, ஸ்கூல் படிக்கும்போதுன்னா எங்க காலனியில பேப்பர் போட்டதா அப்பா சொன்னாங்களே அந்த பீரியட்தானே... பிளஸ் ஒன், பிளஸ்டூ படிக்கிற வயசுல யாரும் ஒரே ஆக்சிடெண்ட்ல திருந்துறதெல்லாம் சினிமா தவிர வேற எங்கயும் நடக்காதே...’’
என்னடி அவன் உன்னைய கவுத்து தையல் போட வெச்சது தெரியாம உன் ஆளே கவுந்துட்டதா நினைச்சு உங்கண்ணன் பரிதாபமா கதை கேட்டுகிட்டு இருக்கான்?’’ என்று மலர்விழி மீண்டும் கிசுகிசுக்க,
ம்ப்ச்... சும்மா இருடி...’’ என்று அவளை அர்ச்சனா அடக்கினாள்.
அப்போது வேதாச்சலம், தம்பி... இந்த காலத்து பசங்களுக்கு அறிவுரையே பிடிக்கிறதில்லை... ஆளாளுக்கு ஏதோ ரகசியம் பேசிகிட்டு இருக்காங்க... ஆனாலும், நீங்க சொல்லுங்க தம்பி...’’ என்றார்.
நாம பேசுற ரகசியமே டிரைவரைப் பத்திதான் தாத்தா...’’ என்று முணுமுணுத்தாள் மலர்விழி.
ஐயா... போர் அடிக்காம சுருக்கமா என் கதையை சொல்லிடுறேன்... அது வரைக்கும் கொஞ்சம் குறுக்க பேசாம இருங்க...
நான் ஸ்கூல்ல படிக்கிறப்ப சொதப்பினதை நினைச்சு பயந்துகிட்டுதான் இருந்தேன். ஆனா அந்த தப்பை திருத்தணும்னோ, வண்டி ஓட்டுறப்ப கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளையும், மனுசனா நடந்துக்க வேண்டிய அடிப்படை விஷயங்களை தெரிஞ்சுக்கணும்னோ நான் நினைக்கலை.
நான் மன்னார்குடி காலேஜ்ல படிக்கும்போது மூணு வருஷமும் எங்க அப்பா தோட்டக்காரரா வேலை பார்த்த ஸ்கூல் பஸ்சுல பசங்களை பாதுகாப்பா இறக்கி அனுப்பி வைக்கிற உதவியாளர் வேலை பார்த்தேன்.
அப்போ அந்த டிரைவர் எப்படி வண்டியை ஓட்டுனாரோ அதைத்தான் நான் இப்போ செய்யுறேன். நீங்க மட்டுமில்லை... எல்லாருமே பாராட்டுறாங்க... யாருமே பாராட்டலைன்னாலும் நான் இப்படித்தான் வண்டி ஓட்டுவேன். அதைத்தான் என் குருநாதரா இருந்த அந்த டிரைவர் சொல்லிக் கொடுத்துருக்கார்.
சரியான முறையில கிளட்சைப் பயன்படுத்தி கியர் மாத்துறது, எதிர்ல வாகனங்கள் வரும்போது அது சைக்கிளா இருந்தாலும், டூவீலர், கார், பஸ்சுன்னு எதுவா இருந்தாலும் நம்ம ஹெட்லைட்டை டிம் பிரைட் செஞ்சு ஓட்டணும்.
திரவப்பொருள் ஏத்தி வர்ற டேங்கர்லாரி மாதிரியான வாகனங்கள் சாலை ஓரத்துல பள்ளத்துல இறங்கினா வண்டி ஒரு பக்கமா சாயும்... அப்போ உள்ள இருக்குற தண்ணி, பெட்ரோல், டீசல் எதுவா இருந்தாலும் சலம்பும்போது வண்டியை பேலன்ஸ் பண்றது அந்த வாகனங்களை ஓட்டுற டிரைவருங்களுக்கு கூடுதல் சிரமம் தரும். அதனால நம்ம வண்டியை ஒருபக்கம் ரோட்டை விட்டு இறங்கி ஓட்டலாம். தப்பில்லை.
சரக்கு லாரிகள் எதிர்ல ஏதாவது வாகனத்தை ஓவர்டேக் பண்ணி வரும்போது நமக்கு அவகாசம் இருந்தா, அவங்க வேகத்தை குறைக்காம நம்மை கடந்து போக அனுமதிக்கிற அளவுக்கு நம்ம வேகத்தை குறைச்சிடுறது...
சைக்கிள், டூவீலர்ல முன்னாடி போய்கிட்டு இருந்தாங்கன்னா திடீர்னு அவங்க பக்கத்துல போய் ஹாரனை அலற விடாம சின்ன ஹாரனை லேசா அடிச்சு, அவங்களை தடுமாறாம ஒதுங்க வைக்கணும்... இப்படி எவ்வளவோ விஷயங்களை அவரே செய்யுறது மூலமா எனக்கு கத்துக்கொடுத்துருக்கார்...
அதை நான் வண்டி ஓட்டும்போதும் ஃபாலோ பண்றேன்... அவ்வளவுதான்...’’ என்று சொன்னான் வரதராஜன்.
எழுதப்பட்ட சாலைவிதிகள் ஏராளமா இருக்கு... ஆனா நீ சொன்ன சின்ன சின்ன விஷயத்தை இதெல்லாம் ஒரு விஷயமா... இதனால என்ன ஆயிடப்போகுதுன்னு ரொம்ப பேர் அலட்சியமா இருக்காங்க... நல்லா இரு தம்பி...’’ என்றார் அந்த பெரியவர்.
அர்ச்சு... நேத்து நீ அவனைப் பார்த்ததுல இருந்து எப்படி பேசுறது... என்ன பேசுறதுன்னு தவிச்ச மாதிரியே அவனும், அன்னைக்கு ஆக்சிடெண்ட் வேணுன்னே நடக்கலை... வயசுக்கோளாறுல தெரியாம நடந்தது. இப்போ நான் பொறுப்பான டிரைவர்னு உன்கிட்ட சொல்ல தவிச்சிருக்கான்னு தெரியுது.
அவன் பேசினது தாத்தாகிட்ட இல்ல. உன்கிட்டத்தான்... திருவாரூர் போறதுக்குள்ள விடை தெரிஞ்சுக்க நினைச்சோம்... பரமக்குடியிலயே பதில் தெரிஞ்சுடுச்சு.’’ என்ற மலர்விழி அடுத்து பேசியவைகள் அர்ச்சனாவின் எதிர்காலத்தை மனதில் கொண்டதாகத்தான் இருந்தது.
தொடரும்...

முதல் கோணல் - 2

பகுதி 2
(சென்ற 24–05–2019 இதழ் தொடர்ச்சி)
பிள்ளைகளுக்கு இத்தனை மணி நேரத்தில் அல்லது இத்தனை நாளில் மனப்பாடம் செய்து தேர்வில் எழுத வேண்டும் என்று கட்டாயப்படுத்தும்போதுதான் அலர்ஜியாகிவிடுகிறது. அதே சமயம், இயல்பான ஒன்றாக ஒரு விஷயத்தை கற்பிக்கும்போது எந்த நெருக்கடியும் இல்லாமல் சொந்த புத்தியுடன் தேறிவிடுகிறார்கள்.
அதைத்தான் குருநாதன் செய்து வந்தார். விளைவு, குமரவேல் பத்தாம் வகுப்பில் 489 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் அரசுப்பள்ளிகளில் முதலிடம் பிடித்தான்.
