நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, May 10, 2019

செங்கம் டிராவல்ஸ் - 9

பகுதி 9
விபத்து நடந்த இடத்தில் மலர்விழி, ‘‘உன் ஆள் பண்ணின காரியத்தைப் பார்த்தியாடி... நான் ரெண்டு வார்த்தை கோபமா பேசினதுக்கே ஓடிட்டானே... இவனா காலம் பூரா உன்னைய வெச்சு காப்பாத்தப்போறான்?
கீழே தள்ளிவிட்டது தெரியாம நடந்துடுச்சுன்னு வெச்சுக்குவோம்... மத்த நாள்ல நாம தண்ணி தூக்க போயிட்டு திரும்புறதுக்குள்ள பத்து தடவை இப்படியும் அலையுறவன் இன்னைக்கு அப்படியே மாயவரத்துக்கே ஓடிட்டான் போலிருக்கு... சரி... உன்னால எழுந்திரிச்சு நிக்க முடியுதான்னு பாரு...’’ என்று சொன்னதுடன், அர்ச்சனாவுக்கு கை கொடுத்து தூக்கி விட்டாள்.
எழுந்த அர்ச்சனா மெதுவாக நடந்து வந்தாள். முழங்காலுக்கு கீழே அடிபட்ட காயத்தில் இருந்து பெருகிய ரத்தம் பாதத்தையே நனைத்தது.
‘‘எதுவும் எலும்பு முறிவு இருக்கா இல்லையான்னு சந்தேகமா இருக்கு... இல்லன்னா என் பின்னால உட்கார வெச்சே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிடுவேன்... இப்படி ஆகும்னு நினைக்கலை.. இல்லன்னா வீட்டுல இருக்குற செல்போனையாச்சும் எடுத்துட்டு வந்துருக்கலாம்...
அஞ்சு நிமிஷம் ஆகியிருக்கும்... யாருமே இந்த வழியா போகலை பாரேன்...’’ என்று மலர்விழி சொல்லி வாய்மூடவில்லை. சேந்தமங்கலம் காளி கோயிலின் அர்ச்சகரே திருவாரூரில் இருந்து வந்து கொண்டிருந்தார். தொலைவில் நடந்தே இந்த கோயிலுக்குச் செல்லும் சில பெண்கள் வந்து கொண்டிருப்பதும் தெரிந்தது.
அர்ச்சகர் அருகில் வந்து அவரது வண்டியை நிறுத்தி விட்டார்.
‘‘நம்ம கோயிலுக்குதானே போயிட்டிருந்தீங்க...? எப்படிம்மா ஆச்சு...’’ என்று கேட்டுக் கொண்டே அவருக்கு பழக்கமான ஆட்டோவுக்கு போன் செய்து விட்டார்.
பிறகு அவர் பிரசாத பாத்திரத்துடன் குடிக்க வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை மலர்விழியிடம் கொடுத்து, ‘‘கொஞ்சம் ஓரமா உட்கார வெச்சு தண்ணியை ஊத்துங்க... இல்ல கர்ச்சீப் இருந்தா நனைச்சு காயத்து மேல வச்சு அழுத்திப்பிடிங்க... ரத்தம் பெருகுறதை நிறுத்துனா நல்லது...’’ என்று சொன்னார்.
மலர்விழியும் அவ்வாறு செய்து கொண்டிருந்தபோது அர்ச்சகர் போன் செய்திருந்த ஆட்டோவும் வந்து விட்டது.



அந்த ஆட்டோ ஓட்டுநர் இவர்களைக் கேட்காமலேயே வண்டியை நிமிர்த்தி ஓரமாக வைத்து சிரமப்பட்டு ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான்.
‘‘சாமி... அவங்க வீட்டுக்கு போன் செஞ்சாச்சா... ஜி.ஹெச்சுக்கு போகவா... இல்ல டி.எம்.சிக்கு போகலாமா?’’ என்று கேட்டுக் கொண்டிருந்தபோது, கோயிலுக்கு சென்று கொண்டிருந்த பெண்கள், ஒரு சில முறை மலர்விழி, அர்ச்சனா உள்ளிட்ட ஆறு பேரையும் அடிக்கடி பார்த்திருந்ததால், ‘‘அய்யய்யோ... யார் மோதுனா... எப்படி ஆச்சு...’’ என்று விசாரிக்கத் தொடங்கி விட்டார்கள்.
அப்போது சற்று தொலைவில் வயலில் மேய்ந்து கொண்டிருந்த இரண்டு மாடுகள்தான் மலர்விழியின் கண்களில் பட்டன.
