நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, April 19, 2019

செங்கம் டிராவல்ஸ் - 6


திருவாரூர் சரவணன்
பகுதி 6
19-04–2019
‘‘தம்பி... உனக்கு தட்டி பாஸ் கொடுக்கும்போதே என்ன சொன்னேன்... படம் போட்டு முதல் நாளோ, சனி ஞாயிறு மாதிரி விடுமுறை நாள்லயோ, இந்த மாதிரி கூட்டம் நிறைய இருக்குற நாள்லயோ வராத... சாதாரண நாட்கள், இன்று இப்படம் கடைசின்னு ஸ்லிப் ஒட்டியதும் வான்னுதானே சொன்னேன்... மறந்துட்டியா தம்பி...’’ என்றார் தியேட்டரின் உரிமையாளர் பழனிச்சாமி. 





‘‘இல்லன்ணே... டிக்கட் கேட்கதான்ணே வந்தேன்...’’
‘‘டிக்கட்டா... யாருக்குடா...’’
‘‘எனக்குதான்ணே...’’
‘‘ஏண்டா தம்பி... படிக்கிறப்பவே காலையில நாலரை மணிக்கு எழுந்திரிச்சு பேப்பர் போட்டு கஷ்டப்பட்டு ஏதோ கொஞ்சம் சம்பாதிக்கிற...
இன்னும் ரெண்டு வாரம் கழிச்சு வந்தா உன்னைய சும்மாவே உள்ள அனுப்பப்போறேன். இப்போ ஏண்டா செலவழிக்கப்போற...’’ என்றார்.
அவரிடம் உண்மையான காரணத்தை சொல்ல முடியாமல், ‘‘இல்லண்ணே... என்ன இருந்தாலும் தலைவர் படம்...’’ என்று இழுக்க, ’’சரிடா... செகண்ட் கிளாஸ் டிக்கட் நாற்பது ரூபா. அதை வாங்கிக்க...’’ என்று கண்ணாடி கதவு வழியாகவே இவனை உள்ளே அழைத்துச் சென்றார்.
டிக்கட்டை வாங்கிக் கொண்ட அவன், ‘‘அண்ணே... சைக்கிளை கொண்டு போய் போட்டுட்டு வந்துடுறேன்...’’ என்றதும், உரிமையாளர்,
‘‘நில்லுடா... இந்த சாவியை எடுத்துட்டுப்போய் எண்ட்ரன்சுக்கு பக்கத்துல நம்ம வண்டிங்க எல்லாம் நிக்கிற இடத்துல சைக்கிளைப் போட்டுட்டு கதவைப் பூட்டி சாவியைக் கொண்டாந்துடு...’’ என்று ஒரு வளையத்தில் மாட்டியிருந்த சாவியைக் கொடுத்தார்.
வரதராஜனுக்கு ஏக குஷி. காரணம், பெண்களுக்கு டிக்கட் கொடுக்கும் பகுதியில்தான் தியேட்டர் ஊழியர்கள், நிர்வாகிகள் வாகனங்கள் நிறுத்தும் இடம் இருந்தது. இவன் அந்த இடத்தின் கதவைத்திறந்து தன்னுடைய சைக்கிளை வைக்கும்போது அர்ச்சனாவும், அந்த காலனியில் இருந்த அத்தனை பேரும் பார்த்தார்கள். இவன் சைக்கிளை நிறுத்தி பூட்டி விட்டு வெளியே வந்து அந்த இடத்தின் கதவைப் பூட்டிக் கொண்டு திரும்பும்போது எதிரில் நின்றது, இவன் பேப்பர் போடும் வீட்டில் உள்ள புவனேஸ்வரி.
‘‘என்ன தம்பி... இங்கயும் வேலைபார்க்குறியா?’’ என்றதும்,
‘‘அய்யய்யோ... இல்லக்கா... நான் ஸ்கூல்ல படிக்கிறேன்... இங்க படம் பார்க்க வந்தேன்... ஓனர் சைக்கிளை இங்க போட்டுக்க சொன்னார்...’’ என்று அவசரமாக பதிலளித்தான்.
‘‘கூட்டம் இருக்குறதைப் பார்த்தா பொம்பளைங்களுக்கு குடுக்குற இருபது ரூபா டிக்கட் கிடைக்காது போலிருக்கு... நீ சொல்லி வாங்கித்தர்றியாப்பா...’’ என்று கேட்டதும் ஒருகணம் யோசித்தான்.