அது மட்டுமின்றி, குமரவேலை ஏழாம் வகுப்பு முதலே செஞ்சிலுவைச் சங்க அமைப்பில் சேர்த்து சமூக சேவைக்கும் பழக்கப்படுத்தியிருந்தார்.
குமரவேலை பதினோராம் வகுப்பு படிக்கும்போது நாட்டு நலப்பணித்திட்டக்குழுவில் சேர்த்துக் கொண்டார் குருநாதன். அந்த ஆண்டு பள்ளி மாணவர்களை வைத்து, திருவாரூர் மருத்துவக்கல்லூரி வளாகம், தாய் சேய் நல மருத்துவமனை மற்றும் மாவட்ட ஆட்சியர் வளாகம் உள்ளிட்ட, பொது மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் பயன்தரும் விதத்தில் மரக்கன்று நட்டு, தினமும் காலை 5.30 மணி முதல் ஏழு மணி வரை அவற்றிற்கு தண்ணீர் ஊற்றுதல், கிளைகளை கழித்தல், வேலிகளை சரி செய்தல் உள்ளிட்ட பராமரிப்பு வேலைகளை மாணவர்களைக் கொண்டே செய்து வந்தார்.
விளைவு, இரண்டாண்டுகளுக்குள் எல்லா மரங்களும் ஓரளவு குடைபரப்பி நிழல் தர ஆரம்பித்துவிட்டன. இந்த செயல்பாட்டை குருநாதன் மேற்கொள்ள முக்கிய காரணமே குமரவேல்தான்.
மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சுமார் முக்கால் கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் நகரப்பேருந்துகள் நிறுத்தப்படுவதால் குழந்தைகள், வயோதிகர்கள், கர்ப்பிணி பெண்கள் என்று அனைத்து தரப்பினர்களும் தவித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு முறை குருநாதன் ரத்த தானம் செய்ய சென்ற போது கம்பெனிக்காக குமரவேலும் சென்றிருந்தான். திரும்ப வரும்போது மன்னார்குடி சாலையில் ஒரு அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இல்லம் வழியாக சென்றார்கள்.
‘‘சார்... இங்க கலெக்டர் பங்களா ஏதோ பண்ணை வீடு மாதிரி சோலைக்குள்ள இருக்கு. ஆனா அவர் கார்ல போய்தான் வீட்டு வாசல்ல இறங்கப்போறாரு.
அங்க மெடிக்கல் காலேஜ்ல ஒரு கிலோ மீட்டர் தூரம் முடியாதவங்க வெயில்ல கருகி சாகணுமா... இதுக்கு ஏதாச்சும் செய்யணுமே சார்...’’ என்றான்.
அதைக் கேட்ட குருநாதன், ‘‘தம்பி... இதை குறை சொல்லி பெட்டிசன் எழுதுறதை விட, நாம ஒரு விசயம் செய்தால் யாருக்கும் சங்கடம் இல்லாம நல்ல தீர்வு கிடைக்கும்.’’ என்றார்.
‘‘சொல்லுங்க சார்... மனிதனால முடியுற விசயத்ததானே சொல்லப்போறீங்க. செஞ்சிடுவோம்...’’ என்று ஆர்வமானான் குமரவேல்.
‘‘மெடிக்கல் காலேஜ் டீன் கிட்ட பேசிட்டு, மரக்கன்று நடலாம். நட்டா மட்டும் போதாது. குறிப்பிட்ட காலம் வரை தினமும் தண்ணி ஊற்றி, வேலி, களை பராமரிப்பு கூட செய்ய வேண்டியது இருக்கும்...’’ என்றார் குருநாதன்.
குமரவேல் சம்மதிக்க, மற்ற மாணவர்களிடமும் பேசிவிட்டு, மருத்துவக்கல்லூரி நிர்வாகம், பள்ளி நிர்வாகம் என்று எல்லா அனுமதிகளையும் பெற்று தனியார் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் இந்த பணிகளை செய்தார் குருநாதன். சில நாட்கள்தான் கடந்திருக்கும். மருத்துவக்கல்லூரி பணியாளர்களில் சிலர், ‘‘பள்ளிக்கூட பசங்களே மத்தவங்களுக்காக இவ்வளவு செய்யுறாங்க. இதுல பலனடையப்போற நாங்களும் பங்ககெடுக்கலைன்னா நல்லா இருக்குமா. இனி நாங்க பார்த்துக்குறோம். நீங்க இது மாதிரி வேற இடங்களை பசுமையாக்குங்க...’’ என்றார்கள்.
குருநாதன் இதற்கு முழுமையாக சம்மதிக்கவில்லை. ‘‘அது நல்லா இருக்காது. நாங்க நட்ட மரக்கன்றுகள் கொஞ்சமாவது வளர்ந்து நிழல் கொடுக்குறதை பார்த்துட்டு அப்புறம் விலகுறோம். ஆனா நீங்க இவ்வளவு ஆர்வமா இருக்குறதையும் தடுக்க கூடாது. அப்போ வாரம் மூணு நாள் இங்க வந்து பராமரிக்கிறோம். மத்த நாள் வேற இடத்துல உருவாக்கி வளர்க்குறோம்’’ என்றார்.
மருத்துவமனை பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் மரம் வளர்ப்பதை பார்த்து விட்டு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு துணையாக வரும் நபர்களில் சிலரும் கூட இந்த பணியில் பங்கெடுத்தனர். நமக்கு நிழல் தரப்போற மரம் நல்லபடியா வளரணும்னு நினைச்சு சந்தோஷத்தோட பலரும் பணியில் ஈடுபட்டதாலோ என்னவோ இரண்டாண்டுகளில் அருமையாக வளர்ந்து கொண்டிருக்கின்றன.
ஆக, இப்போது அனைவரும் மன நிம்மதியுடன் சங்கடமில்லாமல் சிகிச்சைக்காக சென்று வருகிறார்கள். மருத்துவக்கல்லூரி மாணவர்கள், சில மருத்துவர்கள் கூட வாக்கிங் செல்ல இப்போது வேறு இடம் தேடிப்போவதில்லை.
அவ்வப்போது குருநாதன் ஏற்பாடு செய்யும் ரத்த தான முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு குமரவேல் உதவிக்காக வருவான். அதனால் மருத்துவக்கல்லூரி டீன் முதல் பல மருத்துவர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் இப்போது குருநாதன் மட்டுமின்றி குமரவேல் உள்ளிட்ட சில மாணவர்களும் நன்கு தெரிந்த முகம்.
இதில் குமரவேலுடன் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பலருக்கும், ராமசுப்பிரமணியனுக்கும் வேறு சில உறுத்தல்கள் இருந்தன.
பத்தாம் வகுப்பில் எல்லா மாணவர்களுமே நல்லவிதமான மதிப்பெண்களுடனேயே தேறி இருந்தார்கள். இதைப் பார்த்து அரசு பதினோறாம் வகுப்பு, பனிரெண்டாம் மாணவர்களுக்கு விடுதி வசதியை ஏற்படுத்தி, உணவு, உடை மட்டுமின்றி சத்தான ஆகாரங்கள் என்று கொடுத்து பயிற்சி அளிக்க சொன்னது.
