நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, May 03, 2019

பாலிதீன் பரவலாவதற்கு முன்பு...


40 வயதை நெருங்கியவர்கள் அனைவருக்கும் கீழ்க்கண்ட அனுபவங்கள் கிடைத்திருக்கலாம்.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஸ்வீட் கடையில் அல்வா வாங்கினால் காய்ந்த புரசமர இலையில் வைத்து, பட்டர் பேப்பரில் சுற்றி அதனை செய்தித்தாளில் மடித்து கட்டி தருவார்கள். லேசான சூடாக இருக்கும் அல்வா காய்ந்த புரசஇலை மணத்துடன் சேர்ந்து ஒரு புதுவித அனுபவத்தை கொடுக்கும்.

அடுத்து ஹோட்டலில் இட்லி வாங்க சென்றால் சாம்பாருக்கு தனி பாத்திரம் எடுத்துச் செல்வோம். பெரும்பாலும் சதுரமாக வெட்டி வைக்கப்பட்டிருக்கும் வாழை இலையை ஒரு செய்தித்தாள் மீது வைத்து அதில் இட்லிகளை எடுத்து வைத்து, தம்பி சட்டினி வைக்கலாமாக என்று கேட்பார்கள்.
வைக்கலாம்ணே... என்று நாம் குரல் கொடுத்ததுமே அங்கே பரிமாற வைத்திருக்கும் சட்னியில் உள்ள கரண்டியை எடுத்து தனியாக இருக்கும் கெட்டி சட்னியையும், கார சட்னியையும் வைத்து கட்டுவார்கள்.
பொட்டலத்தைப் பிரிக்கும்போது ஒன்று அல்லது இரண்டு இட்லியுடன் சங்கமமாகி இருக்கும் சட்னியை வழித்து தனியாக வைத்து விட்டு சட்டினி ஊறிய இட்லியை சாப்பிடுவதே பெரும்பாலானோரின் விருப்பமாக இருக்கும்.
வீடுகளில் நான்கைந்து அரை டிக்கட் இருந்தால் சட்டினி சங்கமமான இட்லிக்காக யுத்தமே நடக்கலாம்.
இறைச்சி கடைக்கு செல்லும்போது டிபன்பாக்ஸ், தூக்குவாளி என்றெல்லாம் எடுத்துச் சென்ற காலம் தற்போது திரும்பத் தொடங்கி இருக்கிறது. இறைச்சியை கருப்பு பாலிதீன் கவரில் வாங்கும் பழக்கத்துக்கு மக்கள் மாறியது அல்லது கடைக்காரர்கள் மாற்றியது எப்போது என்று சரியாக நினைவில்லை.
சிறு வயதில் என்னுடைய விருப்ப பிஸ்கட் என்றால் பிரிட்டானியா மில்க் பிக்கீஸ்தான். அப்போதெல்லாம் மாரி பிஸ்கட் என்றாலே அங்கிருந்து தப்பிக்க பார்ப்பேன். மாரி பிஸ்கட்டாலோ அல்லது வேறு காரணமா என்று தெரியவில்லை. வட்ட வடிவத்தின் மீதே ஏதோ சொல்ல முடியாத வெறுப்பு இருந்த நேரம்.
பிரிட்டானியா மில்க் பிக்கீஸ் உப்புத்தாளில் அடுக்கி சுற்றிலும் ஒட்டப்பட்டு, மேலே பேப்பர் பேக்கிங் என்றுதான் விற்பனையாகிக் கொண்டிருந்தது.
அவர்கள் இப்போதுள்ள அலுமினிய பாயில் பேப்பரை விடுத்து பழையபடி உப்புத்தாள், பேப்பர் பேக்கிங் செய்தாலே நூறு ஆண்டை எட்டியுள்ள அந்த நிறுவனத்தில் தினமும் டன் கணக்கில் பாலிதீன் பயன்பாடு தவிர்க்கப்பட வாய்ப்பு உண்டு.
நிறுவனங்களும் கடைக்காரர்களும் பாலிதீன் தொடர்பாக சில விசயங்களை கட்டாயமாக கடைப்பிடிப்பது அவசியம். ஆனாலும் மக்கள் தங்களின் சோம்பேறித் தனத்தால்தான் பாலிதீனின் உபயோகத்தை ஊக்குவிக்கிறார்கள். அதனால் மக்கள் மனநிலை மாற வேண்டும்.
-அழகர்நம்பி

No comments:

Post a Comment