நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, March 29, 2019

செங்கம் டிராவல்ஸ் - 3


தொடர்கதை
திருவாரூர் சரவணன்
பகுதி 3
29–03–2019
முன்கதை சுருக்கம்:
அர்ச்சனா உறவினர் திருமணத்திற்கு மணமகன் வீட்டாருடன் மதுரைக்கு செல்கிறாள். அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ள பேருந்தில் ‘அவனை’ பார்த்ததும் அதிர்ச்சியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பழைய சம்பவங்கள் தொடர்ந்து கண் முன் தோன்றி அவள் மனதை அலைக்கழிக்கிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு- அர்ச்சனா பள்ளியில் இறுதி ஆண்டு படிக்கும்போது அவன் சுற்றி வந்த நாட்களில் நடந்த சில சம்பவங்கள் இவள் நினைவுக்கு வருகின்றன.
அர்ச்சனாவின் தோழிகள் கூட அவனைப் பற்றிக் குறிப்பிட்டு கிண்டல் செய்கிறார்கள்.
*****
பிரேக் போட்டு திடீரென இவர்கள் பேருந்து நின்ற நொடி எதிரில் ஒரு டேங்கர்லாரி இந்த பேருந்தை மோதுவது போல் நெருங்கி வந்து வலது பக்கம் விலகிச் சென்றது பின்னாலேயே வேளாங்கண்ணி செல்லும் மூன்று அரசு விரைவுப்பேருந்துகளும் சர்... சர்... சர்ரென கிராஸ் செய்து சென்றன.
‘‘டிரைவர்... ஹெட்லைட்டைப் போட்டுட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதானே...
ஓவர்டேக் பண்ணி வர்ற லாரிக்கு ஏன் வழி விடுறீங்க... எதிர்ல நாம வர்றதைப் பார்த்ததும் அவன்ல வேகத்தைக் குறைச்சு பஸ்சுங்களுக்கு பின்னால போயிருக்கணும்?’’ என்று முன் சீட்டில் முட்டிக்கொண்ட ஒருவர் கொதித்தார்.
 ‘‘ஒரு பஸ்சா இருந்தா அவனே பின்னால ஒதுங்கியிருப்பான்... இங்க மூணு பஸ்சு. அதோட எவ்வளவு தூரம் முயற்சி பண்ணி டாப் கியருக்கு பிக்கப் ஆயிருந்தானோ... இப்போ நாம வழி மறிச்சிருந்தா அடுத்து அஞ்சு கிலோ மீட்டர் தூரத்துக்கு அவனால வண்டியை நார்மல் ஸ்பீடுக்கு கூட கொண்டு போக முடியாது...
நானும் எழுபது எண்பதுல போய் சடன் பிரேக் போடலியே... இருபத்தஞ்சுல போனப்பதான குத்துனேன்....’’ என்றார் ஓட்டுநர்.
‘‘அது சரி... பள்ளிக்கூட பஸ் ஓட்டுன ஆள்னுங்குறது சரியாத்தான் இருக்கு... அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்காதீங்கப்பு...’’ என்றவரின் குரலில் கொதிப்பு அடங்கியிருந்தது.
‘‘வெளியில இருக்குற டேங்கர்லாரி டிரைவருக்கு இரக்கப்பட்ட நீங்க, பஸ்சுக்குள்ள எழுந்து நின்னுகிட்டு இருந்த சிங்கத்தைப் பத்தி யோசிக்காம மூக்கை உடைச்சுட்டீங்கிளே...’’ என்று ஒருவன் சொல்லவும்,
‘‘நீ வேற ஏண்டா மானத்தை வாங்குற...’’ என்று வைத்தியலிங்கம் அவனைப் பார்த்து பல்லைக்கடித்தான்.
பேருந்தினுள் இருந்தவர்கள் ஆளாளுக்கு ஏதோ கதை பேசிக் கொண்டு வர, அர்ச்சனாவின் மனதில் இப்போதைக்கு ஒரே ஒரு கேள்விதான்.
