நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Saturday, June 08, 2019

செங்கம் டிராவல்ஸ் - 13

தொடர்ந்து பேசிய மலர்விழி,
‘‘முரண் அப்படின்னு சுஜாதாவோட கதை படிச்சிருக்கேன். ஒரு பள்ளிக்கூட வேன் ஓட்டுநர் 30 வருசமா விபத்தில்லாமலும் எந்தவித குற்றச்சாட்டுக்களும் இல்லாம பணியாற்றி இன்று ஓய்வு பெறுவதால் அவருக்கு இந்த பாராட்டு விழான்னு சொல்லி விலை உயர்ந்த கடிகாரம் பரிசளிப்பாங்க.
விழா முடிஞ்ச பிறகு வழக்கம்போல மாணவ மாணவிகளை வீட்டுக்கு கொண்டு போய் விடப்போற பணி நிறைவுநாள் பயணம்.
ஒவ்வொருத்தரா இறக்கி விட்டதுக்கு அப்புறம் கடைசியா ஒரு பொண்ணு மட்டும் புத்தகம் படிக்கிறதுல கவனமா இருப்பா.



அவள் வீடு இருக்கும் வழக்கமான பாதையை விட்டுட்டு ஏதோ காட்டுப்பகுதிக்குள் பேய் இரைச்சலுடன் வேன் சென்று கொண்டிருந்ததுன்னு கதை முடியும்.
இதை பயமுறுத்துறதுக்காக சொல்லலை. ஏன்னா டூவீலரைக் கூட ஒழுங்கா ஓட்டத் தெரியாத உன் ஆளு இன்னைக்கு நல்ல பஸ் டிரைவரா இருக்கலாம். ஆனா அவன் மனசு நாளைக்கு எப்படி ஆகும்னு தெரியாது.
அதுக்காக எல்லாத்தையும் சந்தேகப்பட வேண்டாம். நான் சொன்னதை விட்டுடு.
படிக்காத கணவன் தன்னோட மனைவியை கலெக்டராக்கி அழகு பார்க்குறதெல்லாம் சூர்ய வம்சம் மாதிரி படங்கள்லதான் சாத்தியம். நிஜ வாழ்க்கையில ரொம்ப குறைவான எண்ணிக்கையிலதான் அந்த மாதிரி மனம் ஒத்து சிறப்பா வாழ்ற தம்பதிகள் இருக்காங்க.
உனக்கு உண்மையிலேயே அவன் மேல ஆசை இருந்தா அவனை கல்யாணம் பண்ணிக்குறது தப்பில்லை... ஆனா, சினிமாவுல வர்ற மாதிரி என்னை கீழே தள்ளி அடிபட்டு, காயத்துக்கு தையல் போட வெச்ச அவன்தான் எனக்கு புருசனா வரணும் அப்படி இப்படின்னு உன் மனசுக்குள்ளயே ஏதாவது சபதம் எடுத்திருந்து அதை நிறைவேத்துறதுக்காக அவனை கல்யாணம் பண்ணிக்க நினைச்சா அது தப்பு.
ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் தாழ்வு மனப்பான்மை, ஈகோ சுழல்ல சிக்கினாலும் குடும்பம் அலங்கோலம்தான்... ஏன்னா, நீ ஒரு ஆபீஸ்ல அசிஸ்டெண்ட் மேனேஜர் லெவல்ல இருக்க. அவன் டிரைவர்தான். அதையும் பார்த்துக்க... எல்லாத்தையும் யோசிசு இனிமே முடிவெடுக்க வேண்டியது நீதான்...’’ என்றாள் மலர்விழி.
‘‘எத்தனையோ ஆண்களை பார்த்திருக்கேன்... பேசியிருக்கேன்... அவங்க கிட்ட பழகும்போதெல்லாம் ஏதோ பக்கத்துவீட்டுக்காரங்க, கூட வேலை பார்க்குறவங்க... இவங்க எல்லாருமே சக பயணி..., சமுதாயத்துல இன்னும் ஒரு ஆள் அப்படின்னுங்குற அளவைத் தாண்டி எதுவும் தோணலை.
ஆனா, பத்து வருசம் கழிச்சு பார்த்தப்போ கூட இவனைப் பார்த்ததும் அவன் கிட்ட போய் பேசவும் முடியாம, அவனும் வந்து பேசலியேன்னு என் மனசு இவ்வளவு தவிச்சிருக்குன்னா, அவன் யாரோ ஒரு ஆள், அவ்வளவுதான்னு நினைக்க முடியலை... எந்த வேலை பார்க்குறான்னுங்குறது முக்கியம் இல்லை. எவ்வளவோ பெரிய பொறுப்பான பதவிகள்ல இருக்குற ஆண்கள் சைக்கோ மாதிரி நடந்துகிட்டு மனைவி, குழந்தைகளை கொடுமைப்படுத்துற செய்திகளையும் நாம கேள்விப்பட்டுகிட்டுதானே இருக்கோம்... அதனால அவன் டிரைவர் வேலை பார்க்குறது எனக்கு பிரச்சனை இல்லை.
