நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, June 21, 2019

நிறுவனங்கள் மட்டுமல்ல... சாமானியர்களும் தண்ணீரை உறிஞ்சுகிறார்கள்

தற்போது தண்ணீர் பஞ்சத்தால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்ட பிறகுதான் என்னென்ன காரணத்தால் தண்ணீர்ப்பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என்று ஆளாளுக்கு விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது சாமானியர்களும் அதிகமாக வைக்கும் குற்றச்சாட்டுக்களில் ஒன்று, குளிர்பான கம்பெனிகளும், தண்ணீர் விற்பனை செய்யும் நிறுவனங்களும் ராட்சச அளவில் ஆழ்துளை குழாய் அமைத்து இரண்டாயிரம் மூவாயிரம் அடி ஆழத்திலிருந்து கூட தண்ணீரை உறிஞ்சு விடுகிறார்கள் என்பதுதான்.
இத்தகைய நிறுவனங்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை.
Image Credit: www.dinakaran.com
ஆனால் பல்வேறு நகராட்சி, ஊராட்சிகளில் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் வழங்கப்படும் குடிநீர் குழாயில் அரைமணி நேரம் கூட சரியாக வருவதில்லை. ஆனால் சமீபத்தில் ஏதோ ஒரு காரணத்தால் காலையில் ஆறு மணியிலிருந்து ஒன்பது மணி வரை மின்தடை ஏற்பட்டிருந்தது.
அன்று மட்டும் உள்ளாட்சி அமைப்பு குடிநீர் இணைப்புகளில் காலை சுமார் 8 மணியைத் தாண்டிய பிறகு கூட வேகம் குறையாமல் தண்ணீர் வந்தது.
ஆக, நிறைய வீடுகள், கடைகளில் சட்டவிரோதமாக மின் மோட்டார் பயன்படுத்தி குடிநீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி எடுத்ததால் சட்டத்தை மதித்து குழாயில் வரும் தண்ணீரை மட்டும் நம்பியவர்கள் முட்டாளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
இது குறித்து உள்ளாட்சி நிர்வாக ஊழியர் ஒருவரிடம் கேட்டபோது,
மற்றவர்களைப் பற்றி தெரியாது. ஆனால் இப்படி குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சுவதில் முன்னணியில் இருப்பவர்கள் யார் யார் என்று பார்த்தோம் என்றால், உள்ளாட்சி அமைப்பில் ஏற்கனவே பிரதிநிதிகளாக இருந்தவர்கள், ஊழியர்கள், ஒப்பந்தக்காரர்கள், அரசியல் பிரமுகர்கள்தான் அச்சமின்றி இந்த காரியத்தை அதிக அளவில் செய்வதாகவும், இவர்கள் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுவதால் சாதாரண மக்களும் வேறு வழியின்றி மோட்டாரைப் பயன்படுத்துகிறார்கள்.
அவ்வப்போது ஆய்வு செய்து பறிமுதல் செய்யும் மோட்டார்களும் சாதாரண மக்களுடையவையே. அதிகாரத்தில் இருப்பவர்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் இந்த தவறு நடந்தாலும் அங்கு நடவடிக்கை பாய்வது மிக மிக குறைவுதான் என்ற உண்மையை சொன்னார்.
வீடு வீடாக ஆய்வு செய்து மோட்டார்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்பதை விட, தண்ணீர் விநியோக நேரத்தில் மின் விநியோகத்தை நிறுத்தி வைப்பது நல்ல பலன் தரும். பல கிராமங்களிலும், சிற்சில நகராட்சிகளிலும் அதிகாரப்பூர்வமாக இல்லாமல் தண்ணீர் விநியோக நேரத்தில் மின்தடை ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரி செய்வது நியாயமா என்று சிலர் கேள்வி எழுப்பலாம். என்றாலும் மழை, புயல், இடி, மின்னல் போன்ற பேரிடர் காலங்களில் மின் விநியோகத்தை நிறுத்தி மக்கள் உயிரைக் காப்பது போல், தண்ணீர் பஞ்சத்தையும் பேரிடர் காலமாகவே கருதி இனி அனைத்து காலங்களிலும் உள்ளாட்சி நிர்வாகம் மின் தடை செய்து விட்டு குடிநீர் விநியோகம் செய்வதுதான் நல்லது.
அனைவரும் விதிமுறையை பின்பற்றி நியாயமாக நடந்து கொண்டால் அங்கு போலீசாருக்கு வேலை இருக்காது. இதிலும் அப்படித்தான். மக்கள் சட்டவிரோதமாக நடந்து கொண்டு குடிநீரை உறிஞ்சுகிறார்கள் என்றால் யாரையும் பாதிக்கச் செய்யாமல் இது போன்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கலாம்.
கட்டாயத்தின் பேரில் மக்கள் விதிமுறைகளை பின்பற்ற ஆரம்பித்து விட்டால் அதன் பிறகு அவர்களுக்கு சட்டத்தை மீறுபவர்களைக் கண்டால் பிடிக்காது. குளிர்பான நிறுவனங்கள், தண்ணீர் விற்பனை நிறுவனங்கள் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சுவதை சட்டப்படி தடுக்கும் முயற்சியில் மக்களே இறங்கிவிடுவார்கள்.
---அழகர்நம்பி

No comments:

Post a Comment