தமிழகத்திலேயே பத்தாம் வகுப்பில் சிறப்பான தேர்ச்சி விகிதம் மற்றும் மதிப்பெண்களை காட்டிய பள்ளி என்பதால் தமிழக முதல்வரே சிறப்பு கவனம் எடுத்து, கண்மூடித்தனமா ரூல்சை ஃபாலோ பண்ண வேண்டாம். இதுவரை கோச்சிங் கொடுத்த ஆசிரியர்கள், இப்போ இந்த மாணவர்களை எப்படி படிக்க வைக்கணுமோ அப்படி தயார் பண்ண சொல்லுங்க. காலம் காலமா இப்படித்தான். அதனால இனிமேலும் இப்படித்தான் இருக்கணும்னு அவசியம் இல்லை. மாத்தி யோசிக்க சொல்லுங்க. அது சக்சஸ் ஆனா, மாநிலம் முழுவதும் மாற்றம் கொண்டு வர்றத பத்தி யோசிப்போம் என்று தெரிவித்து விட்டதாக மாவட்ட கல்வி அலுவலர் கூறினார்.
குருநாதனுக்கு இது பம்பர் பரிசு விழுந்ததைப் போல் இருந்தது. காலையில் 5 மணிக்கு எழுந்து ஏழு மணி வரை வாக்கிங், மரக் கன்றுகள் பராமரிப்பு, பிறகு குளியல், சிற்றுண்டி, பள்ளி வகுப்பு, மதிய உணவு முடிந்த பிறகு அரை மணி நேரம் ஓய்வு, அடுத்த அரை மணி நேரம் விளையாட்டு என்று முடித்துவிட்டு, மீண்டும் ஒரு மணி நேரம் மட்டுமே வகுப்பு வைத்து 3.30 மணியுடன் முடித்து விட சொன்னார்.
விடுதியில் மாலை நேரம் மீண்டும் ஒரு மணி நேரம் விளையாட்டு, பிறகு டீ, கடலை, சுண்டல் போன்று எதாவது சாப்பிட கொடுத்துவிட்டு இரண்டு மணி நேரம் படிப்பு. உடனடியாக இரவு உணவு. அதன் பிறகு, நாளிதழ், வார இதழ், கதைப்புத்தகங்கள் என்று எதை வேண்டுமானாலும் படித்துவிட்டு 9.30 மணிக்குள் தூங்கப் போய்விட வேண்டும். மீண்டும் 5.00 மணிக்கு விழிப்பு என்று பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களை மட்டும் மாற்றிவிட்டார். இன்னொரு விசயம் சனி, ஞாயிறு என்றால் மாணவர்கள் வீட்டுக்கு சென்று விடலாம். இல்லை என்றால் கடைத்தெருவில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பொது சேவைகளில் இந்த மாணவர்களை ஈடுபடுத்தினார். விளைவு மாணவர்களுக்கு படிப்பு என்ற ஒரே விசயத்தை மட்டும் பார்ப்பதினால் ஏற்படக்கூடிய மன அழுத்தம் என்பது இல்லாமல் போய்விட்டது. படிப்பு என்பது திணிப்பாக இல்லாமல் இயல்பாக அவர்களுக்குள் நுழைந்தது.
இப்போது குமரவேலும் நிகில், விஜய், சுஷ்மிதாவைப் போல் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறான்.
***
சுந்தரமூர்த்தியை வேண்டா விருந்தாளியைப் போல் சியாமளாவும், லீலாவதியும் எண்ணி அவரை யாரும் வைத்துக்கொள்ளாமல் முதியோர் இல்லத்துக்கு அனுப்பக்கூடிய அளவுக்கு பிரச்சனை அதிகரித்தது.
அப்போது குமரவேல் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். வீட்டில் நடக்கும் பிரச்சனையை குருநாதனிடம் சொன்னான். அவர் மிக எளிமையாக சில விசயங்களை சொன்னார். அதே நேரம், ‘‘தம்பி குமரவேல்... இது எல்லா நேரத்துலயும் ஒர்க்அவுட் ஆகும்னு சொல்ல முடியாது. பார்த்துக்க...’’ என்றார்.
வீட்டுக்கு சென்ற குமரவேல், ‘‘அப்பா... ஒரு தந்தை பத்து குழந்தைகளை காப்பாத்துறான். ஆனால் பத்து குழந்தைகள் ஒரு தந்தையை காப்பாற்றுவதில்லைன்னு புக்ல போட்டுருக்கான்.
நம்ம வீட்டைப் பார்த்தா போதும். இதை ஏன் புக்ல பார்த்து தெரிஞ்சுக்கணும்... வயசானவங்க வீட்டுல இருந்தா அவங்க பல வெற்றி தோல்விகளை பார்த்து இருக்குறதால நல்லது கெட்டதை சொல்லுவாங்க.
அப்படி அவங்க சொல்றது இந்த காலத்துக்கு உதவாம தப்பா இருந்தா அதை பொறுமையா எடுத்து சொல்லிட்டு, நாம நம்ம வழியில போகலாம். என்னைப் பொறுத்தவரை தாத்தா இனிமே பெரியப்பா வீட்டுக்கும், இங்கயும் அலைய வேணாம். நம்ம கிட்டயே இருக்கட்டும்.... அவ்வளவுதான் சொல்லுவேன்.’’ என்றவன் சுந்தரமூர்த்தி பக்கம் திரும்பி,
‘‘தாத்தா... நீயும் திருத்திக்க வேண்டியது நிறைய இருக்கு. எனக்கு நல்ல புத்தி வர்ற மாதிரி நிறைய கதைகளை கொடுத்து படிக்க சொன்ன... நானும் எவ்வளவு நல்ல பிள்ளையா வளர்றேன். ஆனா அது எதையும் நீ படிக்கவே இல்லையா. அல்லது மறந்துட்டியா...
உனக்கு வயசாயிடுச்சு... அதனால வெளியில போகக்கூடாது. எந்த வேலையும் செய்ய முடியாதுன்னு யாராச்சும் சொன்னா நம்பாத. வெளியில வேலைக்கு போக வேணாம். ஆனா கடைக்கு போறது, ஈ.பி.பில் கட்டுறது மாதிரி சின்ன சின்ன வேலைகளை நீயே செய். அப்பாவுக்கும், அம்மாவுக்கும் டென்சன் குறையும்.
முக்கியமா, கழிவறைக்கு போனா சுத்தமா தண்ணி ஊத்திட்டு வா. இது கூட உன் மேல எரிச்சல் வர காரணமா இருக்கலாம். வயசாயிட்டா நாங்க அப்படித்தான் இருப்போம். நீங்க தான் அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும்னு சொல்ற டயலாக்கை விடு.
எந்த வயசா இருந்தாலும் நல்ல விசயத்தை யார் சொன்னாலும் கேட்டுகிட்டு, ஈகோவை விட்டொழிச்சா எல்லாருமே சந்தோசமா இருக்கலாம்.’’ என்று குருநாதன் காட்டிய வழியில் குமரவேல் வீட்டில் வாதாடியது நல்ல பலனைத்தான் தந்தது.
இப்போது, சுந்தரமூர்த்தி முழுக்க முழுக்க ராமசுப்பிரமணியன் வீட்டில்தான் இருக்கிறார்.
***
மஸ்கட்டில் இருந்த ராமநாதன் திருவாரூர் புறநகர்ப்பகுதியில் வாங்கிப்போட்டிருந்த இடத்தில் வீடு கட்ட முடிவு செய்து ஆறு மாதம் லீவு போட்டுவிட்டு இந்தியா வந்திருக்கிறான்.
