நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, May 10, 2019

அசுரனும்.... ஆனந்த பூங்காற்றேவும்...

இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது.
திருவாரூரில் இந்த இரண்டு திரைப்படங்களும் செங்கம் தியேட்டரில் திரையிடப்பட்டவை.
ஏற்கனவே ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் கேப்டன் பிரபாகரன் என்ற மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு மீண்டும் மன்சூர் அலிகான் அதே வேடத்தில் நடிக்கிறார் என்பதால் 1995ல் வெளியான அசுரன் திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது.
இவன் வேற்று கிரகத்திலிருந்து வந்தவன் என்ற துணைத் தலைப்புடன் வெளியான இந்த படம் வெற்றி பெறவில்லை என்றாலும் ஆதித்யன் இசை அமைப்பில் ஒரே ஒரு பாடல் ஹிட் ஆனதால் படம் வெளியான மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை நிறைய கூட்டம். மன்சூர் அலிகானும் நெப்போலியனும் ஆட்டம் போட்ட ’சக்கு சக்கு வத்திக்குச்சி... சட்டுன்னுதான் பத்திகிச்சு....’ பாடலுக்கு விசில் பறந்தது.
1999ம் ஆண்டு சோழாவில் படையப்பா வெளியான நேரம். தினசரி நாளிதழில் ஆனந்தப்பூங்காற்றே பட விளம்பரத்தில் திருவாரூர் செங்கம் என்ற பெயரைப் பார்த்த நண்பர் ஒருவர், இந்த தியேட்டர்ல ரிலீஸ் ஆகுதே. படம் காலியா... ஆனா பாட்டெல்லாம் கேட்டேன் சூப்பரா இருக்கு. அதனால முதல் நாளே போகப்போறேன் என்றார்.
இப்போது அளவுக்கு பாடல்களை கேட்க வாய்ப்பில்லாத காலம் அது. ஒலிநாடாக்கள்தான் நிறைய டீக்கடைகளிலும் பேருந்துகளிலும் ஒலித்துக் கொண்டிருந்தன. சி.டிக்கள் அப்போதுதான் மிகவும் காஸ்ட்லியான பொருளாக அறிமுகமாகிக் கொண்டிருந்த காலம் அது.
ஆனந்தப் பூங்காற்றே படத்தில் இரண்டு கானாப் பாடல்கள், அஜீத் மீனாவுக்கு அழகான மெலோடி பாடல், இடைவேளைக்குப் பிறகு கார்த்திக்-மீனாவுக்கு இரண்டு அமைதியான பாடல்கள், அஜீத் மாளவிகாவுக்கு ஒரு குத்துப்பாடல், நகைச்சுவை, போரடிக்காத திரைக்கதை ஆகியவற்றுடன் வெற்றிப்படமாகவே அமைந்திருந்தது.




அசுரன் படம் பார்க்க ஐந்து ரூபாய் ஐம்பது பைசா டிக்கட்டுக்காக அந்த தொகையை மட்டும் எடுத்து நடந்துதான் சென்றிருந்தேன். சொந்த சைக்கிளும் அப்போது கிடையாது. முப்பது நாற்பது டிக்கட் கொடுத்து விட்டு 7.50 டிக்கட்தான் இருக்கிறது என்று சொல்லி கதவைச் சாத்தி விட்டார்கள்.
காசு இல்லாததால் வீட்டுக்குத் திரும்ப மனமில்லை. யோசித்துக் கொண்டு நின்றபோது விடுமுறை நாட்களில் நான் வேலை செய்த மளிகை கடையில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் விபரம் கேட்டார்.
சொன்னேன். உடனே அவர் என்னிடம் இருந்த 5.50 ஐ வாங்கிக் கொண்டு அவரே இரண்டு ரூபாய் சேர்த்து 7.50 டிக்கட் எடுத்துக் கொடுத்தார். இரண்டு ரூபாய் அடுத்தவர் கொடுத்து அதன் மூலம் படம் பார்த்திருக்கிறேன்.
ஆனால் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதே திரையரங்கத்தில் வேலைக்குச் சேர்ந்ததும், செங்கம் தியேட்டரில் 48 நாட்கள் ஓடிய ஆனந்தப்பூங்காற்றே படத்தை பல நாட்கள் நானே திரைப்படக் கருவியை இயக்கி படம் திரையிட்டதும் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும் நினைவுக்கு வருகிறது.
***
திருவாரூர் செங்கம் திரையரங்கத்திற்கு பல பெருமைகள் உண்டு. சினிமா ஸ்கோப்–ல் வரும் இந்திப் படங்கள் திரையிடப்படும். சவுண்ட் சிஸ்டம் பிரம்மாதமாக இருக்கும்.. எனக்குள் திரை ஆர்வத்தை தூண்டியதில் செங்கம் திரையரங்கத்திற்கு  நிறையவே பங்குண்டு.
-திருவாரூர் பாபு

No comments:

Post a Comment