நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, June 14, 2019

மைனர் மாப்பிள்ளையும்... காதல் கோட்டையும்...

1996ல் காதல் கோட்டை திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் அஜித்குமார் நடித்த மைனர் மாப்பிள்ளை என்ற படத்தின் போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்த இடத்தில் சில பள்ளி மாணவிகள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டதால் உருவான இயல்பான, எளிமையான சம்பவங்களின் தொகுப்புதான் ‘மைனர் மாப்பிள்ளையும் – காதல் கோட்டையும்’
திருவாரூரில் பிரசித்தி பெற்ற சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக் கிழமையில் ஆள் நுழைய இடம் இருக்காத அளவுக்கு கூட்டம் இருக்கும் என்பதால்தான் அறிவழகன் சாதாரண நாள் என்று நினைத்து வியாழக்கிழமையை தேர்ந்தெடுத்தான். ஆனால் தை மாதத்தில் வளர்பிறை சுபமுகூர்த்ததினம் என்பதை கவனிக்கவில்லை.
வெளியில் மண்டபங்களில் மற்ற சடக்குகளை செய்து விட்டு தாலி கட்டும் நிகழ்வை மட்டும் இந்த கோயிலில் வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. இவன் வந்து காத்திருந்த அரைமணி நேரத்திற்குள் நான்கு திருமணம் நடைபெற்று விட்டது. அதனால் கோவில் முன்புறம் இருந்த இடம் முழுவதும் இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் சென்னை அண்ணாசாலையின் போக்குவரத்து நெரிசலுக்கு சவால் விடும் வகையில் திக்கித் திணறி வெளியேறிக்கொண்டிருந்தன.
அதே நேரத்தில் இன்னொரு திருமண நிகழ்வுக்கான சடங்குகள் அனைத்தும் கோவில் கொடி மரம் அருகில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த திருமணத்திற்கு விலை உயர்ந்த கார்களில் ஆட்கள் வந்து கொண்டே இருந்தார்கள். பெரிய அளவில் வசதியான குடும்பமாக இருந்து, வேண்டுதல் காரணமாக இந்த கோயிலில் திருமணம் நடத்துகிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டான்.
அந்த வளாகத்தில் நிறைய கார்கள் வெள்ளை நிறத்தில் காத்து நிற்க, அந்த வளாகத்திற்குள் நுழையும் இடம் மிகவும் பள்ளமாக இருந்ததால் கருப்பு நிற ஆடி கார் ஒன்று மரப் பொந்தில் இருந்து ஏதோ பறவை எட்டிப்பார்ப்பது போன்ற பாவனையில் மெதுவாக நகர்ந்து, நகர்ந்து தயங்கி நின்றது. பிறகு பள்ளமாக இருந்த பகுதியில் மெதுவாக இறங்கி கோயில் வாசலில் வந்து நிற்கவும் அதிலிருந்து இரண்டு பெண்கள் லெக்கின்ஸ், டாப்ஸ் உடையணிந்து பளிச்சென்ற தோற்றத்தில் இறங்கினார்கள்.
தெரியாதவர்களுக்கு வேண்டுமானால் அவர்கள் அக்கா, தங்கை என்று சொல்லலாம். ஆனால் அவர்களைப் பார்த்த நொடியே தாயும் மகளும்தான் என்பது அறிவழகனுக்கு தெரிந்து விட்டது.
‘‘அய்யய்யோ... என்னைய விட்டுடுங்களேன்... காப்பாத்த யாருமே இல்லையா...’’ என்ற கதறல் சத்தத்தை காதில் வாங்காமல் காரிலிருந்து இறங்கியவர்களை பார்த்துக்கொண்டே, ‘அடிப்பாவி... அப்பவே பூசுன மாதிரிதான் இருப்ப... உன் பொண்ணுக்கு சவால் விடுறமாதிரி இப்ப இன்னும் கூடுதல் அழகோட இருக்கியே...’ என்ற எண்ண ஓட்டங்கள் அவன் மனதில்.
அப்போது அவன் முதுகில் சற்று வேகமாகவே தட்டிய நபரின் குரல், ‘‘வந்த வேலையை விட்டுட்டு அங்க என்ன பார்வை...’’ என்று அதட்டல் போட்டது.
ஒரு சில வினாடிகள் 1996ம் ஆண்டுக்கு சென்றிருந்த அவன், விழித்துக் கொண்டு 2019க்கு வந்து விட்டான்.
***
1996ஆம் ஆண்டு. திருவாரூர் நகரில் இப்போது போல் இவ்வளவு பள்ளிகள் கிடையாது. மேல்நிலைப்பள்ளியைப் பொறுத்தவரை ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக ஒரு பள்ளி, கடுமையான கட்டுப்பாடுகளுடன் இருபாலரும் சேர்ந்து படிக்கும் ஒரு தனியார் பள்ளி. அவ்வளவுதான்.
அறிவழகன் படித்தது ஆண்கள் மட்டும் பயிலக்கூடிய பள்ளியில்தான். பள்ளிக்கூடத்தில்தான் இப்படி என்றால் தனிப்பயிற்சி வகுப்புக்கு செல்லும் இடத்திலும் அதே கதைதான். அப்போது ஒன்பது, பத்து வகுப்புகளுக்கு தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்தி வந்த ஒரு புகழ்பெற்ற ஆசிரியர் காலையில் பெண்களுக்கும், மாலையில் ஆண்களுக்கும் என்று பிரித்து நடத்தினார்.
அதனால் பெண்ணைப் பெற்ற புண்ணியவான்களின் முதல் தேர்வு அந்த ஆசிரியர்தான்.
பள்ளியில்தான் தனியாக இருப்பது தலைவிதி என்றால், தனிப்பயிற்சி வகுப்பிலும் ஏன் வறட்சியா என்று நினைத்த அறிவழகன், பெற்றோரிடம் ஏதோ சாக்குப் போக்கு சொல்லி, கூட்டம் குறைவாக இருந்ததால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் தனிப்பயிற்சி வகுப்பு நடைபெறும் இடத்தில் சேர்ந்து விட்டான்.
ஆனால் அவன் டியூசன் படிக்கும் இடத்தில் உள்ள பெண்களை விட, தனியாக தனிப்பயிற்சி வகுப்புக்கு செல்லும் பெண்கள்தான் அழகாக இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு இங்கே டியூசன் முடிந்த மூன்றாவது நிமிடம், பள்ளியின் வாசலுக்கு வந்துவிடுவான்.