வாங்கித்தர்றேன்னு பந்தாவா சொல்லி, ஓனர் மறுத்துட்டா அசிங்கம்... அதனால போய் கேட்டுட்டு வந்துடுறேன் சொல்லி தப்பிக்கிறதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்த வரதராஜன், ‘‘அக்கா... ஓனர் என்ன மூடுல இருக்காருன்னு தெரியலை... எதுக்கும் போய் கேட்டுட்டு வந்துடுறேனே... எத்தனை டிக்கட்?’’ என்று கேட்டான்.
‘‘இருபத்து மூணு...’’ என்று அந்த பெண் சொல்லவும், இதை நான் எதிர்பார்த்ததுதான், ஆனா ஓனருக்கு மயக்கம் வராம இருக்கணும்... என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு கண்ணாடி கதவு நுழைவாயிலுக்கு சென்றான்.
அவர் இவன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்திருப்பார் போலிருக்கிறது.
‘‘அங்க என்னடா லேடீஸ்கிட்ட கதை பேசிகிட்டு இருந்த...’’
‘‘இல்லண்ணே... நான் பேப்பர் போடுற ஏரியாவுல ஒரு காலனியில இருக்காங்க... இருபது ரூபா டிக்கட் கேட்டாங்க... அதான்...’’ என்று இழுத்தான் வரதராஜன்.
‘‘நீ என்ன சொன்ன?...’’ என்று பழனிச்சாமி கேட்டபோது அவர் குரலில் ஏதோ ஒரு எச்சரிக்கை உணர்வு.
‘‘முதலாளிகிட்ட கேட்டுட்டு வர்றேன்னுதான் சொன்னேன் முதலாளி...’’
இதைக் கேட்ட பழனிச்சாமி, அருகில் நின்ற தியேட்டர் ஊழியர்களிடம், ‘‘வியர்க்க விறுவிறுக்க பையன் பணம் கொடுத்து படம் பார்க்குறேன்னு சொன்னப்ப தலைவர் படம்னு ஆவலா இருக்குறதா நினைச்சேன்... அங்க நிக்கிற கூட்டத்தைப் பார்க்கும்போதுதான் விசயம் புரியுது. பையன் தெளிவாத்தான் இருக்கான்... ஆனாலும் திறமைசாலிடா நீ... டிக்கட் வாங்கித் தர்றேன்னு பந்தா பண்ணாம, என் கிட்ட கேட்டு சொல்றேன்னு தெளிவா எஸ்கேப் ஆகுற மாதிரி பதில் சொல்லிட்டு வந்துருக்க... சரி... எத்தனை டிக்கட் வேணும்?’’ என்று கேட்டவாறு அருகில் நின்ற ஊழியரின் கையில் இருந்த மூன்றாம் வகுப்பு டிக்கட் புத்தகத்தை வாங்கி டிக்கட்டுகளை எண்ணுவதற்காக ஒரு டிக்கட்டை இரண்டு விரல்களால் பிடித்தார்.
‘‘இருபத்திமூணு....’’
வரதராஜன் எதிர்பார்த்ததுபோல் உரிமையாளருக்கு மயக்கம் வரவில்லை. ஆனால் ஒரு சில விநாடிகள் ஸ்தம்பித்து நின்றார்.
‘‘டேய் வரதா... உண்மைய சொல்லு... இருபத்தி மூணு பேர் வந்துருக்காங்களா... இல்ல பிளாக்ல விக்கப்போறியா? இந்த டிக்கட்டுக்கு ஆம்பளைங்களை விட மாட்டோம்னு தெரியும்ல...’’
‘‘என்னண்ணே... என்னையே சந்தேகப்பட்டுட்டீங்க... உங்களுக்கு விருப்பம் இருந்தா டிக்கட் கொடுங்க... இல்லன்னா இல்லன்னு சொல்லுங்க... நான் அவங்ககிட்ட போய் கவுண்டர்லயே டிக்கட் எடுத்துக்குங்கன்னு சொல்லிட்டு எனக்கு நீங்க ஒரு டிக்கட் கொடுத்ததை வெச்சு நான் பாட்டுக்கு படம் பார்க்கப்போறேன்...’’ என்றான்.
‘‘இப்ப ஏண்டா பொங்குற... சரி... அவங்களை இங்க வர சொல்லு... இந்த வழியாவே உள்ளே அனுப்பிடலாம்...’’ என்றார் உரிமையாளர்.
அந்த விபரத்தை சொன்னதும் அவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. நேரடியாக கண்ணாடி கதவு வழியே உள்ளே நுழையும்போது ஏதோ வி.ஐ.பி அந்தஸ்து கிடைத்த பெருமிதத்துடன் சென்றார்கள்.