‘‘ரெண்டு மாடு திடீர்னு குறுக்க வந்துடுச்சு... இவளால கண்ட்ரோல் பண்ண முடியாம சறுக்கிட்டா...’’ என்று வரதராஜனையும் அவன் பின்னால் அமர்ந்திருந்தவனையும் மனதில் வைத்துக் கொண்டு சொன்னாள்.
‘‘பார்த்து ஓட்டிட்டு வரப்பிடாதா?... நாய், பூனை, மாடு, ஆடு இதெல்லாம் சர்வ சாதாரணமா நம்மை கீழே தள்ளிட்டு அது பாட்டுக்கு அடுத்த வேலையைப் பார்க்க, அதாவது மேயப் போயிடும்...’’ என்று சூழ்நிலை புரியாமல் யாரோ நகைச்சுவையாகப் பேச முயற்சித்தார்கள்.
அர்ச்சகர் போனை மலர்விழியிடம் கொடுத்து, ‘‘உன் வீட்டுக்கும் பேசிடும்மா...’’ என்றார்.
இப்போது கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. காயமடைந்திருப்பது இளம்பெண் என்றதும் பொதுமக்களின் அக்கறை சற்று அதிகமாகவே இருப்பது வழக்கம்தானே?
‘‘என்னாச்சு சாமி...’’ என்று கேட்டபடியே இரண்டு இளைஞர்கள் தங்கள் டூவலரை நிறுத்தி விட்டு இறங்கி வந்தார்கள்.
‘‘நம்ம கோயிலுக்கு வந்த புள்ளைங்கப்பா... மாடு குறுக்க வந்துடுச்சாம்... நீங்க இந்த வண்டியை எடுத்துட்டு போயி நம்ம கோயில்ல நிறுத்திடுறீங்கிளா... அப்புறமா எடுத்துக்கட்டும்... என்னம்மா, சரிதானே...’’ என்று மலர்விழியிடம் கேட்டார்.
இதற்குள் சாவித்ரியிடம் போன் பேசி முடித்திருந்த மலர்விழி வேறு எதையும் பேசக்கூடிய நிலையில் இல்லை... தலையை ஆட்டினாள்.
இதற்குள் கூட்டத்தில் இருந்த ஒரு பெண், ‘‘இன்னும் என்ன வளவளன்னு பேசிகிட்டே இருக்கீங்க... மொத்த ரத்தமும் வெளியேறிடப் போகுது... சட்டு புட்டுன்னு கிளம்புப்பா...’’ பீதியைக் கிளப்பினாள்.
ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும்போது, ‘‘நீ மட்டும் அப்படி சத்தம் போடாம இருந்துருந்தா...’’ என்று அர்ச்சனா பேச ஆரம்பித்தவுடன் மலர்விழி தன் வாய்க்கு குறுக்கே ஆள்காட்டி விரலை வைத்து ‘‘உஷ்’’ என்றாள்.
ஆட்டோ ஓட்டுநர், ‘‘பாப்பா... என்ன சொல்லுதும்மா?’’ என்று கேட்டார்.
‘‘ரத்தம் போய்கிட்டு இருக்குறதால மயக்கத்துல ஏதோ உளறுறா? நீங்க பாத்து போங்கண்ணா...’’ என்று சமாளித்தாள் மலர்விழி.
‘‘அடிப்பாவி... விட்டா என்னைய பைத்தியம்னு சொல்லிடுவா போலிருக்கே...’’ என்று எண்ணிய அர்ச்சனா அமைதியாகிவிட்டாள்.
அர்ச்சனா திருவாரூர் மெடிக்கல் சென்டர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். உடனடியாக அடிபட்ட இடங்களுக்கு எக்ஸ்ரேயும், தலைக்கு ஸ்கேனும் எடுத்து பரிசோதிக்கப்பட்டது. எந்த இடத்திலும் எலும்பு முறிவோ, சிக்கலான காயங்களோ இல்லை. கரடு முரடான கல் குத்தியதில் முழங்காலுக்கு கீழே உள்ள காயத்திற்குதான் நான்கு தையல்கள் போடப்பட்டன. மற்றபடி விழுந்து உருண்டதில் ஆங்காங்கே சிராய்ப்புக் காயங்கள் மட்டுமே இருந்ததாலும், அர்ச்சனாவும் தெளிவாக இருந்ததாலும் அன்று இரவே வீட்டுக்கு அழைத்துச்செல்கிறோம் கூறி அழைத்து வந்துவிட்டார்கள். மருத்துவமனையில் ஒரு நாள் விட்டு ஒருநாள் தையல் போட்ட இடத்தில் டிரஸ்சிங் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி, ஒரு வாரத்திற்கு மருந்து மாத்திரை எழுதிக் கொடுத்து விட்டார்கள்.