அங்கே அறிவழகனைப் போலவே லட்சியத்துடன் ஏழெட்டுபேர் நிற்பார்கள். இவனுக்கு இரண்டு தெரு தள்ளிதான் வீடு. ஆனால் அந்த மாணவர்களில் ஒரு சிலர் திருவாரூரிலிந்து ஐந்து முதல் பத்து கிலோமீட்டர் தூரத்திலிருந்து வருபவர்கள். அவர்கள் பெற்றோரிடம் எட்டு மணிக்கு மேல் பஸ் ஏறினால் சமயத்தில் லேட்டாகிவிடுகிறது. அதனால் ஏழு மணிக்கே பள்ளிக்கு போய் வகுப்பறையில் இருந்து படிக்கிறோம் என்று கடமை உணர்ச்சியுடன் சொல்லிவிட்டு வந்திருப்பவர்கள்.
பிரபலமான ஆசிரியரிடம் டியூசன் படிக்கும் மாணவிகள் சுமார் இருநூற்று ஐம்பது பேர் இருப்பார்கள். அவர்களில் நேரடியாக பள்ளிக்கு செல்பவர்கள், வீட்டுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு செல்பவர்கள் என சுமார் இருநூறு பேர் அறிவழகன் படித்த பள்ளியைக் கடந்துதான் செல்ல வேண்டும்.
ரயில் கடந்து செல்லும் காத்திருந்து கேட் திறந்ததும் பாதையை கடப்பது போல், எல்லா மாணவிகளும் சென்றுவிட்டதாக மனதுக்கு தோன்றும் வரை சுமார் அரை மணி நேரம் பள்ளி வாசலில்தான் நிற்பான்.
99 சதவீத மாணவிகள் பள்ளிச்சீருடையில்தான் காலையில் டியூசனுக்கும் வருவார்கள். அவர்களைப் பார்க்கும் அறிவழகன், ‘‘டியூசன்ல இருந்து நேரடியா ஸ்கூல் போறவங்க யூனிஃபார்ம்ல போறது ஓ.கே., வீட்டுக்கு போய் கொட்டிகிட்டு போறதுங்களும் யூனிஃபார்ம்லயே போகணுமா?
ஒரே காஸ்ட்யூம்ல பார்த்துப் பார்த்து அலுத்துப்போச்சு மாப்ள...’’ என்பான்.
‘‘நாம இப்ப போய் குளிச்சிட்டு அஞ்சு நிமிசத்துல துணியை மாட்டிகிட்டு சாப்பிட்டுட்டு கிளம்பிடுவோம்...
அவங்க எல்லாம் தலை காய வைக்கவே ரெண்டு மணி நேரம் ஆகும்டா... அங்க பாரு... கூந்தல் முடிச்சுல இருந்து தண்ணி சொட்டுற மாதிரியே இருக்கு...’’ என்று அருகிலிருந்தவன் சொன்னபோது, ஒரு கைனடிக் ஹோண்டாவை அனுஷா ஓட்டிச் சென்று கொண்டிருந்தாள்.
அறிவழகன் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த 1996ல் மாணவிகள் பரவலாக சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தாலும், மிகவும் வசதியான வீடுகளில்தான் கைனடிக் ஹோண்டா வாகனத்தை பெண்களுக்கு வாங்கிக் கொடுத்திருப்பார்கள். 80களில் வெளிவந்த பல படங்களில் கதாநாயகி இருசக்கர வாகனம் ஓட்டினால் அது கைனடிக் ஹோண்டாவாகத்தான் இருக்கும். அந்த நேரத்தில் டியூசன் முடித்து செல்பவர்களில் கைனடிக் ஹோண்டா வைத்திருந்தது அனுஷா மட்டும்தான். அன்றைய நாளில் தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக இருந்த நக்மாவை நினைவூட்டும் உடலமைப்புடன் மிகவும் அழகாக இருந்தாள். அதனால் அந்த வயது இளைஞர்களின் கனவுக்கன்னி அனுஷாதான்.
ஒன்றிரண்டு பஜாஜ் கம்பெனியின் சன்னி ஸ்கூட்டர்கள் தென்படும். வீடு தொலைவு என்ற காரணத்தாலோ, வீட்டில் பெரியவர்கள் வெளியூர் சென்றதாலோ எப்போதாவது ஒரு சில தினங்கள் பெரியவர்களுக்காக வாங்கி வைக்கப்பட்டிருக்கும் டி.வி.எஸ் 50 அல்லது டி.வி.எஸ் சேம்ப் வாகனத்தை சில மாணவிகள் டியூசனுக்கு எடுத்து வருவார்கள்.
சில மாணவிகளின் தந்தை மளிகை கடை அல்லது காய்கறி கடை வைத்திருப்பதாலும் ஏதாவது வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பதாலும் குஷன் சீட்டுக்கு மேல் இரும்பு கேரியரை அமைத்திருப்பார்கள். அந்த மாதிரி வாகனங்களில் சில ஏதோ ராக்கெட் கிளம்பப்போவது போல் சத்தத்துடன் சென்று கொண்டிருக்கும்.
தங்களில் பலர் வீட்டில் அந்த வாகனம் கூட இல்லையே என்பதை உணராமல் மாணவிகளின் வாகனங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பது தவறு என்று உணரும் பக்குவம் அறிவழகன் உள்ளிட்ட இளைஞர்களிடம் இல்லை.
எப்போதாவது அந்த வாகனங்கள் பழுதாகி நின்று விடாதா, அவற்றை ஸ்டார்ட் செய்து தருமாறு அந்த மாணவிகள் கேட்கமாட்டார்களா என்று அறிவழகன் உள்ளிட்ட பல மாணவர்களும் மனதிற்குள் ஏங்கிக் கொண்டிருப்பார்கள்.