பழனிச்சாமியைப் பொறுத்தவரை, வரதராஜனே இருபது ரூபாய் டிக்கட்டை முப்பது ரூபாய்க்கு விற்றுவிட்டால் என்ன செய்வது என்ற சந்தேகத்துக்கு இடமின்றி நேரடியாக வர சொல்லி அவர்களிடம் டிக்கட்டை கொடுத்து உள்ளே அனுப்பி விட்டார். அந்த வகையில் அவருக்கு திருப்தி.
Sengam Travels - Story Series - 6
பழனிச்சாமி இப்படி செய்ததால் வரதராஜன்தான் இவர்களை கவுண்டர் வழியாக கூட்டத்தில் நசுங்கி உள்ளே செல்ல விடாமல் நேரடியாக அழைத்துச் சென்றதாக நினைத்துக் கொள்வார்கள் என்ற வகையில் அவனுக்கு சந்தோஷம்.
மூன்றாம் வகுப்பு வரிசைக்கு பின்னால் இரண்டாம் வகுப்பு வரிசை ஆரம்பம். மற்ற ரசிகர்கள் உள்ளே வரும் முன்பே அங்கு போய் அமர்ந்தால் இவன் அவர்களுக்காகத்தான் வந்திருக்கிறான் என்று தவறாக எண்ணிக் கொள்வார்கள் என்பதால், கூட்டம் உள்ளே சென்று இருக்கைகள் ஓரளவு நிரம்பட்டும் என்று காத்திருந்தான்.
கடைசியாக அந்த வரிசை நிரம்பும் என்று இவன் நினைத்திருக்க, அர்ச்சனா உள்ளிட்ட இளம்பெண்கள் அதிகம் அமர்ந்திருந்ததைப் பார்த்த ரசிகர்கள் கூட்டம் முன்னதாகவே அதற்கு அடுத்த வரிசையில் இடம் பிடித்து விட்டது.
அதன்பிறகு அவசர அவசரமாக கிடைத்த இடத்தில் வரதராஜன் நுழைந்து கொண்டான். எல்லாம் நன்மைக்கே... அவங்களுக்கு அடுத்த வரிசையில உட்காராம இருந்தா, நான் அவங்களுக்காக படத்துக்கு வரலைன்னு தோணும்... அதுவும் நல்லதுக்குத்தான் என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டான்.
அதன்பிறகு இடைவேளையின்போது கூட அவர்களை பார்க்க முயற்சிக்கவில்லை.
படம் முடிந்த பிறகும் எல்லா கூட்டமும் மொத்தமாக வெளியேறியதால் இவன் சைக்கிளை நிறுத்தியிருந்த பிரத்யேக பகுதியின் கதவை திறக்க முடியவில்லை. அதனால் மொத்த பார்வையாளர்களும் தியேட்டரை விட்டு காலியாகும் வரை இவன் காத்து நிற்க வேண்டியதாயிற்று.
வரதராஜன் அதன் பிறகு ஒருவாரம் காலையும், மாலையும் அர்ச்சனாவை வழக்கம்போல் கவனித்துச் சென்று கொண்டிருந்தான். ஆனால் அவர்கள் யாருமே இவனை கண்டு கொள்ளாததுபோல்தான் நடந்து கொண்டார்கள்.
திடீரென்று ஒருநாள், இவனிடம் டிக்கட் எடுத்து தரச் சொன்ன புவனேஸ்வரி தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது இவனைப் பார்த்துவிட்டாள்.
‘‘தம்பி... தம்பி... ஒரு நிமிஷம்ப்பா...’’ என்று கூப்பிட்டதும்,
‘‘என்னக்கா... இப்பவே பேப்பர் பணம் தரப்போறீங்கிளா... பில் புக் எடுத்துட்டு வரலையே...’’ என்றான்.
‘‘இல்ல தம்பி... அதுக்காக கூப்பிடலை... என் பொண்ணும் அவ பிரெண்ட்ஸ் மூணு பேரும் இந்த வருசம் பிளஸ் டூ...’’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே
‘‘அதான் எனக்கு தெரியுமே...’’ என்றது வரதராஜனின் மைண்ட் வாய்ஸ்.
‘‘இன்னைக்கு மதியம் ஸ்கூல்ல ஃபேர்வெல் பார்ட்டி வச்சிருக்காங்க. என் வீட்டுக்காரர்கிட்ட நேத்தியே சொல்ல மறந்துட்டேன்... சொல்லி வெச்சா மாதிரி எல்லாருமே மார்ச் மாசம் நெருங்குறதால இயர் எண்ட் டார்கெட் அது இதுன்னு காலையிலயே வேலைக்கு கிளம்பி போயிட்டாங்க...’’ என்று அவள் தொடர்ந்து பேசியபோது, அதிகாலையில் எழுந்ததன் காரணமாக வரதராஜன் கொட்டாவி விட்டான்.
