நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, June 21, 2019

ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது...

சமீபத்தில் மதுரையில் வாகன சோதனையின் போது நிற்காமல் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது போலீசார் லத்தியால் தாக்கியதால் விபத்துக்குள்ளான ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது முதல் முறை அல்ல. பல்வேறு நகரங்களிலும் இது போன்ற துயர சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இது போன்ற அநியாயமான உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க வேண்டுமானால் பொதுமக்களாகிய நாம் ஒரு விசயத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
சாலைவிதிகள் என்பது நம்மை அடிமையாக வைத்திருக்க உருவாக்கப்பட்ட சட்ட விதிகள் அல்ல.
Image Credit : www.dinakaran.com
விபத்துக்களையும் உயிரிழப்புகளையும் தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் சாலைவிதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க சொல்கிறார்கள். இதை நாம் புரிந்து கொள்ளும் வரை இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க முடியாத நிலையில்தான் இருப்போம்.
ஏதோ ஒரு அரிதான நேரத்தில் சாலைவிதிகளை நம்மை அறியாமல் மீறிவிட்டால் கூட, உடனடியாக சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு காவல்துறையினர் விதிக்கும் அபராதத்தை செலுத்துவது, நீதிமன்றம் செல்வது போன்ற செயல்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அதை விட்டுவிட்டு காவலர்களிடமிருந்து அந்த நேரத்திற்கு தப்பிக்க நினைத்து அசம்பாவிதம் ஏற்பட்டால் நாட்டுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுவிடப்போவதில்லை.
ஆனால் நம் குடும்பத்துக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகவே இருக்கும்.
மதுரை சம்பவத்தில் கூட, உயிரிழந்தவருக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆகியுள்ளதாகவும், ஒரு வயதில் குழந்தை இருப்பதாகவும் தெரிய வருகிறது. கணவர் இறந்த சோகம் தாங்காமல் குழந்தையை அநாதையாக விட்டு விட்டு அவரது மனைவியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்த மாதிரி சம்பவங்களை தவிர்ப்பதில் பொதுமக்களுக்கு எவ்வளவு பொறுப்பு இருக்கிறதோ, அதைவிட அதிக பொறுப்பு காவல்துறைக்கும் அரசுக்கும் இருக்கிறது.
சாலைவிதிகளை மீறும் வாகனங்களை அந்த இடத்திலேயே மறிக்கும் முயற்சியில் காவலரால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டாலோ அல்லது வாகன ஓட்டியே பதட்டத்தில் நிலைதடுமாறி விபத்தை ஏற்படுத்திக்கொண்டு உயிரிழந்தாலோ குற்றம் சாட்டப்பட்ட காவலருக்கு மெமோ அல்லது இடமாற்றம் அதிகபட்சம் சில நாட்கள் பணி இடை நீக்கம் மட்டுமே தண்டனையாக இருக்கும்.
ஆனால் உயிரிழந்த நபரின் குடும்பம் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய இன்னலுக்கு உள்ளாவதுடன் அந்த குடும்பத்தில் கல்வி, திருமணம் உள்ளிட்ட பல அத்தியாவசிய நிகழ்வுகளும் பாதிப்புக்குள்ளாகும்.
அதற்காக காவல்துறை நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சொல்லவில்லை.
இன்று தொழில்நுட்பம் எவ்வளவோ மேம்பட்டு இருக்கிறது. வெளிநாடுகளில் ஒருவர் சாலைவிதிகளை மீறிச் சென்றால் அவர் வீடு வந்து சேருவதற்குள் தொழில் நுட்ப உதவியுடன் மிகப்பெரிய அபராதம் விதிக்கவோ, கைது செய்யவோ போலீசார் காத்திருப்பார்களாம். அந்த மாதிரி செய்யலாம்.
இன்னும் கூடுதலாக இப்படி போலீசார் நிறுத்த சொல்லியும் நிறுத்தாமல் செல்பவர்களின் குற்றம் தக்க சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டால் அபராதத்துடன் கூடுதலாக குறிப்பிட்ட நாட்கள் தெருவை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும், மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று ஆக்கப்பூர்வமான தண்டனைகள் அளிக்கப்பட்டால் அதனால் சமுதாயத்திற்கும் நாட்டுக்கும் சுற்றுச் சூழலுக்கும் கண்டிப்பாக நண்மை கிடைக்கும்.
ஆக அங்கிருந்து தப்பித்தாலும் எங்கு சென்றும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்ற நிலை ஏற்பட்டால் நம் ஊரிலும் வாகன ஓட்டிகள் சாலைவிதிகளை மீற யோசிப்பார்கள். என்ன இருந்தாலும் ஒரு உயிர் அநியாயமாக பறிபோகாது இல்லையா?
---திருவாரூர் சரவணன்

No comments:

Post a Comment