நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, June 14, 2019

செங்கம் டிராவல்ஸ் - 14

பகுதி - 14
‘‘நல்ல திறமைசாலியா இருக்கியேன்னு பாராட்டுனா ரொம்ப பிகு பண்றியேப்பா... அதனாலதான் அந்த காலத்துல யாரையும் முகத்துக்கு நேரே புகழக்கூடாதுன்னு சொல்லுவோம்...’’ என்று அலுத்துக்கொண்டார் வேதாச்சலம்.
‘‘அதானே... போன் நம்பரைக் குடுக்க ஏன் இவ்வளவு பில்டப்... சவாரி போகணும்னா மட்டும்தான் கூப்பிடணுமா? வேற செய்தி பேசறதுக்காக கூப்பிடக்கூடாதா?’’ என்று அர்ச்சனா சொல்லவும் அவளைப் பார்த்த வரதராஜன் முகத்தில் சந்தோஷம். அவள் முகத்திலும் பூரிப்பு தெரியவே அவனுக்கு அர்ச்சனாவின் மனதில் உள்ளது புரிந்து விட்டது.

உற்சாகத்துடன் பிரபுவைப் பார்த்த வரதராஜன், ‘‘நண்பா... அந்த நியூஸ் பேப்பரை எடுத்துட்டு வா...’’ என்று சொன்னான். அதற்காகவே காத்திருந்ததைப் போல் துள்ளிக்குதித்து பேருந்துக்குள் சென்ற பிரபு சில நொடிகளிலேயே திரும்பி இறங்கி வரும்போது அவன் கையில் மடித்து வைக்கப்பட்டிருந்த நாளிதழ்.
‘‘என்னடி... எதுவும் வெளிநாட்டு வேலைக்கு போறதுக்காக செலக்சன் பட்டியலை பேப்பர்ல போட்டிருக்காங்களா... இல்ல, அரியர் ரிசல்ட் எதுவும் வந்துடுச்சா?’’ என்றாள் மலர்விழி.
வரதராஜன் பேப்பரை வாங்க கையை நீட்டிய போது பிரபு, ‘‘இருங்கண்ணே...’’ என்று சொல்லிவிட்டு அவனே பேப்பரைப் பிரித்து குறிப்பிட்ட பக்கத்தில் ஒரு செய்தி மட்டும் தெரியுமாறு மடக்கி பெரியவரிடம் கொடுப்பதா, அர்ச்சனாவிடம் கொடுப்பதா என்று ஒரு கணம் தடுமாறி நின்றான்.
‘‘நான் கண்ணாடி போட்டுத்தான் படிக்கணும்... நீயே என்ன செய்தின்னு சொல்லு’’ என்று அர்ச்சனாவை கை காட்டியதும் அவள் ஆர்வமாக வாங்கிப் பார்த்தாள்.
தமிழக அரசின் குரூப் 1 தேர்வு முடிவுகள்; தேர்ச்சி பெற்ற முதல் பத்து பேரில் ஒருவர் மட்டுமே ஆண் என்ற தலைப்புக்கு கீழே இருந்த 10 புகைப்படங்களில் இருந்த ஒரே ஆணின் புகைப்படம் வரதராஜனுடையது.
‘‘தாத்தா... டிஎன்பிஎஸ்சியில குரூப் 1 எக்ஸாம்ல பாஸ் பண்ணியிருக்காரு... இங்க பாருங்க போட்டோவை...’’ என்று பெரியவரிடம் கொடுத்துவிட்டு
வரதராஜனிடம், ’’கங்ராஜுலேசன்ஸ்...’’ என்றாள் அர்ச்சனா.
பெரியவர், ‘‘சூப்பர் தம்பி... என்ன போஸ்டிங் போடுவாங்க?’’
’’சப் கலெக்டர்...’’ என்றான். வேற வேலைன்னா என்ன வேலை என்று கேட்டதற்கு இந்த பேப்பர் செய்தியைக் காட்டாமல் சப் கலெக்டர் என்று சொல்லியிருந்தால் கண்டிப்பாக யாராக இருந்தாலுமே என்ன கிண்டலா என்றுதான் கேட்பார்கள். அதைப் புரிந்துகொண்ட அர்ச்சனா, மலர்விழி, வேதாச்சலம் ஆகிய மூவருமே சிரித்தார்கள்.
‘‘என்னதான் நீ திறமையான டிரைவரா இருந்தாலும் இவ்வளவு சின்ன வயசுல உனக்கு பள்ளிக்கூட பஸ் டிரைவர் வேலை கொடுத்ததே பெரிய விசயம்... அதுவே எனக்கெல்லாம் கொஞ்சம் ஆச்சர்யமாத்தான் இருக்கு... இதுல கவர்மெண்ட் வேலை எப்படிப்பா?’’ வேதாச்சலத்திடமிருந்து அடுத்த கேள்வி.
‘‘ஸ்கூல் பஸ் ஓட்டுறதுன்னா பெரும்பாலும் காலையில ரெண்டு மணி நேரம் சாயந்திரம் ரெண்டு மணி நேரம்தான் அதிகபட்ச வேலை இருக்கும். அதனால சம்பளம் குறைவுதான். அதனாலதான் குடும்ப பாரம் சுமக்குற, அதிகமான கமிட்மெண்ட் வெச்சிருக்குறவங்க பெரும்பாலும் ஸ்கூல் பஸ் ஓட்ட வர மாட்டாங்க.