இந்த ஆண்டு மருத்துவப்படிப்பிற்கு அகில இந்திய அளவில் மருத்துவ நுழைவுத்தேர்வு உண்டு, அல்லது இந்த ஆண்டு மட்டும் விதிவிலக்கு கிடைக்கும் என்ற பல்வேறு தகவல்களால் குழம்பிப்போன மாணவர்கள், மாணவிகளில் விஜய், நிகில், சுஷ்மிதாவும் உண்டு.
குமரவேலைப் பொறுத்தவரை தெளிவாக இருந்தான். நுழைவுத்தேர்வுக்கெல்லாம் படித்து என்னை டென்சன் பண்ணிக்கப் போறதில்லை. எப்படியும் இந்த வருசம் தமிழகத்துல நுழைவுத்தேர்வுக்கு வாய்ப்பு இருக்காது. என் மார்க் அடிப்படையில மருத்துவக்கல்லூரியில இடம் கிடைச்சா படிப்பேன். இல்லன்னா இன்ஜினியரிங். எது படிச்சாலும் புரிஞ்சு படிச்சா டேலண்ட்டோட வெளியே வருவேன் என்று கூறிவிட்டான்.
தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் நேரம் என்பதால் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அகில இந்திய நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என்று தனியார் பயிற்சி மையங்கள் தெரிவித்துவிட்டதால், விஜய், நிகில், சுஷ்மிதா ஆகியோர் ராமநாதன், மல்லிகாவுடன் திருவாரூர் வந்துவிட்டார்கள்.
ராமகிருஷ்ணனுக்கு லீவு இல்லை என்பதால் சியாமளா மட்டும் வந்திருந்தாள். தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக அவள் கோயம்புத்தூருக்கு ஓட்டு போட சென்று விடுவது என்று திட்டம்.
கடந்த மூன்று மாதங்களாகவே ராமநாதன் கட்டுமானப்பணிகளை கவனித்து வந்தான். பணத்திற்கு பஞ்சமில்லை என்பதால் தரைதளமும், முதல்தளமும் கட்டுமானப்பணிகள் முடிந்து பூச்சு வேலைகள் நடந்து கொண்டிருந்தது.
பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டாம். அது உடலுக்கு கேடு. சிமெண்ட் தொட்டியை கட்டலாம் என்று சுந்தரமூர்த்தி வற்புறுத்தியதால் தென்மேற்கு மூலையில் சிமெண்ட் தொட்டியை அமைத்தார்கள். அதன் வெளிப்புறத்தில் பூச்சு வேலை நடந்து கொண்டிருந்தது.
***
மல்லிகா ஹாலில் வைத்து காய்கறிகளை அரிந்து கொண்டிருந்தாள். செல்போன் அழைப்பு சத்தம் கேட்டு எடுத்துப் பார்த்தாள்.
கணவனிடமிருந்து அழைப்பு.
‘‘ஹலோ...’’
‘‘மல்லிகா... தண்ணி தொட்டியை பூசிகிட்டிருந்த கொத்தனார் கீழே விழுந்து ஆக்சிடெண்ட் ஆயிடுச்சுடி.’’
‘‘என்னது... ஆக்சிடெண்டா?...அய்யய்யோ.... இப்ப நீங்க என்ன பண்ணிகிட்டிருக்கீங்க?’’
‘‘கீழே விழுந்தவன் காம்பவுண்ட் கட்ட பில்லர் போட்டுகிட்டு இருந்தமே அந்த கம்பி மேல விழுந்துட்டான். வயித்துல குத்துன கம்பி முதுகு வழியா வெளியில வந்துட்டு... சைட்டுல வேலை பார்த்தவங்க எல்லாரும் அலறிகிட்டு இருக்காங்க. என்ன பண்றதுன்னே தெரியலை’’
‘‘சரிங்க... உங்களுக்கு ஒண்ணுமில்லையே... ஜாக்கிரதையா இருங்க... அந்தாள் கூட வேலை பார்த்தவங்க ஏதாவது பிரச்சனை பண்ணிடப்போறாங்க... நீங்களா போய் எதுலயும் மாட்டிக்காதீங்க. ’’ என்ற மல்லிகாவுக்கு வியர்த்து வழிய ஆரம்பித்தது.
‘‘விஜய், நிகிலை கிளம்பி இருக்க சொல்லு. அடிபட்டவனை எந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு போறாங்கன்னு தெரிஞ்சுகிட்டு நான் சொல்றேன். அவங்க போய் பார்த்து நிலவரத்தை சொல்றாப்ல இருக்கும்...’’
‘‘என்னங்க பேசுறீங்க... நிகிலுக்கும், விஜய்க்கும் என்ன தெரியும்... படிக்கிறதை விட்டுட்டு இதுக்கெல்லாம் அலைய முடியுமா? இப்ப எழுதப்போற பரிட்சை இவனுங்களுக்கு மட்டுமில்லை... நம்மளோட கனவு, லட்சியம் எல்லாமே...’’
‘‘நிறுத்து மல்லிகா... நான் அடிபட்டவனை அழைச்சிட்டு ஆஸ்பத்திரிக்கு போனா பிரச்சனை பெரிசாகும்னு தோணுது. நம்ம பசங்களை இவங்களுக்கு தெரியாது. நான் பணம் ஏற்பாடு பண்ணிட்டு வர்றேன்று சொல்லிட்டு கொஞ்சம் ஒதுங்கி இருக்கலாம். எனக்கு இந்த மாதிரி சம்பவத்தை பார்த்ததுமே உதறுது.’’
‘‘சரிங்க... வர சொல்றேன்...’’ என்று போன் தொடர்பை துண்டித்தாள். மின் விசிறி முழு வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தாலும் மல்லிகாவின் உடல் வியர்வையில் தொப்பலாக நனைந்திருந்தது.
‘‘அம்மா... அப்பாவுக்கு என்னாச்சு... என்ன ஆக்சிடெண்ட்... இப்ப எங்க இருக்காராம்?’’ என்று விஜய் கேட்டுக்கொண்டிருக்கும்போதே நிகில் பைக் சாவியுடன் வந்தான்.
போனில் நடந்த உரையாடலை மல்லிகா சொல்லவும்,
‘‘அம்மா... நீ போன்ல பேசினதை பார்த்துட்டு அப்பாதான் வண்டியை யார் மேலயாவது இடிச்சு ஆக்சிடெண்ட் பண்ணிட்டாருன்னு பயந்துட்டேன். நல்ல ஆளும்மா நீ...
வேலை செய்யுற ஆளு அவன் ஜாக்கிரதையா இருந்திருக்கணும். அவன் விழுந்து அடிபட்டதுக்கு நாம என்ன செய்ய முடியும். அப்பாவா அவனை புடிச்சு கீழே தள்ளிவிட்டார்?
எப்படியும் அவன் குடும்பம் நம்மகிட்ட பணம் வசூல் பண்ணாம விடாது. அப்புறம் ஏன் நாம ஆஸ்பத்திரி அது இதுன்னு அலைஞ்சு டென்ஷன் பண்ணிக்கணும். எத்தனை சினிமா, சீரியல்ல இது மாதிரி காட்டுறாங்க...
இப்படி அவதிப்படுறதுக்கு பதில் பேசாம, ஏதாவது அரசியல் பார்ட்டியை புடிச்சு நாம சரண்டராயிடுறது நல்லது. தொகையை குறைச்சு பேசிடுவாங்க. கமிஷனையும் அதுலயே எடுத்துக்க சொல்லிடலாம்...’’ என்று விஜய் கிரிமினலாக யோசனை சொல்லிக் கொண்டிருந்தான்.
