நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, May 24, 2019

முதல் கோணல் - 1

பகுதி 1
‘‘என்னது... ஆக்சிடெண்டா?...அய்யய்யோ.... இப்ப நீங்க என்ன பண்ணிகிட்டிருக்கீங்க?’’ என்று போனில் உரையாடலை பதட்டத்துடன் தொடர்ந்து கொண்டிருந்தாள் மல்லிகா. சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருந்த சியாமளா மட்டுமல்ல, உள் அறையில் படித்துக் கொண்டிருந்த நிகில், விஜய், சுஷ்மிதா ஆகியோரும் மல்லிகா அருகில் வந்துவிட்டார்கள்.
‘‘------’’
‘‘சரிங்க... உங்களுக்கு ஒண்ணுமில்லையே... ஜாக்கிரதையா இருங்க... அந்தாள் கூட வேலை பார்த்தவங்க ஏதாவது பிரச்சனை பண்ணிடப்போறாங்க... நீங்களா போய் எதுலயும் மாட்டிக்காதீங்க. ’’ என்ற மல்லிகாவுக்கு வியர்த்து வழிய ஆரம்பித்தது.
‘‘------’’
 ‘‘என்னங்க பேசுறீங்க... விஜய்க்கும் நிகிலுக்கும் என்ன தெரியும்... படிக்கிறதை விட்டுட்டு இதுக்கெல்லாம் அலைய முடியுமா? இப்ப எழுதப்போற பரிட்சை இவனுங்களுக்கு மட்டுமில்லை... நம்மளோட கனவு, லட்சியம் எல்லாமே...’’
‘‘------’’
அடுத்த இரண்டு நிமிடங்கள் ‘‘ம்’’ கொட்டிய மல்லிகா, ‘‘சரிங்க... வர சொல்றேன்...’’ என்று போன் தொடர்பை துண்டித்தாள். மின் விசிறி முழு வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தாலும் மல்லிகாவின் உடல் வியர்வையில் தொப்பலாக நனைந்திருந்தது.
‘‘அம்மா... அப்பாவுக்கு என்னாச்சு... என்ன ஆக்சிடெண்ட்... இப்ப எங்க இருக்காராம்?’’ என்று விஜய் கேட்டுக்கொண்டிருக்கும்போதே நிகில் பைக் சாவியுடன் வந்தான்.
மல்லிகா விசயத்தை சொன்னதும் அனைவருக்கும் சப்பென்றாகி விட்டது.
‘‘என்னக்கா... இதெல்லாம் ஒரு மேட்டரா... நாட்ல தினம் தினம் நடக்குறதுதானே... என்னமோ அத்தான் தலையில இடி விழுந்த மாதிரி நீ ரியாக்ஷன் கொடுத்து எங்க எல்லாரையும் பயமுறுத்தி அலற வெச்சி.... என்ன சொல்றதுன்னே தெரியல... வேலையைப் பாருக்கா... நிகில், விஜய், சுஷ்மிதா... நீங்க போய் படிங்க...’’ என்று சியாமளா சகஜமாகிவிட்டாள்.
நிகில் பைக் சாவியை டீப்பாயில் போட்டுவிட்டு சோபாவில் ஜாலியாக அமர்ந்தான். ‘‘அம்மா... வர வர நீ சீரியல் அதிகமா பார்த்து இன்னும் கொஞ்ச நாள்ல நடிக்கிற அளவுக்கு தயாராயிடுவ போலிருக்கு... ’’ என்றான்.
‘‘மூணு பேரும் ஒழுங்கா படிச்சிகிட்டு இருந்தோம். இப்போ இந்த குழப்பத்தால திரும்ப எங்க மைண்ட் செட் ஆக கொஞ்ச நேரம் ஆகும். அந்த நேரத்துல நாலு கேள்வி பதிலை படிச்சிருக்கலாம்... எல்லாம் வேஸ்ட்.’’ என்று விஜய் அலுத்துக் கொண்டு அறைக்குள் சென்றான்.