‘பஸ்சுல இருக்குறதுல பாதிப்பேருக்கு மேல சொந்தக்காரங்கதான். இவனை எந்த பழக்கத்துல பெரியப்பா உள்ள விட்டிருக்காரு... நமக்கு தெரிஞ்சவரை இவனோட நம்ம பெரியப்பாவுக்கு எந்த பழக்கமும் இல்லையே...’என்ற கேள்வி அர்ச்சனாவின் மனதில் வெகு நேரமாக ஓடிக்கொண்டே இருந்தது.
‘‘நாலு வேன் புடிச்சாகூட நெருக்கியடிச்சு உட்காரணும்... அதோட பயங்கரமா குலுக்கி எடுத்துடும். அக்கம் பக்கம் உட்கார்ந்துருக்குறவங்க கிட்ட நல்லா பேசக்கூட முடியாது. அதுக்காகத்தான் தாராளமா உட்கார்ந்து போகலாம்னு பஸ்சைப் பிடிச்சேன்...
நான் நினைச்ச மாதிரியே எல்லாரும் சகஜமா பேசி அரட்டை அடிச்சுகிட்டு வர்றீங்க... ஆனா அர்ச்சனாவுக்குதான் என்னாச்சுன்னு தெரியலை... நீ வேலைக்கு போறதும் கம்பெனி பஸ்சுலதானே... அதுல வாயைத் திறந்தா மூட மாட்டேன்னு இண்டர்போல் ஆபிசர்ஸ் சொன்னாங்க... இப்ப என்னாச்சு...?’’ என்று சிரிக்காமல் விஜயகுமார் பேசவும் இதைக் காதில் வாங்கியவர்கள் சிரித்தார்கள்.
‘‘அய்யோ... பெரியப்பா... மானத்தை வாங்காதீங்க... ஏதோ கம்பெனி ஞாபகம்... அதான்...’’ என்று சமாளித்தாள்.
‘‘என்னது... கம்பெனி ஞாபகமா?... உன்னை மாதிரி வெளியூர்ல தங்கி வேலை பார்க்குற பொண்ணுங்க வீட்டு நியாபகம்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்... நீ குடும்ப விசேசத்துக்கு வந்தும் வேலை ஞாபகத்துலயே இருக்க... உன் கம்பெனி ரொம்ப கொடுத்து வெச்சதும்மா...
ஆனா ஒரு சின்ன விண்ணப்பம்... இது நம்ம வீட்டு கல்யாணம்... மாப்பிள்ளைக்கு நீயும் ஒரு தங்கச்சி. அதை மனசுல வெச்சு இந்த சந்தோஷத்துல பங்கெடுத்துக்க... இந்த பயணமும் நினைவுகளும் ரொம்ப நாளைக்கு நம்ம மனசுல இருக்கும்ணு நம்புறேன்...’’ என்று விளையாட்டாக கும்பிட்டார்.
‘‘ஸ்....யப்பா... போதும் பெரியப்பா... தாங்கலை...’’ என்று அவளும் கைகூப்பினாள்.
‘‘இந்த டிரிப் முடியுறதுக்குள்ள டிம் பிரைட் ஸ்விட்ச் மாத்த வேண்டியதான்னு நினைக்குறேன்... நானும் கிளம்புனதுல இருந்தே பார்க்குறேன் டொப்பு டொப்புன்னு ஆயிரம் தடவையாச்சும் அடிச்சிருப்பீங்க போலிருக்கே...’’ என்றான் வைத்தியலிங்கம்.
‘‘ஸ்விட்ச் போனா வாங்கிக்கலாம் சார்...’’ என்ற ஓட்டுநர் அடுத்த வார்த்தை பேசவில்லை.  கிண்டலடித்தவனும்தான்.
‘‘அவர் வேலையை அவர் பார்க்குறாரு... நீ ஏண்டா எதையாச்சும் பேசி மொக்கையாகிட்டே இருக்க...’’ என்றான் அவன் நண்பன்.
கோவில்வெண்ணி பொறியியல் கல்லூரியைக் கடந்ததும் விஜயகுமார் எழுந்து ஓட்டுநர் அருகே சென்றார்.
