நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Saturday, March 23, 2019

வேர்களுக்கு சிகிச்சை...

திருவாரூர் சரவணன்
15–03–2019
பிரச்சனை பழங்களில் இல்லை. வேர்களுக்கே சிகிச்சை தேவை.
பொள்ளாச்சி சம்பவம் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. அரசியல் அழுத்தமாக கால் பதித்திருக்கிறது என்று பலரும் சொல்கிறார்கள்.
இப்போது கூட குற்றம் சாட்டப் பட்டவர்களில் ஒருவரின் தாய், என் மகன் தப்பு செய்யவே இல்லை என்கிறார். சரி, அதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும் என்றே வைத்துக் கொள்வோம், அடுத்ததாக அந்த தாய், பொதுமக்களிடம் எனக்கு விஷத்தைக் கொடுங்க குடிச்சிட்டு சாகுறோம் என்கிறார். அதற்கும் மேலாக அங்கே கூடியிருந்த பொதுஜனம் ஒருவர் ‘உன் பிள்ளை செஞ்ச காரியத்துக்கு நாங்கதான் நாண்டுகிட்டு சாகணும்’  என்கிறார்.
ஒண்ணு, தப்பு பண்ணினவனை அடிச்சு கொல்லணும்... இல்ல பாதிக்கப் பட்டவங்க தற்கொலை செஞ்சுகிட்டு சாகணும். இந்த ரெண்டு வித மனநிலையில்தான் தொண்ணூறு சதவீத சமூகமே இயங்கி வருகிறது.
எதற்கெடுத்தாலும் சினிமா, சீரியல் காட்சிகளால் கெட்டுப்போய் விட்டார்கள் என்று குற்றம் சுமத்தும் நாம், ஒருசில ஆரோக்கியமான விவாதத்திற்குரிய கருத்துக்களை எடுத்துக் கொள்வதில்லை.
சமீபத்தில் வெளிவந்த துப்பாக்கி முனை என்ற படத்தில் நான்கு சமூக விரோதிகளால் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவியின் தந்தையிடம், ‘ஏன் கொல்லாம விட்டுட்டீங்க...’ என்று பத்திரிகையாளர்கள் கேட்பார்கள்.
அதற்கு அந்த தந்தை பேசும் சில வசனங்களில் முக்கியமானவை, ‘எங்களுக்கு சொல்லிக் கொடுத்தவங்க வாழ வைக்கத்தான் கத்துக்கு குடுத்துருக்காங்க. சாகடிக்க சொல்லித் தரலை...
பதினஞ்சு வயசு, இருபது இருபத்தஞ்சு வயசு பையன் பண்ற அதே தப்பை அறுபது வயசுக்கு மேற்பட்ட கிழவனும் பண்றான்.
மனசு இந்த அளவுக்கு சீரழிய என்ன காரணம்னு பார்த்து சுய கட்டுப்பாடு வளர வழி செய்யணும்.
ஆம்பளை அப்படித்தான் இருப்பான். பொண்ணுங்களை ஜாக்கிரதையா வளருங்கன்னு சிலர் சொல்றாங்க.
பெண்ணியம் பேசும் சிலர் பெண்ணுக்கு சுதந்திரமே இல்லையா, ஆம்பளைப் புள்ளையை அடக்கி வளருங்கன்னு பேசுறாங்க.
உண்மையில் இருபாலரையும் சரி செஞ்சு வளர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகம் எல்லாருக்கும் இருக்கு.
இது குறித்து என்னுடைய கோணத்தில் சில விஷயங்கள்:
1979ஆம் ஆண்டு உலக சிறுவர் ஆண்டாக கடைப்பிடிக்கப்பட்டது. அதனை ஒட்டி சிறுவர் வாழ்வு அவல நிலை குறித்து ராஜம்கிருஷ்ணன் ஒரு நாவல் எழுதியுள்ளார்.
கூட்டுக்குஞ்சுகள் என்ற அந்த நாவல் தீப்பெட்டி தொழிலிலும் பட்டாசு தொழிற்சாலைகளிலும் ஈடுபடும் சிறுவர் சிறுமியர் பற்றியும் அவர்கள் கல்வியை தொலைத்து கிட்டத்தட்ட கொத்தடிமை வாழ்வில் இருப்பதையும் பேசுகிறது.
சமூக ஆர்வலர்கள் என்னதான் நினைத்து அக்குழந்தைகளை மீட்டெடுக்க நினைத்தாலும் வறுமை காரணமாக அதிகாலை மூணு மணிக்கே எழுப்பு வேனில் ஏற்றி அனுப்பப்படும் குழந்தைகள் காலை 7 மணி முதல் இரவு ஆறு அல்லது 7 மணி வரை குச்சி அடுக்கி  விட்டு, அதே வேனில் இரவு பத்து அல்லது 11 மணிக்கு வீடு வந்து சேருகிறார்கள்.
காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மட்டும் வேலை பார்க்க வைக்க வேண்டும் என்று முதலாளிகளே சொன்னாலும், குறைவான நேரம் வேலை பார்த்தால் குறைவான கூலிமட்டுமே கிடைக்கும் என்பதால், பெற்றோர்களே குழந்தைகளை காலை 3 மணிக்கு எழுப்பி அனுப்புவதில் குறியாக இருக்கும் அளவுக்கு வறுமை முக்கிய காரணியாக இருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது.
இதில் உச்ச பட்சமாக ஒரு கடுமையான மழை இரவில் தீப்பெட்டி ஆபீஸ் சென்ற குழந்தைகள் வேனுடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இரண்டு குழந்தைகள் மட்டுமே தப்பிப்பார்கள்.
குழந்தைகள் மரணம் காரணமாக தேசமே பொங்கி எழப்போகிறது என்று பார்த்தால் கம்பெனி 5 ஆயிரம் ரூபாய், அரசு 5 ஆயிரம் ரூபாய் ஆக 10 ஆயிரம் ஒரு குழந்தை சாவுக்கு வழங்கப்படும்.
இந்த அறிவிப்பை கேட்டதுமே மூணு பிள்ளைகளை பறிகொடுத்த பெண் கூட, 30 ஆயிரத்தை வெச்சு வீடு கட்டலாமா, புடவை, பித்தளை சாமான் வாங்கலாமா என்று கணக்குப் போடத்தொடங்கி விடுவாள்.
உயிர் பிழைத்த இரண்டு குழந்தைகளின் தாய், நீங்கள் ஏன் தப்பிச்சீங்க. செத்துருந்தா எனக்கும் இருபதாயிரம் கிடைச்சிருக்குமே என்று தங்கையை காப்பாற்றிய சிறுவனை அடித்து உதைப்பாள்.
அங்கே பணம் இல்லாமை என்பது ஊரில் எல்லாரையும் போல நம்ம பிள்ளையும் செத்திருந்தால் நமக்கும் பணம் கிடைத்து வசதியாயிருக்கலாமே என்று தாயே பேசுவதாக கதை அமைந்திருந்தது. இதை கதை என்று என்னால் கடந்து செல்ல முடியவில்லை. வறுமையின் கோரப் பிடியின் அபாயத்தைதான் உணர்ந்தேன்.
பணம் இல்லாமல் வறுமையில் உழல்பவர்களின் உலகம் இது என்றால், இங்கே கோடிகள் செலவு செய்து பாதிக்கப்பட்டவரில் இருந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஆட்கள் வரை பணத்தால் அடித்து பணத்திமிரில் தப்பு செய்யும் பிள்ளைகளை காப்பாற்றும் பெற்றோரைக் கொண்ட உலகமும் இருக்கிறது.
ஒருபுறம் ஹோட்டல், கல்குவாரி, செங்கல் சூளை என்று எவ்வளவோ இடங்களில் சில குழந்தைகள் சாப்பிடவும் தூங்கவும் கூட நேரமின்றி உழைத்து சிதைந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்னொருபுறம் பணத்திமிரில் (நான்தான் கஷ்டப்பட்டேன், அதனால என் புள்ளை கஷ்டப்படக்கூடாது என்று பிள்ளைகளை தரமற்றவர்களாக வளரச் செய்யும் லோயர் மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ், ஏழையாக இருந்தாலும் சேர்க்கையினாலும் பழக்க வழக்கத்தினாலும் நாசமாகும் ஆண், பெண்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்.) இருக்கும் நேரத்தில் என்ன செய்வது என்று பொழுது போகாமல் பலரின் வாழ்க்கையை நாசமாக்கும் வாரிசுகளும் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு அவன் கொலை செய்தாலும் அதை தப்பு இல்லை என்று ஆதரிக்கும் பெற்றோரும் குற்றத்துக்கு ஒரு முக்கியமான முதல் காரணம்னுங்குறதை யாராலும் மறுக்க முடியாது.
ஒரு பையன் இன்னொருத்தருக்கு வெளிப்படையான பாதிப்பை ஏற்படுத்தாத வரை அடுத்த வீட்டுக்காரன், ஏன் இப்படி செய்யுறன்னு கேட்டா, அதைக் கேட்க நீ யாருன்னு கேள்வி கேட்டவர் மேலயே பாயுவான். ஆனா பெற்றவர்களுக்கு அந்த உரிமை இருக்கு. அதையும் மீறி பெத்தவங்களையே ஒருத்தன் மதிக்காம எதிர்த்தா, வளர்ப்பு சரியில்லைன்னுதான் சொல்லணும்.

No comments:

Post a Comment