‘‘தம்பி... என்னடா ஆளாளுக்கு இப்படி பேசுறீங்க... அப்பா உங்களை எதிர்பார்த்துகிட்டு இருப்பாருடா... இந்த ஊர்ல பிறந்து வளர்ந்தவரா இருந்தாலும் இப்போ அவருக்கு இந்த ஊர் புதுசுதாண்டா... போயிட்டு வந்துருங்க. ப்ளீஸ்...’’ என்ற மல்லிகாவின் குரல் கலங்கித்தான் போயிருந்தது.
‘‘என்னக்கா பேசுற நீ... நம்ம பசங்க இப்போ தயாராயிட்டிருக்குற எக்ஸாம் எவ்வளவு முக்கியம்னு உனக்கு தெரியாதா? பேசாம, அத்தானுக்கு போன் பண்ணி, குமரவேலை கூப்பிட்டுக்க சொல்லிடு. இதுக்கெல்லாம் அவன்தான் லாயக்கு...’’ என்றாள் சியாமளா.
சோபாவிலிருந்து எழுந்த நிகில், ‘‘ஆமாம் சித்தி... நீங்க சொல்றதும் சரிதான். அவன்தான் உள்ளூர்லயே பொறந்து வளர்ந்தவன். மரம் நடுறது, விழிப்புணர்வு ஏற்படுத்துறது, ரத்தம் கொடுக்க வைக்கிறதுன்னு சமூக சேவைகள் செய்யுறதாத்தானே தாத்தா பெருமை பேசினாரு... அவனையே போகச் சொல்லுங்க... முக்கியமா இப்போ அவனுக்கு இப்போ எந்த பரிட்சையும் கிடையாது. தாராளமா அவன் அலையலாம். நாங்க அலைஞ்சா எங்க கனவு மட்டுமில்ல... உங்க கனவும் அவ்வளவுதான். ஒருநாள்ல என்ன ஆயிடப்போகுதுன்னு கேட்காதீங்க... எங்களுக்கு ஒவ்வொரு நிமிசமும் முக்கியம்’’ என்ற நிகில், அவனும் அறைக்குள் சென்றுவிட்டான்.
‘‘சுஷ்மிதா... நீ மட்டும் ஏன் இங்க நிக்கிற... போ... போய் படி...’’ என்று சியாமளா சொல்லவும் அவளும் உள்ளே சென்றுவிட்டாள்.
இவர்களின் பேச்சும் செய்கையும் சற்று நேரத்தில் இயல்பாகிவிட்டதை பார்த்த பிறகும் மல்லிகாவுக்கு முழுமையாக பயம் விலகவில்லை. ஆனாலும், நாம்தான் தேவையில்லாமல் பதட்டப்பட்டுவிட்டோமோ என்று யோசிக்கத்தொடங்கிவிட்டாள்.
சரி... கணவனிடம், விஜயும் நிகிலும் வரவில்லை என்பதை சொல்லிவிடலாம் என்று செல்போனில் டயல் செய்தாள். அது என்கேஜ்டாக இருந்தது.
***
‘‘ராமநாதா... நான் சொல்றத கேளுப்பா... உன் பையனும், நடுவுளவன் மகனும் வந்து இங்க என்ன பண்ணப் போறாங்க? இல்ல என்னதான் செய்ய முடியும். இது லோக்கல் ஆளுங்களை வெச்சு ஹேண்டில் பண்ண வேண்டிய விசயம்... லீலாவதிக்கு போனைப் போட்டு குமரவேலை வர சொல்லு.’’
‘‘நீங்களும் என்னப்பா புரியாம பேசுறீங்க... இந்தாளு இப்படி கிடக்குறதை பார்த்த பிறகும் நான் மயக்கம் போட்டு விழாம பேசிகிட்டு இருக்குறது ஏதோ செய்வச் செயல்னு நினைக்கிறேன். நானே கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கும் போனா அந்த அட்மாஸ்பியரைப் பார்த்து என்னையும் அட்மிஷன் போட வேண்டிய சூழ்நிலை வராலம். டாக்டருக்கு படிக்க முயற்சி பண்ணிகிட்டு இருக்குற அவங்களை கூப்பிட்டு இவருக்கு வைத்தியம் பார்க்கவா சொல்லப்போறேன்... என் பையனையும், நிகிலையும் வர சொன்னது இவங்களோட ஆஸ்பத்திரிக்கு போயி செலவுக்கு ஏதாவது பணம் கொடுத்துட்டு, நிலவரம் என்னன்னு தெரிஞ்சுகிட்டு வர்றதுக்காகதான்.’’ என்று தந்தையிடம் எரிந்து விழுந்தான் ராமநாதன்.