வேறு சிலர் அப்படி வந்தாலும் பகல் நேரத்துல நிறைய பேர் ஆக்டிங் டிரைவராவோ, சொந்த ஆட்டோ, கார் ஓட்டுறதுக்கு போயிடுவாங்க. அனுபவசாலியான ஆட்கள் கேட்குற சம்பளம் கொடுக்க முடியாததாலதான் எனக்கு வேலை கொடுத்தாங்க. அதுவும் அவ்வளவு சீக்கிரமா ஸ்கூல் பஸ் ஓட்ட அனுமதிக்கலை.
நான் காலேஜ் படிக்கிறப்ப மூணு வருசம் உதவியாளரா போனாலும், ஹெவி லைசென்ஸ் எல்லாம் எடுத்த பிறகு ரெண்டு வருசம் என்னைய மற்ற வாகனங்கள் ஓட்ட சொல்லி பார்த்துட்டுதான் ஸ்கூல் பஸ் ஓட்டுற வேலை கொடுத்தாங்க.
சம்பளம் குறைவுதான்னு அவங்களும் உணர்ந்திருந்ததால எனக்கு பகல்ல ஸ்கூல் நடக்குற நேரத்துல பள்ளிக்கூட நூலகத்தை பயன்படுத்திக்க நிர்வாகத்துல அனுமதி கிடைச்சது... காலையில இருந்து மதியம் வரை பள்ளி நூலகத்தை பயன்படுத்திகிட்டு, மதியம் சாப்பாட்டுக்கு பிறகு ஒரு மணி நேரம் நல்ல ஓய்வெடுப்பேன்.
 சாயந்திரம் அதிகபட்சம் ஆறு மணிக்கெல்லாம் டிரிப் முடிஞ்சிடும்... டி.வி, ஆண்ட்ராய்டு போனை பொழுதுபோக்குக்கு பயன்படுத்தாம இருந்தா ஏழு மணியில இருந்து பத்து மணி வரை கிடைக்கிற நேரம் இருக்கே... அதை எவ்வளவு பிரமாதமா பயன்படுத்தலாம் தெரியுமா?
இது தவிர காலையில ஏழு மணிக்கு நான் கிளம்புனா போதும். ஏற்கனவே நான் பேப்பர் போடுறதுக்காக நாலு நாலேகாலுக்கு எழுந்து பழக்கப்பட்டிருந்ததால அந்த பழக்கம் தொடர்றதுல எனக்கு சிரமம் இல்லை... இப்ப சொல்லுங்க... இவ்வளவு ஓய்வு நேரம் கிடைச்சு, வேலை செய்யுற நேரத்துலயும் படிக்கிற மாணவர்களோடயே இருந்து, 6 வருசம் தொடர்ந்து பரிட்சைகள் எழுதிகிட்டு இருந்த நான் பாஸ் பண்ணினதெல்லாம் ஒரு விஷயமா?’’ என்றான்.
‘‘முதல்ல உங்க செல் நம்பரைக் கொடுங்க... அடுத்து, உங்க வெற்றிக்காக எனக்கு ஸ்வீட் வாங்கிக் கொடுங்க...’’ என்று வரதராஜனிடம் உரிமையுடன் கேட்டாள் அர்ச்சனா.
விஷயம் புரிந்ததால் மலர்விழியின் முகத்தில் புன்முறுவல் பூத்தது. அர்ச்சனாவின் பேச்சைப் பார்த்து தலையும் வாலும் புரியாததால் வேதாச்சலம் மலர்விழியைப் பார்த்தார். அவள் அர்த்தத்துடன் புதிய ஜோடியைப் பார்த்து தலையை ஆமோதிப்பாக தலையை அசைத்தாள்.
கதை நிறைவடைந்தது
********************
நிறைவாக சில வார்த்தைகள்
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி வயதானவர்கள் வரை பெண்களுக்கு பாலியல் தொந்தரவு செய்கிறார்கள். இவர்களில் மிக மிக குறைந்த சதவீதம் தவிர மற்ற அனைவரும் சரியான வழிகாட்டல் இன்றி கனவுலகில் சஞ்சரித்து பெண்களைக் கவர வேண்டும் என்ற எண்ணத்திலும் உடன் இருக்கும் நண்பர்களிடமும் சமூகத்திலும் ஹீரோவாக தங்களை காட்டிக்கொள்ள நினைத்து தவறிழைப்பவர்கள்தான்.
இப்படி நாம செய்யுறதால பெரிசா என்ன நடந்துடப்போகுது என்ற அலட்சியம்தான் சில நேரங்களில் உயிரிழப்பைக்கூட ஏற்படுத்தி விடுகிறது.
இளம் பருவத்தினர் வாகனங்கள் இயக்குவதிலும் சாலைவிதிகள் என்றால் என்னவென்றே தெரியாமல் அல்லது தெரிந்துகொள்ள முயற்சிக்காமல் செயல்படுகின்றனர். இந்த தவறும் களையப்பட வேண்டும்.
இன்னும் ஒரு முக்கியமான விசயம், சும்மா இருக்கும் மனிதனின் மனம் சாத்தானின் குடியிருப்பு என்ற பொருள் தரும் ஆங்கிலப்பழமொழியும் இருக்கிறது. அப்படி இருப்பவர்கள் குற்றம் செய்வது ஒரு வகை என்றால், எல்லா நேரமும் தங்களை முன்னேற்றாத பொழுதுபோக்கில் நேரத்தை செலவிட்டு தானும் முன்னேறாமல் குடும்பத்தையும் காப்பாற்றாதவர்கள் ஏராளம். இது அத்தனைக்கும் எளிய தீர்வு கிடைத்தால் எப்படி இருக்கும் என்று கதாசிரியரின் கனவே இந்தக் கதை என்று சொல்லலாம்.

No comments:

Post a Comment