ஒரு முறை அப்படி ஒரு ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து தருமாறு ஒரு மாணவி கேட்டதும், இருபது நிமிடங்கள் போராடி அந்த ஸ்கூட்டரிடம் ஜெயிக்க முடியாமல் அறிவழகன் இப்படி அசிங்கமாப் போச்சே, எப்படி சமாளிக்கிறது என்று யோசித்துக் கொண்டு நின்றான். அந்த நொடியில், இன்னொரு மாணவன் அந்த வண்டியை சாய்த்து, கவிழ்த்துப் பார்த்து விட்டு பெட்ரோல் இல்லை என்ற ராணுவ ரகசியத்தை வெளியில் சொன்னான். அதுவரை கிக்கரை உதைத்ததால் வியர்வை வந்ததைப் பற்றிக்கூட கவலைப்படாத அறிவழகனுக்கு பெட்ரோல் இல்லாத வாகனத்தை ஸ்டார்ட் செய்யக் கொடுத்து அசிங்கப்படுத்திய அந்த மாணவியைப் பார்த்து முறைத்தான். அவள் ‘சாரி...’ என்று ஒற்றை வார்த்தை பதிலுடன் எளிதாக இவனைக் கடந்து சென்றாள்.
அறிவழகன், ஏழரை மணிக்கு டியூசன் முடிந்ததும் எட்டு மணி வரை பள்ளிக்கூட வாசலில் நின்றுவிட்டு வீட்டுக்கு சென்று குளித்து, சாப்பிட்டு பள்ளிக்கு வரும்போது குமரகோயில் தெருவில் ஒரு மாணவியை எதிர்பார்த்து வருவான். அவள் பள்ளிக்கு சென்றபிறகுதான் இவன் பள்ளிக்கூடம் போவான்.
மோட்டார் இருசக்கர வாகனங்களில் உள்ளதைப் போன்று பிரேக் லீவருடன் பெண்களுக்காக ஸ்டைலாக தயாரிக்கப்பட்ட பி.எஸ்.ஏ எஸ்.எல்.ஆர் சைக்கிளை 1990 காலகட்டங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள். தெரியாதவர்களுக்கு ஒரு அறிமுகம். உன்னால் முடியும் தம்பி படத்தில் சீதா ஓட்டி வருவார். அதில் அவ்வளவு தெளிவாக தெரியவில்லை என்பவர்களுக்கு மேலும் ஒரு அறிமுகம். பிரசாந்த் நடித்த வண்ண வண்ண பூக்கள் படத்தில் இடம் பெற்ற ‘இள நெஞ்சே வா’ பாடல் இப்போது கூட பல மியூசிக் சேனல்களில் ஒளிபரப்பாகும். அந்த பாடலில் பிரசாந்த் ஓட்டிச் செல்வாரே அந்த சைக்கிள்தான்.
அந்த சைக்கிளை அந்த காலகட்டத்தில் வைத்திருக்கும் பெண்கள் உயர் நடுத்தர வர்க்கம் அல்லது ரிச்சான பேமிலி என்று இளைஞர்கள் கருதும் அளவுக்கு அந்த சைக்கிள் ஒரு உயர்ரக பிராண்டாக பார்க்கப்பட்டது.
அந்த சைக்கிளை அந்த மாணவி ஓட்டிச் செல்லும் அழகைப் பார்ப்பதற்காகவே அவனுக்கு வேலை இல்லை என்ற போதிலும் குமரகோயில் தெரு வழியாகச் செல்வதை இவனும் வழக்கமாக வைத்திருந்தான்.
பதின்ம வயதில் எல்லாரும் செய்வதைப் போலவே அறிவழகனும் டியூஷன், பள்ளிக்கூட வாசல், கோவில், சினிமா தியேட்டர் என்று அழகான பெண்களை சைட் அடிப்பதே முக்கிய வேலை என்ற நினைப்பில்தான் சுற்றிக் கொண்டிருந்தான்.
அப்படி இலக்கில்லாமல் இருந்தவன் ஒரு பெண்ணை மட்டும் பார்க்கவும், அவளுக்காகவும் ஏங்குவதற்கும் ஆரம்பித்ததற்கு இரண்டு சினிமாக்கள்தான் காரணம். இன்னும் சரியாக சொன்னால் சினிமா போஸ்டர்களே என்றும் சொல்லலாம்.
திருவாரூரைப் பொறுத்தவரை பெரியகோயில், கமலாலய கரையை விட்டால் வேறு பொழுது போக்கிடம் என்றால் திரையரங்கங்கள்தான்.
1993ஆம் ஆண்டில் இருந்துதான் தமிழகத்தில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி அலைவரிசைகள் தொடங்கி படிப்படியாக ஒளிபரப்பு நேரத்தை அதிகரித்துக் கொண்டிருந்தன. கேபிள்டிவி, திருட்டு விசிடி போன்றவற்றையும் தாண்டி திரையரங்கிற்கு கூட்டம் இருக்கத்தான் செய்தது.
1996 ஆம் ஆண்டு பல படங்கள் இனிமையான பாடல்கள், மனதைத்தொடும் காட்சி அமைப்புகளுடன் வந்து இளைஞிர்களின் தூக்கம் கலைத்துக் கொண்டிருந்தன. ஆண்டின் தொடக்கத்திலேயே உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தில் அழகிய லைலா பாடல் காட்சியில் ரம்பாவின் தொடையழகில் சொக்கிப்போய் இருந்தவர்களில் அறிவழகனும் ஒருவன்.
ரம்பா ஜுரத்திலிருந்து வெளிவருவதற்குள் பூவே உனக்காக படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்திழுத்ததோடு, பெண்களை கூட்டம் கூட்டமாக தியேட்டரை நோக்கிச் செல்ல வைத்த படம்.
காதலி கிடைக்காமல் போனால் அவளை நினைச்சுகிட்டே வாழ்றது எல்லாம் படத்துக்குதான் சரியா வரும்... நிஜத்துல அப்படி இருக்க முடியுமா என்று அறிவழகனும் அவன் நண்பர்களும் நிஜத்தைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போதுதான் அஜீத்குமார் நடித்த காதல் கோட்டை திரைப்படம் மற்ற ஊர்களில் வெளியாகி தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் கொண்டாடிக் கொண்டிருந்தன.
திருவாரூருக்கு எப்போது அந்த படம் வரும் என்று காத்திருந்த பலரில் அறிவழகனும் இருந்தான். அவன் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஐயப்பன் என்ற ஒருவன் சினிமா தியேட்டரில் போஸ்டர் ஒட்டும் வேலை செய்து கொண்டிருந்தான்.