‘‘ராமநாதா... நானும் இவருக்கு வைத்தியம் பார்க்குறதுக்காக குமரவேலை கூப்பிட சொல்லலை... இப்போ என்ன செய்யணும்னுங்கறத விட என்ன செய்யக்கூடாதுன்னு நமக்கு தெரிய வேண்டியது ரொம்ப முக்கியம். ஏன்னா நாம அவசரப்பட்டு எதையாவது செய்தா அது இவரோட உயிருக்கே ஆபத்தா முடியலாம். எனக்கே எவ்வளவு விசயத்தை சொல்லிக்கொடுத்து திருத்தியிருக்கான்னு தெரியுமா? முதல்ல லீலாவதிக்கு போனைப் போட்டு குமரவேலை இங்க வர சொல்லு. பிடிவாதம் பிடிக்காத...’’ என்று சுந்தரமூர்த்தி சொல்லவும், ராமநாதனுக்கும் அது சரியென்று பட்டது.
குமரவேல் வீட்டிலேயே இருந்ததால் போனை அவன்தான் எடுத்தான்.
ராமநாதன் பதட்டமாக பேசத்துவங்கியதுமே அவன் இடைமறித்தான்.
‘‘பெரியப்பா... நிறுத்துங்க... இப்படி பேசுனா எதுவும் புரியாது... நான் கேட்குறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க...’’ என்று போதுமான விவரங்களை ஒன்றரை நிமிடத்திற்குள் வாங்கிக் கொண்ட அவன்,
‘‘நான் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வந்துடுவேன். நீங்க யாரும் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த, ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம்.... ஏன், அவரை அசைக்க கூட வேண்டாம். இனி என்ன செய்யணும்னு நான் பார்த்துக்குறேன்.’’ என்ற குமரவேல் மேலும் சில விபரங்களை ஒரு நிமிடத்திற்குள் சொல்லி முடித்தான்.
அடுத்து அவன் டயல் செய்த எண்.....
***
திருவாரூரில் பழைய நாகை சாலை பகுதியில் 1950ஆம் ஆண்டுமுதல் சுமார் நாற்பது வருட காலம் புகழ்பெற்று விளங்கிய மளிகைகடையில் கணக்குப்பிள்ளையாக பணியாற்றி வந்தவர் சுந்தரமூர்த்தி. முதல் தலைமுறையினர் போட்டு வைத்த அஸ்திவாரம் காரணமாக அவர்கள் வாரிசுகளும் சுமார் பத்தாண்டு காலம் நன்றாக நடத்தி வந்த கடை கால சூழ்நிலைகள் உள்ளிட்ட பல காரணங்களால் 1990 ஆம் ஆண்டு வாக்கில் மூடுவிழா கண்டது. முப்பது ஆண்டுகாலம் அந்த கடையில் கணக்குப்பிள்ளையாக வேலைபார்த்த அனுபவத்தை வைத்து சுந்தரமூர்த்தியால் வேறு எதையும் பெரிதாக செய்ய முடியவில்லை.
அவருக்கு ராமநாதன், ராமகிருஷ்ணன், ராம சுப்பிரமணியன் என்று மூன்று மகன்களும், சத்தியப்பிரியா என்ற மகளும் உண்டு.
மகளை திருநெல்வேலியில் ஒரு பள்ளி ஆசிரியருக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டார்.
மூத்த மகன் ராமநாதன் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மஸ்கட்டில் வேலை பார்க்கிறான். அவன் மனைவி மல்லிகாவும் திருமணமாகி இரண்டாண்டுகள் கழித்து பிறந்த அவர்களது ஒரே மகன் விஜயும் மல்லிகாவின் பெற்றோர் வீட்டிலேயே வசித்து வருகிறார்கள். அவ்வப்போது ராமநாதன் விடுமுறைக்காக இந்தியா வரும்போதுதான் மல்லிகாவும் விஜயும் திருவாரூர் வருவார்கள்.