பெற்றோரிடம், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களிடம் என்று கேட்டவர்களிடம் எல்லாம், மாடுகள் குறுக்கே வந்து விட்டது என்று ஒரே பொய்யை மறக்காமல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதைக் கேட்ட அனைவரும், ‘‘சரியா பழக்கம் இல்லாம அவ்வளவுதூரமெல்லாம் (?!) வண்டியை எடுத்துகிட்டு போகலாமா? எப்பவும் போல சைக்கிள்லயே போக வேண்டியதுதானே...’’ என்று அறிவுரை மழை.
அர்ச்சனாவுக்கு காயங்களில் வந்த ரத்தம் உறைந்து விட்டது. ஆனால் அந்த அறிவுரையைக் கேட்டுக் கேட்டு, காதுகளில் ரத்தம் வந்துவிடும்போல் இருந்தது.
வீட்டிற்கு வந்ததும் மலர்விழி, ‘‘பார்த்தியாடி... அந்த எருமைங்க செஞ்ச காரியத்தால இன்னும் ஆறு மாசத்துக்கு வண்டியை நகர்த்தி நிறுத்தக்கூட விடமாட்டாங்க போலிருக்கே...
நானும் எத்தனையோ சினிமாக்கள்ல காதலிக்கு காதலன் மறக்க முடியாத அனுபவங்களை தர்றதை பார்த்திருக்கேன்...
ஆனா உன் ஆளு கொடுத்திருக்கான்பாரு நினைவுகள்... அப்பப்பா... நம்ம வாழ்க்கையில முக்கியமான தருணம் பிளஸ்டூ. அதுல நாளைக்கு ரிசல்ட்... இன்னைக்கு உனக்கு நாலு தையல். எத்தனை வருசம் ஆனாலும் இதை நாம அவ்வளவு சீக்கிரம் மறந்துடுவோம்னா நினைக்குற?’’ என்றாள்.
‘‘ம்ப்ச்... நாளைக்கு ரிசல்ட் வந்ததும், அவனும் பிளஸ்டூதானே... அவன் பேப்பர் போடுற வீட்டுக்கு வந்து, அவங்களுக்கு சாக்லேட் கொடுக்குற சாக்குல அக்கா நான் பாசாயிட்டேன்னு சொல்லிட்டு என்னையும் ஓரக்கண்ணால பார்த்துட்டு போயிருப்பான்...
இப்போ என்னைய கீழ தள்ளி விட்டதும் நீ விட்ட டோஸ்ல எந்த ஊருக்குப் போய் பதுங்கி கிடக்குறானோ...’’ என்றாள் அர்ச்சனா.
‘‘அடிப்பாவி... ஏதோ கடவுள் புண்ணியத்துல உனக்கு பெரிய காயம் எதுவும் இல்லை. ஆனா நாம காலேஜ் சேர்றதுக்குள்ள உனக்கு நல்லபடியா குணமாயிடனுமேன்னு நான் மனசுக்குள்ள கடவுளை வேண்டிகிட்டு இருக்கேன்...
ஆனா, நீ அவன் நாளைக்கு சாக்லேட் கொடுக்க வரமாட்டான்னு நினைச்சு கவலைப்படுற... நீ நினைக்கிற மாதிரி எந்த ஊருக்கும் ஓடிப்போய் பதுங்கியிருக்க மாட்டான்... நிச்சயமா அவன் ஓட்டிகிட்டு வந்தது ஓசி வண்டியாத்தான் இருக்கும். அதை கொடுத்துட்டு, இனிமே கொஞ்ச நாளைக்கு யாரோட பைக்கையும் எடுக்கக்கூடாதுன்னு சபதம் எடுத்துருப்பான்.
இந்நேரம் அவன் தோஸ்து யாரையாச்சும் விட்டு, நீ எந்த ஆஸ்பத்திரிக்கு போன, இருக்கியா போயிட்டியா...’’ என்று மலர்விழி சொல்லும்போதே, ‘‘ஏய்...’’ என்றாள் அர்ச்சனா.
’’பதறாதே... ஆஸ்பத்திரியை விட்டு வீட்டுக்கு வந்துட்டியா இல்லையான்னு... எல்லா செய்தியையும் தெரிஞ்சி வெச்சிருப்பானுங்க. இப்ப நம்ம வீட்டுல அவனுங்களை போட்டுக் கொடுத்துட்டோமா இல்லையான்னுதான் தெரியாம தவிப்பாங்க...
