நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, May 17, 2019

செங்கம் டிராவல்ஸ் - 10

பகுதி - 10
‘‘நீ வண்டியோட சறுக்கி விழுந்து உருண்டு ஓடுனதைப் பார்த்ததும் அய்யய்யோ... என்ன ஆச்சோ தெரியலையேன்னு பதறி உன் ஆளை சத்தம் போட்டா, உன் மேல இவ்வளவு பாசம் வெச்சிருக்கேனேன்னு என்னை நினைச்சு பெருமைப்படாம, உன்னை அலட்சியத்தால கீழே தள்ளி சாகடிக்கப் பார்த்த ஒருத்தனைப் பத்தி இப்படி தவிக்கிற...
பெண் மனசு ஆழமுன்னு ஆம்பளைக்கும் தெரியும்... பொம்பளைக்கும் தெரியும்னு சரியாத்தாண்டி பாட்டு எழுதியிருக்காங்க...’’ என்றாள் மலர்விழி.


‘‘நாம சொல்லாததால இப்போ வரைக்கும் அன்னைக்கு நான் கீழே விழுந்து அடிபட்டதுக்கு அவனும் ஒரு காரணம்னு நம்ம குடும்பத்துல யாருக்குமே தெரியாது.
ஏற்கனவே ஒரு வீட்டுல பேப்பர் போட்டுகிட்டு இருந்ததால அவன் முகம் எல்லாருக்கும் தெரியும். அது தவிர ரஜினி படத்துக்கு டிக்கட் எடுத்துக் கொடுத்த பிறகும் நம்ம யார் கூடவும் அவன் நெருங்கி பழகணும்னு வரலை.
அன்னைக்கு நடந்த சம்பவத்தைப் பத்தி நினைச்சதும் 12பி படம்தான் ஞாபகம் வருது.
ஷாம் அந்த பேருந்தில் ஏறியிருந்தால் என்ன ஆகியிருக்கும்... தவறவிட்டால் என்ன ஆகும்னு காட்டுறதைப்போல, பிளஸ்டூ படிக்கும்போது சுபஸ்ரீ, பாதகம் செய்யும் மனிதர்களை மோதி மிதித்துவிடு பாப்பா என்று பாரதியின் வாக்கிற்கிணங்க, அறிவுரை கூறி தைரியப்படுத்தி இருக்கலைன்னா நீயும் அவனை திட்டியிருக்க மாட்ட... அப்போ, வரதராஜனே ஆட்டோவையோ வேறு வாகனத்தையோ பிடித்து என்னைய ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போயிருப்பான்...
அதனால யாரோவா இருந்த அவன் உன் குடும்பம், என் குடும்பத்துக்கு நல்லா தெரிஞ்சவனா போயிருப்பான்... இந்த மாதிரி நடந்துருந்தா இப்போ என்ன நிலவரமா இருக்கும்?’’
‘‘ம்... எனக்கு முன்னாலயே உங்களுக்கு கல்யாணம் ஆகியிருக்கும்... என் பொண்ணை விட பெரிய புள்ளையோ பொண்ணோ உங்களுக்கும் இருந்துருக்கும்...
அவன் கத்தியால குத்த வருவானா, ஆசிட் அடிப்பானான்னு நடுவுல ஒருசில சமயம் நாம பயந்துகிட்டு இருந்துருக்க வேண்டாம்...
இன்னும் விதவிதமா படம் ஓட்டிப்பாருடி... காசா பணமா... ப்ரீதானே...’’ என்று மலர்விழி அலுத்துக் கொண்டாள்.
‘‘ஏண்டி இப்படி கோபப்படுற?’’
‘‘அதுவும் சரிதான்... நான் ஏன் கோபப்படணும்... நீ கற்பனை பண்ணிப் பார்க்குற மாதிரிதான் எதுவும் நடக்கலையே...
ரொம்ப நாள் கழிச்சு ஒருத்தரைப் பார்க்குறோம்... ஒண்ணு சிரிச்சு தலையை ஆட்டிட்டு போயிடணும்... இல்லன்னா மூஞ்சியை திருப்பிட்டு போயிடணும்... ஏன் அவனை நினைச்சு உருகிட்டு இருக்குற...
உனக்கு இன்னும் கல்யாணம் ஆகாம இருக்குறதுதான் பிரச்சனை... இந்நேரம் என்னை மாதிரி கல்யாணம், குடும்பம், குழந்தைன்னு இருந்துருந்தா இத்தனை வருசம்  கழிச்சு அவனைப் பார்த்ததும் அவன் கிட்டயே போய் எப்படி இருக்க... உனக்கு எத்தனை குழந்தை... எங்க இருக்கன்னு போய் பேசியிருப்ப...’’ என்றாள் மலர்விழி.