இரண்டாவது மகன் பொறியியல் படித்துவிட்டு கோயம்புத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு குடும்பத்துடன் அங்கேயே வசித்து வருகிறான். அவர்களுக்கு ஆணும் பெண்ணுமாக ஒரே பிரசவத்தில் நிகில், சுஷ்மிதா என இரட்டைக்குழந்தைகள்.
மூன்றாவது மகன் ராமசுப்பிரமணியன் திருவாரூரிலேயே நூற்றாண்டுகள் கடந்த இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு உற்பத்தி நிறுவனத்தில் அக்கவுண்டன்டாக பணியாற்றி வருகிறான். இவர்களுக்கு குமரவேல், ஜனனி என்று இரண்டு குழந்தைகள்.
ராமநாதன் வெளிநாட்டில் வசித்ததால் சம்மந்தி வீடான மல்லிகாவின் பெற்றோர் வீட்டில் சுந்தரமூர்த்தியும் அவர் மனைவியும் வசிக்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
ராமகிருஷ்ணன், ராமசுப்பிரமணியன் வீடுகளில்தான் மாறி மாறி சுந்தரமூர்த்தியும் அவர் மனைவி காமாட்சியும் வசித்து வந்தார்கள்.
மூத்த மருமகள் மல்லிகா, மாமனார் மாமியாரை வைத்துப் பார்க்கக்கூடாது என்ற திட்டத்துடனேயே அவள் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறாள். நாமதான் இளிச்சவாயர்கள் என்று சியாமளாவும், லீலாவதியும் நினைத்தார்கள்.
ஆனாலும் மல்லிகா, சியாமளா இருவரும் நல்ல வசதி என்பதால் உள்ளுக்குள் இந்த வன்மம் இருந்தாலும் வெளியில் நன்றாக பழகிக் கொள்வார்கள். இவர்களுடன் ஒப்பிடும்போது ராமசுப்பிரமணியனும் லீலாவதியும் வசதிக்குறைவு என்பதால் கண்ணுக்குத்தெரியாத இடைவெளியை சுற்றத்தார் உணரும்படியே கடைப்பிடித்து வந்தார்கள்.
அவர்களிடம் காசு இருந்தால் அவங்களோட வச்சுக்கட்டும் என்பாள் லீலாவதி.
நம்ம புருஷங்க கஷ்டப்பட்டு உழைக்கிறாங்க. நாம நல்லாயிருக்கோம். சின்னவளை நெருங்க விட்டா நம்ம வாழ்க்கையை பார்த்து பொறாமைப்படுவா என்று தங்களுக்குள் ஒரு எல்லையை பரஸ்பரம் தாண்டிக்கொள்ளாமல் பார்த்துக்கொண்டார்கள்.
காமாட்சி உயிருடன் இருந்தவரை அவள் வீட்டு வேலைகள் செய்ததால் இரண்டு மற்றும் மூன்றாவது மருமகள்களுக்குள் பெரிய அளவில் போட்டி இல்லை.
காமாட்சி இறந்தபிறகுதான் சியாமளாவுக்கும், லீலாவதிக்கும் சுந்தரமூர்த்தி பெரிய சுமையாக தெரிந்தார்.
***
சுந்தரமூர்த்தி கணக்குப்பிள்ளையாக வேலை பார்த்த நேரத்தில் பொழுது போக்கு என்றால் முதலிடம் செய்தித்தாள்களும், பத்திரிகைகளும்தான். மகன்கள் திருமண வயதை எட்டிய காலத்தில் சிறுவர்களுக்காக பூந்தளிர், அம்புலிமாமா உள்ளிட்ட பல இதழ்களும், சில செய்தித்தாள்களின் இணைப்பிதழ்களும் கொடிகட்டிப் பறந்தன.
அப்போது புராண, நீதிக்கதைகள் பலவும் படக்கதை தொடராக வெளிவரும். அவற்றை கத்தரித்து தனித்தனி தொகுப்பாக பைண்டிங் செய்து வைத்திருந்தார் சுந்தரமூர்த்தி. அவரது மகன்கள், மகள் யாருமே அவற்றை சீண்டிப்பார்க்கவில்லை.
