நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, April 26, 2019

சோலைமலை வார இதழ் 26-04-2019

சோலைமலை வார இதழ் பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.









சோலைமலை வார இதழ் குறித்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்...

செங்கம் டிராவல்ஸ் - 7

பகுதி 7
‘‘இது என்னடி டிரஸ்சு?’’ என்று மலர்விழி கேட்டதும் தன்னைத் தானே ஒருமுறை பார்த்துக்கொண்ட அர்ச்சனா, ’’ஏண்டி சம்மந்தம் இல்லாம இப்படி பயமுறுத்துற... நீ கேட்டதைப் பார்த்ததும் எக்குத்தப்பா டிரஸ் கிழிஞ்சிடுச்சோன்னு நினைச்சு ஆடிப்போயிட்டேன்...’’
‘‘நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு... இது என்ன டிரஸ்...’’
‘‘ஜீன்ஸ், மேல டாப்ஸ். இதுக்கென்ன, டீசன்டாத்தானே இருக்கு...?’’
‘‘அதான் பிரச்சனையே...’’ என்று மலர்விழி சொல்லவும், அர்ச்சனாவுக்கு விபரம் புரியவில்லை. அதற்குள் சித்ரா, ‘‘ஏண்டி... பஸ்சை விட்டு இறங்கி பாதையிலேயே நின்னு பேசிகிட்டு இருக்கீங்க... உள்ள வந்து உட்கார்ந்து ஆற அமர ஆலோசனை பண்ணக்கூடாதா?... வாரம் ரெண்டு மூணு நாள் போன்ல பேசிகிட்டுத்தான் இருந்தீங்க... அப்படி இருந்தும் அவ்வளவு தலை போற செய்தியா... ஏதோ நாட்டைக் காப்பாத்தப்போற பொறுப்புல இருந்து ஆலோசனை செய்யுற மாதிரில்ல தெரியுது...’’ என்றாள்.
‘‘அம்மா... ஒரு ரெண்டு நிமிஷம்... இதோ உள்ள வந்துடுறோம்... நீங்க போங்கம்மா...’’ என்று மலர்விழி சொல்லவும், சித்ரா, ’’என்னமோ பண்ணுங்க...’’ என்று சொல்லி விட்டு நகர்ந்தாள்.


