நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, May 17, 2019

100 சதவீதம் உண்மையாக...

கிழக்கு பதிப்பக வெளியீடான பா.தீனதயாளன் எழுதிய நடிகர் கமல் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் இருந்து...
எம்.ஜி.ஆர் அவர்கள் படப்பிடிப்பு, எடிட்டிங், கட்சி மீட்டிங் என்று முழுவதும் பரபரப்பாக இருந்த நேரத்தில்,
கமல், ‘‘சார்... மன்மத லீலை படம் பார்த்தீர்களா?’’
‘‘நேரம் எங்கேப்பா இருக்கு?’’
‘‘சார் நான் பண்ற நல்ல படம் வரும்போது சொல்றேன். தயவு செய்து நீங்க பார்க்கணும் சார்...’’
‘‘அப்போ கெட்ட படம்னு தெரிஞ்சுகிட்டே சில படம் நீ பண்றயோ?’’
எம்.ஜி.ஆர். அப்படிக் கேட்டதும் கமல் திணறினார். அவர் நீலப்படங்களில் கூட நடிக்கிறவர் என்று மஞ்சள் பத்திரிகைகள் பச்சையாக எழுதிய நேரம். கமலைத் தட்டிக் கொடுத்த எம்.ஜி.ஆர்.உபதேசம் செய்தார்.
‘‘நான் தோல்விப்படங்கள் கொடுத்திருக்கிறேன். ஆனால் தெரிஞ்சு இது ஃபெயில் ஆகும்னு கொடுத்ததில்ல. லேட் ஆகியிருக்கலாம். தயாரிப்பாளரை நான் கஷ்டப்படுத்தி இருக்கலாம். செலவு வெச்சிருக்கலாம். ஆனால் That is only to give my best அதுக்கப்புறம் படம் ஃபெயிலாவது ஆடியன்ஸ்கிட்டே இருக்கு. நாங்க நூறு படி ஏறி வந்து இருக்கோம். நீங்க திரும்பவும் ஒண்ணிலிருந்து ஆரம்பிக்காதீங்க. நூறுல ஆரம்பிச்சு மேல போங்க...’’ என்று கூறியிருக்கிறார்.
இந்த அறிவுரை கமலுக்கோ திரைப்படத்துக்கோ மட்டுமல்ல. நேர்மையாக செய்யும் எல்லா தொழிலுக்கும், எல்லா வேலைகளுக்கும் பொருந்தும். ஊதியம் உள்ளிட்ட காரணங்களால் ஒரு வேலையை செய்ய முடியாது என்று மறுப்பது தவறே இல்லை. ஆனால் ஒரு வேலை அல்லது தொழிலில் இறங்கிவிட்டால் 100 சதவீதம் உண்மையாக, அது நல்லபடியாக நிறைவேறும்படி உழைக்க வேண்டும். அப்படி செய்தால் அது அந்த நேரத்தில் இல்லை என்றால் பிறகு வேறு ஒரு சந்தர்ப்பத்திலாவது நமக்கு பலன் அளித்தே தீரும்.
நான் கூட முதலில் நடிகர் கமலின் துதிபாடும் நூலாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்டு நூலகத்தில் பல முறை இந்த புத்தகத்தை புரட்டிக் கூட பார்க்கவில்லை. ஆனால் இப்போது எடுத்து படித்த பிறகுதான், என்னதான் கமல் குழந்தை நட்சத்திரமான முதல் படத்திலேயே புகழ் பெற்றிருந்தாலும் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக எவ்வளவு கஷ்டங்கள், அவமானங்கள், திரைத்துறையில் சாதாரண வேலைகள், சொந்த வாழ்விலும் சிக்கல்கள் ஆகியவற்றை தாண்டி இந்த நிலையை அடைந்திருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.
கமல் மட்டுமல்ல, எந்த மனிதனுக்குமே பல்வேறு முகங்கள் இருக்கும். அத்தனையும் அத்தனை பேருக்கும் பிடிக்காது. அதாவது எந்த ஒரு மனிதனிடமும் முழுவதும் பாராட்டத்தக்க குணங்களோ, முழுக்க முழுக்க வெறுக்கக்கூடிய குணங்களோ இருப்பதில்லை. அதனால் நாம் எந்த ஒரு மனிதனிடமிருந்தும் நம்மை மேம்படுத்தக்கூடிய விஷயங்கள் இருந்தால் அவற்றை ஏற்றுக்கொள்ளவோ, பின்பற்றவோ செய்யலாம். அதனால் யாருக்கும் நஷ்டமில்லை.

No comments:

Post a Comment