‘‘அப்ப அவனைப் பார்த்ததும் நீ போய் பேசியிருக்க வேண்டியதுதானே...’’ என்று அர்ச்சனா கேட்கவும்,
‘‘ம்... அவன் என் பின்னாலயா சுத்துனான்... நான் ஏன் அவன்கிட்ட பேசணும்?’’ என்று உடனடி பதில் கொடுத்தாள் மலர்விழி.
‘‘நீ சொல்றது ஒரு வகையில உண்மைதான் மலர்... பத்து வருசத்துக்கு முன்னால அவன் அன்னைக்கு நடந்து கிட்ட விதத்துக்கு 100 சதவீதம் நேர்மாறா அவனோட ஆக்டிவிட்டி இருக்கு... அது என்னைய பார்த்ததும் செய்யுற நடிப்பா... இல்ல உண்மையிலேயே இப்படி மாறிட்டானான்னு தெரிஞ்சா போதும்...’’ என்ற அர்ச்சனாவின் குரலில் வரதராஜனின் நடவடிக்கைகள் நடிப்பாக இருக்கக்கூடாது என்ற தவிப்பு தெரிந்ததை மலர்விழி உணர்ந்து கொண்டாள்.
‘‘சரிதான்... காலையில அவனைப் பத்தி நீ போன்ல சொன்னதும், இந்த கல்யாணம் முடியுறதுக்குள்ள உனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆயிடும்னு விளையாட்டுக்குத்தான் சொன்னேன். ஆனா உண்மையாயிடும் போலிருக்கே...’’ என்று சொல்லிவிட்டு குறும்பாக சிரித்தாள் மலர்விழி.
‘‘இருபத்தேழு வயசுல வெறும் இனக்கவர்ச்சியால நீ முடிவெடுக்கப் போறது இல்லை... அதுலயும் ஆறு வருசமா சென்னையில இருக்குற உனக்கு யார் யார் எப்படின்னு எடை போடுறதுக்கும் ஓரளவாச்சும் தெரிஞ்சிருக்கும்...
ஆனா ஒரே நாள்ல ஒருத்தனோட நடவடிக்கையை வெச்சு முடிவெடுத்துட முடியாதுடி... அன்னைக்கு நான் நாலு வரியில திட்டுனதுக்கே அந்த இடத்தை விட்டு திரும்பிப் பார்க்காம ஓடுனதுதான் அவனோட உண்மையான கேரக்டரா இருக்க வாய்ப்பு இருக்கு. ஆனா எத்தனை சதவீதம்னுதான் தெரியணும்... நீ அவசரப்படாம இரு...’’ என்றாள்.
‘‘அதையே திருப்பி திருப்பி சொல்லாதடி... விபத்துக்கு காரணமான டிரைவர், கிளீனர் பொதுமக்களோட தர்ம அடிக்கு பயந்து ஓடிப்போய் போலீஸ் ஸ்டேஷன்ல சரணடைஞ்சுட்டதை எத்தனை செய்திகள்ல பார்க்குறோம்... படிக்கிறோம்...
இது என்ன சினிமாவா, யார் அடிச்சாலும், உதைச்சாலும் அதை தாங்கிகிட்டு என்னைய காப்பாத்தி ஆஸ்பத்திரியில கொண்டு போய் சேர்த்துட்டுதான் உயிரை விடுவேன்னு உறுதியா இருக்குறதுக்கு?
நீ போட்ட அதட்டலுக்கு அன்னைக்கு அவனுக்கு இருந்த மெச்யூரிட்டிக்கு அவ்வளவுதான் அவன்கிட்ட எதிர்பார்க்க முடியும்...’’ என்று வரதராஜனுக்கு ஆதரவாக பேசினாள்.
‘‘ஆக, அங்க சுத்தி இங்க சுத்தி உங்க லவ்வை நான்தான் பிரிச்ச மாதிரில்ல பேசுற...
நாளைக்கு நாம திருவாரூர் போற வரைக்கும் அவனை பார்க்கத்தானே போறேன்... திருவாரூர் போனதுக்கு அப்புறம் முடிவெடுத்துக்குவோம்... இப்போ அமைதியா இரு... வேணுன்னா சாயந்திரம் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போறப்ப ஆத்தாகிட்டயும் கோரிக்கை வை...’’ என்று மலர்விழி சொல்லவும், அர்ச்சனா விளையாட்டாக முறைத்தாள்.
தூரத்து உறவினர்கள் சிலர் அர்ச்சனாவிடம் வலிய வந்து பேசியபோது கூட அவர்களிடம் சகஜமாக உறவாட முடியாமல் தவித்தாள்.
அடுத்த நாள் திருமண விழா நடந்து முடியும் வரை வரதராஜனுக்கு அங்கே வேலை இல்லை என்பதாலோ என்னவோ அவனைக் காணவில்லை.