இப்போது மலர்விழி அர்ச்சனாவிடம், ‘‘அப்படியே பிளாஷ்பேக் ஓட்டிப்பாரு... பத்து வருசத்துக்கு முன்னால நாம பிளஸ்டூ படிச்சிகிட்டு இருந்தப்ப நமக்கு என்ன யூனிபார்ம்?...’’
‘‘பாவாடை தாவணி...’’
‘‘கரெக்ட்... அதுவும் எப்படி?... ஏதோ சாக்குத்துணி மாதிரியான மெட்டீரியல்ல பச்சைக் கலர் பாவாடை, தாவணி. போனாப் போகுதுன்னு கொஞ்சம் டீசன்டா இருக்கட்டும்னு வெள்ளை ஜாக்கெட் கொடுத்திருந்தாங்க.’’
‘‘ஆமா... இப்போ அதுக்கு என்ன?’’
‘‘இரு... லீவுநாள்ல டியூசன் போகும்போதோ அல்லது கோயிலுக்குப் போகும்போதோ சுடிதார் போடுவோம்... அதுவும் எப்படி, அயன் பண்ணாம சுருக்கம் விழுந்த டிரஸ்...’’
‘‘இப்போ எதுக்குடி இதையெல்லாம் சொல்லிகிட்டு இருக்க?’’
’’அது மட்டுமில்லை... தினமும் காலையில காலனி வாசல்ல தண்ணி புடிச்சப்ப இருந்ததும் நைட்டி. சாயந்திரம் நாம எல்லாரும் பெரிய கோயிலுக்கு தண்ணி தூக்கப் போனதும் நைட்டியிலதான்...
உன் ஆளு நம்மள இந்த கெட்டப்லதான் பார்த்துருக்கான்... தீபாவளி, பொங்கல் மாதிரி விசேச நாட்கள்ல மட்டும்தான் நாம ரிச்சா டிரஸ் பண்ணியிருக்கோம்... காலேஜ் படிக்கும்போது நமக்கு தெரிஞ்சு அவன் நம்மளை பார்க்கவே இல்லை. கரெக்டா சொல்லணும்னா, பிளஸ்டூ ஃபேர்வெல் பார்ட்டி அன்னைக்கு நாம எல்லாரும் புடவை கட்டியிருந்த அன்னைக்கு உன்னைய முழுங்குற மாதிரி பார்த்தான். அதைத் தவிர என்னைக்கு அவன் உன்னைய ரிச்சான டிரஸ்ல பார்த்துருக்கான்னு சொல்லு...’’
‘‘தயவு பண்ணி விஷயத்துக்கு வாடி... என் தலை வெடிச்சிடும் போலிருக்கு...’’ என்று அர்ச்சனா கிட்டத்தட்ட பொறுமை இழந்து விட்டாள்.
‘‘இப்ப நீ ஜீன்ஸ், டாப்ஸ்ன்னு சாதாரணமா சொல்லிட்ட... ஆனா சூப்பரான ராயல் லுக்கா இருக்கு...’’ என்று மலர்விழி பேசிக்கொண்டிருக்கும்போதே, இடைமறித்த அர்ச்சனா,
‘‘அடடா... உன் வாயால என் டிரஸ் சூப்பர்னு இத்தனை வருசத்துல இப்பதாண்டி சொல்லியிருக்க... மறுபடி சுனாமியே வரப்போகுது...’’ என்றவளின் முகத்தல் வெட்கம்.
‘‘ம்க்கும்... அப்படியே வந்தாலும் மதுரைக்கு வராது... எனக்கு கல்யாணமாகி குழந்தை இருக்குடி... இனிமே உன்னை மாதிரி ஆளு பக்கத்துல இருந்தா எனக்கு வரப்போற வரன் தட்டிப்போயிடுமேன்னு கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.’’
‘‘இன்னும் நீ விஷயத்துக்கே வரலியேடி...’’
‘‘இரு... சொல்லிகிட்டுதானே இருக்கேன்... நீ ஏதோ சென்னையிலயே பிறந்து வளர்ந்தவ மாதிரி ராயல் லுக்குல இருக்க... உன் ஆளைப் பாரு... அவன் இப்போ போட்டிருக்குற டிரஸ், இருக்குற பொசிஷன் என்னன்னு கொஞ்சம் பாரு...’’ என்று மலர்விழி சொல்லவும் அர்ச்சனா அவனை மீண்டும் ஒருமுறை பார்த்தாள்.
மலர்விழி சொன்னது சரிதான். இப்போது அர்ச்சனா இருக்கும் தோற்றத்தைப் பார்த்து அருகில் நெருங்க யோசிக்கக்கூடிய சாதாரண தோற்றத்தில்தான் வரதராஜன் இருந்தான்.
‘‘மலர்... காலையில அவனை நான் பார்த்ததுமே கடைசியா அவன் செஞ்ச காரியம் நினைவுக்கு வந்து ஒரு நொடி ஆடிப்போயிட்டேன். அது மட்டுமில்லாம பத்துவருசத்துக்கு  முன்னால பார்த்த அதே ஆளாத்தான் எனக்கு தெரிஞ்சான்.
நீ சொல்ற தோற்றத்தைப் பத்தி நான் எதுவுமே நினைக்கலையே... அது மட்டுமில்லாம கடைசியா அன்னைக்கு அவன் செஞ்ச காரியத்தை தவிர அதுக்கு முன்னாலயோ பின்னாலயோ என்கிட்ட பேசக்கூட அவன் முயற்சி செய்யலை...
அப்போ அவன் செஞ்ச காரியம்கூட வயசுக்கோளாறுல பக்கத்துல இருந்தவனுங்க உசுப்பேத்தி விட்டு நம்மகிட்ட ஹீரோவா காட்டிக்க நினைச்சுதான் செஞ்சிருப்பானோ என்னவோ?
96 படத்துல விஜய் சேதுபதி அத்தனை வருசம் கழிச்சு த்ரிஷாவைப் பார்க்கும்போதும் ஸ்கூல்ல மயங்கி விழுந்த மாதிரியே இப்பவும் மயங்கி விழுற கதையா, இவனும் நீ அவனை திட்டி மிரட்டுனதை இன்னும் நினைவுல வெச்சிருக்கானோ... இல்லன்னா என்கிட்ட சாதாரணமா பேசக்கூட முயற்சி செய்யாம இருப்பானா? இதயம் பட முரளிக்கு அடுத்தபடியா காதலை சொல்லாம தவிக்கிறது இவனாத்தான் இருக்கும்னு நினைக்குறேன்...’’ என்று அர்ச்சனா தன் சந்தேகத்தை வெளியிட்டாள்.
‘‘அடிப்பாவி... அவன் உன்கிட்ட எப்படா ப்ரபோஸ் பண்ணுவான்னு காத்துகிட்டுதான் இருக்கியா? அப்புறம் என்னடி என்கிட்ட பேச்சு வேண்டி கிடக்கு... நேரடியா அவன்கிட்டயே பேசிட வேண்டியதுதானே...
நாம படிச்சது கோ எட் காலேஜ். அங்கேயே பசங்ககிட்ட சகஜமாத்தான் பேசி பழகுனோம்... சென்னையில இத்தனை வருசமா வேலைபார்க்குற... ஆம்பளைங்ககிட்ட பேசுனதே இல்லையா... அப்புறம் ஏன் அவன்கிட்ட பேச இவ்வளவு தயக்கம்...
டீன் ஏஜ்லயே மனசுக்குள்ள வந்தவன்னுங்கறதால இவ்வளவு வெட்கமா... இல்ல, உன் ஸ்டேட்டஸ்க்கு அவன் கம்மியா இருக்கானேன்னு உன்னைய யோசிக்க வெக்கிதா?’’
‘‘சேச்சே... ஸ்டேட்டஸ் பார்த்திருந்தா இவனை இந்த பொசிசன்ல பார்த்ததும் அப்படியே இக்னோர் பண்ணிட்டு நான் பாட்டுக்கு ஜாலியா இருந்திருப்பேன். அது இல்ல விசயம்...
அன்னைக்கு அப்படி ஒரு சம்பவம் நடந்ததும் நான் ஒரு வார்த்தை பேசுறதுக்குள்ள நீ அந்த திட்டு திட்டினதுல ஓடுனவன்தான், இத்தனை வருசம் கழிச்சு பார்த்திருக்கோம்... அவன் மனசுல என்ன இருக்குன்னு தெரியணும்ல...
அன்னைக்கு நீ அவ்வளவு கடுமையா திட்டியிருக்க வேணாம்னுதான் தோணுது...’’
‘‘அது சரி... கடைசியா பழியை என் மேல தூக்கி போட்டுட்டியா... எனக்கே திடீர்னு அவ்வளவு ஆவேசம் ஏன் வந்துச்சுன்னு இப்பதான் யோசிச்சு பார்க்குறேன்... அப்படியே நம்ம பிளஸ் டூ ஃபேர்வெல் டே அன்னைக்கு ஸ்கூல்ல நடந்ததை நினைச்சுப்பாரு...’’ என்று மலர்விழி சொன்னதும் அர்ச்சனாவும் யோசிக்க ஆரம்பித்தாள்.
அதுவரை பேசாமல் இருந்த தன்ஷிகா, ‘‘அம்மா... நான் விளையாடணும்... எவ்வளவு நேரம் இங்கேயே என்னைய புடிச்சு வெச்சிருப்ப...’’ என்று மழலை மாறாத குரலில் கேட்டாள்.
‘‘சாரிடா செல்லம்... வா உள்ள போவோம்... அங்க மத்த புள்ளைங்களோட விளையாடலாம்....’’ என்று மகளை தூக்கிக் கொண்டு நடக்கத்தொடங்கிய மலர்விழியிடம் அர்ச்சனா,
‘‘அன்னைக்கு மத்தியானம் ஸ்கூல்ல மீட்டிங், திங்கிறதுக்கு ஏதோ கொடுத்தாங்க... சாயந்திரம் பிரேயர் மாதிரி வரிசையா நிறுத்தி வெச்சு விளக்கேத்தி கையில வச்சிகிட்டு இருந்தோம்... குரூப் போட்டோ எடுத்தாங்க... அவ்வளவுதான்... அதுல எதை நினைச்சுடி நீ பொங்குன...’’ என்றாள்.
அதற்குள் மலர்விழியின் சாவித்ரி அருகில் வந்துவிட, ‘‘அம்மா... இவ விளையாடணும்னு சொன்னா, அந்த பசங்களோட விளையாட விட்டு செத்த பாத்துக்கோயேன்... நானும் இவளும் கொஞ்ச நேரம் பேசிட்டு வந்துடுறோம்...’’ என்று மகளை தன் தாயாரிடம் ஒப்படைத்தாள்.
சித்ராவைப்போல் சாவித்ரி கேள்வி எதுவும் கேட்டுக் கொண்டிருக்கவில்லை. புன்சிரிப்புடன் பேத்தியை தூக்கிக் கொண்டு சென்றாள்.
அர்ச்சனாவும் மலர்விழியும் அந்த மண்டபத்தின் விழாக்கூடத்தில் ஒரு ஓரமாக இரண்டு நாற்காலிகளை எடுத்து போட்டு அமர்ந்தார்கள்.
இப்போது மலர்விழி தொடர்ந்தாள்.
‘‘ஸ்கூல்ல ஃபேர்வெல் பார்ட்டி அன்னைக்கு சிறப்பு விருந்தினரா வந்தது நம்ம ஸ்கூல்ல ஏற்கனவே படிச்ச லேடி சப் இன்ஸ்பெக்டர் மேடம் சுபஸ்ரீ. அவங்க பேசினதை அப்படியே நினைவுபடுத்திப்பாரு...’’ என்றதும், சுபஸ்ரீ பேசிய பேச்சு அர்ச்சனாவின் நினைவுக்கும் வந்தது.
‘‘ஸ்டூடண்ட்ஸ்... எல்லாரையும் போல அதிகமா அட்வைஸ் பண்ணி உங்களை போர் அடிக்க விரும்பலை...
பொதுவாவே இந்த வயசு பொண்ணுங்களுக்கும் பையன்களுக்கும் அலைபாயுற வயசு. டீன் ஏஜ்னு சொல்லப்படுற பதிமூணுல இருந்து பத்தொன்பது வயசு வரைக்கும் பையன்னா பொண்ணை பார்க்கத் தோணும்... பொண்ணுன்னா பையனை பார்க்கத் தோணும்...
நாலு நாள் ஒருத்தன் நம்மளை சுத்தி சுத்தி வந்தா அவன்தான் வாழ்க்கைன்னு அவன் பின்னாலயே போகத் தோணும்... என்று சுபஸ்ரீ பேசிக்கொண்டிருக்கும்போதே மலர்விழி அர்ச்சனாவின் தொடையை கிள்ளினாள்.
யாராச்சும் ஒண்ணு ரெண்டு பொண்ணுங்க லவ் பண்றேன்னு ஒரு பையன்கூட சினிமா அங்க இங்கன்னு வெளில போயிட்டு வந்ததா உண்மை தகவல்களையோ, கற்பனையாவோ சொல்றதைக் கேட்டா நமக்கு ஒரு ஆள் இல்லையே... நாம எப்ப லவ் பண்ணலாம்னு யோசிக்க சொல்லும்...
இதெல்லாம் நீங்க பண்ணலை... உங்க உடம்புல இருக்குற ஹார்மோன்ஸ்தான் செய்ய வெக்கிது...’’ என்று சுபஸ்ரீ காதலைப் பற்றி அது இது என்று பேசவும் எல்லா பிளஸ்டூ மாணவிகள் முகங்கள் மேலும் சிவந்தன.
அதைக் கவனித்த அந்த சுபஸ்ரீ, ‘‘பார்த்தீங்கிளா... இந்த விஷயத்தைப் பத்தி பேசினதுமே உங்களை அறியாம உங்க முகத்துல வெட்கம். இந்த விஷயத்துலதான் ஜாக்கிரதையா இருக்கணும்.
நீங்க இப்போ பிளஸ்டூ பரிச்சை எழுதி முடிச்சதும், அடுத்து மூணுல இருந்து அஞ்சு வருஷம் கல்லூரியில படிக்க வேண்டி இருக்கும். அப்புறம் நல்ல வேலை...
கல்லூரி படிப்பை முடிச்சதுமே திருமணம் செய்து வைக்கிற சூழ்நிலை சில குடும்பங்கள்லதான் இருக்கும்... மத்தவங்க உங்க பெற்றோருக்கு பொருளாதார சுமையை குறைக்கவும், பிற்காலத்துல உங்களையும் உங்க குழந்தைங்களையும் குடும்பத்தையும் நல்ல முறையில் உயர்த்திக்கணும்னா இந்த வயசுல நல்லபடியா படிச்சுக்கணும். வாய்ப்பு இருந்தா வேற கைத்தொழில், தனித்திறமை இருக்குறதை வளர்த்துக்கலாம். இவையும் உங்களை காப்பாத்தப்போற சக்திகள்னுங்குறதை மறந்துடக்கூடாது.
இப்போ கடைசியா ஒரு விஷயம். படிக்கிற வயசுல படிப்புதான் முக்கியம்னு நிறைய பொண்ணுங்க தெளிவாவே இருப்பீங்க... அவங்களுக்கு இடைஞ்சல் கொடுக்கவே நிறைய பசங்க அலையுவாங்க...
சில ஆண்டுகளுக்கு முன்னால சென்னை, எத்திராஜ் கல்லூரி மாணவி சரிகாஷா இப்படி ஈவ்டீசிங் தொல்லையால காயமடைஞ்சு உயிரை விட்ட சம்பவத்தைப் பத்தி உங்கள்ல நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கலாம். இப்பவும் அங்க ஒண்ணு, இங்க ஒண்ணுன்னு நடந்துகிட்டுத்தான் இருக்கு.
பையன்களை வளர்த்தவங்க சரியில்லை, காவல்துறை சரியில்லைன்னு குத்தம் சொல்றதை விட்டுட்டு, இப்படிப்பட்ட சூழ்நிலைகள்ல பொண்ணுங்க என்ன செஞ்சு தங்களை காப்பாத்திக்கலாம்னு யோசிக்கணும்.
பெரும்பாலும் பள்ளியில, கல்லூரியில படிக்கிற பசங்கதான் உங்க பின்னாலயே வருவாங்க... உங்களை சீண்டவோ, வேற எதுவும் செய்யவோ முயற்சிப்பாங்க... அந்த மாதிரி நேரத்துல பயந்துபோய் நீங்க ஒதுங்குனா இன்னும் அந்த மாதிரி பசங்களுக்கு தைரியம் அதிகமாகும்.
தைரியம் அதிகமாக வேண்டியது அவனுங்களுக்கு இல்லை... உங்களுக்குதான். முதல்நாள் நீங்களே வீட்டுல பேரண்ட்ஸ் கிட்ட சொல்லிடுவேன்னு எச்சரிக்கலாம். அடுத்தநாள் அதே தப்பை அவன் செஞ்சா தயங்காம உங்க பேரண்ட்ஸ் கிட்ட சொல்லுங்க...
உங்க பேரண்ட்ஸ்க்கு ஸ்மூத்தா ஹேண்டில் பண்ணத்தெரியாதுன்னு ஃபீல் பண்ணினா உங்க கிளாஸ் டீச்சர்கிட்ட சொல்லி பேரண்ட்ஸ்கிட்ட பேச வைக்கலாம்...
இந்த வயசுல அழகை, குறும்பை ரசிக்கலாம்... ரசிக்கச் சொல்ற வயசுதான். அதே நேரத்துல நம்ம உடம்புக்கோ, உடமைக்கோ, உயிருக்கோ பாதிப்பு ஏற்படுத்துற மாதிரி யாராச்சும் பிஹேவ் பண்றது தெரிஞ்சா முதல்ல குரலை உயர்த்தி நாமே மிரட்டலாம் தப்பில்லை...’’ என்று பேசிவிட்டு சுபஸ்ரீ அமர்ந்ததும் ஏதோ கனமழை பெய்து ஓய்ந்ததைப் போல் ஆசிரியைகள், மாணவிகள் என்று அத்தனை பேரிடமும் ஒருவித அமைதி.
அது வரை பள்ளியில் சிறப்பு விருந்தினராக வருபவர்கள் நீங்கள் நன்றாக படித்தால் கலெக்டர் ஆகலாம். சிறப்பாக படித்தால் ஜனாதிபதியாகலாம் என்ற வகையில் அறிவுரை வழங்குவதை மட்டுமே வாடிக்கையாக கொண்டிருந்த நேரத்தில், அந்த காவல் உதவி ஆய்வாளர் சுபஸ்ரீ டீன் ஏஜ் பெண்களின் மனதில் இருப்பதை சொல்லி, எதுவரை நம் எல்லை என்பதை தெளிவாக புரிய வைத்ததால் அந்த பேச்சு அப்படியே இன்றும் நினைவுக்கு வந்தது.
‘‘அவங்க பேசிட்டுப் போன அன்னைக்கே அவன்தான் தெற்கு கோபுர வாசல்ல நின்று ஜொள்ளு விட்டானேடி... அன்னைக்கு விட்டுட்ட. ஆனா சுபஸ்ரீ மேடம் பேசினதை கேட்ட சூட்டோட அப்படியே அந்த ஹால்ல இருந்து வெளியே வந்து பேசின வேகம் மூணு மாசம் கழிச்ச பிறகும் உன்கிட்ட இருந்துச்சே...’’ என்று அர்ச்சனா சொல்லவும்,
மலர்விழி, ‘‘எங்க, உன் வலது முழங்காலுக்கு கீழே போட்ட நாலு தையலோட தழும்பு அப்படியேத்தானே இருக்கு...’’ என்றாள்.
அதைக் கேட்ட அர்ச்சனா அந்த இடத்தை தடவிப்பார்த்தாள்.
அன்று நடந்த சம்பவம் அப்படியே அவள் மனதில் ரீப்ளே ஆனது.
தொடரும்...