அவற்றை எல்லாம் படித்தால் குழந்தைகள் கொஞ்சமாவது பொதுநலத்துடன் நல்ல குடிமகனா(ளா)க விளங்குவார்கள் என்பது சுந்தரமூர்த்தியின் எண்ணம். அதனால் பேரக்குழந்தைகளுக்காவது இவற்றை எல்லாம் கொடுத்தால் அதைப் படித்து அவர்களுக்கு வாசிப்பு பழக்கம் வரும் என்று நம்பினார்.
ராமநாதனின் மகன் விஜய், ராமகிருஷ்ணனின் மகன் நிகில், மகள் சுஷ்மிதா இவர்கள் மூவருமே நாமக்கல் மாவட்டத்தில் ஓர் உண்டு உறைவிடப்பள்ளியில்தான் சிறுவயது முதலே படித்து வந்தார்கள். அதனால் அவர்கள் தாத்தா, பாட்டியுடன் உறவாடுவதே அரிதாகிப் போனது.
ஆனால் ராமசுப்பிரமணியனுக்கு தன் குழந்தைகள் குமரவேல், ஜனனியை இப்படி வெளியூர் பள்ளிகளில் சேர்க்கும் அளவுக்கு பொருளாதாரம் ஒத்துழைக்கவில்லை. இதனால் சுந்தரமூர்த்தியுடன் பாசத்துடன் பழகும் வாய்ப்பு குமரவேலுக்கும் ஜனனிக்கும் கிடைத்தது. ராமசுப்பிரமணியன் சாதாரண ஆங்கில மீடியப் பள்ளியில் ஜனனியை சேர்த்துவிட்டான். ஆனால் குமரவேல் ஏழாம் வகுப்பிலிருந்து விடாப்பிடியாக அரசுப்பள்ளியில்தான் படித்து வருகிறான்.
குமரவேல் அரசுப்பள்ளிக்கு சென்றதே சுந்தரமூர்த்தியால்தான் என்று ராமசுப்பிரமணியன் இப்போதும் தந்தையை திட்டிக்கொண்டுதான் இருப்பான்.
ஒருவகையில் இது உண்மைதான். குமரவேல் அரசுப்பள்ளிக்கு சென்றதே ஒரு கதை. ஏனென்றால் ஆறாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம் இரண்டையும் ஒழுங்காக கற்பிக்காத தனியார் பள்ளியில்தான் குமரவேல் படித்து வந்தான்.
சுந்தரமூர்த்தி தொகுத்து வைத்திருந்த நீதி, புராணக்கதைகளை எல்லாம் குமரவேல் ஐந்தாம் வகுப்பு முடிப்பதற்குள்ளாகவே படித்து முடித்துவிட்டான். வீட்டுக்கு வரும் நாளிதழின் வெள்ளிக்கிழமை இணைப்பு இவன் வாசிப்பு பசிக்கு போதுமானதாக இல்லை.
திருவாரூர் தெற்கு வீதியில் நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமாக இருந்த பழைய கட்டிடத்தில் இயங்கி வந்த நூலகமும், குமரவேல் குடியிருந்து வந்த தெருவில் உள்ள இரண்டு சலூன் கடைகளில் வாங்கப்படும் நாளிதழ்களும் ஓரளவு இவன் பசியை தீர்த்து வந்தன.
அதிலும் நகராட்சி நூலகம் என்ற அமுதசுரபி வெகு விரைவில் காலிப்பாத்திரமானது.
நூலகத்துக்கு முன்புறம் மிகப்பெரிய குடைபோல் இருந்த இரண்டு ஆலமரங்கள் வெட்டப்பட்டு, அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டது. கடை மூலமாக வருமானம் வந்தால் நூலகம் இன்னும் சிறப்பாக இயங்குமாம் என்று பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்ததை குமரவேல் பார்த்தான். ஆனால் நடந்தது வேறு.
ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டுச்சாம் என்ற பழமொழிக்கு அர்த்தம் 10 வயதிலேயே குமரவேலுக்கு புரிந்து விட்டது.