நாம வாயில்லா ஜீவனான உண்மையான மாடுகள் மேல பழி போட்டது எப்படியும் ஒண்ணு ரெண்டு நாள்ல தெரிஞ்சிடும்... ஒரு வாரம் பத்து நாள் கழிச்சு நாங்க கோயில்ல தண்ணி எடுக்க போறப்ப ரவுண்டடிப்பான் பாரு...’’ என்றாள் மலர்விழி.
ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பு பொய்யானது.
அதன்பிறகு ஒருநாள் கூட வரதராஜனை அவர்கள் பார்க்கவே இல்லை.
அர்ச்சனாவுக்கு எலும்பு முறிவு காயம் இல்லை என்பதால் ஒரு மாதத்திற்குள் காயம் நன்றாக ஆறிவிட்டது. ஆனால் தையல் போட்ட இடத்தில் மாறாத தழும்பாகிக் போனது.
அர்ச்சனா குடும்பத்தினர் குடியிருந்த காலனியில் இருந்த நான்கு பிளஸ்டூ மாணவிகளில் மலர்விழியும், அர்ச்சனாவும்தான் திருவாரூர் கல்லூரியிலேயே சேர்ந்தார்கள். மற்ற இரண்டு பேர் பொறியியல் படிப்பில் சேர்ந்து விட்டதால் அவர்கள் குடும்பத்தினரும் அங்கிருந்து காலி செய்து சென்று விட்டார்கள்.
மலர்விழிக்கும், அர்ச்சனாவுக்கும் புது கல்லூரி, புதிய நண்பர்கள் என்று அந்த வாழ்க்கைச் சூழலுக்கு பழகிவிட்டிருந்தார்கள்.
கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும்போதுதான் மலர்விழி, ‘‘நம்ம காலனியில இப்போ உங்க பெரியப்பா குடும்பம், உங்க பேமிலி, நாங்க மட்டும்தான் பழைய ஆள் இருக்கோம்... மத்த எல்லாருமே ஏதேதோ காரணத்தால காலி பண்ணி வேற வீட்டுக்கும், வேற ஊருக்கும் போயிட்டாங்க பார்த்தியா...’’ என்றாள்.
அப்போது அர்ச்சனா, ‘‘நான் அடிபட்டு கிடந்தப்ப நீ பேசின நாலு வாக்கியம் ஒருத்தனை ஊரை விட்டே ஓட வெச்சிடுச்சுன்னு நினைக்கும்போது உன் வீரத்தை நினைச்சு ரொம்ப பெருமையா இருக்குடி... நீ சொன்ன மாதிரி அவன் சரியான பயந்தாங்கொள்ளிதான்னு நினைக்குறேன்... பாவம்...’’ என்றாள்.
‘‘அவன் நம்ம கண்ணுலயே படலைன்னு அவ்வளவு சாதாரணமா நினைச்சிடாத... உனக்கு காயம் ஆறி மறுபடி வெளியில போற வரைக்கும் அவன் நம்ம கண்ணுல கூட படாம இருந்தான் சரி... மறுபடி விடா முயற்சியோட தேடி வந்தா அதுக்கு பேர்தான் காதல்...
உடனே மறுபடி வந்து பேசவோ, பிரச்சனை பண்ணவோ செஞ்சிருந்தா கூட நாம பயப்பட வேண்டியதில்லை.
இவ்வளவு நாளா வராம இருக்கான்னா நிச்சயம் வேற ஊருக்கு போயிருக்கணும்... அப்படி போயிருந்தா கூட ஒரு நாளாச்சும் உன்னைய பார்க்க வரணும்னு தோணாம இருக்குன்னா, அவன்கிட்ட எச்சரிக்கையா இருக்குறது நல்லது...
அன்னைக்கு அவன் தனியா இருந்துருந்தா பரவாயில்லை... இன்னொருத்தன் கூட இருக்கும்போது நான் கன்னாபின்னான்னு திட்டியிருக்கேன்... அவன் இவனை கிண்டல் பண்றதோட, இன்னும் நாலு பேர்கிட்ட போய், ‘பொண்ணு திட்டினதுக்கே பயந்து ஓடி வந்துட்டான்’னு கேவலமா பேசி அவனை வெறுப்பேத்தினா உன் ஆளு சாதுவாவே இருப்பான்னு சொல்ல முடியாது.
அதனால தைரியத்தை வளர்த்துக்குறதுக்காக பதுங்கி இருந்து உன்னையோ என்னையோ கத்தியால குத்தலாம்... ஆசிட் அடிக்கலாம்... என்ன வேணுன்னாலும் நடக்கலாம்... எதுக்கும் நாம எச்சரிக்கையா இருக்குறது நல்லது...’’ என்றாள் மலர்விழி.