அதைப்பார்த்த புவனேஸ்வரி, ‘‘அய்யய்யோ... பேசி போரடிக்கலைப்பா... கடைத்தெருவுக்கு போய் கனகாம்பரம் பூ வாங்கிட்டு வந்து தர முடியுமா?... தப்பா நினைச்சுக்காதப்பா...’’ என்றாள்.
‘‘நானும் உங்க வீட்டுக்கு ரெண்டு வருசமா பேப்பர் போட்டுகிட்டு இருக்கேன். இன்னைக்குதான் முதன் முதலா உதவின்னு கேட்குறீங்க... சரி... காசு கொடுங்க... வாங்கிட்டு வர்றேன்...’’
‘‘இது முதல் உதவி இல்லப்பா... ரெண்டாவது தடவை. அன்னைக்கு தியேட்டர்ல டிக்கட் எடுத்துக் கொடுத்ததுதான் முதல் தடவை. அது சரி... அப்புறம் தியேட்டருக்குள்ள உன்னைய பார்க்கவே இல்லை... இடைவேளைக்கும் கண்ணுல தென்படலை... எங்க உட்கார்ந்திருந்த?’’
‘‘செகண்ட் கிளாஸ்ல ஒரு மூலையிலதான் சீட் கிடைச்சதுக்கா...’’ என்றான் அவன்.
‘‘நீ கேட்டதும் எங்களை கண்ணாடி டோர் வழியா உள்ள போக சொல்லிட்டாங்களே... பெரிய ஆளுப்பா நீ...’’
Sengam Travels - Story Series - 6
‘‘அதெல்லாம் ஒண்ணும் இல்லக்கா... எல்லா தியேட்டருக்கும் பேப்பர் இலவசம். அதனால பேப்பர் போடுற பசங்களுக்கும், பேப்பர் ஏஜெண்ட்டுக்கும் தட்டி பாஸ் அப்படின்னு ஒண்ணு கொடுப்பாங்க. அதை வெச்சிகிட்டு கடைசி நாள் அல்லது அதுக்கு ரெண்டு மூணு நாள் முந்தி டிக்கட் எடுக்காம ப்ரீயா படம் பார்க்கலாம்...
தலைவர் படம்... தியேட்டர் நிறைய கூட்டம் இருக்குறப்ப பார்க்கணும்னுதான் நேத்து டிக்கட் எடுத்து போனேன்... சரிக்கா... காசைக் கொடுங்க... நான் பூ வாங்கித் தந்துட்டு போய் குளிச்சு, சாப்பிட்டுட்டு நானும் ஸ்கூலுக்கு கிளம்பணும்...’’ என்று பரபரத்தான் வரதராஜன்.
பூ வாங்கிக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு சென்று குளிக்கும்போது, சாப்பிடும்போது அர்ச்சனா நினைவுதான். நாம வாங்கிக் கொடுத்த பூவை வெச்சுக்கப் போறா... என்று ஒரே சந்தோஷம்.
பேர்வெல் பார்ட்டி எத்தனை மணிக்கு ஆரம்பம், முடிவுன்னு தெரியலையே... மதியம் வகுப்பு இருக்கும். அவளுங்க ஸ்கூல் போற நேரம் தெரியாம எப்படி கட் அடிக்கிறது... சரி... எப்படியும் சாயந்திரம் அஞ்சு மணிக்குமேலதான் முடியும். திரும்ப வரும்போது பார்த்துக்க வேண்டியதுதான் என்று சமாதானமாகி பள்ளிக்கு சென்றான்.
அங்கு இவன் வகுப்புத் தோழர்கள் இவனை விட லேட்டஸ்ட் அப்டேட்டுடன் இருந்தார்கள். அந்த பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ மாணவிகள் அணிந்து வரும் உடை, அவர்களுக்கு தரப்படும் கிப்ட், விழா ஆரம்பிக்கும் நேரம், முடியும் நேரம் எல்லாவற்றையும் புள்ளிவிபரத்துடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.
மாலை சுமார் ஆறேகால் மணிக்கு பெரிய கோயிலின் தெற்குப்புற வாயில் அருகே காத்திருந்தான். சைக்கிளில் வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் அர்ச்சனா மற்றும் மூன்று பேர் நடந்துதான் வந்தார்கள்.