இழந்தால் ஈடு செய்ய முடியாதது மனித உயிரே...

இந்த ஆண்டும் 12ஆம் வகுப்பில் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் ஒரு மாணவி ரயில் முன்பு பாய்ந்து உயிரை இழந்திருக்கிறார்.
இழந்தால் திரும்ப பெற முடியாது என்று காலம், உயிர் அது இது சிலவற்றை என்று குறிப்பிடுவார்கள்.
இதில் பிறவற்றைப் பற்றி பிறகு பேசலாம். அந்த மாணவி மதிப்பெண் குறைந்ததால் விரும்பிய படிப்பில் சேர முடியாமல் போயிருக்கலாம். ஆனால் ஏதோ ஒரு துறையில் இன்னும் பிரமாதமாகவே சாதித்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.
இப்போது உயிரை இழந்திருப்பதால் எதற்கும் வழியில்லை. பெற்றோரின் கண்ணீர்தான் மிச்சம்.
உயிர் முக்கியம் குழந்தைகளே... அது இருந்தால் நம்முடைய முயற்சியினால் நமக்கும் உலகத்துக்கும் பயனுள்ள பல சாதனைகள் செய்யலாம்.
நேர்மையாக வாழ்வில் உயர ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான வாய்ப்புகள் உண்டு என்று பெற்றோரும், ஆசிரியர்களும், அக்கம் பக்கத்தினர்களும் மாணவர்கள், மாணவிகளை மனம் தெளிய வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

கோடை பந்தல்

திருவாரூர் நகரின் கடைத்தெரு பகுதியில் சில இடங்களில் கோடை வெப்பத்தை சமாளிக்க கோடை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 
உண்மையில் உச்சி வெயில் நேரத்தில் அந்தப் பகுதிக்கு செல்பவர்களுக்கும், அந்த பகுதியிலேயே பணியாற்றுபவர்களுக்கும்தான் கோடைப் பந்தலின் அருமை தெரியும்.
கீற்றுப் பந்தல் போடுவதற்கு பதில் மரங்களே கொட்டகையானால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

தண்ணீர்

"ராஜவேலு...அவங்க எவ்வளவு பெரிய குடும்பம்னு தெரியுமா? வசதியை எல்லாம் எதிர்பார்க்காம ஜாதகம் சரியா இருந்த ஒரே காரணத்துக்காக நம்ம வீட்டுப் பொண்ணைக் கேட்டு வந்துருக்காங்க. நீ எதனால குடுக்க வேண்டாம்னு சொல்ற?"

"மாப்பிள்ளை வீடு நமக்கு தூரத்து சொந்தம் வேற. அந்த விஷயமே இப்பதான் தெரிஞ்சது. நாம தேடி அலைந்தாலும் இப்படி ஒரு சம்மந்தம் அமையாதுடா..." என்றாள் வசந்தா.

"அம்மா...போன வருஷம் சென்னையில இருக்குற இவங்களோட கம்பெனி நேர்காணலுக்காக போனேன். அங்க எனக்கு வேலை கிடைக்கலை. அதைப் பற்றி எனக்கு வருத்தம் கிடையாது.

நானூறு கிலோமீட்டர் பயணம் பண்ணி நேர்முகத்தேர்வுக்கு என் சொந்த செலவுல போனேன்...சரி...பரவாயில்லை.

நாங்க நாலே பேர் உச்சி வெயில் நேரத்துல போயிருந்தோம். நாங்க குளிர் பானமெல்லாம் கேட்கலை. தாகத்துக்கு தண்ணீர் கேட்டோம்.

கம்பெனிக்கு வெளியில டீக்கடை இருக்குன்னு வழிகாட்டுறாங்க. அங்க உள்ள பணியாளர்கள், பார்வையாளர்களுக்கு தண்ணீர் வசதி இல்லாம இருக்காது.

இவங்களை வேலைக்கு எடுக்கலை. அப்புறம் ஏன் தண்ணீர் கொடுக்கணும்னு நினைக்குற அளவுக்கு குறுகிய மனப்பான்மை கொண்ட அந்த கம்பெனி முதலாளி குடும்பத்துல என் தங்கை நிம்மதியா வாழ முடியும்னு எனக்குத் தோணலைம்மா."என்றான்.