இரவு நேரம் கழித்து போஸ்டர் ஒட்டச் செல்லாமல் சில நேரங்களில் மாலை நேரங்களிலேயே போஸ்டர் ஒட்டுமாறு தியேட்டரில் கூறிவிடுவார்கள். அதேபோல் அன்று மாலை ஐந்தரை மணிக்கே அடுத்தநாள் அந்த தியேட்டரில் திரையிடப்பட இருந்த ஒரு படத்தின் போஸ்டரை அய்யப்பன் ஒட்ட ஆரம்பித்து விட்டான்.
அய்யப்பன் திருவாரூர் பெரிய கோவில் தெற்கு கோபுர வாசல் பகுதியில் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தபோது அறிவழகனும் அவனுடன் ஒட்டிக் கொண்டான்.
தெற்கு வீதியில் ஒரு சில இடங்களில் ஒன்றிரண்டு சிங்கிள் ஷீட் போஸ்டரை ஒட்டிய பிறகு அய்யப்பனும் அறிவழகனிடம் பேசிக்கொண்டே சென்று, கமலாலயக் கரைக்கு எதிரே ஒரு பெரிய சுவற்றில் ஆறு துண்டுகளாக இருந்த போஸ்டரை ஒவ்வொரு ஷீட்டாக ஒட்டத் தொடங்கினான்.
அன்று பிரதோஷம் என்பதால் குளத்தின் நடுவில் இருந்த கோவிலுக்கு படகு மூலம் சென்று வழிபட்டுவிட்டு நிறைய பெண்கள் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அறிவழகன் குமரகோயில் தெருவில் அவள் சைக்கிள் ஓட்டும் அழகை ரசிப்பதற்காக செல்வானே... அந்த பெண் ராதாவும் அந்த கூட்டத்தில் இருந்தாள்.
அய்யப்பன் போஸ்டர் ஒட்ட ஆரம்பித்த இடத்தின் எதிரில் சோடியம் விளக்கு பளிச்சென்ற மஞ்சள் ஒளியை பாய்ச்சியதால் முதல் துண்டு போஸ்டரில் அஜீத்குமார் சிரித்துக் கொண்டிருந்தார். அடுத்த துண்டு போஸ்டரின் பின்னால் அய்யப்பன் பசை தடவிக் கொண்டிருந்தபோது, அந்த கூட்டத்தில் இருந்த மாணவிகளில் சிலர் அப்படியே நின்று விட்டார்கள்.
அவர்களில் ஒருத்தி, ‘‘ஏய்... காதல் கோட்டை வரப்போகுதுடி...’’ என்றாள்.
அய்யப்பனும் அறிவழகனும் எதுவும் பேசவில்லை.
அடுத்தடுத்த துண்டுகளை ஒட்டிக் கொண்டிருந்த போதும் போஸ்டர் முழுமையடைந்த பிறகுதான் அங்கிருந்து நகர வேண்டும் என்று அவர்கள் நினைத்திருந்தார்களோ என்னவோ, அப்படியே நின்றார்கள்.
ஐந்தாவது துண்டு போஸ்டரை ஒட்டும்போதுதான் அந்த படம் காதல் கோட்டை இல்லை. மைனர் மாப்பிள்ளை என்பது தெரிந்தது.
அதைப் பார்த்ததும் ராதா, ‘‘அய்யய்யே... இது காதல் கோட்டை இல்லைடி...’’ என்று உதட்டைப் பிதுக்கினாள்.
உடனடியாக அறிவழகன், ‘‘காதல் கோட்டையேதான் வேணுமா... இந்த மைனர் மாப்பிள்ளை... மேஜர் மாப்பிள்ளை எல்லாம் பார்க்க மாட்டீங்கிளா?... (இந்த சம்பவத்திற்கு பிறகு சுமார் ஒன்பது ஆண்டுகள் கழித்து வெளிவந்த காதல் திரைப்படத்தில் உதவி இயக்குநர் ஒருவர், நடிக்க வாய்ப்பு தேடுபவரிடம் ‘ஹீரோவா மட்டும்தான் பண்ணுவீங்கிளா... இந்த அமெரிக்க மாப்பிள்ளை இது மாதிரி கேரக்டர் எல்லாம் பண்ண மாட்டீங்கிளா?’ என்று பேசும் வசனம் இருந்தது. தான் பேசியதைக் கேட்ட யாரோதான் இப்படி ஒரு வசனத்தை காதல் பட இயக்குநரிடம் சொல்லியிருப்பாரோ என்ற சந்தேகம் இப்போதும் அறிவழகனுக்கு உண்டு.)
எல்லாரும் அஜீத், விஜய்னு பார்க்காதீங்க... எங்களை மாதிரி ஆளுங்களையும் பாருங்க...’’ என்று சொல்லவும் அங்கிருந்த இளம்பெண்கள் அனைவரின் முகத்திலும் வெட்கம். அவர்கள் அனைவரும் அங்கிருந்து கிளம்பிச் செல்ல, சற்று தூரம் சென்ற பிறகு ராதா திரும்பி இவனைப்பார்த்து விட்டுச் சென்றாள்.
அறிவழகன் அந்த பார்வையில் விழுந்தவன்தான்.
அடுத்து வந்த நாட்களில் தினமும் ஒரு பார்வையும், புன்னகையும் பரிமாறப்பட்டதால் அறிவழகனுக்கு ராதாவைத் தவிர மற்ற பெண்களைப் பார்ப்பதில் ஆர்வம் போய்விட்டது. இருந்தாலும் பள்ளி வாசலில் அரைமணி நேரம் நின்று அட்டனன்ஸ் போடுவதை நிறுத்தவில்லை.
ஒரு மாதம் கழித்து தைலம்மை தியேட்டரில் காதல் கோட்டை படம் திரையிடப்பட்டதும் அவன் நண்பர்கள் அனைவரும் முதல் நாள் முதல் காட்சிக்கே பள்ளிக்குச் செல்லாமல் படத்திற்கு சென்று விட்டார்கள். ஆனால் அறிவழகன் செல்லவில்லை.
எப்படியும் ராதா படம் பார்க்கச் செல்வாள். அன்றையதினமே தானும் பார்க்கலாம் என்று முடிவெடுத்திருந்தான்.
அவன் எதிர்பார்த்தபடி படம் திரையிடப்பட்ட பிறகு இரண்டாவதாக வந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ராதா அவள் குடும்பத்துடன் காதல் கோட்டை பார்க்கச் சென்றாள்.
அவள் குடும்பத்தினரைப் பார்த்து, இவனும் பால்கனிக்கு டிக்கட் எடுத்துக் கொண்டு சென்றான்.