மீண்டும் மல்லிகா வற்புறுத்தவே, சியாமளா குறுக்கிட்டு குமரவேலை அழைத்துக்கொள்ளும் யோசனையை கூறினாள்.
அதை சொல்லலாம் என்று மல்லிகா முயற்சித்தபோது சுந்தரமூர்த்தியின் ஆலோசனைப்படி குமரவேலை ராமநாதன் அழைத்துக் கொண்டிருந்தான்.
***
101க்கு போன் செய்த குமரவேல், தன் பெரியப்பா வீடு கட்டும் இடத்தின் முகவரியை தெளிவாக சொன்ன பிறகு, ‘‘சார்... பில்லர்ல இருந்த கம்பி ஒருத்தருக்கு முன்னால குத்தி பின்னால வந்துடுச்சாம். அவர் உடம்பைக் கூட அசைச்சுடாதீங்கன்னு சொல்லி வெச்சிருக்கேன். நான் இப்பதான் ஸ்பாட்டுக்கு போய்கிட்டு இருக்கேன்.’’ என்று கூறினான். குருநாதன் மூலமாக ஏற்கனவே தீயணைப்புத்துறையினரின் அறிமுகம் இருந்ததும் இப்போது குமரவேலுக்கு உதவியது.
சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு மீட்பு பணி துறையினர் கம்பி சூடேறாத வண்ணம் சில வழிமுறைகளை கையாண்டு அந்த ஆளை துளைத்திருந்த கம்பியை இரண்டடி நீளம் விட்டு அறுத்து எடுத்தனர். 108 ஆம்புலன்சும் தயாராக நின்றது.
காயமடைந்த ஆள் இன்னும் மயக்கமடையவில்லை.
அப்போது சைக்கிளில் அங்கு வந்த குமரவேல், காயமடைந்த நபரை நன்றாக பார்த்தான். ‘‘அண்ணே... உங்களுக்கு ஒண்ணும் இல்லை. உங்க டீ சர்ட்டோட சேர்த்துதான் கம்பி உள்ளாற போயிருக்கு. அதனால ரத்தம் போகலை. இதை விட பெரிய இரும்பு பட்டை உள்ளாற போன நபரையே டாக்டருங்க 15 நிமிசத்துல காப்பாத்திட்டாங்கன்னு பேஸ்புக்ல படிச்சிருக்கேன். ஆக உங்க வரலாறு கின்னஸ்ல எல்லாம் வராது’’ என்றான்.
அப்போது இன்னொரு கட்டிடத்தொழிலாளி, ‘‘அண்ணன் உயிர் பிழைப்பாரா மாட்டாரான்னு நாங்களே பயந்து போய் இருக்கோம். இப்ப காமெடி பண்ற நேரமா தம்பி இது...’’ என்று சூடானான்.
‘‘அவருக்கு ஏற்பட்ட காயம் ஒண்ணுமே இல்லை. சுத்தி இருக்குறவங்க பயமுறுத்துனாதான் உயிருக்கு ஆபத்து. அவருக்கு தைரியம் இருக்குறவரை பி.பி ஏறாது. உடம்புக்கு ஒண்ணும் ஆகாது.
சுத்தி இருக்குறவங்களை பத்தி கவலைப்படாதீங்கண்ணே... இப்ப மெடிக்கல் காலேஜ் போறோம்... கம்பியை க்ளீயர் பண்றோம். பட்டுன்னு குணமாகி வர்றோம்... மிச்ச வேலையை நீங்களே முடிச்சு, கிரஹப்பிரவேசத்தன்னைக்கு முதல் மரியாதையை நீங்கதான் ஏத்துக்குறீங்க...’’ என்று குமரவேல் சொன்னதும், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காயமடைந்தவரை கவனமாக ஸ்டிரெச்சரில் பக்கவாட்டில் படுக்க வைத்து ஏற்றினார்கள்.
மீண்டும் தொழிலாளர்கள் மத்தியில் சலசலப்பு.
‘‘மெடிக்கல் காலேஜ் கொண்டு போகக்கூடாது. தனியார் ஆஸ்பத்திரிக்குதான் போகணும்.’’
‘‘புரியாம பேசாதீங்க. தனியார் ஆஸ்பத்திரியில இப்போ இவர் இருக்குற கண்டிசனுக்கு எந்த ஸ்பெசலிஸ்டை கூப்பிடறதுன்னு டிஸ்கஸ் பண்ணவே ரெண்டு மணி நேரம் ஆகும்.
ஆனா, மெடிக்கல் காலேஜ்ல அனுபவம் உள்ள புரொபசர்ல இருந்து பல ஸ்பெஷலிஸ்டும் இருப்பாங்க. அது தவிர சென்னை உள்ளிட்ட பல மருத்துவக்கல்லூரிகள்ல இது மாதிரி கேஸ் அட்டன் பண்ணின டாக்டர்கள் கிட்ட போன்ல டிஸ்கஸ் பண்ணியே சீக்கிரம் இவரை காப்பாத்திடுவாங்க.
எங்க ஸ்கூல் வாத்தியார் மூலம் டாக்டர்கள் கிட்ட நேரடியாவே பழக்கம் இருக்கு... வேலையை அப்புறம் பார்த்துக்கலாம். பதட்டப்படாம எல்லாரும் மெடிக்கலுக்கு வந்துடுங்க. பெரியப்பா... நீங்களும்தான்....’’ என்ற குமரவேல், காயம்பட்டவருடன் ஆம்புலன்சில் ஏறிக்கொண்டான்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே, குருநாதனுக்கு போன் செய்தான்.
‘‘தம்பி... நான் எலக்ஷனுக்காக டிரெய்னிங் கிளாஸ்ல இருக்கேன். டீன் கிட்ட இப்பவே பேசிடுறேன். அவருக்குதான் உன்னைய நல்லா தெரியுமே... அத்தோட உடனடியா என்ன பிளட் குரூப்னு பார்த்து நம்ம லிஸ்ட்டுல இருக்கறவங்களை கூப்பிட்டு பயன்படுத்திக்க.. ’’ என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார்.
மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் மருத்துவர்கள் தயாராக இருந்தனர்.
சிகிச்சை வெகு வேகமாக தொடங்கியது.
‘‘தம்பி... அவரை காப்பாத்துறது ஒண்ணும் பிரச்சனை இல்லை. சென்னை மெடிக்கல் காலேஜ்ல போன மாசம் இதை விட மோசமா இஞ்சுரி ஆன நபரையே நல்லபடியா காப்பாத்திட்டோம். வீடியோ கான்பரன்ஸ்ல அவங்களை கூப்பிட்டாச்சு. பி நெகட்டிவ் ரத்தம் ஸ்டாக் ரொம்ப கம்மியா இருக்கு. உங்க சார்கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணிடுப்பா...’’ என்றார் ஒரு மருத்துவர்.
‘‘குமரவேல்... பிளட் கொடுக்குற ஆள் அட்ரஸ் சொல்லுங்க. நான் வேணுன்னா என் வண்டியில போய் அழைச்சிட்டு வர்றேன்... ’’ என்று முன்வந்தார் ஒரு செக்யூரிட்டி ஊழியர்.
‘‘லிஸ்ட் எங்க சார் வீட்டுல இருக்கு... இதோ சொல்றேன்...’’ என்றவன், குருநாதன் மனைவிக்கு போன் செய்தான்.