இன்னொரு விஷயம்... நான்தான் அவனை பார்த்ததும் உருகிட்டு இருக்கேன்... அவன் மனசுல என்ன இருக்குன்னு தெரியலை... முக்கியமா அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சான்னு தெரியலை...
வேற எங்கயாச்சும் பார்த்திருந்தா நேரடியாவே போய் ஒரு பிரண்டுகிட்ட பேசுற மாதிரி பேசியிருக்கலாம்...
இப்போ, இவ்வளவு சொந்தக்காரங்க மத்தியில எப்படி போய் விசாரிக்கிறதுன்னுதான் ஒரே யோசனையா இருக்கு... அவன் நம்பர் கிடைச்சாகூட சந்தோஷம்தான்...
இல்லன்னா என்ன, செங்கம் டிராவல்ஸ்... இந்த ஒரு பேரை வெச்சு மன்னார்குடியில இவனைக் கண்டுபிடிக்கிறதா பெரிய காரியம்...’’ என்றாள் அர்ச்சனா.
தான் பேசி முடித்து விட்டதால் வரதராஜன், அப்போதே சினிமா பாடல்களை தொடர்ந்து ஒலிக்கச் செய்தான். பேருந்தில் அந்த சத்தம் ஓரளவு இருந்ததால் அர்ச்சனாவும், மலர்விழியும் பேசிக் கொண்டது மற்றவர்கள் காதில் விழவில்லை.
பூஜை சாமான்கள் வாங்க சென்றிருந்தவர்கள் அரைமணி நேரத்திற்குள்ளாகவே எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு திரும்பி வந்து விட்டார்கள்.
அன்பழகனின் மருமகன் பேருந்தில் ஏறியதும், ‘‘போலாம் ரைட்...’’ என்றான்.
‘‘உங்களுக்கு ஏன் சார் சிரமம்... ரைட் கொடுக்க நம்ம அசிஸ்டெண்ட் பிரபு பின் வாசல்கிட்ட இருக்காரு...’’ என்றதும் அங்கிருந்து விசில் சத்தம் கேட்டது.
மீண்டும் பேருந்து இளையான்குடி ரோட்டில் பயணிக்கத் தொடங்கியது.
இளையான்குடியிலிருந்து சாலைக்கிராமம் செல்லும் சாலையில் வாணி என்ற கிராமத்தில் இருந்த குலதெய்வக் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு அரை மணி நேரத்தில் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள்.
கோயிலிலிருந்து புறப்படும்போது விஜயகுமார், ‘‘தம்பி... எங்களுடைய வேலைகள் முடிஞ்சிடுச்சு... இனிமே யாராச்சும் அவசரத்துக்கு ஒதுங்கணும்னு கேட்டா தவிர வேற எங்கயும் நிறுத்த வேண்டிய அவசியம் இருக்காது. மத்தபடி டீ, காபி குடிக்கிறதைப் பத்தி இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு முடிவு பண்ணிக்கலாம்...’’ என்றார்.
பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சாலைக்கிராமம், ஆர்.எஸ்.மங்கலம் வழியாக சென்று கிழக்கு கடற்கரைச்சாலையில் உப்பூர் என்ற இடத்தில் இணையும் ரோட்டில் பயணித்துக் கொண்டிருந்தது. கணிசமான அளவில் வளைவுகள், பள்ளங்கள் நிறைந்த சாலை என்பதால் மிதமான வேகத்தில்தான் வரதராஜன் பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்தான்.
ஊருக்கு சென்ற பிறகு வரதராஜனின் செல்போன் எண்ணை வாங்குவது பெரிய விஷயமில்லைதான். ஆனால் அர்ச்சனாவுக்கு அதுவரை பொறுத்திருக்க முடியும் என்று நம்பிக்கையில்லை.
மனித மனத்தின் இயல்பு இதுதான். ஒரு விஷயம் கிடைக்காமலோ பார்க்காமலோ ஆண்டுக் கணக்கில் காத்திருப்பார்கள். ஆனால் பார்த்துவிட்டால் உடனே அதை வாங்கி விடவேண்டும் அல்லது அடைந்து விட வேண்டும் என்ற ஆவல் எழுவதை தவிர்க்க முடியாது.
பத்து ஆண்டுகளில் மிஞ்சிப்போனால் அவனைப் பற்றி பத்து தடவை வரதராஜனைப் பற்றி நினைத்திருப்பாள். மூன்று நான்குமுறை மலர்விழியிடம் அவனைப் பற்றி பேசியிருப்பாள். ஆனால் விபத்தினால் ஏற்பட்ட காயத்திற்கு போட்ட தையலின் தழும்பை தினமும் குளிக்கும்போது வருட வேண்டி இருக்கும்போது கூட வரதராஜனின் நினைவு பெரிதாக வந்ததில்லை.
