நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, May 03, 2019

தேர்வுக்காய்ச்சல்...


பறவைக் காய்ச்சல், மூளைக் காய்ச்சல் என்று காய்ச்சல்கள் பலவகை இருந்தாலும், நாம் சுகாதாரமாக இருக்கும்போதே தாக்கக்கூடிய காய்ச்சல் ஒன்று உண்டு. அதுதான் எக்ஸாம் ஃபீவர் எனப்படும் தேர்வுக் காய்ச்சல். மனதளவில் பலவீனமாகவும், தேவையான அளவில் உணவு உட்கொள்ளாமலும் இருக்கும் மாணவ, மாணவியர் தேர்வு நெருங்கும்போது மன அழுத்தம் காரணமாக காய்ச்சலாம் பாதிக்கப்பட்டு விடுவார்கள்.
அதெல்லாம் ஒரு காலம். இப்போது நிலைமை எவ்வளவோ மாறி விட்டது. இதைக் கேட்டதும் மகிழ்ந்து விடாதீர்கள். குழந்தைகளைத் தாக்கும் முன்பே பெற்றோர்களைப் பாதித்து விடுகிறது. இப்போதெல்லாம் ஜனவரி மாதம் நிறைவடைந்து விட்டாலே பெற்றோர்களின் மன உளைச்சல்கள் அவர்களின் செயல்களிலேயே தெரிய ஆரம்பித்து விடும். சில சமயங்களில் தேர்வு எழுதப்போவது பெற்றோர்களா மாணவர்களா என்ற ஐயம் நமக்கு எழுவது உண்டு.
முன்பெல்லாம் அரசுப் பொதுத் தேர்வுகள் எழுதப்போகும் மாணவர்களின் வீட்டில்தான் ராணுவத்தைத் தாண்டிய கட்டுப்பாடுகள் இருக்கும். இப்போது எல்.கே.ஜி மாணவனின் வீட்டிலேயே இந்த நிலை.
மார்கழி மாதத்தின் அதிகாலையில் போட வேண்டிய கோலத்தை முதல் நாள் இரவிலேயே வரைந்து பெரிய கடமையை முடித்த (?) திருப்தியில் ஒரு தொலைக்காட்சித் தொடருடன் உறங்கச் செல்லும் தாய்மார்கள், அடுத்த ஒன்றிரண்டு மாதங்களில் பிள்ளைகளை அதிகாலையிலேயே விழிக்க வைத்து படி... படி... என்று கூறி அவர்களுக்கு படிப்பின் மீதுள்ள ஆர்வத்தையே படியிறங்கச் செய்து விட்டு எல்லாம் பிள்ளைகளின் எதிர்காலத்துக்குதானே என்று கூறிவிடுவார்கள்.
மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்ற துறைகளின் நிபுணர்கள் தங்களின் குழந்தைகளும் அதே துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவழிக்கத் தயங்க மாட்டார்கள். ஆனால் தன் பிள்ளைகளின் விருப்பம் என்ன என்பதை அவர்களுடன் அமர்ந்து மனம் விட்டுப் பேசித் தெரிந்து கொள்ள சில நிமிடங்களைக் கூட செலவழிக்க முன்வருவதில்லை.
வேறு சில பெற்றோர் தங்களால்தான் அந்தப் படிப்பை அடைய முடியவில்லை. எனவே நீ கட்டாயம் அந்த துறையைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள். கிராமத்து மொழியில் கூறினால், பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டு, மகன் அல்லது மகளின் படிப்பைப் பற்றி மற்றவரிடம் பெருமை பேசுவதே குறிக்கோளாக இருக்கும். பிள்ளைக்கு விருப்பம் இல்லை என்ற போது எப்படி செய்ய முடியும் என்று சிந்திப்பதே இல்லை.
சாதாரண கூலித் தொழிலாளியின் மகனாக இருந்தாலும் நம் குடியரசுத்தலைவர் போல் உயர மிக முக்கியத் தகுதி ஒன்று உண்டு. அது அந்த வாரிசின் சொந்த விருப்பம். சுய விருப்பத்துடன் உள்ள குழந்தை எந்த நிலைமையில் இருந்தாலும் முயற்சி, திறமை மூலம் உயரிய இடத்தை அடையலாம். ஆனால் குடியரசுத்தலைவரின் வாரிசாகவே இருந்தாலும் அவரது குழந்தையின் விருப்பம் ஊர்திப் பொறியியல் என்றால் அதைத் தடுப்பது மிக மிக தவறு.