அவன் பேச்சில் இருந்த உண்மை வசந்தாவையும் காயப் படுத்தியது. இப்போது அவளுக்குள்ளேயும் இந்த சம்மந்தம் வேண்டாம் என்ற தீர்மானம்.
-திருவாரூர் சரவணன்

உலக புத்தகம், காப்புரிமை தினம்


சேக்ஸ்பியர் பிறந்த தினம் மற்றும் சில எழுத்தாளர்களின் நினைவுதினமான ஏப்ரல் 23ஆம் தேதியானது உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தினமாக 1995ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
எனது மகனின் 3ஆம் பிறந்ததினமான ஏப்ரல் 23 அன்று காலையில் அங்கன்வாடியில் சக குழந்தைகள் மத்தியில் கொண்டாடிவிட்டு, மதியம் திருவாரூர் மாவட்ட மைய நூலகத்திற்கு அப்துல்கலாம் எழுதிய நூல் ஒன்றை நன்கொடையாக வழங்கி விட்டு வந்தோம். இரண்டரை வயதில் இருந்தே எங்கள் மகனை நூலகம் அழைத்துச் சென்று புத்தகங்களுடன் பழக விட்டு வருகிறோம். ஒழுக்கத்துடனும் பண்புடனும் வளர ஒவ்வொரு மனிதனுக்கும் நல்ல புத்தகங்களும் மிக முக்கியமான நண்பர்களாயிற்றே...
–திருவாரூர் சரவணன்

திருவாரூர் புதிய பேருந்து நிலையம்


மக்களின் சில தேவைகள்...
நீ.......ண்ட காலத்திற்குப் பிறகு திருவாரூர் புதிய பேருந்து நிலையம் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது நாம் அறிந்ததே.
எந்த ஒரு ஊரிலும் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்ட பிறகு முதலில் ஏற்படும் சில அசௌகர்யங்களால் மக்கள் அதனை வெறுப்பதும், நாளடைவில் புதிய பேருந்து நிலையமே பழைய பேருந்து நிலையமாகிப் போகும் அளவுக்கு வளர்ச்சி அடைவதும் இயற்கையான நிகழ்வுகள்.
உதாரணத்திற்கு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தையே சொல்லலாம்.
1995 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலகத்தமிழ் மாநாட்டின்போது திறந்து வைக்கப்பட்ட அந்த பேருந்து நிலையத்திற்கு நான் அப்போதே சென்றிருக்கிறேன்.
என்னுடன் வந்த உறவினர், இது என்னடா இவ்வளவு பெரிசா ஏர்போர்ட்(?!) மாதிரி கட்டி வெச்சிருக்கான் என்று கேட்டது நினைவில் இருக்கிறது.
மணிமண்டபம் பகுதியில் இருந்து மீண்டும் புறநகர்ப்பகுதியில் ஐந்து கிலோமீட்டர் தூரம் சென்ற பிறகுதான் தற்போதைய புதிய பேருந்து நிலையத்துக்குள் நுழையும்.
ஆனால் தற்போதைய நிலவரம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. திருச்சி, புதுக்கோட்டை சாலை பிரிவையும் தாண்டி மாநகர எல்லைகள் எங்கோ சென்று கொண்டிருக்கிறது.
திருவாரூரின் நிலையும் இப்போது இருப்பதை விட கண்டிப்பாக நிறைய மாற்றம் பெறும்.
திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் தற்போதைய சவால்கள்:
மன்னார்குடி, திருச்சி, தஞ்சை, வேளாங்கண்ணி பேருந்துகள் நிற்கும் தெற்குப் பகுதியில் கடைகளே இல்லாமல் ஒரே ஒரு உணவு விடுதியும், பயணிகள் ஓய்வறைகளுமாக இருப்பதால் இரவில் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற மனநிலையை தருகிறது.
அந்தப்பகுதியில் எந்த பேருந்துகள் நின்றாலும், புறநகர் காவல்நிலையத்தின் அதிகமான கண்காணிப்பு இருக்க வேண்டியது பேருந்து நிலையத்தின் தென்பகுதியில்தான்.
வேண்டுமென்றால் புறக்காவல் நிலையத்தை அங்கே அமைத்துவிட்டு, பேருந்து நிலைய நுழைவாயிலிலும் எல்லா பிளாட்பாரங்களிலும் புறக்காவல் நிலையம் தென்பகுதியில் இருக்கிறது என்று அறிவிப்பு பலகை வைத்து விடலாம்.
திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தெற்குவீதி, கமலாலயம், மின்சாரவாரியம், கல்லுப்பாலம், புதிய பேருந்து நிலையம், விளமல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக மருத்துவக்கல்லூரிக்கு இரண்டு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.
அதேபோல் ரயில்வேமேம்பாலம், புதிய பேருந்து நிலையம், கல்லுப்பாலம் வழியாக இரண்டு பேருந்துகள் மருத்துவக்கல்லூரிக்கு இயக்கப்பட வேண்டும். தேவையைப் பொறுத்து ஒன்றிரண்டு பேருந்துகள் கூடுதலாக இயக்கிக் கொள்ளலாம்.
இது சரியாக நிறைவேற்றப்பட்டாலே பொதுமக்களில் பெரும்பாலானோரது பிரச்சனை தீர்ந்து விடும்.

குழந்தைகளுக்கு கதை எழுதும் போட்டி


அனில் கும்ளே ஒரே இன்னிங்க்ஸ்-ல் 10 விக்கெட் வீழ்த்தியது பெரும்பாலானவர்களுக்கு தெரியும்.
அவரை அந்த சாதனை படைக்க வைப்பதற்காக ஸ்ரீ நாத் மறு முனையில் விக்கெட் விழாதவாறு பந்துவீசுவது மிகவும் கடினம் என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.
பெரியவர்களாக இருந்து கொண்டு சிறு குழந்தைகளுக்காக கதை எழுதுவதும் அதைப் போன்ற கடினமான ஒன்றுதான். 2019 ஆம் ஆண்டு மார்ச் 20 ம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை குழந்தைகளுக்கான சிறுகதைப் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த விபரம் ஏப்ரல் 15 தேதிக்கு பிறகுதான் தெரிய வந்தது. அதனால் அவசரமாக முயற்சி இரண்டு கதைகள் எழுதி இணையதளத்தில் சமர்ப்பித்துள்ளேன்.
வாய்ப்பு இருப்பவர்கள் மே 10, 2019க்குள் சிறுவர்களுக்கான கதைகள் எழுதி சமர்ப்பிக்கலாமே...
***

கல்கி வார இதழ் அறிவித்துள்ள சிறுகதைப் போட்டிக்கு கடைசி நாள்: 15–06–2019
******
ப்ரதிலிபி இணையதளம் அறிவித்துள்ள மர்மம்/சஸ்பென்ஸ்/த்ரில் சிறுகதைப் போட்டிக்கான கடைசி தேதி 05–05–2019

தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள்


இளைஞர்கள் முகநூலிலும் சமூக வலைதளங்களிலும்தான் புரட்சி செய்கிறார்கள். வாக்கு அளிக்க செல்வதில்லை என்று கூறிக் கொண்டிருந்தோம். ஆனால் தமிழகத்தின் பல நகரங்களில் இருந்தும் முக்கியமாக சென்னையில் இருந்து வாக்கு செலுத்தும் கடைமையை நிறைவேற்ற மிக மிக அதிக அளவில் சொந்த ஊர்களுக்கு பயணப்பட்டது இளைஞர்கள் கூட்டம்தான். 



ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை, கோடை விடுமுறை என்று இருப்பது தெரிந்தும் போதுமான பேருந்து வசதிகள் செய்யாமல் கோட்டை விட்டு விட்டது வருத்தமான நிகழ்வுதான். இதில் ஓட்டுநர், நடத்துனர்கள் ஓட்டு போட சென்று விட்டதால் அதிகமான அளவில் பேருந்துகளை இயக்க முடியவில்லை என்றும் காரணங்கள் சொல்ப்படுகிறது.
நடந்து முடிந்த சங்கடங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்வோம். இனி வரும் தேர்தல்களிலாவது தீபாவளி, பொங்கல் போன்று தேர்தலையும் ஜனநாயக திருவிழாவாக கருதி மக்கள் கடமையை செய்வதற்கு சொந்த ஊருக்கு செல்ல போதுமான போக்குவரத்து வசதி செய்து கொடுப்பது நல்லது.
டிஜிட்டல் இந்தியா வலுவாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கும் தபால் வாக்கு வசதியை ஏற்படுத்தி, தேர்தல் நேரத்தில் முழுமையாக போக்குவரத்து வசதியை செயல்படுத்துவது முறையாக செய்து முடிக்கக்கூடிய காரியமே. அரசும் தேர்தல் ஆணையமும் இந்த விசயத்தில் கவனம் செலுத்துமா?
பிரபலங்களில் இருந்து சாமானியர்கள் வரை நாலைந்து தேர்தல்களாக இந்த வாக்குச்சாவடியில்தான் ஓட்டு போட்டேன். இப்போது பெயர் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது என்று குமுறினார்கள்.
கடந்த தேர்தல்களில் வாக்களித்திருந்தாலும் இப்போதைய பட்டியலில் பெயர் இருக்கிறதா என்று சரிபார்க்க வேண்டிய கடமை வாக்காளர்களுக்கு உண்டு. அதே சமயம் ஏற்கனவே இருக்கும் பெயர்களை நீக்கும்போது, பதிவு செய்யப்பட்டிருந்த அலைபேசி எண்ணுக்கு குறுந்தகவலாக அனுப்பியிருந்தால் இந்த சிக்கல்களை தவிர்த்திருக்கலாம்.
முக்கியமாக வாக்காளர்பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்து விட்டால், ஒருவர் வீடு மாறி செல்லும்போது புதிய முகவரி இருக்கும் பகுதியிலேயே ஓட்டு போடும் வகையில் அந்த பகுதி வாக்காளர் பட்டியலுக்கு பெயரை இடம் மாற்றிக் கொள்ளும் வசதி வந்து விட்டால் இது போன்ற குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
அது தவிர, வீடு மாறி செல்லும்போது நியாய விலைக்கடை முகவரி, எரிவாயு இணைப்பு முகவரியை மாற்றுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் மாற்றம் செய்வதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இது போன்ற சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என்றால், ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்யும்போது புதிய அஞ்சல்குறியீட்டு எண்ணின் அடிப்படையில் ரேசன் கார்டு, எரிவாயு இணைப்பு, வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட அனைத்திலும் மாற்றங்கள் தானாகவே மாறிக்கொள்ளும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தினால் பொதுமக்கள் மட்டுமின்றி, அரசு அலுவலகங்கள், அதிகாரிகளின் நேர விரயமும் தவிர்க்கப்படும்.
(இந்த கடிதத்தின் சில பகுதிகள் 22–04–2019 திருச்சி, வேலூர், சேலம், ஈரோடு பதிப்பு தினமலர் நாளிதழில் பிரசுரமானவை)

Friday, April 19, 2019

சோலைமலை வார இதழ் 19-04-2019

சோலைமலை வார இதழ் பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.












சோலைமலை வார இதழ் குறித்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்...

அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி – 2019

படைப்புகள் சமர்ப்பிக்க கடைசி நாள் : 15-06-2019
அறிவிப்பு
முதல் பரிசு ரூ.10,000/-
இரண்டாம் பரிசு ரூ.7,500/-
மூன்றாம் பரிசு ரூ.5,000/-
இந்த பரிசுகள் மட்டுமல்லாது, பிரசுரத்துக்கு தேர்வாகும் ஒவ்வொரு கதையும் சன்மானம் பெறும். ஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானாலும் எழுதலாம்.
விதிமுறைகள்:
1. கல்கியில் நான்கு பக்கங்களுக்கு (2,000 வார்த்தைகளுக்கு) மிகாமல் இருப்பது நல்லது.
2. சொந்தக் கற்பனைதான் என்பதற்கு உறுதிமொழிக் கடிதம் வேண்டும். அது இல்லாத கதைகள் பரிசீலிக்கப்பட மாட்டா.
3. முழு வெள்ளைத் தாளில் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுத வேண்டும்.
4. மின்னஞ்சலில் கதைகள் அனுப்புவோர் அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி  2019 என்று குறிப்பிட்டு kalki@kalkiweekly.com என்ற முகவரிக்கு அனுப்பவும். யுனிகோட் எழுத்துருவில் மட்டுமே கதைகளை அனுப்புங்கள்.
5. போட்டிக்கு அனுப்பும் கதையைத் திருப்பி அனுப்ப இயலாது. கதையின் பிரதியை நீங்கள் வைத்துக் கொள்ளவும்.
6. முடிவுகள் வெளியாகும் வரை போட்டிக்கான கதையை வேறு இதழுக்கோ இணையதளத்துக்கோ, வலைப்பதிவுகளுக்கோ அனுப்பக்கூடாது.
7. பரிசுக்குரிய கதைகளை நடுவர் குழு பரிசீலித்துத் தேர்ந்தெடுக்கும். சந்தேகம் எழும் விஷயங்களில் கல்கி ஆசிரியரின் தீர்ப்பே இறுதி.
8. முடிவுகள் வெளியாகும் வரை, எவ்வித கடிதப் போக்குவரத்தோ, தொலைபேசி, மின்னஞ்சல் விசாரிப்புகளோ கூடாது.
9. மின்னஞ்சலில் கதைகள் அனுப்புபவர்கள், கல்கி இதழ் பார்த்து போட்டியின் முடிவுகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி  2019 என்று உறையின் மேல் தவறாமல் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: ஆசிரியர், கல்கி, கல்கி பில்டிங்க்ஸ், 47 - NP, ஜவாஹர்லால் நேரு சாலை, ஈக்காடுதாங்கல், சென்னை - 32.


கதைகள் வந்து சேரக் கடைசித் தேதி : ஜூன் 15, 2019.
போட்டி முடிவும், முதல் பரிசுக் கதையும் ஆகஸ்ட் 4, 2019 ஆண்டு மலரில் வெளியாகும்.
படைப்பாளிகள், வாசக எழுத்தாளர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்க அழைக்கிறோம்.

அடவி / திகில் / மர்மம் / சஸ்பென்ஸ் கதைகளுக்கான போட்டி


படைப்புகள் சமர்ப்பிக்க கடைசி நாள் : 05-05-2019
அறிவிப்பு
வணக்கம்,
மனித மன விசித்திரங்களை அதன் புதிர்களை பேசுவது இலக்கியத்தின் பணிகளில் ஒன்று. அதிலும் திகில், மர்மம், சஸ்பென்ஸ், திரில்லர் வகை கதைகள் அவற்றை முதன்மையாக பேசும் வகைமை. பிரதிலிபியின் அடுத்த போட்டி அதனை ஒட்டியே நடைபெறவிருக்கிறது.
மர்மங்கள், பேய்க்கதைகள், கொலை குறித்த சஸ்பென்ஸ் கதைகள், அமானுஷ்யங்கள், பழி வாங்குதல், விசாரணைகள் என பரந்துபட்ட வகைகளின் கீழ் போட்டிக்கு கதைகள் எழுத அழைக்கிறோம். கதைகள் குறிப்பிட்ட வகைமையின் கீழ் வரவேண்டும்(திகில், மர்மம், சஸ்பென்ஸ், திரில்லர்).பிரதிலிபி எழுத்தாளர்களுடன், இந்த முறை பிரதிலிபி வாசகர்களையும் அதிக அளவில் கதைகள் எழுத அழைக்கிறோம்!
போட்டிக்கு கதைகள் மட்டுமே சேர்க்க இயலும். படைப்புகளை சேர்க்கவேண்டிய கடைசி நாள் - மே 5, 2019. போட்டிக்கு வந்த படைப்புகள் மே 8ஆம் தேதி வாசகர் பார்வைக்கு வைக்கப்படும். போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும் தேதியும் அன்றே தெரிவிக்கப்படும்.
பரிசுத்தொகை :
மொத்தம் 10 படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். ஐந்து நடுவரால் தேர்ந்தெடுக்கப்படுவது. ஐந்து வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படுவது.
முதல் பரிசு - ரூ.5000
இரண்டாம் பரிசு - ரூ .4000
மூன்றாம் பரிசு - ரூ. 3000
நான்காம் பரிசு - ரூ. 2000
ஐந்தாம் பரிசு - ரூ. 1000
முக்கியமானவை :
1) ஒருவர் அதிகபட்சம் 5 படைப்புகள் மட்டுமே சமர்ப்பிக்க இயலும். (அதற்கு கீழும் சமர்ப்பிக்கலாம்)
2) நீங்கள் சமர்ப்பிக்கும் படைப்பு உங்களால் எழுதப்பட்டிருக்கவேண்டும். (வேறு ஒருவருடைய படைப்பை எடுத்து சமர்ப்பிப்பது சட்டத்திற்கு புறம்பானது)
3) ஏற்கனவே பிரதிலிபியில் வெளியான படைப்புகளை சேர்க்க அனுமதி இல்லை. புதிய படைப்புகளை மட்டுமே சேர்க்க இயலும். (பிற தளங்கள், பத்திரிக்கைகளில் வெளியான உங்களது படைப்புகளை பதிப்பிக்கலாம்)
4) சேர்க்கப்படும் கதைகள் 400 வார்த்தைகளுக்கு மேல் இருக்க வேண்டும். மற்றவை பரிசுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.
5) படைப்புகளை போட்டிப் பக்கத்தில் மட்டுமே சேர்க்க இயலும்.
எப்படி பங்கேற்பது?
போட்டிப் பக்கத்தின் கீழே உள்ள 'பங்கேற்க' பொத்தானை அழுத்தி கணினியிலிருந்தோ, மடிக்கணினியிலிருந்தோ, செயலியிலிருந்தோ படைப்புகளை சமர்ப்பிக்கலாம். படைப்பை அதன் பக்கத்தில் தட்டச்சு செய்யலாம் அல்லது copy - paste செய்யலாம். சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகள் 'உங்கள் படைப்புகள்' எனும் தலைப்பின்கீழ் தெரியும். ஒவ்வோரு படைப்பையும் தனித்தனியே சமர்ப்பிக்கவேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகள் மே 8ஆம் தேதி பிரதிலிபி குழுவால் பதிப்பிக்கப்படும்.
படைப்புகளை பிழைகள் இல்லாமல் எழுதவும். அதிகப் பிழைகள் இருந்தால் பரிசு பெறும் படைப்பாக தேர்ந்தெடுக்கப்படாது. படைப்புத்தேர்வில் பிரதிலிபியின் முடிவே இறுதியானது.
தொடர்புக்கு – 9206706899.
வெற்றியடைய வாழ்த்துக்கள்! நன்றி.