அனைவரும் ஒரே டிசைனில் புடவை, முகம் நிறைய மேக்கப், தலையில் கனகாம்பரம், கையில் ஒரு வெள்ளி விளக்கு என்று நடந்து வந்ததைப் பார்த்து வரதராஜனுக்கு மயக்கமே வரும் போலிருந்தது.
பள்ளிச்சீருடையாக பாவாடை, தாவணியிலும், விடுமுறை நாட்களில் சுடிதாரிலும், தண்ணீர் பிடிக்கச் செல்லும்போது நைட்டியிலும் பார்த்துப் பழகியவளை புடவை கட்டி பார்த்ததும் திக்குமுக்காடிப் போனான் வரதராஜன்.
அடுத்து இரண்டு தெருக்களை அவர்கள் கடந்து வீட்டுக்கு செல்லும் வரை இரண்டு மூன்று முறை வேறு பக்கம் சுற்றிக் கொண்டு அர்ச்சனாவைப் பார்த்துக் கொண்டே எதிரில் சென்றான். பொண்ணுங்க பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறப்போற கடைசி வருசம் இவ்வளவு அழகா அவங்களை வரவெச்சு நினைவுப்பரிசும் கொடுத்து இந்த ஞாபகங்களை பொக்கிஷமா வெச்சுக்குற மாதிரி செஞ்சிருக்காங்க. நம்ம ஸ்கூலும்தான் இருக்கே... படிச்சு முடிச்சு இவனுங்க எப்படா வெளியில போய்த் தொலையுவாங்கன்னு நினைப்போட இருப்பாங்க போலிருக்கு... என்ன பண்றது... இவங்களை இவ்வளவு அழகா பார்த்ததும் நம்ம மனசு நம்மகிட்ட இல்லை... என்று தனக்குத்தானே பெருமூச்சு விட்டுக்கொண்டான் வரதராஜன்.
Sengam Travels - Story Series - 6
அதற்கு அடுத்தடுத்த நாட்களில் காலையில் காலனி வாசலில் அர்ச்சனா உள்ளிட்ட பிளஸ்டூ மாணவிகளின் தாய்மார்கள்தான் குடிநீர் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
எல்லோரும் அரசுப் பொதுத் தேர்வுக்கு தீவிரமாக தயாராகிறார்கள் என்பதை வரதராஜன் புரிந்து கொண்டான். பிரேக் பிடித்ததும் சற்று தூரம் சென்று வண்டி நிற்பதைப் போல், அர்ச்சனா தண்ணீர் பிடிக்க வரவில்லை என்றாலும் அந்த நேரத்துக்கு அந்த தெரு வழியாக செல்வதை உடனடியாக வரதராஜனால் நிறுத்த முடியவில்லை.
மாலை நேரங்களிலும் அப்படித்தான். அர்ச்சனா உள்ளிட்ட யாருமே பெரிய கோவிலுக்கு தண்ணீர் எடுக்கச் செல்லவில்லை.
ஓரிரு நாட்களிலேயே மாலை நேரங்களில் கல்தேர் பக்கம் செல்வதை வரதராஜன் நிறுத்திக் கொண்டான். காலை நேரத்தில் யார் பார்த்தாலும் பேப்பர் போட்டு விட்டு திரும்ப வருகிறான் என்று தெரிந்திருப்பதால் சந்தேகம் வராது. ஆனால் மாலை நேரத்தில் பெண்களுக்கு பதில் அவர்களின் தாய்மார்கள் தண்ணீர் எடுக்க வரும்போது அவர்கள் கண்களில் தெரிவது போல் சுற்றினால் ஆபத்து என்பதை புரிந்து கொண்டு அதை தவிர்த்து விட்டான்.
தேர்வுகள் முடிந்த பிறகு மாலை வேளையில் பெரிய கோவில் கிணற்றில் தண்ணீர் எடுக்கும் பணியை அர்ச்சனாவும் மற்றவர்களும் தொடர்ந்தார்கள். வரதராஜனும் அவன் பணியை தொடர்ந்தான். தேர்வு முடிவுகள் வெளியாக ஓரிரு நாட்கள்தான் இருந்தன. அப்போதுதான் ஒரு ஐடியா அய்யாச்சாமி என்று நினைத்துக்கொண்ட நண்பன் ரவிக்குமார் என்பவன் வரதராஜனுக்கு ஒரு உருப்படாத யோசனையை சொல்லிக்கொடுத்து உசுப்பேற்றி விட்டான்.
தொடரும்...

No comments:

Post a Comment