நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, March 29, 2019

கண்ணே கலைமானே...


சினிமா – ஒரு பார்வை
திருவாரூர் சரவணன்
29–03–2019
இளைய சமுதாயத்தையும் குழந்தைகளையும் தவறான பழக்கவழக்கங்களுக்கு இட்டுச் செல்லும்படியான படங்கள்தான் அதிகமாக வருகின்றன என்ற குற்றச்சாட்டை முழுவதுமாக மறுப்பதற்கில்லை. இத்தகைய சூழ்நிலையில் கண்ணே கலைமானே திரைப்படத்தில் பல்வேறு வசனங்கள் கவனம் பெறுகின்றன.
முக்கியமாக இரண்டு காட்சிகளில் வரும் வசனங்கள் இன்றைய வாழ்வியலில் முக்கியமான இரண்டு பிரச்சனைகளுக்கு சாதாரணமாக எளிமையான தீர்வுகளை சொல்லிச் செல்கிறது.
கந்துவட்டி வசூல் செய்பவரிடம் வரும் பாட்டி,’மூணு லட்ச ரூபாயை ஒருத்தன் கேட்டா வட்டி கிடைக்குதேன்னு யாருக்கும் தெரியாம தூக்கி கொடுத்துடுவீங்கிளா? கொடுக்குறதுக்கு முன்னால அவன் வீட்டுல உள்ள பெரியவங்க இல்லன்னா வேற யார்கிட்டயாச்சும் கேட்க மாட்டீங்கிளா?’ என்று கேட்பார்.
இன்று கந்து வட்டி காரணமாக நிகழும் குற்றங்களின் ஆரம்ப புள்ளிக்கு சென்று பார்த்தால் வீட்டுக்கே தெரியாமல் அந்த நபர் கடன் வாங்கி, தொடர்ந்து வட்டியை மட்டும் கட்டி, அந்த வட்டி கட்ட முடியாமல் மீண்டும் கடன் வாங்கி இப்படியே முழுவதும் மூழ்கும் நிலை வந்த பிறகுதான் சம்மந்தப்பட்ட குடும்பத்திற்கே தெரிகிறது. இதற்குள் நிலைமை சீரமைக்க முடியாத அளவுக்கு அபாய கட்டத்திற்கு சென்று விடுகிறது.

கடன் பெறுபவரின் வீட்டுக்கு தெரிந்து கடன் வாங்கும்போது, பெரும்பாலும் தவறான நோக்கத்திற்கு அந்த நபர் கடன் பெற்று சிக்கலில் மாட்டிக் கொள்வது தவிர்க்கப்படும். அப்படி இல்லாமல் இவ்வளவு தொகை உயிர்காக்கும் அவசரம் என்ற சூழ்நிலையில் குடும்ப உறுப்பினர்கள் நகை, வேறு அடமானம் உள்ளிட்ட வகையில் உதவும்போது கந்து வட்டி நபர்களிடம் பெரிய தொகை பெற்று சிக்கிக் கொள்ளும் அவலமும் நேராது.
நாயகனின் தந்தை, மகனுக்கு தனிக்குடித்தனம் ஏற்பாடு செய்வார். ஏம்ப்பா என்று கேட்கும்போது, திருமணமான முதல் ஒரு ஆண்டு மகிழ்ச்சியான வாழ்க்கை ஒவ்வொரு தம்பதிக்கும் முக்கியம். அந்த நாட்கள் திரும்ப கிடைக்காத ஒன்று. அந்த கால கட்டத்தில் உங்களுக்குள் பிரச்சனை வேண்டாமே என்றுதான் தனிக்குடித்தனம் ஏற்பாடு செய்துவிட்டேன் என்று சொல்வார்.
இது யோசிக்க வேண்டிய தகவல். அதற்காக எல்லாரும் எடுத்த எடுப்பிலேயே தனிக்குடித்தனம் அனுப்பி விட வேண்டும் என்று சொல்லவில்லை. இந்த இடத்தில் நிறைய பெரியவர்கள் செய்யும் தவறு ஒன்று இருக்கிறது. நமக்கு மட்டும்தான் முக்கியத்துவம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அதை உணர்த்தும் விதம்தான் அடக்குமுறையாக மாறி குடும்பத்தில் முந்தைய தலைமுறைக்கும் இன்றைய தலைமுறைக்கும் இடைவெளியை ஏற்படுத்தி தனித் தீவாகவே மாற்றி விடுகிறது.
திருமணமான ஆரம்ப கால கட்டங்களில் இளம் தம்பதியர் வீட்டில் தனியாக இருப்பதற்கும், இயன்றவரை வெளியில் செல்வதற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துப்பாருங்கள். அதையும் பழைய காலம் மாதிரி அவர்களாகவே புரிந்து கொள்ளட்டும் என்று அமைதியாக இருக்காமல், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பிறகு குடும்ப பொறுப்புகள், அடுத்தது குழந்தை என்று வரும்போது அந்த வேலைகளையும் நீங்கள்தான் கவனிக்க வேண்டும். அதனால் இப்போது அளவுக்கு தனிமையில் இருக்கும் நேரம் கிடைக்காது என்பதையும் நாசூக்காக உணர்த்தி விட்டால் குடும்பங்களில் பெரும்பாலும் நல்லதே நடக்கும்.

No comments:

Post a Comment