நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, May 24, 2019

செங்கம் டிராவல்ஸ் - 11

பகுதி - 11
சேந்தமங்கலம் காளி கோயிலில் சாமி கும்பிட போட்ட பிளான், அர்ச்சனா கவிழ்ந்ததில் பவித்திரமாணிக்கம் காளி கோவில் என்று மாற்றம் கண்டிருந்தாலும் வரதராஜனின் பயம் அவ்வளவு எளிதில் குறையவில்லை.
இரவு அர்ச்சனா டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு புறப்பட்டு ஆட்டோவில் போனதைப் பார்த்துவிட்டு வந்து ரவிக்குமார் சொன்ன பிறகுதான் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தான்.
இந்த சூழ்நிலையில் மறுநாள் பேப்பர் போடும்போது கைலாசநாதர் கோயில் தெருவுக்குள் நுழைய வேண்டுமே என்று கவலையாக இருந்தது.
இவ்வளவு நாளும் சைட் அடிக்க வேண்டும் என்ற ஆவலில் எப்போதுடா அந்த தெருவுக்கு செல்வோம் என்று காத்திருந்த நிலை மாறி, என்ன சொல்லி அந்த தெருவுக்கு போவதை தவிர்ப்பது என்று யோசிக்க ஆரம்பித்தான்.
எப்போதும் போல் காலையில் 5 மணிக்கு பேப்பர் போடச் சென்றால் வெளியில் யாரும் இருக்கப் போவது இல்லை. ஆறரை மணிக்கு லைன் முடித்து திரும்ப வரும்போது கைலாசநாதர் கோயில் தெருவுக்கு செல்லாமல் வேறு வழியாக வந்துவிடலாம்தான்.
ஆனால் ஐந்து மணிக்கு செல்லும்போதே யாரும் பார்த்து பிரச்சனை ஆகிவிட்டால் என்ன செய்வது என்று ஒரே குழப்பம்.
வழக்கமா ஏதாவது முக்கிய காரணமா லீவு போட வேண்டி இருந்தா ரெண்டு நாளைக்கு முன்னாலேயே நாளிதழ் முகவர் கார்த்திகேயனிடம் தெரிவித்து விடுவான். இவன் பார்த்த லைனை அவரேதான் கவனிப்பார். ஆனால் இப்போது திடீரென்று வரமாட்டேன் என்று சொன்னால் காரணம் கேட்பார்.


என்ன சொல்லி மழுப்புவது?
வேற லைன் பார்க்குறேன்னு சொன்னாலும் காரணம் கேட்பார். ஏன்னா, ஏற்கனவே ரெண்டு தடவை வேற லைன் தர்றேன்னு சொன்னதுக்கு இந்த ரூட் மட்டுமேதான் வேணுன்னு அர்ச்சனா மேல இருந்த ஈர்ப்புல பிடிவாதமா இருந்தாச்சு...
ரிசல்ட் வர்றதை காரணமா சொல்லலாம்... காலையில பத்துமணிக்குதான் ரிசல்ட் வரும்... அதுக்கு ஆறரை மணிக்கு லைன் முடிக்கிறவனுக்கு எதுக்கு லீவுன்னு கேட்பாரு...
என்ன பண்றதுன்னு புரியலையே... என்று குழம்பியவனுக்கு இரவு வெகு நேரம் தூக்கம் வரவில்லை. எப்போது தூங்கினானோ தெரியவில்லை.
எப்போதும் அவனாகவே எழுந்து விடுபவன், இன்று அவன் அப்பா எழுப்பும் வரை தூங்கிக்கொண்டிருந்தான்.
அவன் காலில் பலமாக யாரோ அடித்தார்கள்... கண் விழித்தபோது டியூப் லைட் வெளிச்சம் கண்ணைக்கூசியது.
கண் இமையை சுருக்கிக் கொண்டு பார்த்தான். எதிரில் அவன் தந்தை தெட்சிணாமூர்த்தி.