அடுத்த நாள் நண்பர்களிடம், ‘‘மாப்ள... அவளுக்கு நேர் பின்வரிசையில உட்கார்ந்து படம் பார்த்தேண்டா...’’ என்று சொல்லவும்,
‘‘ஆமாண்டா... அந்த தியேட்டர் பால்கனியில இருக்குறதே மூணு வரிசைதான். இதுல அவன் ஆளுக்கு பின் வரிசையில உட்கார்ந்து படம் பார்த்தது உலக அதிசயம் பாரு...
இதெல்லாம் ஒரு சேதின்னு சொல்ற... நாங்களும் அதை உட்கார்ந்து கேட்டுகிட்டு இருக்குறோம்...’’ என்று அலுத்துக்கொண்டதும் மற்ற நண்பர்கள் சிரித்து விட்டார்கள்.
‘‘உங்களுக்கெல்லாம் நக்கலா இருக்கா... நம்ம ஸ்கூல் வாசல்ல நின்று காலையில டியூசன் விட்டு போற பொண்ணுங்க அவ்வளவு பேரைப் பார்ப்போம்...
ஆனாலும் நம்மளோட முதல் சாய்ஸ் யாரு... கைனடிக் ஹோண்டாவுல போற அனுஷாதான். காதலன் படத்துல இருந்து நக்மாவுக்காகவே படம் பார்க்குற நல்லவனுங்க எல்லாருமே சொல்லுங்க...டூவீலர்ல போற அந்த மூணு பேரும் நம்மள பார்க்க மாட்டாளுங்களான்னு ஒரு நாள் கூட ஏங்கலையா?’’ என்றான்.
‘‘நாமதான் வேற வேலை வெட்டி இல்லாம இங்க வந்து காத்துக்கிடக்கோம்... சைக்கிள்ல போற பொண்ணுங்களாச்சும் என்னைக்காவது லேசா நம்மள கவனிக்கிறாளுங்க... ஒண்ணு ரெண்டு பேர் உதடு பிரியாம நேரே ரோட்டைப் பார்த்தாச்சும் சிரிக்கிறாங்க...
ஆனா கைனடிக் ஹோண்டா, சன்னி, புதுசா ஒரு வண்டி வந்துருக்கே டி.வி.எஸ் ஸ்கூட்டி இது மூணுலயும் மும்மூர்த்தி மாதிரி போறதுங்க கொஞ்சம் கூட நம்மளை சட்டை செய்யாம ரயில் டிராக்கை விட்டு நகராம போற மாதிரி அந்தப்பக்கம் இந்தப்பக்கம் பார்க்காம விறைப்பா போறாளுங்க...’’ என்றான் ஒருவன்.
அதைக் கேட்டதும் அறிவழகன் மற்ற நண்பர்களைப் பார்த்து, ‘‘மாப்ள... இவன் இன்னும் வயசுக்கு வரலைன்னு நினைக்குறேன்...’’ என்றதும் சம்மந்தப்பட்டவன் அதிர்ச்சியுடன் பார்க்க, மற்ற நண்பர்கள், ‘‘எப்படிடா சொல்ற...’’ என்று ஆர்வமுடன் அறிவழகனின் பதிலை எதிர்பார்த்தார்கள்.
‘‘பின்ன என்னடா... அவளுங்க நம்மளை கண்டுக்காம போனா சாதாரணமாத்தான் வண்டியை ஓட்டுவாங்க... ஆனா நம்ம ஸ்கூலை கிராஸ் பண்றப்ப பெரிசா பந்தா பண்ற மாதிரி நிமிர்ந்து உட்கார்ந்து அந்தப்பக்கம், இந்தப்பக்கம் கவனிக்காம வண்டி ஓட்டுனா என்ன அர்த்தம்... நம்மளை தொலைவிலேயே பார்த்துட்டாங்க... இல்லன்னா தினமும் நாம இங்க இருக்குறதால அவங்க மனசை டிஸ்டர்ப் பண்ணிட்டோம்னு அர்த்தம். இது புரியாம இருக்கான்... இனிமேலும் இவன் நம்ம கூட்டத்துக்கு தேவையா?’’ என்று கேட்டான்.
‘‘அட... ஆமா... இதை நான் யோசிக்கலையே...’’ என்றான் அந்த நண்பன்.
அறிவழகனுக்கு தேர்வுகள் நடைபெறும் நாட்களில் வீட்டில் கூட விளக்கேற்றவோ சாமி கும்பிடவோ மாட்டான். அவன் தாயாரும் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்து ஓய்ந்து விட்டார். ஆனால் ராதாவின் கவனம் இவன் மீது விழுந்ததும், அவள் செல்லும் கோயிலுக்கெல்லாம் இவனும் போக ஆரம்பித்தான்.
ஆனால் அவன் தாயார், பையன் வயதுக்கோளாறில் கோவிலுக்கு செல்வது தெரியாமல், பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு நெருங்குவதால் பொறுப்பு வந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் கீழவீதி பழனியாண்டவர் கோயிலில் ராதாவின் தாயார் அங்கே சாமி கும்பிட்டுக்கொண்டிருந்த அறிவழகனிடம் ஒரு தேங்காயைக் கொடுத்து சிதறு தேங்காய் அடிக்கச் சொன்னார்.
அது வரை வீட்டில் சமையலுக்காக தேங்காயை இரண்டாக கூட உடைத்து பழக்கம் இல்லாததால் ஏதோ கிரிக்கெட்டில் பந்து வீசுவதைப் போல் வீச, தேங்காய் அப்படியே எந்தவித சேதாரமும் இல்லாமல் உருண்டு ஓடியது.
ராதாவின் தாய், ஒன்றும் சொல்ல முடியாமல் சங்கடத்துடன் இவனைப் பார்க்க, ‘‘அக்கா... கோவிச்சுக்காதீங்க...’’ என்று சொல்லிவிட்டு, ‘‘அறிவழகா... இப்படி அசிங்கப்பட்டுட்டியேடா...’’ என்று தனக்குள் பேசிக்கொண்டபடி மீண்டும் உடைத்தான். இப்போது நாலைந்து துண்டுகளானது அந்த தேங்காய்.