இப்படி குழந்தைகளின் விருப்பத்திற்கு மாறான துறையில் நுழையச் செய்து தேர்வுக்காலம் முடியும் வரை மன ரீதியாக துன்புறுத்துவதுடன் நிறுத்துகிறார்களா என்றால் அதுதான் இல்லை.
சில வீடுகளில் தந்தையின் பேச்சு ஒரு மாதிரியாகவே இருக்கும். ரிசல்ட் வரட்டும். அப்புறம் இருக்கு வேட்டை... இப்படி மிரட்டுவதுதான் பல பள்ளி மாணவ, மாணவியரின் தற்கொலைக்கும், அவர்கள் வீட்டை விட்டு ஓடுவதற்கும் முக்கிய காரணமாகும்.
நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றால், சக்திக்கு மீறிய, அவசியமில்லாத பெரிய பரிசு, தேர்ச்சி அடையாவிட்டாலோ தண்டனை என்பது தவறான அணுகுமுறையாகும்.
நல்ல மதிப்பெண்ணுக்கு சிறந்த பரிசு (அது குழந்தையின் திறனை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். மாறாக புத்தியை மழுங்கடிப்பதாக இருக்கக் கூடாது). சுமாரான மதிப்பெண்ணுக்கு சாதாரண பரிசு என்று கொடுத்துப் பாருங்கள். குழந்தைகளின் அணுகுமுறையில் சிறப்பான முன்னேற்றம் தெரியும்.
கதைப்புத்தகம் படிக்கும்போது நமக்கு இருக்கும் ஆர்வம் பாடப் புத்தகத்தைப் புரட்டும்போது இருப்பதில்லை.
நண்பர் ஒருவர் கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கும்போது துணைத் தாளாக இருந்த பொருளாதாரத்தில் அந்த வகுப்பின் மாணவ மாணவிகள் கிட்டத்தட்ட நூறுபேரில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் நாற்பது முதல் ஐம்பது மதிப்பெண்கள் வரை தேர்ச்சி பெற்று நிம்மதிபெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தார்கள். விதிவிலக்காக அந்த ஒரு மாணவர் தொண்ணூற்று நான்கு மதிப்பெண் எடுத்து அனைவரையும் வியக்கச் செய்துள்ளார்.
மற்ற அனைரும் பாடநூல், கையேடுகளை மனப்பாடம் நாற்பது முதல் அறுபது பக்கம் வரை எழுதிக் குவித்திருக்கிறார்கள். ஆனால் அவர் சுமார் இருபத்து மூன்று பக்கங்களை மட்டுமே எழுதியதாக சொன்னார். இது எப்படி சாத்தியம் என்று நாங்கள் குழம்பியபோதுதான் ஒரு உண்மையை போட்டு உடைத்தார். நாங்கள் சுமார் ஐநூறு பக்க விசயங்களை சிரமப்பட்டு மனப்பாடம் செய்து தேர்வுக்கு தயாரானோம். ஆனால் அவர் முக்கிய கொள்கைகளை மட்டும் மனப்பாடம் செய்து விட்டு சொந்த நடையில் விளக்கம் அளிக்க, அவருக்கு அடித்தது பம்பர் மதிப்பெண். இந்த உத்தியை தேவையான சூழ்நிலையில் அளவோடு பயன்படுத்தும் கலையை நம் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்காத வரை அவர்களது சக்தியை வீணடிக்கும் மாபாதகச் செயலை செய்து கொண்டேதான் இருப்போம்.
(இந்த கட்டுரை 2006ஆம் ஆண்டு வாக்கில் எழுதப்பட்டது. தற்போது மாணவரின் மனப்பாடத்திறனை விட புத்திக்கூர்மையை சோதிக்கும் விதத்தில் பாடத்திட்டத்தை மேம்படுத்த முயற்சிகள் நடைபெறுவதாக சொல்கிறார்கள். பார்ப்போம்!)