ஆனால் நேற்று காலை வரதராஜனை நேரில் பார்த்ததில் இருந்து காரணம் புரியாமலேயே அவனிடம் பேச வேண்டும் என்று தவித்துக்கொண்டிருந்தாள்.
சுமார் ஒரு மணிநேரம் கழித்து விஜயகுமார், ‘‘தம்பி... மணி ஆறரைதான் ஆகுது. அதனால அடுத்து வர்ற ஊர்ல நிறுத்தி டீ சாப்பிட்டுட்டு போயிடலாம்...’’ என்றதும், ‘‘சரிங்க...’’ என்றான் வரதராஜன்.
அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள்ளாகவே எதிர்ப்பட்ட ஊர் மணல்மேல்குடி.
கடைத்தெரு பகுதியிலேயே காவல்நிலையம் அமைந்திருந்தது. அந்த இடத்துக்கு எதிரே போலீசாரின் வாகன தடுப்பு (பேரிகார்டு) இருந்தது. சாலை ஓரத்தில் பேருந்தை நிறுத்துவதற்கு தாராளமாக இடம் இருந்ததால் அங்கேயே வரதராஜன் நிறுத்தினான்.
காவல்நிலையத்திற்கு எதிரில் ஒரு உணவு விடுதி இருந்தது. அதன் வாசலில் ஒரு கண்ணாடி ஸ்டால். பஜ்ஜி, போண்டா ஆகியவை அந்த ஸ்டாலுக்குள் அழகாக அமர்ந்து கொண்டு கூப்பிட்டதும், பேருந்தில் இருந்து இறங்கியவர்களில் பலரும் அந்த கடைக்குள் சென்று விட்டார்கள்.
பேருந்தின் சக்கரங்களை பரிசோதித்து விட்டு, சற்று நேரம் தாமதமாகத்தான் வரதராஜனும் அவனுடைய உதவியாளரும் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
சிலர் பேருந்திலேயே அமர்ந்திருந்ததால் அவர்களுக்கு பஜ்ஜி, போண்டா, காபி டீ என்று வாங்கிக் கொடுப்பதற்காக பேருந்துக்கும் கடைக்குமாக சிலர் அலைந்து கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது. அப்படியும் மீதமிருந்தவர்கள் கடைக்குள் உட்கார இடம் இல்லை.
அதனால் கடைக்கு வெளியே நின்று கொண்டேதான் மலர்விழி தன் மகளுக்கு போண்டாவை பிய்த்து சிறு சிறு துண்டுகளாக தந்து கொண்டிருக்க, அர்ச்சனா ஒரு பஜ்ஜியை தின்று கொண்டிருந்தாள்.
அப்போது வேதாச்சலம், டீ வாங்கிக் கொண்டு வரதராஜன் அருகில் சென்று அவனிடம் ஏதோ பேசிக் கொண்டே டீ குடிக்க ஆரம்பித்தார்.
‘‘அர்ச்சனா... நீ உன் முடிவுல எந்த அளவுக்கு துணிச்சலா இருக்கன்னு ஒரு டெஸ்ட் வைக்கவா...’’ என்றாள் மலர்விழி.
’’என்ன... அலைபாயுதே படத்துல மாதவன் ஷாலினிகிட்ட லவ்வ சொல்ற மாதிரி நான் வரதுகிட்ட என் லவ்வ சொல்லணுமா...’’ என்றாள்.
‘‘அட... இதுவரைக்கும் அவன், இவன்னு சொல்லிகிட்டு இருந்த, இப்போ செல்லமா ‘வரது’ன்னு அவன் பேரை சுருக்குற... என் லவ்வுன்னு உன் வாயாலயே சொல்லிட்ட... கலக்குறே அர்ச்சு...’’ என்று சிரித்தாள் மலர்விழி.
‘‘சினிமாவுல வர்ற காட்சிகளை அப்படியே வாழ்க்கையில நடத்திப்பார்த்தா தொலைஞ்சோம்... நீ என்ன டெஸ்ட் வைக்கப்போற... அதை சொல்லு...’’
‘‘நம்ம தாத்தாவோட சேர்ந்து பேசுறமாதிரி, அடுத்து ஏதாவது பங்ஷன்னா உங்களைத்தான் கூப்பிடணும்... நம்பர் வாங்கிக்குங்க தாத்தான்னு கேளு...
என் கெஸ்சிங் என்ன தெரியுமா... இதைக்கூட உன்னால பேச முடியாது... ப்பே... ப்பே...ன்னு உளறிட்டு வந்துடுவ... என்ன பெட்....’’