‘‘அம்மா... லிஸ்டுல பி நெகட்டிவ் இருக்கறவங்க அட்ரஸ் போன் நம்பர் சொல்றீங்களா இல்லன்னா, மாரிமுத்து, சுரேஷ் இந்த ரெண்டுபேர்ல யாரையாச்சும் அனுப்பவா...’’
‘‘அதெல்லாம் யாரையும் அனுப்ப வேணாம் தம்பி... உயிர் விஷயம்... இது கூட செய்ய மாட்டேனா... இரு.... நானே கட் பண்ணி கூப்பிடுறேன்... ’’ என்று ஒரு நிமிடத்திற்குள் மீண்டும் லைனில் வந்தார்.
ஆறு மருத்துவர்கள், வீடியோ கான்பரன்ஸ் மூலம் சென்னையில் உள்ள நான்கு மருத்துவர்கள் என்று பத்துபேர் முயற்சி எடுத்து, வெற்றிகரமாக தொழிலாளி உடலில் துளைத்திருந்த கம்பியை அகற்றினார்கள்.
ஆப்ரேஷன் தியேட்டருக்கு வெளியில் வந்து தகவலை சொன்னதும் குமரவேல் தரையில் மண்டியிட்டு கையேந்தி, ‘‘இறைவா... இவரை காப்பாற்ற ஒத்துழைப்பு கொடுத்த எல்லாரும் நல்லா இருக்கணும். இனி ஒரு தொழிலாளிக்கு இது மாதிரி காயம் படக்கூடாது தெய்வமே... ’’ என்று மேலே பார்த்து சொன்னான்.
இவன் கண்ணீரைப் பார்த்து, சுற்றி இருந்த பலருக்கும் கண்கள் கலங்கிவிட்டது.
ஒருவர், ‘‘தம்பி... இவர் யாருப்பா... உனக்கு சொந்தமா... ரொம்ப முயற்சி எடுத்திருக்கியே...’’ என்றார்.
‘‘சொந்தமோ இல்லையோ... இவரு உயிருக்கு மட்டுமில்லை... எந்த உயிருக்குமே விலையில்லை... சார்’’ என்றான். சுற்றி இருந்தவர்கள் இந்த பதிலில் விக்கித்து நின்றார்கள்.
***
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவந்தன.
அரசுப்பள்ளிகளில் படித்து மாநிலத்தில் சிறப்பிடம் பெற்றவர்கள் பட்டியலில் குமரவேலின் பெயரும் இருந்தது. அதை விட ஒரு சிறப்பான விஷயமும் நடந்தது. ஆம்... இந்த ஆண்டு தமிழகத்தில் மருத்துவக்கல்லூரியில் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கை என்று அறிவிக்கப்பட்டதில், அரசுப்பள்ளி மாணவர்கள் ஒன்பது பேர் மெரிட்டில் இடம் பிடித்தனர். அந்த பட்டியலிலும் குமரவேல் பெயர் இருந்தது.
(மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்படுவதற்கு முன்பு எழுதப்பட்ட கதை)
குறுநாவல் நிறைவுற்றது.

Friday, May 24, 2019

சோலைமலை வார இதழ் 24-05-2019

சோலைமலை வார இதழ் பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.









சோலைமலை வார இதழ் குறித்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்...

செங்கம் டிராவல்ஸ் - 11

பகுதி - 11
சேந்தமங்கலம் காளி கோயிலில் சாமி கும்பிட போட்ட பிளான், அர்ச்சனா கவிழ்ந்ததில் பவித்திரமாணிக்கம் காளி கோவில் என்று மாற்றம் கண்டிருந்தாலும் வரதராஜனின் பயம் அவ்வளவு எளிதில் குறையவில்லை.
இரவு அர்ச்சனா டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு புறப்பட்டு ஆட்டோவில் போனதைப் பார்த்துவிட்டு வந்து ரவிக்குமார் சொன்ன பிறகுதான் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தான்.
இந்த சூழ்நிலையில் மறுநாள் பேப்பர் போடும்போது கைலாசநாதர் கோயில் தெருவுக்குள் நுழைய வேண்டுமே என்று கவலையாக இருந்தது.
இவ்வளவு நாளும் சைட் அடிக்க வேண்டும் என்ற ஆவலில் எப்போதுடா அந்த தெருவுக்கு செல்வோம் என்று காத்திருந்த நிலை மாறி, என்ன சொல்லி அந்த தெருவுக்கு போவதை தவிர்ப்பது என்று யோசிக்க ஆரம்பித்தான்.
எப்போதும் போல் காலையில் 5 மணிக்கு பேப்பர் போடச் சென்றால் வெளியில் யாரும் இருக்கப் போவது இல்லை. ஆறரை மணிக்கு லைன் முடித்து திரும்ப வரும்போது கைலாசநாதர் கோயில் தெருவுக்கு செல்லாமல் வேறு வழியாக வந்துவிடலாம்தான்.
ஆனால் ஐந்து மணிக்கு செல்லும்போதே யாரும் பார்த்து பிரச்சனை ஆகிவிட்டால் என்ன செய்வது என்று ஒரே குழப்பம்.
வழக்கமா ஏதாவது முக்கிய காரணமா லீவு போட வேண்டி இருந்தா ரெண்டு நாளைக்கு முன்னாலேயே நாளிதழ் முகவர் கார்த்திகேயனிடம் தெரிவித்து விடுவான். இவன் பார்த்த லைனை அவரேதான் கவனிப்பார். ஆனால் இப்போது திடீரென்று வரமாட்டேன் என்று சொன்னால் காரணம் கேட்பார்.


என்ன சொல்லி மழுப்புவது?
வேற லைன் பார்க்குறேன்னு சொன்னாலும் காரணம் கேட்பார். ஏன்னா, ஏற்கனவே ரெண்டு தடவை வேற லைன் தர்றேன்னு சொன்னதுக்கு இந்த ரூட் மட்டுமேதான் வேணுன்னு அர்ச்சனா மேல இருந்த ஈர்ப்புல பிடிவாதமா இருந்தாச்சு...
ரிசல்ட் வர்றதை காரணமா சொல்லலாம்... காலையில பத்துமணிக்குதான் ரிசல்ட் வரும்... அதுக்கு ஆறரை மணிக்கு லைன் முடிக்கிறவனுக்கு எதுக்கு லீவுன்னு கேட்பாரு...
என்ன பண்றதுன்னு புரியலையே... என்று குழம்பியவனுக்கு இரவு வெகு நேரம் தூக்கம் வரவில்லை. எப்போது தூங்கினானோ தெரியவில்லை.
எப்போதும் அவனாகவே எழுந்து விடுபவன், இன்று அவன் அப்பா எழுப்பும் வரை தூங்கிக்கொண்டிருந்தான்.
அவன் காலில் பலமாக யாரோ அடித்தார்கள்... கண் விழித்தபோது டியூப் லைட் வெளிச்சம் கண்ணைக்கூசியது.
கண் இமையை சுருக்கிக் கொண்டு பார்த்தான். எதிரில் அவன் தந்தை தெட்சிணாமூர்த்தி.
டேய் வரதா... என்னடா இப்படி தூங்குற... ரிசல்ட் வருதுன்னா ரொம்ப பேருக்கு தூக்கமே வராது... நீ என்னடான்னா வருசம் பூரா நாலு நாலரை மணிக்கு எழுந்துட்டு இன்னைக்கு இப்படி தூங்குற...
மணி அஞ்சரை ஆகுது... கார்த்தி ரெண்டு தடவை போன் பண்ணிட்டாருடா...