டேய் வரதா... என்னடா இப்படி தூங்குற... ரிசல்ட் வருதுன்னா ரொம்ப பேருக்கு தூக்கமே வராது... நீ என்னடான்னா வருசம் பூரா நாலு நாலரை மணிக்கு எழுந்துட்டு இன்னைக்கு இப்படி தூங்குற...
மணி அஞ்சரை ஆகுது... கார்த்தி ரெண்டு தடவை போன் பண்ணிட்டாருடா...
ஏன் உடம்பு முடியலையா... அப்படின்னா நேத்தே சொல்லிருக்க வேண்டியதுதானே...’’ என்றார்.
அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா... நான் கிளம்புறேன்...’’ என்று எழுந்த வரதராஜன் அவசர அவசமாக பல் விளக்கி, காலைக்கடன்களை முடித்துக்கொண்டு முகம் கழுவி பேருந்து நிலையம் சென்றபோது மணி ஐந்து ஐம்பது ஆகியிருந்தது.
தம்பி வரதா... ரிசல்ட் வந்ததுக்கு அப்புறம் வேலைக்கு வருவியா... இல்ல... வேற ஆள் பார்க்கணுமா?’’ என்று விளையாட்டாக கேட்டார்.
ஆனால் யோசிக்கணுண்ணே...’’ என்று கொஞ்சமும் யோசிக்காமல் பதில் சொன்னதும் கார்த்திகேயனுக்கு ஷாக்காக இருந்தது.
லேட்டா வந்ததுல குழம்பிப்போய் ஏதோ சொல்றான்... சாயந்திரம் பேசிக்கலாம் என்று நினைத்து அவர் மேற்கொண்டு வேறு எதையும் கேட்கவில்லை.
ஒருவேளை இவன் வரவில்லை என்றால் கார்த்திகேயனே பேப்பர்களை போட்டுவிடலாம் என்ற எண்ணத்தில் நாளிதழின் இணைப்பு பக்கங்களை கோர்த்து அடுக்கி வைத்திருந்தார்.
அதனால் இவன் பேப்பரை எண்ணி எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
பனகல்ரோடு, தாண்டி கீழவீதி செல்லும்போதே வரதராஜனுக்கு பக் பக் என்று நெஞ்சம் அடித்துக் கொண்டது.
வரதராஜன் கைலாசநாதர் கோயில் தெருவுக்குள் நுழையும்போது மணி ஆறு இருபது. எப்போதும் அவன் கொடிக்கால்பாளையத்தில் கடைசி பேப்பர் போடும் நேரம். பத்து நிமிஷம் முன்னதா வர்றோம்... அர்ச்சனாவுக்கு கால்ல அடிபட்டிருக்குறதால அவ இப்போ தண்ணி பிடிக்க வந்துருக்க சான்ஸ் இல்லை... மத்தவங்களுக்கு விஷயம் தெரியாதுன்னா யாரும் நம்மளை கண்டுக்க மாட்டாங்க என்று நினைத்துக் கொண்டே அந்த காலனி வாசலில் சென்று சைக்கிளை நிறுத்தினான்.
இவன் பேப்பர் போடும் வீட்டு அம்மா புவனேஸ்வரி வாசலிலேயே தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்.
என்ன தம்பி... பொதுவா ரிசல்ட் வர்ற அன்னைக்கு தூக்கம் வராதுன்னு சொல்லுவாங்க... நீ நல்லா தூங்கிட்டியாப்பா...’’ என்று கேட்டவாறே பேப்பரை வாங்கிக் கொண்டாள்.
வீட்டில் அவன் தந்தை பேசிய அதே வசனம்.
பேரண்ட்ஸ் எல்லாருக்கும் ஒரே வேவ்லென்த்துதான் இருக்கும் போலிருக்கு என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு புவனேஸ்வரிக்கு எதுவும் பதில் சொல்லாமல் லேசாக புன்னகைத்து விட்டு நகர முயற்சித்தான். ஆனால் முகத்தில் சிரிப்புதான் வர மாட்டேன் என்று அடம் பிடித்தது.