வணிக வளாகத்தில் இருந்த டீக்கடைக்கு வருபவர்களுக்கும், புகைப்பிடிப்பவர்களுக்கும் இடையூறாக இருப்பதாக கருதி மறைமுகமாக நூலகத்தின் உயிரை எடுத்துவிட்டார்கள்.
முதலில் பணியாளர் நியமனம் காலியானது. சரியாக திறக்காமல் விட்டதும் வரும் வாசகர்கள் எண்ணிக்கை குறைந்தது. பிறகு புத்தகங்கள் வாங்குவதை குறைத்தார்கள். பின் செய்தித்தாள்களையும் குறைத்தார்கள். ஆக இப்போதெல்லாம் திறக்கப்படுவதே இல்லை.
அந்த நேரத்தில் மாவட்ட மைய நூலகம் திருவாரூர் புறவழிச்சாலையில் ஒரு காட்டு பங்களா போல் புதிதாக திறக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் சீறிவரும் வாகனங்களின் அச்சுறுத்தலையும் மீறி, குமரவேல் சைக்கிளில் அங்கு செல்ல ஆரம்பித்தான்.
முதல் நாள் சென்றபோது, வாசகர் கையொப்பமிடும் புத்தகத்தில் குமரவேல் உயரம் காரணமாக சிரமத்துடன்தான் கையொப்பமிட்டான். அவன் முயற்சியைப் பார்த்த வாசகர் ஒருவர் புன்னகைத்தார்.
விடுமுறை நாட்களில் அவனை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அந்த வாசகர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அப்போதுதான் அவர் பெயர் குருநாதன் என்றும், அவர் திருவாரூர் விளமலில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார் என்பதையும் அறிந்து கொண்டான்.
இவனுடைய வாசிப்பு ஆர்வத்தை பார்த்து அவன் வயதுக்கேற்றவாறு பல புத்தகங்களையும் அறிமுகம் செய்தார். இப்படியே ஒரு வருடம் ஆனது. ஆறாம் வகுப்பு முடித்தபோது அரசுப்பள்ளியில்தான் படிப்பேன். அங்க படிச்சே, நான் பெரிய ஆளா வருவேன் என்று அடம்பிடிக்க, ராமசுப்பிரமணியன் குருநாதனிடம் சண்டைக்கே போய்விட்டான்.
அவ்வளவையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த குருநாதன், ‘‘சார்... இப்போ நீங்க பேசுறது எதுவும் உங்க மனசுக்கு சரின்னு பட்டு பேசலை. சுற்றுப்புற சூழ்நிலைகளும் மற்றவர்கள் படிக்க வைக்கிற பள்ளிக்கூடம் பற்றிய செய்திகளும்தான் உங்க மனசுல பனிப்படலமா மறைச்சு நிக்கிறது.
ஒரு சில அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மாதிரி நானும், எங்க ஸ்கூல்ல இருக்குற மற்ற ஆசிரியர்களும் கிடையாது. மாணவர்களுக்கு சம்பாதிக்கிற திறமை மட்டுமில்லை... அவனால வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மை கிடைக்கணும்னு கிடைக்கிற குணமுள்ளவனா உருவாக்கணும்னு ஒரு லட்சியத்தோட இருக்கோம். நம்பி அனுப்புங்க. ஒரு வருசத்துலயே உங்க புள்ளைகிட்ட என்னென்ன மாற்றம் ஏற்படுதுன்னு புரிஞ்சுடும். அது ஓ.கேன்னா இங்கேயே படிக்கட்டும். இல்லன்னா உங்க விருப்பம் போல வேற ஸ்கூலுக்கு கொண்டு போங்க.’’ என்றார்.
குருநாதனின் வார்த்தைகள் ராமசுப்பிரமணியனின் மனதை அசைத்து விட்டது. லீலாவதிதான் இதற்கு எளிதில் சம்மதிக்கவில்லை.
சுந்தரமூர்த்தியைப் பற்றி கேட்கவே வேண்டாம். ‘‘சந்தோஷமா அனுப்புடா’’ என்றார்.