இனிமேல் இப்படி அசிங்கப்படக்கூடாது என்று நினைத்த அறிவழகன் அடுத்த வாரமே, யாரோ வேண்டுதலுக்காக 108 தேங்காய்களை சிதறு தேங்காயாக உடைத்துக் கொண்டிருந்த நாலைந்து பேருடன் இவனும் சேர்ந்து கொண்டு சீக்கிரமே டிரெய்னிங் ஆகி விட்டது தனிக்கதை.
அடுத்த நாள் ராதாவுக்கு முன்னாலேயே வந்து கொண்டிருந்த அறிவழகன், அவள் முந்திச் செல்லட்டும் என்று சைக்கிளின் வேகத்தை மெதுவாகக் குறைத்தான்.
எப்போதும் இது போன்ற சமயங்களில் லேசாக புன்னகையுடன் செல்லும் ராதா, இன்று சற்று துணிச்சலாக, ‘‘எங்க அம்மாவை அக்கான்னு கூப்பிடுறீங்க... நான் என்ன அவ்வளவு வயசானவளா தெரியுறனா?’’ என்று இவன் பக்கம் திரும்பாமலேயே கேட்டாள்.
இதைக் கேட்டதும் அறிவழகன் சற்றும் யோசிக்காமல், ‘‘உங்க அம்மாவோட தம்பி உங்களுக்கு என்ன வேணும்...?’’ என்று கேட்டான்.
இந்த பதிலைத்தான் ராதாவும் எதிர்பார்த்திருப்பாளோ என்னவோ... வெட்கத்தில் அவள் முகம் சிவந்தது. வெட்கத்தால் சிவந்த அந்த முகத்தை அறிவழகன்தான் பார்க்கவில்லை.
அன்று ராதாவே பேச்சு கொடுத்ததால், அடுத்த நாள் மனசெல்லாம் சந்தோஷத்துடன் அறிவழகன், அவளை ஓவர்டேக் செய்து, ‘‘ஹ்ம்... நம்ம மனசு நம்மகிட்ட இல்ல...’’ என்று சொல்லவும்,
‘‘நாங்களும் ஜல்லிக்கட்டு காளை படத்தை பார்த்துட்டோம்... வில்லன் ஆனந்தராஜ் பேசுற டயலாக்தான் கிடைச்சதா?’’ என்று சொல்லிவிட்டு எதுவுமே தெரியாத மாதிரி அவள் சைக்கிளை ஓட்டிச் சென்று கொண்டிருந்தாள்.
‘‘ஆஹா... இனிமே டயலாக் நல்லா இருக்கேன்னு பேச முடியாது போலிருக்கே... அது ஹீரோ பேசினதா, வில்லன் பேசினதான்னு கிராஸ் செக் பண்ணிட்டு அப்புறம்தான் டயலாக் டெலிவரி செய்யணும்...’’ என்று தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டான்.
அடுத்தநாள் ராதாவே பேசினாள். ஆனால் அவள் சொன்ன விஷயம் அறிவழகன் எதிர்பாராதது.
‘‘தினமும் இப்படி வராதீங்க... நாம இன்னும் ஸ்கூல்ல ரெண்டு வருஷம் படிக்கணும்... காலேஜ்ல குறைஞ்சது மூணு வருஷம்... இப்பவே ஏதாவது பிரச்சனையாயிடுச்சுன்னா என் படிப்பே போயிடும்...
ட்ரூ லவ்வா இருந்தா காத்திருக்குறதுல ஒண்ணும் பிரச்சனை இருக்காதே...’’ என்று சொல்லிவிட்டு அவள் சர்ரென்று சைக்கிளில் போய்விட்டாள். அவள் இவனைக் காதலிக்கிறேன் என்று ஓப்பனாக சொல்லவில்லை. அவ்வளவுதான். ஆனால் அவள் பேசியதன் அர்த்தம், கிட்டத்தட்ட உன்னைக் காதலிக்கிறேன் என்பதுதான்.
ஒரு பெண் உன்னைப் பிடிக்கலை, என் பின்னால வராதன்னு சொன்னால் திரும்ப திரும்ப அதையே செய்யும் ஆண்கள்தான் இந்த உலகில் அதிகம்.
ஆனால், நாம் எதிர்காலத்தில் ஒன்றாக சேர வேண்டும் என்றால் இப்போது பின்னால் அலையாதீர்கள் என்று பச்சைக்கொடி காட்டியதும் அதுவே அறிவழகனுக்கு போதுமானதாக இருந்தது. 1996ல் இதெல்லாம் பெரிய விஷயம். இன்றைய நிலை உங்கள் அனைவருக்கும் தெரியும். எதையும் எழுதி புரிய வைக்க வேண்டியதில்லை.
விமானம் மேலே பறக்கத் தொடங்கி விட்டது என்பதற்காக எஞ்சினை ஆஃப் செய்து விட முடியாது. தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று ஏதோ ஒரு நூலில் சொல்லப் பட்டிருந்த கருத்தை இவனது தமிழாசிரியர் சொன்னார்.
வாழ்க்கைப்பயணம், வேலை, வியாபாரம் போன்றவற்றை மனதில் வைத்து அந்த ஆசிரியர் கூறிய அந்த கருத்தை தனது காதல் முயற்சிக்கு கச்சிதமாக பொருத்திக் கொண்டான் அறிவழகன்.
ஆம், ராதா சொன்னதில் இருந்து அவளுக்கு நெருக்கமாக சைக்கிளில் போவது, வருவது கிடையாது. அதற்கு பதில் சற்று தொலைவிலேயே எங்கேயாவது அவள் கண்களில் படுவது போல் இருந்து கொண்டான்.
ஒருநாள் இவள் திருவாரூர் பெரிய கோவிலின் கமலாம்பாள் சன்னதியை சுற்றி வலம் வந்து கொண்டிருந்தபோது, அறிவழகனும் அமைதியாக சுற்றி வந்து கொண்டிருந்தான்.
சரஸ்வதி சன்னதியில் நின்று கும்பிட்டுவிட்டு கிளம்பும்போது, அருகில் யாருமே இல்லாததை கவனித்த ராதா, ‘‘இன்னும் அந்த கைனடிக் ஹோண்டாவுல வர்றவளை பார்க்கறதை நிறுத்தலியா... அவளும் எங்களை மாதிரி ஒரு பொண்ணுதானே...’’ என்று சொல்லிவிட்டு அறிவழகனை திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டாள். அவள் அப்படி சொன்னதும் அறிவழகனுக்கு கோபம் வரவில்லை. பெண்களும் பொறாமைப்பட வைக்கும் அழகு என்று கதைகளில் படித்ததை இப்போது நேரில் பார்த்தான். இவள் இப்படி பேசப் பேச அவள் தன் மீது வைத்திருக்கும் அன்பின் ஆழத்தை அறிவழகனால் உணர முடிந்தது.
