நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, March 29, 2019

நச்சு வாயுவிடமிருந்து தேவை எச்சரிக்கை


திருவாரூர் சரவணன்
கட்டுரை
29–03–2019
சமீபத்தில் சென்னையில் ஸ்ரீபெரும்புதூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து சென்ற பிறகு உள்ளே பார்த்த வீட்டின் உரிமையாளரும், அவரை காப்பாற்றலாம் என்று நினைத்து இறங்கிய அவரது மகன்கள், அந்த வீட்டில் குடியிருப்பவர்கள் கடைசியாக சாலையில் நடந்து சென்றவர் கூட உயிரிழந்திருக்கிறார்கள். 

அவர்களது உடல்களை மீட்கச் சென்ற தீயணைப்பு வீரரும் துணியை மட்டும் முகத்தில் கட்டிக் கொண்டு இறங்கியதால் நச்சு வாயுவை சுவாசித்ததன் காரணமாக மயங்கி, உடனடியாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதால் காப்பாற்றப் பட்டிருக்கிறார்.
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதில் முழுவதும் இயந்திரம் பயன்படுத்த வேண்டும், மனிதர்கள் ஈடுபடுத்தப் படக்கூடாது என்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் அதிகமாக தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 அப்படி இருந்தும் செயற்கைக்கோள், விண்வெளி என்று எவ்வளவோ சாதனைகளை செய்து வரும் நம் நாட்டில் கழிவுநீர் சுத்தம் செய்வதில் முழுவதுமாக இயந்திரங்களை பயன்படுத்துவதில் இன்னும் தேக்க நிலை நீடிக்கிறது.
கழிவுநீர் தேக்கத் தொட்டியில் மீத்தேன் உள்ளிட்ட ஆபத்து விளைவிக்கும் பல்வேறு நச்சு வாயுக்கள் இருக்கும் என்றும், சரியான பாதுகாப்பு ஏற்பாட்டுடன்தான் அத்தகைய தொட்டிக்குள் இறங்க வேண்டும் அடிப்படையான விழிப்புணர்வும் எச்சரிக்கை ஏற்பாடுகளும் படித்தவர்களுக்கே சரியாக தெரியவில்லை என்பதே உண்மை.
எனவே இது போன்ற பாதுகாப்பு விதிகள், விழிப்புணர்வு தகவல்களை பள்ளி மாணவர்கள், மாணவிகள் முதல் சாமானியர்கள், அதிகம் படித்தவர்கள் என்று அனைவருக்கும் சென்று சேரும் வகையில் பரப்புரை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும் இத்தகைய கழிவுநீர் தொட்டிகளை அதற்குரிய வாகனங்கள் மூலம் இயந்திரங்களை வைத்து சுத்தம் செய்தால் மட்டும் போதாது. அதற்குள் உள்ள நச்சு வாயுக்களையும் முழுமையாக பாதுகாப்பான முறையில் வெளியேற்றும் தொழில்நுட்பத்தை பரவலாக ஒவ்வொரு நகராட்சி, ஊராட்சி அளவில் கூட பயன்படுத்த அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்வார்களா?
-லெட்சுமிபிரியா.  

No comments:

Post a Comment