‘‘என் மச்சான் பேமிலி அம்மாப்பேட்டை பஸ் ஸ்டாப்புகிட்டயே நிப்பாங்க சார்... மெதுவாவே போங்க...’’ என்று சொல்லவும்,
‘‘செஞ்சுடலாம் சார்...’’ என்று சுருக்கமாக பதிலளித்தார் ஓட்டுநர்.
அம்மாப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் விஜயகுமாரின் மைத்துனர் அன்பழகன், அவர் மனைவி, மகன், மகள், மருமகன் ஆகிய ஐந்து பேரை ஏற்றிக்கொண்டு பேருந்து தஞ்சையை நோக்கி விரைந்தது. நடுவில் இரண்டு வழிச்சாலைப் பணிகள் முடிந்த இடத்தில் எழுபது கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் பேருந்து, சாலைகளுக்கும் வயல்வெளிக்கும் வித்தியாசம் தெரியாத இடங்களில் ரோடு ரோலரின் வேகத்தை பயன்படுத்திக் கொண்டது.
தஞ்சை புறநகர்ப்பகுதியை அடைந்ததும் வேகம் பிடித்த பேருந்து புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் நுழைவாயில் எதிரே ஓரம் கட்டி நின்றது.
‘‘விஜி... நீ என்னதான் மாப்பிள்ளையைப் பெத்தவனா இருந்தாலும் கல்யாணம் நடந்து முடியுற வரை ஏதோ இனம்புரியாத பதட்டம் உன் மனசுல இருக்கத்தான் செய்யும்... அதனால இப்பவும் டிரைவரையே அடிக்கச்சொல்லுப்பா... ஆங்... அப்புறம் ரெண்டு தேங்காயா அடிக்கச்சொல்லு... கணக்குக்கு ஒத்தப்படையா அஞ்சு தேங்காயா இருக்கட்டும்...’’ என்றார் விஜயகுமாரின் தந்தை வேதாச்சலம்.
இங்கேயும் தேங்காய்கள் சிதறின.
தேங்காய்களை சிதறச்செய்து விட்டு இருக்கைக்கு வந்த டிரைவர், ‘‘விஜயகுமார் சார்... தஞ்சாவூர் - புதுக்கோட்டை ரோடு அகலப்படுத்திகிட்டு இருக்காங்க. அடுத்து திருப்பத்தூர்ல இருந்து மேலூர் வரைக்கும் அகலப்படுத்துற வேலை இன்னமும் நடக்குது. அதனால திருச்சி, திருச்சியில இருந்து மதுரைன்னு முழுக்க நாலு வழிப்பாதையிலேயே போயிடுவோமா? முப்பதுல இருந்து முப்பத்தைந்து கிலோ மீட்டர் தூரம் அதிகமாகும். அதோட மூணு நாலு இடத்துல டோல் பணம் கட்டுற மாதிரி இருக்கும்... நீங்க சொல்றதை வெச்சுதான் இப்போ எந்த பாதையிலே போறதுன்னு தீர்மானிக்கணும்...’’ என்றபடியே பேருந்தை ஓட்ட ஆரம்பித்தார்.
‘‘என்னப்பா இது... இவர் சொல்றதை வெச்சுதான் தீர்மானிக்கணும்னு சொல்லிட்டு நீங்க பாட்டுக்கு மேம்பாலத்துல வண்டியை விடுறீங்க?’’ இது வைத்தியலிங்கம்.
‘‘பட்டுக்கோட்டை பைபாஸ் தாண்டி திருச்சி புதுக்கோட்டை ரோடு பிரியுற இடம் வரை ஏழெட்டு கிலோ மீட்டருக்கு மேல இந்த பாதைதான்... நீங்க உங்க தீர்மானத்தை சொல்லுங்க சார்...’’
விஜயகுமார் பதில் சொல்வதற்கு முன்பே,
‘‘இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு... திருவாரூர்ல இருந்து தஞ்சாவூர் வந்ததுலயே பாதிப்பேரோட இடுப்பு கழன்டு போச்சு. மீதி பேருக்கு எப்ப என்ன ஆகுமோன்னு தெரியலை...
என்றா பசுபதி வண்டியை உடுறா திருச்சி ரோட்டுல...’’ என்று சொன்னான் வைத்தியலிங்கம்.