ஏன் உடம்பு முடியலையா... அப்படின்னா நேத்தே சொல்லிருக்க வேண்டியதுதானே...’’ என்றார்.
அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா... நான் கிளம்புறேன்...’’ என்று எழுந்த வரதராஜன் அவசர அவசமாக பல் விளக்கி, காலைக்கடன்களை முடித்துக்கொண்டு முகம் கழுவி பேருந்து நிலையம் சென்றபோது மணி ஐந்து ஐம்பது ஆகியிருந்தது.
தம்பி வரதா... ரிசல்ட் வந்ததுக்கு அப்புறம் வேலைக்கு வருவியா... இல்ல... வேற ஆள் பார்க்கணுமா?’’ என்று விளையாட்டாக கேட்டார்.
ஆனால் யோசிக்கணுண்ணே...’’ என்று கொஞ்சமும் யோசிக்காமல் பதில் சொன்னதும் கார்த்திகேயனுக்கு ஷாக்காக இருந்தது.
லேட்டா வந்ததுல குழம்பிப்போய் ஏதோ சொல்றான்... சாயந்திரம் பேசிக்கலாம் என்று நினைத்து அவர் மேற்கொண்டு வேறு எதையும் கேட்கவில்லை.
ஒருவேளை இவன் வரவில்லை என்றால் கார்த்திகேயனே பேப்பர்களை போட்டுவிடலாம் என்ற எண்ணத்தில் நாளிதழின் இணைப்பு பக்கங்களை கோர்த்து அடுக்கி வைத்திருந்தார்.
அதனால் இவன் பேப்பரை எண்ணி எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
பனகல்ரோடு, தாண்டி கீழவீதி செல்லும்போதே வரதராஜனுக்கு பக் பக் என்று நெஞ்சம் அடித்துக் கொண்டது.
வரதராஜன் கைலாசநாதர் கோயில் தெருவுக்குள் நுழையும்போது மணி ஆறு இருபது. எப்போதும் அவன் கொடிக்கால்பாளையத்தில் கடைசி பேப்பர் போடும் நேரம். பத்து நிமிஷம் முன்னதா வர்றோம்... அர்ச்சனாவுக்கு கால்ல அடிபட்டிருக்குறதால அவ இப்போ தண்ணி பிடிக்க வந்துருக்க சான்ஸ் இல்லை... மத்தவங்களுக்கு விஷயம் தெரியாதுன்னா யாரும் நம்மளை கண்டுக்க மாட்டாங்க என்று நினைத்துக் கொண்டே அந்த காலனி வாசலில் சென்று சைக்கிளை நிறுத்தினான்.
இவன் பேப்பர் போடும் வீட்டு அம்மா புவனேஸ்வரி வாசலிலேயே தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்.
என்ன தம்பி... பொதுவா ரிசல்ட் வர்ற அன்னைக்கு தூக்கம் வராதுன்னு சொல்லுவாங்க... நீ நல்லா தூங்கிட்டியாப்பா...’’ என்று கேட்டவாறே பேப்பரை வாங்கிக் கொண்டாள்.
வீட்டில் அவன் தந்தை பேசிய அதே வசனம்.
பேரண்ட்ஸ் எல்லாருக்கும் ஒரே வேவ்லென்த்துதான் இருக்கும் போலிருக்கு என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு புவனேஸ்வரிக்கு எதுவும் பதில் சொல்லாமல் லேசாக புன்னகைத்து விட்டு நகர முயற்சித்தான். ஆனால் முகத்தில் சிரிப்புதான் வர மாட்டேன் என்று அடம் பிடித்தது.
அவன் அங்கிருந்து கிளம்பியதும், பொம்பளைப்புள்ளைங்க எல்லாம் பயப்படாம இருக்கு... இந்த புள்ளையப் பாருங்களேன்... ரிசல்ட் வரப்போகுதுன்னதும் ரொம்ப பயந்து போய் இருக்குன்னு நினைக்குறேன்... படிக்கும்போதே வேலை பார்த்துகிட்டு படிக்குது... பொறுப்பான புள்ளைதான்...’’ என்று அருகில் நின்ற மற்றொரு பெண்ணிடம் கூறினாள்.
அவள் பேசியது வரதராஜன் காதிலும் லேசாக விழுந்தது.
‘நேத்து நடந்த மேட்டரை மட்டும் அர்ச்சனா உங்க கிட்ட சொன்னா, அவ்வளவுதான்... நீங்க எல்லாரும் எனக்கு அர்ச்சனை பண்ணி விட்டுடுவீங்க...’ என்று மனதுக்குள் நினைத்தவாறு எதிர்புறம் போட வேண்டிய பேப்பரை போட்டுவிட்டு வேகமாக சைக்கிளில் ஏறிப் பறந்தான்.
காலை பத்து மணி. கூட்டத்திற்குள் புகுந்து அடித்துப்பிடித்து பள்ளியில் ஒட்டப்பட்ட மதிப்பெண் பட்டியலைப் பார்த்தாயிற்று.
ரவிக்குமாரர் அப்போதுதான் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்தான். எதிரில் வரதராஜன் தன்னுடைய மதிப்பெண்ணை பார்த்து விட்டு வந்து கொண்டிருந்தான்.
என்னாச்சுடா... சோகமா வர்ற?’’
அதற்கு வரதராஜன், ம்ப்ச்... இன்னும் நாலு மார்க் கிடைச்சிருந்தா டோட்டல் ஆயிரம்னு ரவுண்டா இருந்துருக்கும்...’’ என்று வருத்தப்பட்டான்.
ஏண்டா... எது எதுலடா ஃபேன்சி நம்பரை எதிர்பார்ப்பீங்க... தொள்ளாயிரத்து தொண்ணூற்றாறு மார்க் கிடைச்சதுக்கு சந்தோஷப்படாம நாலு மார்க் கிடைக்கலையேன்னு வருத்தப்படுறியே...
நீ மட்டுமில்லை... நாட்டுல ரொம்ப பேர் இப்படித்தான் கிடைச்சதை விட்டுட்டு கிடைக்காததை நினைச்சு புலம்புறதை பிழைப்பாவே வெச்சிருக்காங்க... சரி சரி... என் மார்க் என்னன்னு பார்த்தியா?’’ என்றான்.
இதைக் கேட்டு திடுக்கிட்ட வரதராஜன், உன் மார்க்கை இன்னும் நீ பார்க்கலையா... அப்ப இவ்வளவு நேரம் எங்கடா போயிருந்த?...’’ என்றான்.
நம்ம மார்க் நம்மள விட்டு எங்கடா போகப்போகுது?... கேர்ள்ஸ் ஹையர் செகண்டரி ஸ்கூலுக்கு போயிருந்தேண்டா... இந்த நேரத்துலன்னா யார் வேணுன்னாலும் ஸ்கூலுக்குள்ள போகலாம்... மார்க் லிஸ்ட்டைப் பார்க்கலாம்... அப்புறமா போனா நம்மளை அடிச்சுத் துரத்த வாய்ப்பு இருக்கு...
உன் ஆளு உன்னை விட அம்பத்தோரு மார்க் அதிகம்... இந்தா... புடி...’’ என்று ஒரு பேப்பரை கொடுத்தான்.
அதில் பதிமூன்று மாணவிகளின் மதிப்பெண்கள் பாடவாரியாக குறிக்கப்பட்டிருந்தன.
இத்தனை பேராடா...’’ என்று வரதராஜன் கேட்கவும்,
பூமி உருண்டையை தேடி ஹெச்.எம் இங்க வந்துடப்போறாரு... வாயை க்ளோஸ் பண்ணு...