மறுநாளில் இருந்து அறிவழகன் டியூசன் முடித்து நேரே வீட்டுக்கு சென்று விடுவான். நண்பர்கள் கிண்டல் செய்ததுடன், ‘‘மாப்ளக்கு ஏதோ ஒரு ரூட்டு கிளியர் ஆயிடுச்சுன்னு நினைக்குறேன்...’’ என்று கச்சிதமாக விஷயத்தை கவ்வி விட்டார்கள்.
ஆனால் அறிவழகன் அவர்களிடம் எப்படியோ சமாளித்து உண்மையை சொல்லாமல் நழுவி விட்டான்.
ஒருமுறை ராதா அவள் தாயாருடன் அந்த மாரியம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொள்வது தெரிந்ததும் இவனும் அன்று மாலை 4 மணிக்கெல்லாம் அந்த கோயிலில் ஆஜராகி விட்டான்.
பழனியாண்டவர் கோயிலில் சிதறு தேங்காய் உடைத்து பழக்கப்பட்டதில், சில ஆன்மிக சேவகர்கள் அறிவழகனுக்கு நன்கு பழக்கமாகி இருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து குத்து விளக்கு பூஜைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தான் அவன்.
ராதாவும், அறிவழகனும் வழக்கம் போல் கண்களாலேயே பேசிக் கொண்டார்கள். சுமார் ஏழு மணிக்குதான் பூஜை ஆரம்பித்தது. விழா ஏற்பாடுகளில் தன்னார்வலாக செயல்பட்டவர்கள், அறிவழகனிடம் எல்லா விளக்குக்கும் தேங்காய் உடைச்சு வெக்கிறியா? என்று கேட்டார்கள்.
முழுவதும் பெண்கள் பூஜை செய்யும் இடத்தில், நம்மை அனுப்புகிறார்களே என்று இவன் யோசிக்காமல் ஒப்புக் கொண்டான். துவக்கத்தில் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் தரையில் இருக்கும் தேங்காயை குனிந்து எடுத்து, அப்படியே வாளிக்கு நேரே வைத்து அரிவாளால் உடைத்து வைத்துவிட்டு, வாளியை நகர்த்தி அடுத்த விளக்குக்கு சென்று இப்படி முப்பது தேங்காயை உடைப்பதற்குள் ‘‘ஆஹா... அவசரப்பட்டுட்டோம் போலிருக்கே... ஆனா நம்ம ஆளு அஞ்சாவது வரிசையில உட்கார்ந்துருக்காளே... அதுவரைக்காச்சும் சமாளிக்கணுமே...’’ என்று மனதில் ஒரு நோக்கத்துடன் தொடர்ந்து தேங்காய் உடைத்து வைக்கும் பணியில் ஈடுபட்டான்.
அப்போது, விளக்குக்கு பக்கத்தில் இருக்கும் தேங்காயை எடுத்து இவனிடம் கொடுத்து, இவன் உடைத்துக் கொடுக்கவும், அதை வாங்கி இலையில் வைக்கும் பணியை இன்னொருவர் செய்ததால் அறிவழகன் கொஞ்சம் தப்பித்துக் கொண்டான்.
சுமார் ஐநூற்று இருபது பேர் குத்து விளக்கு பூஜையில் கலந்து கொண்டிருந்தார்கள். அவ்வளவு தேங்காயையும் உடைத்து முடித்தபோது சுமார் இரண்டு மணி நேரம் கடந்திருந்தது. பூஜையும் நிறைவடையும் தருவாயில் இருந்தது.
தேங்காய் உடைத்துக் கொண்டிருந்தபோதே ‘லவ் பண்ற பொண்ணுக்கு முன்னால பந்தா பண்ண நினைச்சு இப்படி மாட்டிகிட்டோமே... இனிமே எச்சரிக்கையா லவ் பண்ண வேண்டியதுதான்’ என்ற முடிவுக்கு வந்து விட்டான்.
பணியை முடித்து விட்டு வியர்க்க விறுவிறுக்க வெளியில் வந்த அறிவழகனால் நிமிர்ந்து நிற்க முடியவில்லை. சுமார் நான்கு நாட்கள் இடுப்பு வலியினால் அவதிப்பட்டான்.
சிறு புன்னகை, வாய்ப்பு கிடைக்கும்போது சின்ன சின்ன பரிசுப்பொருள், ஏதாவது சினிமா பார்க்க ராதா அவள் குடும்பத்துடன் வரும்போது இவனும் அதே படத்திற்கு செல்வது என்று சிறிய நகரங்களில் காதலர்கள் எந்த அளவுக்கு செயல்பட முடியுமோ அந்த அளவுக்குதான் இவர்களின் காதல் வளர்ந்தது.
ஒரு ஆணும் பெண்ணும் காதலிக்கும் விஷயம் வீட்டிற்கு தெரிந்தால் என்னவெல்லாம் நடக்குமோ, பெற்றோர் என்ன வசனம் பேசுவார்களோ அதேதான் ராதா வீட்டிலும் நடந்தது. ஆனால் எப்படியோ சமாளித்த ராதா மூன்றாண்டு பட்டப்படிப்பு முடித்த பிறகு, மேலும் இரண்டு ஆண்டுகள் படிக்கவும் அனுமதி வாங்கிவிட்டாள்.
அதிலும் நன்றாக படித்து தேறியதால், ஆசிரியர் பயிற்சி முடித்து ஒரு தனியார் பள்ளியில் பணியிலும் சேர்ந்து விட்டாள்.
அவள் வீட்டில் சொந்தக்கார மாப்பிள்ளை, வெளியிலிருந்து வரன் என்று எவ்வளவோ பேரை மணமுடிக்க பேசிப்பார்த்தார்கள். ஆனால் ராதாவோ உறுதியாக, ‘‘கல்யாணமே பண்ணிக்காம வேணுன்னாலும் இருக்கேன்... ஆனா நீங்க சொல்ற மாப்பிள்ளைகள் யாரும் எனக்கு தேவையில்லை... இந்த ஜென்மத்துக்கு என்னோட வாழ்க்கைத்துணை அறிவழகன்தான்’’ என்று திட்டவட்டமாக கூறிவிட்டாள்.