பொதுவாக இளைஞர்கள் நான்கு பேர் சேர்ந்தால் அங்கு உற்சாகமாகி விடுவார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் பல நேரங்களில் சிரிப்பை வரவழைக்கும் ஜோக் சொன்னாலும் சிரிப்பதைப் பற்றி யோசிக்கவே முடியாத அளவுக்கு ஜோக் சொல்லும்போதுதான் அவர்கள் அத்தனை பேரும் சிரிப்பார்கள். இப்போதும் அதுதான் நடந்து கொண்டிருந்தது.
‘‘என்ன சார்... பதிலையே காணோம்...’’ என்று ஓட்டுநர் சொன்னது விஜயகுமாரைப் பார்த்து.
‘‘இடுப்பு போச்சுன்னு சொந்தக்காரங்கள்லாம் சொல்லிட்டாங்களே... இதுல நேயர் விருப்பம்தான் முக்கியம்... அப்புறம் ஏன் என்கிட்ட கேட்கணுமா என்ன?’’
‘‘வண்டியை ஒப்பந்தம் செஞ்சது, நாளைக்கு பணம் செட்டில்பண்ணப்போறது நீங்கதானே சார்... உங்க உத்தரவுதானே முக்கியம்...’’ என்று ஓட்டுநர் சிரித்தார்.
‘‘அடச்சை... நம்ம வார்த்தைக்கு இவ்வளவுதான் மரியாதையா... இப்படி அசிங்கப்படுத்திட்டாரே டிரைவர்...’’ என்று நாட்டாமை பட வசனம் பேசிய வைத்தியலிங்கத்திடமிருந்து சோர்வுடன் வார்த்தைகள் வெளிப்பட்டன.
‘‘கல்யாண வீட்டுல எப்படி எல்லாம் பிரச்சனை உருவாகுதுன்னு புரிஞ்சுகிட்டீங்கிளா டிரைவர்... இனிமே இப்படி வம்புல மாட்டி விட்டுடாதீங்க... திருச்சி வழியாவே மதுரைக்கு போகலாம்...’’ என்று சொல்லி முடித்தார் விஜயகுமார்.
அவர் சொல்லி முடித்ததுதான் தாமதம், சட்டென்று கியரை மாற்றி, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தை நோக்கி முன்னால் சென்று கொண்டிருந்த தேனி செல்லும் பேருந்தை முந்திச்சென்று மேம்பாலத்தில் ஏற்றினார். அங்கிருந்து வேகம் பிடித்த பேருந்து வாழவந்தான் கோட்டை டோல்கேட்டை நெருங்கும்வரை வேகம் குறையவேயில்லை.
திருச்சியைக் கடந்து மதுரை செல்லும் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, விஜயகுமார், ‘‘சார்... ஓரளவு நல்ல ஹோட்டலா பார்த்து நிறுத்துங்க... காலை டிபனுக்கு மண்டபத்துக்கு வந்துடுறோம்னு சொல்லியாச்சு... இப்போ டீ, ஸ்நாக்ஸ், பிஸ்கட் எதாச்சும் சாப்பிட்டாத்தான் எல்லாருக்கும் தெம்பா இருக்கும்...’’ என்றார்.
‘‘ஹைவேஸ் பக்கம் இருக்குற பெரும்பாலான ஹோட்டல் என்ன நிலையில இருக்கும்னு நல்லாவே புரிஞ்சு வெச்சிருக்கீங்க சார்... கொஞ்சம் நேரமானாலும் பரவாயில்லை... பக்கத்துல ஏதாவது ஊருக்குள்ள போய் பார்த்துடுவோம்...’’ என்ற ஓட்டுநர் விராலிமலையில் ஊருக்குள் சென்று ஒரு இடத்தில் ஓரம்கட்டி நிறுத்தினார்.
‘பத்து வருசத்துக்கு முன்னால ரெண்டு பேருமே ஸ்கூல்ல பிளஸ்டூ படிச்சுகிட்டு இருந்தோம். ரெண்டுங்கெட்டான் வயசுல என்ன செய்யணும்னு அவனுக்கும் தெரியாது... எனக்கும் புரியாது. 