உன் ஒருத்தன் மட்டுமில்லை... இத்தனை பேருக்கு சர்வீஸ் பண்றதுக்காகத்தான் அங்க போய் முதல்ல மார்க் லிஸ்ட்டைப் பார்த்துட்டு வர்றேன்...’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்குள் நுழைய பயந்து கொண்டிருந்த நாலைந்து சக மாணவர்கள் ரவிக்குமாரிடம் வந்து மாணவிகளின் மதிப்பெண் விபரங்களை கேட்டு வாங்கிக் கொண்டார்கள்.
அடுத்தடுத்து மற்ற பனிரெண்டு பேரின் மதிப்பெண் விபரத்தை அவரவர்களிடம் தெரிவித்தபிறகுதான் வரதராஜனிடம் தன்னுடைய மதிப்பெண்ணை கேட்டு தெரிந்து கொண்டான் அவன்.
நம்ம சேதி இருக்கட்டும்... சேதாரம் இல்லாம வந்துருக்க... காலையில பேப்பர் போடப் போனியா?... எஸ்கேப் ஆயிட்ட போலிருக்கே...’’ என்றான்.
இவனுடைய தடுமாற்றத்தை, ரிசல்ட் காரணமாக கவலையாக இருக்கிறான் என்று அங்கிருந்த பெண் கூறியதை நண்பனிடம் சொன்னான்.
இது நான் எதிர்பார்த்ததுதாண்டா... எதாச்சும் தப்பு பண்ணினவனுக்கு உலகமே தன்னை உத்து உத்து பார்க்குறதா தோணும்... ஆனா யாருமே இவனை கண்டுக்க மாட்டாங்க... இவனாவே நம்மளத்தான் பார்க்கறாங்கன்னு நினைச்சு எதையாவது சொதப்பிட்டு போய் மாட்டிக்குவான்...
யாருமே நம்மளை கவனிக்கலைன்னு நினைச்சு ஏதாவது தப்பு பண்ணுவோம்... ஆனா அந்த நேரத்துல நம்மள சுத்தி இருந்தவன் அத்தனை பேரும் நம்மளத்தான் கவனிச்சிட்டு இருந்துருப்பான்... அதனால மாட்டிக்குவோம்... இதுதான் உலகம்...
அந்த பொண்ணுங்க ரெண்டு பேருமே வீட்டுல நம்ம விஷயத்தைப் பத்தி மூச்சு விடலைன்னு நினைக்குறேன். ஆனா நீ தொடர்ந்து அந்த காலனிக்கு பேப்பர் போட்டுகிட்டு இருந்த, அவளுங்க சொல்ல வேண்டாம்... நீயாவே மாட்டிக்குவ...
பேசாம நீ ஊரை விட்டு ஓடுறியோ இல்லையோ, அட்லீஸ்ட்... அந்த தெருவுக்கு பேப்பர் போடாமயாச்சும் இரு... அப்புறம் உன் இஷ்டம்...’’ என்று ரவிக்குமார் தெளிவாக சொல்லிவிட்டான்.
பதின்ம வயது எதையும் தீர்மானமாக முடிவெடுக்கத் தடுமாறும் வயது என்று பெரியவர்கள் சொன்னது உண்மைதான் போலிருக்கிறது என்று வரதராஜன் நினைத்துக் கொண்டான்.
குழம்பிக் கொண்டிருந்தவனுக்கு தெளிவு ஏற்பட்டதோ இல்லையோ அவன் தந்தை வழியாக ஒரு தற்காலிக தீர்வு ஏற்பட்டது.
ஆம்... அவன் தந்தை தெட்சிணாமூர்த்திக்கு மன்னார்குடியில் ஒரு தனியார் பள்ளியின் தோட்டத்தை பராமரிக்கும் வேலை கிடைத்தது. வாடகை வீட்டுலதானே இருக்கோம்... இந்த ஊர்ல கொடுக்குற வாடகையை அங்க போய் கொடுப்போமே... வரது... நீயும் பிளஸ்டூ முடிச்சிட்ட... மன்னார்குடியிலயே கவர்மெண்ட் காலேஜ் இருக்கு... அது சேர்ந்து படிச்சுகிட்டு இதே மாதிரி பேப்பர் போடுறதோ, வேற பகுதி நேர வேலையோ பார்த்துக்கலாமா?’’ என்று கேட்டார்.
தற்போது வரதராஜன் கைலாசநாதர் கோயில் தெருவிற்கு பேப்பர் போடுவதை எப்படி தவிர்ப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் தந்தை இப்படி ஒரு வாய்ப்பைப் பற்றி சொல்லவும் உடனே சம்மதித்து விட்டான்.
மன்னார்குடி பள்ளியில் ஏற்கனவே தோட்டத்தைப் பராமரித்து வந்தவரின் வயோதிகம் காரணமாகவும், அவரது மகன் வெளிநாடு சென்று நன்றாக சம்பாதித்து வருவதாலும் வேலைக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டாராம்.
அதனால் அடுத்த நாளே வந்து பணியில் சேர வேண்டும் என்று சொல்லி விட்டதால், வரதராஜனின் தந்தை, இவனுக்கு தேர்வு முடிவு வெளிவந்ததற்கு மறுநாளே புதிய வேலையில் சேர்ந்து விட்டார். பள்ளி நிர்வாகியின் சிபாரிசில் உடனடியாக வீடும் வாடகைக்கு கிடைத்து விட்டது.
அதை காரணமாகச் சொல்லி, அடுத்த நாள் முதல் வரதராஜன் பேப்பர் போடச் செல்லவில்லை. ஏன்... ஊரிலேயே இல்லை.
மதிப்பெண் பட்டியலும், டி.சியும் வாங்குவதற்காக தந்தையுடன் ஒரு முறை திருவாரூர் வந்ததுடன் சரி...
ரவிக்குமார் மட்டுமே நெருங்கிய நண்பனாக இருந்ததால் அவனுடன் மட்டும் அவ்வப்போது அலைபேசியில் பேசுவான். அவன்தான் அர்ச்சனாவும், மலர்விழியும் திருவாரூர் கல்லூரியிலேயே படிப்பதை வரதராஜனிடம் சொன்னான்.
எப்படியோ, அர்ச்சனா வேறு எதுவும் பாதிப்பில்லாமல் கல்லூரிக்கு சென்று வருவதைப் பற்றி தெரிந்ததும் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது. ஒரு முறை சென்று பார்க்கலாமா என்று யோசித்தான். இதுநாள் வரை அவள் கண்களில் படாமல் இருந்தாயிற்று. நம்மைப் பார்த்ததும் விபத்தில் சிக்கி ரெண்டு மாசம் படுக்கையில கிடந்ததுக்கு இவன்தான் காரணம்னு கோபப்பட்டா என்ன செய்யுறது? என்று தனக்குத்தானே சாக்குப்போக்கு சொல்லிக் கொண்டு திருவாரூருக்கு வரவே இல்லை.
ரவிக்குமார் கேட்டரிங் கல்லூரியில் படித்து விட்டு இரண்டாம் ஆண்டு படிப்பு முடியும்போதே சென்னையில் ஒரு பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணிக்கு சேர்ந்து கடுமையான உழைப்பில் முன்னேறி தற்போது கப்பல்களில் தலைமை சமையல்காரராக பணிபுரிந்து வருகிறான்.
ஆனால் வரதராஜன்...
தொடரும்...