நல்லவேளையாக, ராதாவின் குடும்பத்திலோ அறிவழகனின் குடும்பத்திலோ காதலைத்தான் எதிர்த்தார்களே தவிர சாதி வெறியர்களாகவோ, காதல் எதிர்ப்பு வெறியர்களாகவோ இல்லை.
இந்த காலகட்டத்தில் அறிவழகனும் நாலைந்து ஆண்டுகளுக்கும் மேல் சிங்கப்பூரில் சென்று வேலைபார்த்துவிட்டு வந்தான்.
இப்போது அவனும் திருவாரூரில் ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் முக்கிய பணியில் இருக்கிறான்.
இனிமேல் இவள் மனசை மாத்த முடியாது என்று ராதாவின் பெற்றோர்கள் உணர்ந்து அவள் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியபோது அவள் வயது 31.
அறிவழகனுக்கும் ராதாவுக்கும் திருமணம் நடைபெற்றபோது அவளிடம் உறவுக்கார பெண்கள் நேரடியாகவே, இத்தனை வயசு கழிச்சு கல்யாணம் பண்ணியிருக்க. கன்சீவ் ஆகுறது கஷ்டம். அப்படியே ஆனாலும் நார்மல் டெலிவரி எல்லாம் ஆகாது என்று வாய்க்கு வந்த படி உளறிக் கொண்டிருந்தார்கள்.
‘‘நாங்க ஆசைப்பட்ட மாதிரியே வாழ்க்கையில ஒண்ணு சேர்ந்துருக்கோம்... சந்தோஷமா வாழ்க்கை நடத்தி புள்ளை பெத்துக்குவோம்... இந்த மாதிரி எதையாச்சும் பேசுறதுன்னா யாரும் என் கிட்டயே வராதீங்க...’’என்று நம்பிக்கையுடன் அவர்களுக்கு பதிலடி கொடுத்தாள் ராதா.
இதோ, திருமணம் ஆன அடுத்த ஆண்டே முதலில் ஆண் குழந்தை கார்த்திக். வயது ஆகிவிட்டதால் ஒரு குழந்தையுடன் நிறுத்திவிடலாம் என்று அறிவழகன் தயங்கி நின்றபோது, நம்பிக்கை கொடுத்து ராதாவின் 35வது வயதில் இரண்டாவதாக ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். அவளுக்கு குழலி என்று பெயர் சூட்டினார்கள்.
குழலிக்கு குல தெய்வம் கோயிலில் சென்று மூன்று மொட்டை அடித்து விட்டார்கள். ராதாவின் அண்ணன் மடியில் வைத்து காதும் குத்தியாயிற்று. இப்போது நான்காவது தடவையாக ராதாவின் மகளுக்கு உள்ளூர் மொட்டை அடிப்பதற்காக சீதளாதேவி மாரியம்மன் கோயிலுக்கு வந்திருக்கிறார்கள்.
அறிவழகன் தன் மடியில் குழலியை அழுத்தி உட்கார வைத்திருக்க, மொட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் அவர்களின் மகன், பெரிய மனித தோரணையில் தங்கையை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தான்.
குழலி இரண்டரை வயதைக் கடந்திருந்ததால் வார்த்தைகள் அழுத்தம் திருத்தமாக வெளிவந்தது.
‘‘அய்யய்யோ... என்னைய விட்டுடுங்களேன்... காப்பாத்த யாருமே இல்லையா...’’ என்று அவள் கதறிக் கொண்டிருந்தபோதுதான் அனுஷா அவளது மகளுடன் காரில் வந்து இறங்கினாள். அனுஷாவுக்கு கல்லூரி படிப்பு முடிந்த மறு மாதமே திருமணம் நடைபெற்று பெங்களூரில் செட்டிலாகிவிட்டதாக கேள்வி. அடுத்த ஆண்டே அவளுக்கு பெண் குழந்தை பிறந்து விட்ட செய்தி வரை அறிவழகனுக்கு நண்பர்கள் மூலமாக தெரியவந்தது. அந்த பெண்ணும் தற்போது தாயின் உயரத்திற்கு சவால் விட்டு வளர்ந்து விட்டாள்.
அனுஷாவை பத்தாம் வகுப்பு படிக்கும் போது பார்த்ததிற்கும் இப்போது சுமார் 22 ஆண்டுகள் கழித்து பார்த்தபோதும் பெரிய வித்தியாசமே தெரியலையே என்று சில நொடிகள் அறிவழகன் மனதில் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.
‘‘வந்த வேலையை விட்டுட்டு அங்க என்ன பார்வை... பழசெல்லாம் ஞாபகம் வருதா...’’ என்று அவன் முதுகில் செல்லமாக தட்டியது ராதாதான்.
‘‘ச்சேச்சே... எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னுதான்... வேற ஒண்ணுமில்லை...’’ என்று சமாளித்தான் அறிவழகன்.
‘‘ஆமாமா... நாங்களும் நம்பிட்டோம்... மறுபடி கண்ணு அவ பக்கம் போச்சு... கண்ணை புடுங்கி போட்டுடுவேன்... பாப்பாவை ஒழுங்கா பிடிங்க... கத்தி பட்டுடப்போகுது...’’ என்றாள் ராதா.
‘‘முடி... முடி.... என் முடி போச்சே...’’ என்று மீண்டும் அழுகை. மீண்டும் மகளுக்கு விளையாட்டு காட்டத் தொடங்கினாள் ராதா.
‘‘ஹி...ஹி... கண்டுபிடிச்சுட்டியா...’’ என்று வழிந்த அறிவழகன் முகத்தில் ஒண்ணரை லிட்டர் எண்ணை.
வெளி நபர்களுக்கு முன்னால் கணவரிடம் மரியாதையாக பேச வேண்டும் என்று சிலர் சொல்லக் கூடும். ஆனால் காதலித்து திருமணம் செய்தவர்களில் பழைய நினைவுகள் இருவருக்குமே வரும் நேரத்தில் அடுத்த நபர் முன்பாக மனைவி திட்டினாலும் கணவன் அதை ரசிக்கத்தான் செய்வான். அதுதான் அவர்கள் இருவருமே இன்னும் காதலுடன் இருப்பதற்கான அடையாளம்.

No comments:

Post a Comment