இத்தனை வருசத்துல நடந்ததை எல்லாம் மறந்துட்டு வேலையில கவனம் செலுத்திகிட்டு இருந்தாலும் அவனைப் பார்த்ததுமே பழசு எனக்கு ஞாபகம் வந்தது மாதிரி அவனுக்கும் வந்துருக்குமா?
இப்படி மிரட்டுனா இனிமே பின்னால வர்றது, வேற வகையில இடைஞ்சல் பண்றதெல்லாம் இருக்காதுன்னுதான் மலர்விழி அப்படி கத்துனா... கொஞ்ச நாள் தலைமறைவா இருந்துட்டு மறுபடி கோவிலுக்கு தண்ணி எடுக்க போறப்ப வழக்கம்போல வருவான்னு நினைச்சேன்...
சரியான பயந்தாங்கொள்ளியா இருந்துருக்கான். மூணு வருசம் திருவாரூர் கல்லூரியில படிச்சப்ப கூட ஒரு நாள் கூட அவனை பார்க்கவே இல்லை. அதுக்கப்புறம் ஒரு வருசம் திருவாரூர்லயே நாம ஒரு தனியார் கம்பெனியில இருந்தப்பவும் அவனைப் பார்க்கலை. ஆனா அவன் எங்கயாச்சும் வந்து மறைஞ்சிருந்து என்னைய பார்த்துகிட்டு இருந்தானான்னு தெரியலை.
அவனைப் பத்தி எனக்கு வேணுன்னா முழுசா தெரியாம இருக்கலாம். ஆனா என்னைப் பத்தியும், இந்த கல்யாணத்துக்கு நான் கண்டிப்பா வருவேன்னும் அவனுக்கு தெரியாம இருக்காது.
பத்து வருசத்துக்கு முன்னால டீன் ஏஜ்ல ஏற்பட்ட ஈர்ப்பு காரணமா பார்த்த ஒருத்தியை, அதுலயும் ஒரு தப்பு பண்ணிட்டு அதுக்காக என் தோழி மிரட்டுன மிரட்டலுக்கே கண்ணுல படாம ஓடிப்போனவன், என்னைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைஞ்சதை வெச்சுப் பார்க்கும்போது அவன் பழசை மறக்கலைன்னும் தெரியுது. அதேசமயம் இங்க என்னைய அவன் எதிர்பார்க்கலையோன்னும் குழப்பமா இருக்கு.
ஏற்கனவே பேசிப் பழகி இருந்தா அது வேற விசயம். முதன் முதல்ல பேசுறதுன்னா இப்ப இத்தனை சொந்தக்காரங்க இருக்கும்போது நான் போய் பேசுறதோ, அவன் வந்து என் கிட்ட பேசுறதோ நடக்குற கதை இல்லை.
பேசாம மலர்விழிக்கே போன் போட்டு பேசிட வேண்டியதுதான்... என்று அர்ச்சனா நினைத்துக் கொண்டிருக்கும்போதே சித்ரா அவளைப் பிடித்து உலுக்கினாள்.
‘‘ஏய்... எவ்வளவு நேரமா உன்னைய கூப்பிடுறேன்... எந்த உலகத்துலடி இருக்க... நானும் காலையில பஸ்சுல ஏறுனதுல இருந்தே பார்க்குறேன்... ஏகப்பட்ட சிந்தனையிலதான் இருக்க... இப்ப என்ன உன் பிரச்சனை...?’’
‘‘ஸ்... சாரிம்மா... சரி, பஸ் ஏன் இங்க நிக்கிது?’’ என்றாள் அர்ச்சனா.
‘‘ம்... சுத்தம்... வண்டி நின்னு அஞ்சு நிமிசமாச்சு... பாதிப்பேர் காபி குடிச்சே முடிச்சுட்டாங்க... நீ வர்றியா... இல்ல நான் மட்டும் போகவா...’’ சித்ரா குரலில் லேசான எரிச்சல்.
அர்ச்சனா இருக்கையை விட்டு எழுந்து முன்பக்க கண்ணாடி வழியாக வெளியே பார்த்தாள். அங்கு ஒரு பேக்கரி வாசலில் அவன் எதையோ தின்று கொண்டிருந்தான்.