அவன் அங்கிருந்து கிளம்பியதும், பொம்பளைப்புள்ளைங்க எல்லாம் பயப்படாம இருக்கு... இந்த புள்ளையப் பாருங்களேன்... ரிசல்ட் வரப்போகுதுன்னதும் ரொம்ப பயந்து போய் இருக்குன்னு நினைக்குறேன்... படிக்கும்போதே வேலை பார்த்துகிட்டு படிக்குது... பொறுப்பான புள்ளைதான்...’’ என்று அருகில் நின்ற மற்றொரு பெண்ணிடம் கூறினாள்.
அவள் பேசியது வரதராஜன் காதிலும் லேசாக விழுந்தது.
‘நேத்து நடந்த மேட்டரை மட்டும் அர்ச்சனா உங்க கிட்ட சொன்னா, அவ்வளவுதான்... நீங்க எல்லாரும் எனக்கு அர்ச்சனை பண்ணி விட்டுடுவீங்க...’ என்று மனதுக்குள் நினைத்தவாறு எதிர்புறம் போட வேண்டிய பேப்பரை போட்டுவிட்டு வேகமாக சைக்கிளில் ஏறிப் பறந்தான்.
காலை பத்து மணி. கூட்டத்திற்குள் புகுந்து அடித்துப்பிடித்து பள்ளியில் ஒட்டப்பட்ட மதிப்பெண் பட்டியலைப் பார்த்தாயிற்று.
ரவிக்குமாரர் அப்போதுதான் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்தான். எதிரில் வரதராஜன் தன்னுடைய மதிப்பெண்ணை பார்த்து விட்டு வந்து கொண்டிருந்தான்.
என்னாச்சுடா... சோகமா வர்ற?’’
அதற்கு வரதராஜன், ம்ப்ச்... இன்னும் நாலு மார்க் கிடைச்சிருந்தா டோட்டல் ஆயிரம்னு ரவுண்டா இருந்துருக்கும்...’’ என்று வருத்தப்பட்டான்.
ஏண்டா... எது எதுலடா ஃபேன்சி நம்பரை எதிர்பார்ப்பீங்க... தொள்ளாயிரத்து தொண்ணூற்றாறு மார்க் கிடைச்சதுக்கு சந்தோஷப்படாம நாலு மார்க் கிடைக்கலையேன்னு வருத்தப்படுறியே...
நீ மட்டுமில்லை... நாட்டுல ரொம்ப பேர் இப்படித்தான் கிடைச்சதை விட்டுட்டு கிடைக்காததை நினைச்சு புலம்புறதை பிழைப்பாவே வெச்சிருக்காங்க... சரி சரி... என் மார்க் என்னன்னு பார்த்தியா?’’ என்றான்.
இதைக் கேட்டு திடுக்கிட்ட வரதராஜன், உன் மார்க்கை இன்னும் நீ பார்க்கலையா... அப்ப இவ்வளவு நேரம் எங்கடா போயிருந்த?...’’ என்றான்.
நம்ம மார்க் நம்மள விட்டு எங்கடா போகப்போகுது?... கேர்ள்ஸ் ஹையர் செகண்டரி ஸ்கூலுக்கு போயிருந்தேண்டா... இந்த நேரத்துலன்னா யார் வேணுன்னாலும் ஸ்கூலுக்குள்ள போகலாம்... மார்க் லிஸ்ட்டைப் பார்க்கலாம்... அப்புறமா போனா நம்மளை அடிச்சுத் துரத்த வாய்ப்பு இருக்கு...
உன் ஆளு உன்னை விட அம்பத்தோரு மார்க் அதிகம்... இந்தா... புடி...’’ என்று ஒரு பேப்பரை கொடுத்தான்.