காலையில் ஏழு முப்பது மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் முகூர்த்தம் என்பதால் திருமணம் தொடர்பான அனைத்து சடங்குகளும் பகல் பதினோரு மணிக்கெல்லாம் முடிந்து விட்டது.
 பெண் வீட்டார் ஏற்பாடு செய்திருந்த ஒரு வேன், சுமோ, கார் ஆகியவற்றை வைத்தே மிகவும் நெருங்கிய இரு வீட்டாரை வைத்து பெண் வீட்டுக்கும், விஜயகுமாரின் சகோதரர் முறை வரக்கூடிய உறவினர் ஒருவர் வீட்டுக்குமாக மறுவீடு அழைப்பு சம்பிரதாயத்தையும் செய்து முடித்தார்கள்.
பனிரெண்டரை மணிக்குள் மதிய சாப்பாட்டுக்கான பந்தியும் போடப்பட்டு விட்டது.
கல்யாணம், சடங்கு, சம்பிரதாயமெல்லாம் முடிஞ்சாச்சு... இனி பேக்கப்தான் என்று அனைவரும் அவரவர் உடைமைகளை பேக்கிங் செய்வதில் பரபரப்பாக இருந்தார்கள்.
பெண்ணின் தந்தை சுந்தரவடிவேல், விஜயமாரிடம், ‘‘சம்மந்தி... அடுத்த பயணத்திட்டம் ஏற்கனவே எங்க கிட்ட சொல்லியிருந்த மாதிரிதானே...’’ என்றார்.
‘‘ஆமா சம்மந்தி... இளையாங்குடிக்கு பக்கத்துல இருக்குற வாணியில குலதெய்வம் கோயிலுக்கு போயிட்டு அப்படியே சாலைக்கிராமம் வழியா உப்பூர்ல ஏறி ஈசிஆர் ரோட்டைப் புடிச்சு போனா ராத்திரி எட்டு ஒன்பது மணிக்கே திருவாரூர் போயிடலாம். சொந்தபந்தம் எல்லாரும் அங்கிருந்து அவங்கவங்க வீட்டுக்கு போறதுக்கும் வசதியா இருக்கும்.
புள்ளைங்க டயர்டாத்தான் இருக்கும்... ஆனா நம்ம மனசு சில சாஸ்திர சம்பிரதாயங்கள்ல ஆழமா ஊறிப்போயில்ல இருக்கு... இன்னைக்கு ராத்திரி பத்து மணிக்கே அந்த விசேசத்தையும் வச்சிடணும்ல...’’ என்று சொல்லும்போது அருகிலிருந்த புது மாப்பிள்ளை சதீஸ்குமார், அவனுடைய மனைவி பார்கவி முகத்தில் வெட்கம்.
திருவாரூருக்கு மாப்பிள்ளை வீட்டுடன் செல்ல வேண்டியவர்கள் எல்லோரும் பேருந்தில் ஏறி அமர்ந்து விட்டார்கள். திருவாரூரிலிருந்து வந்தவர்களில் சிலர் பழனி, திருச்செந்தூருக்கு புரோகிராம் வைத்துக் கொண்டு கழன்று கொண்டதால் இப்போது பெண் வீட்டார் ஒரு சிலர் வருவதில் இருக்கை பற்றாக்குறை ஏற்படவில்லை.
வழக்கம்போல் விஜயகுமாரிடம் டிரைவர் ஒரு கேள்வியைக் கேட்டார். ‘‘சார்... மதுரையில இருந்து சிவகங்கை, இளையாங்குடி, வாணி இது ஒரு ரூட்டு. மானாமதுரை, பரமக்குடி, இளையாங்குடி, வாணி இது இன்னொரு ரூட்டு.
சிவகங்கையில எதுவும் வேலை இல்லைன்னா பரமக்குடி வரைக்கும் நாலு வழிப்பாதையில போயிடலாமா...’’ என்றார்.
‘‘ஏம்ப்பா... நேத்து காலையில அம்மாப்பேட்டையில என் மச்சான் குடும்பத்தை அழைச்சுகிட்டு புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில்ல சிதறு தேங்காய் அடிச்சிட்டு போனதால கேட்குறியா? இப்போ அதெல்லாம் எதுவும் இல்லை...
பரமக்குடி வழியாவே போகலாம்... ஆனா பரமக்குடியில பூஜை சாமான்கள் வாங்கிட்டு வர்றப்ப கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிப் போகணும்...’’
‘‘உத்தரவு...’’ என்று மட்டும் ஆமோதிப்பாக ஓட்டுநரிடமிருந்து பதில் வந்தது.
விஜயகுமார் ‘‘சரிப்பா... புறப்படலாம்....’’ என்று சொன்னதும் ஓட்டுநர் பேருந்தை ஸ்டார்ட் செய்து...
தொடரும்...

No comments:

Post a Comment