‘முடிஞ்சா பொதுவா எதையாச்சும் அவன்கிட்ட பேசுவோம்... இல்லன்னா கொஞ்சம் ஓரமா நின்று மலர்விழிகிட்ட போன்ல பேசி யோசனை கேட்கலாம்.’ என்ற முடிவிற்கு வந்தவளாய்,
‘‘நானும் வர்றேம்மா...’’ என்று கிளம்பினாள்.
இறங்கி பேக்கரியை நோக்கி நடக்கும்போதே அவள் மனதில் வேறு பல எண்ணங்கள். ஆறு மாசம் பின்னால சுத்தி, அப்படி ஒரு காரியத்தை செஞ்சிட்டு போனவனை நினைச்சு ஏன் என் மனசு இப்படி அலைபாயுது...
டீன் ஏஜ்ல முதன் முதல்ல மனசுல பதிஞ்சவன்னுங்குறதுதான் காரணமா? அப்படியா அவன் என் ஆழ்மனசுல பதிஞ்சிருக்கான்...? ஒருவேளை அவன் என் மனசுக்குள்ள இருந்ததாலதான் ஆறு வருசமா வேலை பார்க்குற இடத்துல ஒரு ஆண் மேல கூட ஈர்ப்பு வரலையா?
அப்படி இருந்தா அவனை காலையில பார்த்ததும் பத்துவருசமா உருவம் மாறாம இருக்குற என்னைய அவன் அடையாளம் கண்டுபிடிச்சுட்டான்னு தெரிஞ்சதும் ஏன் அப்படி காரணமில்லாம பயந்தேன்...?
அவன் என்னைய பழிவாங்கணும்னு நினைச்சு அரைவேக்காட்டுத்தனமா ஏதாவது செய்ய நினைச்சிருந்தா அடுத்து நாலு வருசம் நான் திருவாரூர்லயே இருந்தப்ப வந்து செஞ்சிருக்கலாமே... ஏன் ஒரு நாள் கூட என்னைத் தேடி வரலை? இன்னைக்கு அவனோட நடவடிக்கையை பார்த்தா அவன் தப்பானவனா தெரியலையே என்று மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்து விட்டாள்.
‘‘உன்னையப் போய் கூட்டிகிட்டு வந்தேன் பாரு... நீ கனவு கண்டுகிட்டே இருன்னு பேசாம நான் மட்டும் வந்து எதையாச்சும் வாங்கித் தின்னுட்டு காபியைக் குடிச்சுட்டு வந்துருக்கணும்...’’ என்று சித்ரா கடுப்படித்ததும்தான் மீண்டும் நனவுலகிற்கு வந்தாள் அர்ச்சனா.
‘‘எதுக்கும்மா இப்படி கத்துற?’’
‘‘பின்ன என்னடி... உனக்கு கேக் வேணுமா, பன், பப்ஸ் என்ன வேணுன்னு கேட்டுகிட்டே இருக்கேன்... ஆனா நீ மறுபடி கனவு கண்டுகிட்டு இருக்க...’’
‘‘சாக்லேட் கேக்தாம்மா வேணும்...’’
‘‘எனக்கு ஒரு பன் கொடுங்க... அவளுக்கு சாக்லேட் கேக் கொடுங்க...’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அர்ச்சனா லேசாக திரும்பி அவனைக் கவனித்தாள்.
இவனும் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆக, இவளுடைய தடுமாற்றங்களை அவன் புரிந்து கொண்டிருப்பான் என்பதை அர்ச்சனாவும் தெரிந்து கொண்டாள்.
கேக்கை தின்று முடித்து விட்டு காபியை கையில் வாங்கிய அர்ச்சனா, மெதுவாக அம்மாவை விட்டு நகர்ந்து சுற்றிலும் பார்த்துக் கொண்டே மலர்விழிக்கு போன் செய்தாள்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு கடைசியாக அவன் செய்த காரியத்தை சொல்லி அவன் இப்போது இந்த பயணத்தில் உடன் இருப்பதை ஒரே வரியில் சொன்னாள்.
அதற்கு மலர்விழி...
தொடரும்...

No comments:

Post a Comment