அங்கீகாரம்

ஆடியோ ரிலீஸ் ஆனதும் அந்தப் பாட்டு இவ்வளவு பெரிய ஹிட் ஆகும் என்று திரைஉலகம் மட்டுமல்ல...படத்தை உருவாக்கியவர்களே எதிர்பார்க்கவில்லை. பாடல் ஹிட் ஆனதையடுத்து ஆங்கில பாப் பாடகரே வலிய வந்து மிகக்குறைவான சம்பளத்தில் ஆடித் தர சம்மதித்தார்.
உடனடியாக தயாரிப்பாளரும் வெளியில் கடன் வாங்கி ஏற்கனவே படம் பிடித்த பாடல் காட்சியை மீண்டும் ஆங்கில பாப் பாடகரை வைத்து படப்பிடிப்பை நடத்த ஏற்பாடு செய்தார்.
படத்தொகுப்பு வேலைகள் நடந்துகொண்டிருந்தன. "தமிழ் நடன நடிகரை வைத்து ஏற்கனவே எடுத்த பாடல் காட்சியை சேர்க்க வேண்டாம்"என்று தயாரிப்பாளர் சொன்னார்.
'அந்த பாடலுக்காக பதினைந்து நாள் உழைத்த நடனக் கலைஞனுக்கு  நாமதான் பணம் கொடுத்தாச்சே...பிறகு பாடலை சேர்ப்பது பற்றி ஏன் கவலைப் படணும்?...யாரும் எதுவும் சேர்க்க மாட்டாங்களே...'என்பது தயாரிப்பாளரின் வாதமாக இருந்தது.
"சம்பளம் கொடுத்ததோட நம்ம பொறுப்பு முடிஞ்சிட்டதா யார் சொன்னா? ஒரு கலைஞனுக்கு ஊதியத்தைவிட பெரிசா நினைக்கிறது ரசிகர்களோட கை தட்டலைத்தான். அது அவருக்கு கிடைக்கனும்னா பாடலை படத்துல சேர்த்து மக்களோட பார்வைக்கு கொண்டு போகணும்.
இது தான் நம்ம கடமை. அந்தப் பாட்டை எங்க சேர்க்குறதுன்னு குழப்பமே வேண்டாம்...கிளைமாக்ஸ் முடிந்ததும் இந்தப் பாட்டோட எண்ட் டைட்டிலை ஓட விட்டுடலாம்." என்று இயக்குனர் சொன்னதில் இருந்த மனிதநேயம் புரிந்ததால் தயாரிப்பாளர் மகிழ்வுடன் சம்மத்தார்.
-திருவாரூர் சரவணன்

வாராரு வாராரு... அழகர் வாராரு...


ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும். அதாவது சிறப்பான திருவிழா ஒன்று இருக்கும். 

இந்த திருவிழாதான் அந்த குறிப்பிட்ட ஊரில் இருந்து வேலை, வியாபாரம், கல்வி உள்ளிட்ட காரணங்களுக்காக இடம் பெயர்ந்த மக்களை பிறந்து வளர்ந்து வாழ்ந்த ஊரை நோக்கி இழுத்து வரும். 

அது போன்ற திருவிழாக்களில் முக்கியமானது மதுரை அழகர் கோவில் திருவிழா இன்று 19–04–2019 நடைபெறுகிறது.


செங்கம் டிராவல்ஸ் - 6


திருவாரூர் சரவணன்
பகுதி 6
19-04–2019
‘‘தம்பி... உனக்கு தட்டி பாஸ் கொடுக்கும்போதே என்ன சொன்னேன்... படம் போட்டு முதல் நாளோ, சனி ஞாயிறு மாதிரி விடுமுறை நாள்லயோ, இந்த மாதிரி கூட்டம் நிறைய இருக்குற நாள்லயோ வராத... சாதாரண நாட்கள், இன்று இப்படம் கடைசின்னு ஸ்லிப் ஒட்டியதும் வான்னுதானே சொன்னேன்... மறந்துட்டியா தம்பி...’’ என்றார் தியேட்டரின் உரிமையாளர் பழனிச்சாமி. 