அதில் பதிமூன்று மாணவிகளின் மதிப்பெண்கள் பாடவாரியாக குறிக்கப்பட்டிருந்தன.
இத்தனை பேராடா...’’ என்று வரதராஜன் கேட்கவும்,
பூமி உருண்டையை தேடி ஹெச்.எம் இங்க வந்துடப்போறாரு... வாயை க்ளோஸ் பண்ணு...
உன் ஒருத்தன் மட்டுமில்லை... இத்தனை பேருக்கு சர்வீஸ் பண்றதுக்காகத்தான் அங்க போய் முதல்ல மார்க் லிஸ்ட்டைப் பார்த்துட்டு வர்றேன்...’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்குள் நுழைய பயந்து கொண்டிருந்த நாலைந்து சக மாணவர்கள் ரவிக்குமாரிடம் வந்து மாணவிகளின் மதிப்பெண் விபரங்களை கேட்டு வாங்கிக் கொண்டார்கள்.
அடுத்தடுத்து மற்ற பனிரெண்டு பேரின் மதிப்பெண் விபரத்தை அவரவர்களிடம் தெரிவித்தபிறகுதான் வரதராஜனிடம் தன்னுடைய மதிப்பெண்ணை கேட்டு தெரிந்து கொண்டான் அவன்.
நம்ம சேதி இருக்கட்டும்... சேதாரம் இல்லாம வந்துருக்க... காலையில பேப்பர் போடப் போனியா?... எஸ்கேப் ஆயிட்ட போலிருக்கே...’’ என்றான்.
இவனுடைய தடுமாற்றத்தை, ரிசல்ட் காரணமாக கவலையாக இருக்கிறான் என்று அங்கிருந்த பெண் கூறியதை நண்பனிடம் சொன்னான்.
இது நான் எதிர்பார்த்ததுதாண்டா... எதாச்சும் தப்பு பண்ணினவனுக்கு உலகமே தன்னை உத்து உத்து பார்க்குறதா தோணும்... ஆனா யாருமே இவனை கண்டுக்க மாட்டாங்க... இவனாவே நம்மளத்தான் பார்க்கறாங்கன்னு நினைச்சு எதையாவது சொதப்பிட்டு போய் மாட்டிக்குவான்...
யாருமே நம்மளை கவனிக்கலைன்னு நினைச்சு ஏதாவது தப்பு பண்ணுவோம்... ஆனா அந்த நேரத்துல நம்மள சுத்தி இருந்தவன் அத்தனை பேரும் நம்மளத்தான் கவனிச்சிட்டு இருந்துருப்பான்... அதனால மாட்டிக்குவோம்... இதுதான் உலகம்...
அந்த பொண்ணுங்க ரெண்டு பேருமே வீட்டுல நம்ம விஷயத்தைப் பத்தி மூச்சு விடலைன்னு நினைக்குறேன். ஆனா நீ தொடர்ந்து அந்த காலனிக்கு பேப்பர் போட்டுகிட்டு இருந்த, அவளுங்க சொல்ல வேண்டாம்... நீயாவே மாட்டிக்குவ...
பேசாம நீ ஊரை விட்டு ஓடுறியோ இல்லையோ, அட்லீஸ்ட்... அந்த தெருவுக்கு பேப்பர் போடாமயாச்சும் இரு... அப்புறம் உன் இஷ்டம்...’’ என்று ரவிக்குமார் தெளிவாக சொல்லிவிட்டான்.
பதின்ம வயது எதையும் தீர்மானமாக முடிவெடுக்கத் தடுமாறும் வயது என்று பெரியவர்கள் சொன்னது உண்மைதான் போலிருக்கிறது என்று வரதராஜன் நினைத்துக் கொண்டான்.
குழம்பிக் கொண்டிருந்தவனுக்கு தெளிவு ஏற்பட்டதோ இல்லையோ அவன் தந்தை வழியாக ஒரு தற்காலிக தீர்வு ஏற்பட்டது.