‘‘அதானே... இவன் பாடப்புத்தகத்தை விட்டுட்டு கதைப்புத்தகம்னு அலைஞ்சு வீணாப்போனதுக்கே நீங்கதானே காரணம்... ’’ என்று பல்லைக்கடித்தான் ராமசுப்பிரமணியன்.
‘‘கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சு நானும் ஒரு அப்துல்கலாம் ஐயா மாதிரி வர்றது உங்க யாருக்குமே புடிக்கலையா’’ என்றான் குமரவேல்.
பிறகு வேண்டா வெறுப்பாக திருவாரூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் குமரவேலை சேர்த்துவிட்டான். மூன்றாவது நாளே லீலாவதி பெரிய ரகளை செய்துவிட்டாள்.
அதற்கு காரணம் குமரவேலின் சீருடைகள் அவ்வளவு மோசமாக பழுப்பேறி அழுக்குடன் வந்ததுதான்.
‘‘இப்படி அழுக்கை புரட்டிகிட்டு வந்தா நான் என்ன பண்றது. உன் துணியை துவைக்க நான் இன்னும் ரெண்டு கையா செஞ்சு வச்சுக்க முடியும்....’’ என்று கத்த, அதை குருநாதனிடம் குமரவேல் சொல்லிவிட்டான். உடனே அவர் பெற்றோருக்கு புத்தி சொல்ல வராமல், குமரவேலுக்கு வேறு சில அறிவுரைகள் கூறினார்.
அதை குமரவேல் கடைப்பிடிக்க ஆரம்பித்தவுடன் லீலாவதி கப்சிப்.
குமரவேல் தன் துணிகளை ஊற வைத்து தானே துவைத்து, அலசி, பிழிந்து காயப்போட்டான். காய்ந்த பிறகு துணிகளை அயர்ன் செய்து மடித்து வைப்பது, சாப்பிட்ட தட்டு, டம்ளர்களை கழுவுவது, அவ்வப்போது வீட்டை கூட்டி சுத்தமாக வைத்திருப்பது என்று தன் வேலைகளை தானே செய்ய பழகிக் கொண்டான்.
முதலில் லீலாவதி, மகன் இதையெல்லாம் செய்ய வேண்டாம் என்று மறுத்தாள்.
‘‘அம்மா... எனக்கு உடம்பு சரியில்லைன்னா இதையெல்லாம் செஞ்சி கொடு. அதே மாதிரி உனக்கு உடம்பு சரியில்லைன்னா உன் துணியை நான் துவைச்சுப் போடுறேன். மத்த நேரங்கள்ல தன் வேலையை தானே பார்த்துக்குறது நல்லதுன்னு சார் சொல்லியிருக்கார்.’’ என்று தெளிவாக சொல்லிவிட்டான்.
காலணிகளை ஓரமாக கழட்டி விடுவது, எங்காவது சென்றால் சைக்கிளை ஓரமாக யாருக்கும் இடையூறு இல்லாமல் நிறுத்தி வைப்பது என்று நன்னடத்தையுடன் குமரவேல் செயல்படுவதைப் பார்த்து, குருநாதனுக்கு மானசீகமாக நன்றி சொன்னார்கள்.
ஒரு வருடம் பார்த்து முடிவு செய்யுங்கள் என்று குருநாதன் சொல்லியிருந்தார். ஆனால் மூன்று மாதத்துக்குள்ளேயே குமரவேல் தான் சரியான பள்ளியில்தான் படித்துவருவதை நிரூபித்துவிட்டான்.
படிப்பு முன்ன பின்ன இருந்தாலும், ஒழுக்கமான மாணவன் எங்கும், எப்படியும் பிழைத்துக்கொள்ள முடியும் என்று சமாதானமாகிக் கொண்டார்கள்.
ஆனால் குருநாதன் அந்தக் குறையையும் வைக்கவில்லை. தமிழ் மீடியப் பள்ளியாக இருந்தாலும், தமிழ் இலக்கணம் சொல்லித்தந்தது மட்டுமின்றி ஆங்கில நாளிதழ்கள், டி.வி.டிக்கள் உதவியுடன் ஆங்கில புலமையையும் நன்றாகவே வளர்த்துவிட்டார்.
(மீதி அடுத்த 31–05–2019 இதழில்...)

No comments:

Post a Comment