முன்பு நண்பர் குடியிருந்த பகுதியில் பத்தாம் வகுப்பு வரை தனிப்பயிற்சி வகுப்பு நடத்தும் ஒரு ஆசிரியையின் மகளுக்கு படிப்பின் மீது ஆர்வமே இல்லை என்று கவலைப்பட்டார்.
அதற்கு ஒரு கல்லூரிப் பேராசிரியர் மிக அழகான உத்தியை அந்த ஆசிரியைக்கு சொல்லிக் கொடுத்தார்.
உனக்கு படிப்பில் ஆர்வமே இல்லாவிட்டாலும் அடிப்படைக் கல்வி என்பது பத்தாம் வகுப்பு வரை மிகவும் அவசியம். அதை முடித்து விட்டால் பதினோராம் வகுப்பில் விரும்பும் பாடத்தை தேர்வு செய்யலாம். இல்லை என்றால் உனக்கு விருப்பமான துறையில் ஈடுபடலாம் என்று உற்சாகப்படுத்தினார்.
அனைவரும் அதிசயிக்கும் வகையில் அந்த ஆசிரியையின் மகள் சிறந்த மதிப்பெண்ணுடன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்தார்.
இந்த ஆண்டு எல்லாத் தேர்வுகளும் கிட்டத்தட்ட முடியும் சமயம், அடுத்து தேர்வு முடிவுகள் வெளிவரும் சமயம் வீட்டில் என்ன சொல்வார்களோ, சுற்றி இருப்பவர்கள் கேலி செய்வார்களோ என்ற பயத்தில் பல மாணவ மாணவிகள் தவறான முடிவை எடுத்து விடுவார்கள்.
அவர்கள் மனதை சலனப்படாமல் வைக்கும் பொறுப்பு பெற்றோருக்கு உண்டு. அதற்காக நீ தேர்வில் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை என்று தைரியம் சொல்வதும் சரியான அணுகுமுறை அல்ல.
படிப்பு என்ற ஒன்றை கோட்டை விட்டாலும் வேறு ஏதாவது ஒரு துறையில் பிரகாசிக்கும் வகையில் ஊக்கப்படுத்தி மனதை மாற்ற வேண்டும்.
அதாவது உங்கள் வாரிசு காலணிகளை உருவாக்குபவராக இருந்தாலும், கான்கிரீட் காடுகளை (பொறியாளர்) வளர்ப்பவராக இருந்தாலும் சரி... பிரச்சனை அது இல்லை. அந்த வேலையை அவரை விட சிறப்பாக செய்ய ஆள் இல்லை என்ற அளவில் உருவாக வேண்டும்.
எல்லோரும் நன்கு படித்து ஐ.ஏ.எஸ் ஆகி விட்டால் ஆர்.டி.ஓவாக செயல்பட மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்த ஆட்களை எங்கே தேடுவது என்று புத்திசாலித்தனமான எண்ணங்களை உங்கள் வாரிசுகள் மனதில் உருவாக்க வேண்டும்.
ராணுவக்கட்டுப்பாடு என்று தவறாக நினைத்துக் கொண்டு ஒழுங்கற்ற முறையில் குழந்தைகளைத் தேர்வுக்காலம், தேர்வு முடியும் காலம் என்று வித்தியாசம் பாராமல் துன்புறுத்தாதீர்கள். மேலும் தேர்வுகளில் தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை பெற இயலாத உங்கள் வாரிசுகள் எந்த தவறான முடிவுகளையும் எடுக்கும் வண்ணம் மனஇறுக்கத்தை உருவாக்காமல் அவர்களுக்கு தேவையான ஆலோசனை, திட்டங்களை வழங்கி அவர்களை மென்மேலும் ஊக்கப்படுத்துங்கள்.
(இந்த கட்டுரை எழுதப்பட்ட ஆண்டுகளில் உடனடி துணைத் தேர்வு எழுதும் வசதி எல்லாம் கிடையாது. எப்படியும் ஒரு கல்வி ஆண்டு வீணாகிவிடும். ஆனால் இன்று அப்படிப்பட்ட காலதாமதத்திற்கு வேலையில்லாமல் உடனடி துணைத் தேர்வுகள் மூலம் எழுதி தேர்ச்சி பெறலாம் என்பது நல்ல அணுகுமுறைதான்.)

No comments:

Post a Comment