ஆம்... அவன் தந்தை தெட்சிணாமூர்த்திக்கு மன்னார்குடியில் ஒரு தனியார் பள்ளியின் தோட்டத்தை பராமரிக்கும் வேலை கிடைத்தது. வாடகை வீட்டுலதானே இருக்கோம்... இந்த ஊர்ல கொடுக்குற வாடகையை அங்க போய் கொடுப்போமே... வரது... நீயும் பிளஸ்டூ முடிச்சிட்ட... மன்னார்குடியிலயே கவர்மெண்ட் காலேஜ் இருக்கு... அது சேர்ந்து படிச்சுகிட்டு இதே மாதிரி பேப்பர் போடுறதோ, வேற பகுதி நேர வேலையோ பார்த்துக்கலாமா?’’ என்று கேட்டார்.
தற்போது வரதராஜன் கைலாசநாதர் கோயில் தெருவிற்கு பேப்பர் போடுவதை எப்படி தவிர்ப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் தந்தை இப்படி ஒரு வாய்ப்பைப் பற்றி சொல்லவும் உடனே சம்மதித்து விட்டான்.
மன்னார்குடி பள்ளியில் ஏற்கனவே தோட்டத்தைப் பராமரித்து வந்தவரின் வயோதிகம் காரணமாகவும், அவரது மகன் வெளிநாடு சென்று நன்றாக சம்பாதித்து வருவதாலும் வேலைக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டாராம்.
அதனால் அடுத்த நாளே வந்து பணியில் சேர வேண்டும் என்று சொல்லி விட்டதால், வரதராஜனின் தந்தை, இவனுக்கு தேர்வு முடிவு வெளிவந்ததற்கு மறுநாளே புதிய வேலையில் சேர்ந்து விட்டார். பள்ளி நிர்வாகியின் சிபாரிசில் உடனடியாக வீடும் வாடகைக்கு கிடைத்து விட்டது.
அதை காரணமாகச் சொல்லி, அடுத்த நாள் முதல் வரதராஜன் பேப்பர் போடச் செல்லவில்லை. ஏன்... ஊரிலேயே இல்லை.
மதிப்பெண் பட்டியலும், டி.சியும் வாங்குவதற்காக தந்தையுடன் ஒரு முறை திருவாரூர் வந்ததுடன் சரி...
ரவிக்குமார் மட்டுமே நெருங்கிய நண்பனாக இருந்ததால் அவனுடன் மட்டும் அவ்வப்போது அலைபேசியில் பேசுவான். அவன்தான் அர்ச்சனாவும், மலர்விழியும் திருவாரூர் கல்லூரியிலேயே படிப்பதை வரதராஜனிடம் சொன்னான்.
எப்படியோ, அர்ச்சனா வேறு எதுவும் பாதிப்பில்லாமல் கல்லூரிக்கு சென்று வருவதைப் பற்றி தெரிந்ததும் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது. ஒரு முறை சென்று பார்க்கலாமா என்று யோசித்தான். இதுநாள் வரை அவள் கண்களில் படாமல் இருந்தாயிற்று. நம்மைப் பார்த்ததும் விபத்தில் சிக்கி ரெண்டு மாசம் படுக்கையில கிடந்ததுக்கு இவன்தான் காரணம்னு கோபப்பட்டா என்ன செய்யுறது? என்று தனக்குத்தானே சாக்குப்போக்கு சொல்லிக் கொண்டு திருவாரூருக்கு வரவே இல்லை.
ரவிக்குமார் கேட்டரிங் கல்லூரியில் படித்து விட்டு இரண்டாம் ஆண்டு படிப்பு முடியும்போதே சென்னையில் ஒரு பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணிக்கு சேர்ந்து கடுமையான உழைப்பில் முன்னேறி தற்போது கப்பல்களில் தலைமை சமையல்காரராக பணிபுரிந்து வருகிறான்.
ஆனால் வரதராஜன்...
தொடரும்...

No comments:

Post a Comment