‘‘பந்தயமெல்லாம் வேணாம்... ஆனா நான் நம்பர் வாங்கிக் காட்டுறேன் பாரு...’’ என்றவள் அடுத்து மலர்விழி என்ன சொல்கிறாள் என்று காத்திராமல் வரதராஜன் அருகில் சென்றாள்.
அர்ச்சனாவைக் கண்டதும் வேதாச்சலம், ‘‘என்னம்மா... அடுத்து கூடிய சீக்கிரம் உனக்கும் வரன் அமைஞ்சுட்டா உன்னோட கல்யாண விசேசம்தான்... நீ எப்ப கல்யாண சாப்பாடு போடப்போறே...’’ என்றார்.
‘‘அது இருக்கட்டும் தாத்தா... இவர்கிட்ட நம்பர் வாங்கிட்டீங்கிளா... அடுத்து ஏதாவது விசேஷம்னா இவரையே கூப்பிடலாம்...’’ என்று சொல்லிவிட்டு பஜ்ஜியை தின்று கொண்டே ஓரக்கண்ணால் வரதராஜனைப் பார்த்தாள். அவன் முகத்தில் புன்சிரிப்பு எட்டிப்பார்த்தது.
அப்பாடா... முதன்முதலா உன் முகத்துல சிரிப்பை பார்க்குறேன் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
‘‘உன் பெரியப்பன் கல்யாணம் வெச்சது மதுரையில. கார், வேன் எதுவும் வேணான்னு சொல்லி பஸ் பிடிச்சான். இனி நம்ம நெருங்குன சொந்தத்துல யார் இவ்வளவு தூரதேசத்துல கல்யாணம் பண்ணப் போறாங்க?...
அப்படி செஞ்சாலும் பொங்கல் லீவை ஒட்டி வந்ததால இத்தனை பேர் வந்தீங்க... உன் பெரியப்பனும் எல்லார் வீட்டு விசேசத்துக்கும் முதல் ஆளா பொண்டாட்டியோட போய் நிப்பான். அதனால அவன் பையன் கல்யாணத்துக்கு இத்தனை பேர் சந்தோஷமா கிளம்பி வந்தாங்க. மத்த நாள்ல இந்த மாதிரி ஒரு பயணம் அமையுறது எந்த அளவுக்கு சாத்தியம்னு தெரியலை.
அப்படியே யாராச்சும் கல்யாணம் வெச்சா கார், வேன்னுதான் புடிப்பாங்க... சிங்கத்தை பிடிச்சு சைக்கிள் ஓட்ட வைக்கிற மாதிரி, பஸ் ஓட்டுன தம்பியை கார் வேன் ஓட்ட சொல்லலாமா...’’ என்றார்.
அவன் என்ன பதில் சொல்லப்போகிறான் என்று அர்ச்சனா ஆர்வமானாள்.
அவர்கள் அருகே சென்றதுமே அர்ச்சனா ஏதோ பேசியதை மலர்விழி கவனித்ததால் அவளுக்கும் அங்கே நடைபெறும் உரையாடல்களை கேட்க வேண்டும் என்ற ஆசை வந்ததால் அவளும் அங்கே நெருங்கி வந்தாள்.
வேதாச்சலம் கேட்டதற்கு வரதராஜன், ‘‘ஐயா... பஸ் ஓட்டுறதால கார், வேன் ஓட்டினா கவுரவக்குறைச்சல்னு நினைக்குற ஆள் நான் கிடையாது. ஆனா என்னால கமிட் ஆக முடியாது. நான் வேற வேலைக்கு போகப்போறேன்...’’ என்றான்.
‘‘ஒரே வேலையில காலம் பூரா இருக்கணும்னு அவசியம் இல்லை. இதை விட நல்ல வேலைன்னா தாராளமா போகலாம்... புதுசா பார்க்கப்போறது என்ன வேலை?’’ என்றார் அவர்.
வரதராஜன் பதில் சொல்லாமல் தயங்கி நின்றான்.
‘‘ஏன் தம்பி... உண்மையிலயே வேற வேலைக்கு போகப்போறியா?... இல்ல, இனிமே எங்க பேமிலியில யாருக்கும் வண்டி ஓட்ட வேணாம்னு நினைச்சு பொய் சொல்றியா?’’ என்று கேட்டார்.
‘‘இல்ல சார்... புது வேலைக்கு போகப்போறது நேத்து சாயந்திரம்தான் எனக்கே தெரியும். அது என்ன வேலைன்னு சொன்னா நீங்க கிண்டல் பண்றியான்னு கேட்பீங்க... அதான் எப்படி சொல்றதுன்னு யோசிக்கிறேன்.’’ என்று புதிராக பேசினான் வரதராஜன்.
அடுத்த இதழில் கதை நிறைவடையும்...

No comments:

Post a Comment