நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, June 21, 2019

காதலன் திரைப்படத்தில் காக்கர்லா சத்யநாராயணா...

சிறந்த நாடக, நாவல் எழுத்தாளர், ஞானபீட விருது பெற்றவர், திரைப்பட இயக்கத்திற்கு கூட விருதுகள் பெற்றிருக்கிறார் என்றால் இவரை யாருக்கும் தெரியாது.
ஆனால் காதலன் படத்தில் நக்மாவின் தந்தையாக நடித்த வில்லன் நடிகர், அந்த கதாபாத்திரத்தின் பெயர் காக்கர்லா சத்யநாராயணா என்றால் நிறைய பேருக்கு தெரியும்.
கிரிஷ் கர்னாட் 1994ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருதும், 1998ல் கன்னடத்திற்காக ஞானபீட விருது உள்ளிட்ட பல விருதுகளை திரைப்பட இயக்கம், திரைக்கதை, நாடகம் உள்ளிட்டவகளுக்காக பெற்றுள்ளார்.
அவர் 1980களிலேயே நான் அடிமை இல்லை என்ற ரஜினி படத்தில் ஸ்ரீதேவியின் தந்தையாக நடித்திருந்தாலும், 1994ல் காதலன் பட வில்லனாக நடித்ததைத்தான் நான் முதலில் பார்த்தேன். அது நான் பள்ளியில் படித்த காலம் என்பதால், ரகுவரன், கிரிஷ் கர்னாட்இருவரும் பேசிக்கொள்ளும் வசனத்தை பேசி பார்ப்போம்.

 உதாரணம் : கிரிஷ் கர்னாட் சொன்னதால் ரகுவரன் வெடிகுண்டு வைத்து அது வெடித்த காட்சிகள் அடங்கிய வீடியோவை பிரபுதேவா தூக்கிச் சென்று விட்டதாக சொன்னதும்,
கிரிஷ் கர்னாட் மிகவும் சாதாரணமாக, முட்டாள்... இவ்வளவு அலட்சியமா இருந்துருக்க. எனக்கு ஒண்ணும் இல்லை... என்னால முடிஞ்சது காசியில உனக்கும் பிண்டம் வெக்கிறதுதான்... என்பார்.
அப்போது ரகுவரன் நக்கலாக சிரித்துவிட்டு, இப்படி எதாவது நடக்கும்னு தெரியும். அதனாலதான் நீங்களும் நானும் பேசியதை அப்படியே ரெக்கார்ட் பண்ணி வெச்சிருந்தேன். அதையும் அவன் தூக்கிட்டு போயிட்டான். என்பார்.
அதிர்ச்சியடையும் கிரிஷ் கர்னாட், என்னய்யா குண்டு மேல குண்டா தூக்கிப் போடுற? என்பார்...
அதற்கு ரகுவரனின் பதில், என் தொழிலே அதானே.... என்று சொல்லுவார்.
இப்படி பல காட்சிகள் மற்றும் வசனங்களை சொல்லலாம்.
இப்போதெல்லாம் வில்லன் பேசுவதை விட, ஏய்... ஏய் என்று அதிகம் கத்துவதை பார்க்கிறோம். ஆனால் அவ்வளவு பெரிய க்ரைம் செய்பவர்கள் மிக மிக அமைதியான நபர்களைப் போல் உரையாடுவார்கள். அந்த வில்லத்தனமே அதிரச் செய்யும். காதலன் படத்தில் குரலை வைத்து பார்க்கும் போது கிரிஷ் கர்னாட்டுக்கு குரல் கொடுத்திருப்பது இயக்குநரும் நடிகருமான கிட்டி என்ற ராஜா கிருஷ்ணமூர்த்தி என்று நினைக்கிறேன். இது யூகம்தான். இது சரியாகவும் இருக்கலாம். அல்லது உண்மையில் வேறு யாராவது டப்பிங் பேசியிருக்கவும் கூடும்.
19-05-1938ல் பிறந்த கிரிஷ் கர்னாட் 10-06-2019ல் 81 வயதில் காலமானார். அவருக்கு சோலைமலை வாசகர்களின் கண்ணீர் அஞ்சலி.

-திருவாரூர் சரவணன்

No comments:

Post a Comment