‘‘இல்லன்ணே... டிக்கட் கேட்கதான்ணே வந்தேன்...’’
‘‘டிக்கட்டா... யாருக்குடா...’’
‘‘எனக்குதான்ணே...’’
‘‘ஏண்டா தம்பி... படிக்கிறப்பவே காலையில நாலரை மணிக்கு எழுந்திரிச்சு பேப்பர் போட்டு கஷ்டப்பட்டு ஏதோ கொஞ்சம் சம்பாதிக்கிற...
இன்னும் ரெண்டு வாரம் கழிச்சு வந்தா உன்னைய சும்மாவே உள்ள அனுப்பப்போறேன். இப்போ ஏண்டா செலவழிக்கப்போற...’’ என்றார்.
அவரிடம் உண்மையான காரணத்தை சொல்ல முடியாமல், ‘‘இல்லண்ணே... என்ன இருந்தாலும் தலைவர் படம்...’’ என்று இழுக்க, ’’சரிடா... செகண்ட் கிளாஸ் டிக்கட் நாற்பது ரூபா. அதை வாங்கிக்க...’’ என்று கண்ணாடி கதவு வழியாகவே இவனை உள்ளே அழைத்துச் சென்றார்.
டிக்கட்டை வாங்கிக் கொண்ட அவன், ‘‘அண்ணே... சைக்கிளை கொண்டு போய் போட்டுட்டு வந்துடுறேன்...’’ என்றதும், உரிமையாளர்,
‘‘நில்லுடா... இந்த சாவியை எடுத்துட்டுப்போய் எண்ட்ரன்சுக்கு பக்கத்துல நம்ம வண்டிங்க எல்லாம் நிக்கிற இடத்துல சைக்கிளைப் போட்டுட்டு கதவைப் பூட்டி சாவியைக் கொண்டாந்துடு...’’ என்று ஒரு வளையத்தில் மாட்டியிருந்த சாவியைக் கொடுத்தார்.
வரதராஜனுக்கு ஏக குஷி. காரணம், பெண்களுக்கு டிக்கட் கொடுக்கும் பகுதியில்தான் தியேட்டர் ஊழியர்கள், நிர்வாகிகள் வாகனங்கள் நிறுத்தும் இடம் இருந்தது. இவன் அந்த இடத்தின் கதவைத்திறந்து தன்னுடைய சைக்கிளை வைக்கும்போது அர்ச்சனாவும், அந்த காலனியில் இருந்த அத்தனை பேரும் பார்த்தார்கள். இவன் சைக்கிளை நிறுத்தி பூட்டி விட்டு வெளியே வந்து அந்த இடத்தின் கதவைப் பூட்டிக் கொண்டு திரும்பும்போது எதிரில் நின்றது, இவன் பேப்பர் போடும் வீட்டில் உள்ள புவனேஸ்வரி.
‘‘என்ன தம்பி... இங்கயும் வேலைபார்க்குறியா?’’ என்றதும்,
‘‘அய்யய்யோ... இல்லக்கா... நான் ஸ்கூல்ல படிக்கிறேன்... இங்க படம் பார்க்க வந்தேன்... ஓனர் சைக்கிளை இங்க போட்டுக்க சொன்னார்...’’ என்று அவசரமாக பதிலளித்தான்.
‘‘கூட்டம் இருக்குறதைப் பார்த்தா பொம்பளைங்களுக்கு குடுக்குற இருபது ரூபா டிக்கட் கிடைக்காது போலிருக்கு... நீ சொல்லி வாங்கித்தர்றியாப்பா...’’ என்று கேட்டதும் ஒருகணம் யோசித்தான்.
வாங்கித்தர்றேன்னு பந்தாவா சொல்லி, ஓனர் மறுத்துட்டா அசிங்கம்... அதனால போய் கேட்டுட்டு வந்துடுறேன் சொல்லி தப்பிக்கிறதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்த வரதராஜன், ‘‘அக்கா... ஓனர் என்ன மூடுல இருக்காருன்னு தெரியலை... எதுக்கும் போய் கேட்டுட்டு வந்துடுறேனே... எத்தனை டிக்கட்?’’ என்று கேட்டான்.
‘‘இருபத்து மூணு...’’ என்று அந்த பெண் சொல்லவும், இதை நான் எதிர்பார்த்ததுதான், ஆனா ஓனருக்கு மயக்கம் வராம இருக்கணும்... என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு கண்ணாடி கதவு நுழைவாயிலுக்கு சென்றான்.
அவர் இவன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்திருப்பார் போலிருக்கிறது.
‘‘அங்க என்னடா லேடீஸ்கிட்ட கதை பேசிகிட்டு இருந்த...’’
‘‘இல்லண்ணே... நான் பேப்பர் போடுற ஏரியாவுல ஒரு காலனியில இருக்காங்க... இருபது ரூபா டிக்கட் கேட்டாங்க... அதான்...’’ என்று இழுத்தான் வரதராஜன்.
‘‘நீ என்ன சொன்ன?...’’ என்று பழனிச்சாமி கேட்டபோது அவர் குரலில் ஏதோ ஒரு எச்சரிக்கை உணர்வு.
‘‘முதலாளிகிட்ட கேட்டுட்டு வர்றேன்னுதான் சொன்னேன் முதலாளி...’’
இதைக் கேட்ட பழனிச்சாமி, அருகில் நின்ற தியேட்டர் ஊழியர்களிடம், ‘‘வியர்க்க விறுவிறுக்க பையன் பணம் கொடுத்து படம் பார்க்குறேன்னு சொன்னப்ப தலைவர் படம்னு ஆவலா இருக்குறதா நினைச்சேன்... அங்க நிக்கிற கூட்டத்தைப் பார்க்கும்போதுதான் விசயம் புரியுது. பையன் தெளிவாத்தான் இருக்கான்... ஆனாலும் திறமைசாலிடா நீ... டிக்கட் வாங்கித் தர்றேன்னு பந்தா பண்ணாம, என் கிட்ட கேட்டு சொல்றேன்னு தெளிவா எஸ்கேப் ஆகுற மாதிரி பதில் சொல்லிட்டு வந்துருக்க... சரி... எத்தனை டிக்கட் வேணும்?’’ என்று கேட்டவாறு அருகில் நின்ற ஊழியரின் கையில் இருந்த மூன்றாம் வகுப்பு டிக்கட் புத்தகத்தை வாங்கி டிக்கட்டுகளை எண்ணுவதற்காக ஒரு டிக்கட்டை இரண்டு விரல்களால் பிடித்தார்.
‘‘இருபத்திமூணு....’’
வரதராஜன் எதிர்பார்த்ததுபோல் உரிமையாளருக்கு மயக்கம் வரவில்லை. ஆனால் ஒரு சில விநாடிகள் ஸ்தம்பித்து நின்றார்.
‘‘டேய் வரதா... உண்மைய சொல்லு... இருபத்தி மூணு பேர் வந்துருக்காங்களா... இல்ல பிளாக்ல விக்கப்போறியா? இந்த டிக்கட்டுக்கு ஆம்பளைங்களை விட மாட்டோம்னு தெரியும்ல...’’
‘‘என்னண்ணே... என்னையே சந்தேகப்பட்டுட்டீங்க... உங்களுக்கு விருப்பம் இருந்தா டிக்கட் கொடுங்க... இல்லன்னா இல்லன்னு சொல்லுங்க... நான் அவங்ககிட்ட போய் கவுண்டர்லயே டிக்கட் எடுத்துக்குங்கன்னு சொல்லிட்டு எனக்கு நீங்க ஒரு டிக்கட் கொடுத்ததை வெச்சு நான் பாட்டுக்கு படம் பார்க்கப்போறேன்...’’ என்றான்.
‘‘இப்ப ஏண்டா பொங்குற... சரி... அவங்களை இங்க வர சொல்லு... இந்த வழியாவே உள்ளே அனுப்பிடலாம்...’’ என்றார் உரிமையாளர்.
அந்த விபரத்தை சொன்னதும் அவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. நேரடியாக கண்ணாடி கதவு வழியே உள்ளே நுழையும்போது ஏதோ வி.ஐ.பி அந்தஸ்து கிடைத்த பெருமிதத்துடன் சென்றார்கள்.
பழனிச்சாமியைப் பொறுத்தவரை, வரதராஜனே இருபது ரூபாய் டிக்கட்டை முப்பது ரூபாய்க்கு விற்றுவிட்டால் என்ன செய்வது என்ற சந்தேகத்துக்கு இடமின்றி நேரடியாக வர சொல்லி அவர்களிடம் டிக்கட்டை கொடுத்து உள்ளே அனுப்பி விட்டார். அந்த வகையில் அவருக்கு திருப்தி.
Sengam Travels - Story Series - 6
பழனிச்சாமி இப்படி செய்ததால் வரதராஜன்தான் இவர்களை கவுண்டர் வழியாக கூட்டத்தில் நசுங்கி உள்ளே செல்ல விடாமல் நேரடியாக அழைத்துச் சென்றதாக நினைத்துக் கொள்வார்கள் என்ற வகையில் அவனுக்கு சந்தோஷம்.
மூன்றாம் வகுப்பு வரிசைக்கு பின்னால் இரண்டாம் வகுப்பு வரிசை ஆரம்பம். மற்ற ரசிகர்கள் உள்ளே வரும் முன்பே அங்கு போய் அமர்ந்தால் இவன் அவர்களுக்காகத்தான் வந்திருக்கிறான் என்று தவறாக எண்ணிக் கொள்வார்கள் என்பதால், கூட்டம் உள்ளே சென்று இருக்கைகள் ஓரளவு நிரம்பட்டும் என்று காத்திருந்தான்.
கடைசியாக அந்த வரிசை நிரம்பும் என்று இவன் நினைத்திருக்க, அர்ச்சனா உள்ளிட்ட இளம்பெண்கள் அதிகம் அமர்ந்திருந்ததைப் பார்த்த ரசிகர்கள் கூட்டம் முன்னதாகவே அதற்கு அடுத்த வரிசையில் இடம் பிடித்து விட்டது.
அதன்பிறகு அவசர அவசரமாக கிடைத்த இடத்தில் வரதராஜன் நுழைந்து கொண்டான். எல்லாம் நன்மைக்கே... அவங்களுக்கு அடுத்த வரிசையில உட்காராம இருந்தா, நான் அவங்களுக்காக படத்துக்கு வரலைன்னு தோணும்... அதுவும் நல்லதுக்குத்தான் என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டான்.
அதன்பிறகு இடைவேளையின்போது கூட அவர்களை பார்க்க முயற்சிக்கவில்லை.
படம் முடிந்த பிறகும் எல்லா கூட்டமும் மொத்தமாக வெளியேறியதால் இவன் சைக்கிளை நிறுத்தியிருந்த பிரத்யேக பகுதியின் கதவை திறக்க முடியவில்லை. அதனால் மொத்த பார்வையாளர்களும் தியேட்டரை விட்டு காலியாகும் வரை இவன் காத்து நிற்க வேண்டியதாயிற்று.
வரதராஜன் அதன் பிறகு ஒருவாரம் காலையும், மாலையும் அர்ச்சனாவை வழக்கம்போல் கவனித்துச் சென்று கொண்டிருந்தான். ஆனால் அவர்கள் யாருமே இவனை கண்டு கொள்ளாததுபோல்தான் நடந்து கொண்டார்கள்.
திடீரென்று ஒருநாள், இவனிடம் டிக்கட் எடுத்து தரச் சொன்ன புவனேஸ்வரி தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது இவனைப் பார்த்துவிட்டாள்.
‘‘தம்பி... தம்பி... ஒரு நிமிஷம்ப்பா...’’ என்று கூப்பிட்டதும்,
‘‘என்னக்கா... இப்பவே பேப்பர் பணம் தரப்போறீங்கிளா... பில் புக் எடுத்துட்டு வரலையே...’’ என்றான்.
‘‘இல்ல தம்பி... அதுக்காக கூப்பிடலை... என் பொண்ணும் அவ பிரெண்ட்ஸ் மூணு பேரும் இந்த வருசம் பிளஸ் டூ...’’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே
‘‘அதான் எனக்கு தெரியுமே...’’ என்றது வரதராஜனின் மைண்ட் வாய்ஸ்.
‘‘இன்னைக்கு மதியம் ஸ்கூல்ல ஃபேர்வெல் பார்ட்டி வச்சிருக்காங்க. என் வீட்டுக்காரர்கிட்ட நேத்தியே சொல்ல மறந்துட்டேன்... சொல்லி வெச்சா மாதிரி எல்லாருமே மார்ச் மாசம் நெருங்குறதால இயர் எண்ட் டார்கெட் அது இதுன்னு காலையிலயே வேலைக்கு கிளம்பி போயிட்டாங்க...’’ என்று அவள் தொடர்ந்து பேசியபோது, அதிகாலையில் எழுந்ததன் காரணமாக வரதராஜன் கொட்டாவி விட்டான்.
அதைப்பார்த்த புவனேஸ்வரி, ‘‘அய்யய்யோ... பேசி போரடிக்கலைப்பா... கடைத்தெருவுக்கு போய் கனகாம்பரம் பூ வாங்கிட்டு வந்து தர முடியுமா?... தப்பா நினைச்சுக்காதப்பா...’’ என்றாள்.
‘‘நானும் உங்க வீட்டுக்கு ரெண்டு வருசமா பேப்பர் போட்டுகிட்டு இருக்கேன். இன்னைக்குதான் முதன் முதலா உதவின்னு கேட்குறீங்க... சரி... காசு கொடுங்க... வாங்கிட்டு வர்றேன்...’’
‘‘இது முதல் உதவி இல்லப்பா... ரெண்டாவது தடவை. அன்னைக்கு தியேட்டர்ல டிக்கட் எடுத்துக் கொடுத்ததுதான் முதல் தடவை. அது சரி... அப்புறம் தியேட்டருக்குள்ள உன்னைய பார்க்கவே இல்லை... இடைவேளைக்கும் கண்ணுல தென்படலை... எங்க உட்கார்ந்திருந்த?’’
‘‘செகண்ட் கிளாஸ்ல ஒரு மூலையிலதான் சீட் கிடைச்சதுக்கா...’’ என்றான் அவன்.
‘‘நீ கேட்டதும் எங்களை கண்ணாடி டோர் வழியா உள்ள போக சொல்லிட்டாங்களே... பெரிய ஆளுப்பா நீ...’’
Sengam Travels - Story Series - 6
‘‘அதெல்லாம் ஒண்ணும் இல்லக்கா... எல்லா தியேட்டருக்கும் பேப்பர் இலவசம். அதனால பேப்பர் போடுற பசங்களுக்கும், பேப்பர் ஏஜெண்ட்டுக்கும் தட்டி பாஸ் அப்படின்னு ஒண்ணு கொடுப்பாங்க. அதை வெச்சிகிட்டு கடைசி நாள் அல்லது அதுக்கு ரெண்டு மூணு நாள் முந்தி டிக்கட் எடுக்காம ப்ரீயா படம் பார்க்கலாம்...
தலைவர் படம்... தியேட்டர் நிறைய கூட்டம் இருக்குறப்ப பார்க்கணும்னுதான் நேத்து டிக்கட் எடுத்து போனேன்... சரிக்கா... காசைக் கொடுங்க... நான் பூ வாங்கித் தந்துட்டு போய் குளிச்சு, சாப்பிட்டுட்டு நானும் ஸ்கூலுக்கு கிளம்பணும்...’’ என்று பரபரத்தான் வரதராஜன்.
பூ வாங்கிக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு சென்று குளிக்கும்போது, சாப்பிடும்போது அர்ச்சனா நினைவுதான். நாம வாங்கிக் கொடுத்த பூவை வெச்சுக்கப் போறா... என்று ஒரே சந்தோஷம்.
பேர்வெல் பார்ட்டி எத்தனை மணிக்கு ஆரம்பம், முடிவுன்னு தெரியலையே... மதியம் வகுப்பு இருக்கும். அவளுங்க ஸ்கூல் போற நேரம் தெரியாம எப்படி கட் அடிக்கிறது... சரி... எப்படியும் சாயந்திரம் அஞ்சு மணிக்குமேலதான் முடியும். திரும்ப வரும்போது பார்த்துக்க வேண்டியதுதான் என்று சமாதானமாகி பள்ளிக்கு சென்றான்.
அங்கு இவன் வகுப்புத் தோழர்கள் இவனை விட லேட்டஸ்ட் அப்டேட்டுடன் இருந்தார்கள். அந்த பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ மாணவிகள் அணிந்து வரும் உடை, அவர்களுக்கு தரப்படும் கிப்ட், விழா ஆரம்பிக்கும் நேரம், முடியும் நேரம் எல்லாவற்றையும் புள்ளிவிபரத்துடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.
மாலை சுமார் ஆறேகால் மணிக்கு பெரிய கோயிலின் தெற்குப்புற வாயில் அருகே காத்திருந்தான். சைக்கிளில் வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் அர்ச்சனா மற்றும் மூன்று பேர் நடந்துதான் வந்தார்கள்.
அனைவரும் ஒரே டிசைனில் புடவை, முகம் நிறைய மேக்கப், தலையில் கனகாம்பரம், கையில் ஒரு வெள்ளி விளக்கு என்று நடந்து வந்ததைப் பார்த்து வரதராஜனுக்கு மயக்கமே வரும் போலிருந்தது.
பள்ளிச்சீருடையாக பாவாடை, தாவணியிலும், விடுமுறை நாட்களில் சுடிதாரிலும், தண்ணீர் பிடிக்கச் செல்லும்போது நைட்டியிலும் பார்த்துப் பழகியவளை புடவை கட்டி பார்த்ததும் திக்குமுக்காடிப் போனான் வரதராஜன்.
அடுத்து இரண்டு தெருக்களை அவர்கள் கடந்து வீட்டுக்கு செல்லும் வரை இரண்டு மூன்று முறை வேறு பக்கம் சுற்றிக் கொண்டு அர்ச்சனாவைப் பார்த்துக் கொண்டே எதிரில் சென்றான். பொண்ணுங்க பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறப்போற கடைசி வருசம் இவ்வளவு அழகா அவங்களை வரவெச்சு நினைவுப்பரிசும் கொடுத்து இந்த ஞாபகங்களை பொக்கிஷமா வெச்சுக்குற மாதிரி செஞ்சிருக்காங்க. நம்ம ஸ்கூலும்தான் இருக்கே... படிச்சு முடிச்சு இவனுங்க எப்படா வெளியில போய்த் தொலையுவாங்கன்னு நினைப்போட இருப்பாங்க போலிருக்கு... என்ன பண்றது... இவங்களை இவ்வளவு அழகா பார்த்ததும் நம்ம மனசு நம்மகிட்ட இல்லை... என்று தனக்குத்தானே பெருமூச்சு விட்டுக்கொண்டான் வரதராஜன்.
Sengam Travels - Story Series - 6
அதற்கு அடுத்தடுத்த நாட்களில் காலையில் காலனி வாசலில் அர்ச்சனா உள்ளிட்ட பிளஸ்டூ மாணவிகளின் தாய்மார்கள்தான் குடிநீர் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
எல்லோரும் அரசுப் பொதுத் தேர்வுக்கு தீவிரமாக தயாராகிறார்கள் என்பதை வரதராஜன் புரிந்து கொண்டான். பிரேக் பிடித்ததும் சற்று தூரம் சென்று வண்டி நிற்பதைப் போல், அர்ச்சனா தண்ணீர் பிடிக்க வரவில்லை என்றாலும் அந்த நேரத்துக்கு அந்த தெரு வழியாக செல்வதை உடனடியாக வரதராஜனால் நிறுத்த முடியவில்லை.
மாலை நேரங்களிலும் அப்படித்தான். அர்ச்சனா உள்ளிட்ட யாருமே பெரிய கோவிலுக்கு தண்ணீர் எடுக்கச் செல்லவில்லை.
ஓரிரு நாட்களிலேயே மாலை நேரங்களில் கல்தேர் பக்கம் செல்வதை வரதராஜன் நிறுத்திக் கொண்டான். காலை நேரத்தில் யார் பார்த்தாலும் பேப்பர் போட்டு விட்டு திரும்ப வருகிறான் என்று தெரிந்திருப்பதால் சந்தேகம் வராது. ஆனால் மாலை நேரத்தில் பெண்களுக்கு பதில் அவர்களின் தாய்மார்கள் தண்ணீர் எடுக்க வரும்போது அவர்கள் கண்களில் தெரிவது போல் சுற்றினால் ஆபத்து என்பதை புரிந்து கொண்டு அதை தவிர்த்து விட்டான்.
தேர்வுகள் முடிந்த பிறகு மாலை வேளையில் பெரிய கோவில் கிணற்றில் தண்ணீர் எடுக்கும் பணியை அர்ச்சனாவும் மற்றவர்களும் தொடர்ந்தார்கள். வரதராஜனும் அவன் பணியை தொடர்ந்தான். தேர்வு முடிவுகள் வெளியாக ஓரிரு நாட்கள்தான் இருந்தன. அப்போதுதான் ஒரு ஐடியா அய்யாச்சாமி என்று நினைத்துக்கொண்ட நண்பன் ரவிக்குமார் என்பவன் வரதராஜனுக்கு ஒரு உருப்படாத யோசனையை சொல்லிக்கொடுத்து உசுப்பேற்றி விட்டான்.
தொடரும்...