‘‘என்னடி இப்படி ஒரு குண்டைத்தூக்கிப் போடுற?... உன்னால மட்டும் எப்படி இந்த மாதிரியெல்லாம் யோசிக்கத் தோணுது?’’
‘‘நான் எங்க யோசிக்கிறேன்... டி.வியில ஒரு விஜய் படம் பார்த்தேன். அதுல காமெடி ஆக்டர் கிட்ட மூணு மாசத்துக்கு முன்னால தேவாங்குன்னு திட்டுனதுக்கு இப்போ ஏன் அடிக்கிறீங்கன்னு கேட்பார். அதுக்கு இவர், நான் இப்போதானே தேவாங்கை பார்த்தேன்... அது இவ்வளவு அசிங்கமா இருக்கும் இப்போதான் தெரிஞ்சதுன்னு சொல்லுவாரு... அதனால உன் ஆளும் கொஞ்ச நாள் கழிச்சு கூட எதையாச்சும் செய்யலாம்னு தோணுது... நான் சொன்னதை மனசுல வெச்சுக்காத... மறந்துடு...’’ என்றாள்.
‘‘அடிப்பாவி... கதை எழுதுற மாதிரி கற்பனையை எல்லாம் அவுத்து விட்டுட்டு இப்போ எல்லாத்தையும் மறந்துடுன்னு சொல்றியா...’’ என்று அவளை செல்லமாக அடிக்கப்போனாள் அர்ச்சனா.
கல்லூரி படிப்பு முடிந்த பிறகு மலர்விழியும், அர்ச்சனாவும் ஒரு வருடம் வரை திருவாரூரிலேயே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்கள்.
அடுத்த ஆண்டே அர்ச்சனாவுக்கு சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைக்க, அவள் சென்னையில் விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வரத் தொடங்கினாள்.
மலர்விழியின் அண்ணனுக்கு திருச்செந்தூரில் அரசுப்பணி கிடைக்க, குடும்பத்துடன் அங்கே சென்று விட்டார்கள்.
மேலும் மூன்று ஆண்டுகள் கடந்தன.
மலர்விழிக்கு திருமணம் நடைபெற்று விட்டது. மாப்பிள்ளை கோயம்புத்தூர் என்பதால் அவள் தற்போது கோயம்புத்தூர் பெண்ணாகி விட்டாள்.
அர்ச்சனாவின் அப்பா ராமச்சந்திரனுக்கு முன்பு போல் உடல்நலம் ஒத்துழைக்காததால், ‘‘நீங்க உழைச்சதெல்லாம் போதும்... சென்னையில நான் ஹாஸ்டல்ல இருக்கேன்... அண்ணன் முரளி மேன்ஷன்ல தங்கியிருக்கான்... பேசாம அங்கயே வீடு வாடகைக்கு பார்த்து போயிடுவோம்...’’ என்று அர்ச்சனா சொன்ன யோசனைப்படி திருவாரூரில் வாடகைக்கு இருந்த இந்த காலனி வீட்டை காலி செய்து கொண்டு சென்னையுடன் சென்று விட்டார்கள்.
இப்போது அந்த காலனியில் அர்ச்சனாவின் பெரியப்பாவான விஜயகுமார் குடும்பம்தான் இருக்கிறது. மற்ற பதினோரு வீடுகளிலும் வெவ்வேறு புதிய குடித்தனங்கள்.
மலர்விழிக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கழித்து பெண் குழந்தை தன்ஷிகா பிறந்து தற்போது நான்கு ஆண்டுகள் ஆகிறது.
ஆனால் மலர்விழியின் வயதுடைய அர்ச்சனாவுக்கு இன்னும் திருமணம் ஆகாமல் வருகின்ற வரன் எல்லாம் தட்டிப் போவதைப் பார்த்து சித்ராவுக்கும் வருத்தம்தான்.
அந்த கவலையில் இருந்தவர்களிடம், விஜயகுமார்தான் ‘‘நீங்க சென்னைக்கு போனதுல இருந்து நம்ம சொந்தக்காரங்க விசேஷம் எதுலயும் கலந்துக்குறது இல்லை... அங்க எதிர்வீட்டுக்காரங்க முகத்தைப் பார்க்க கூட உங்களுக்கு நேரம் கிடைக்கிறதில்லைன்னு சொல்லுவீங்க...
எப்பவாச்சும் லீவு கிடைக்கிறப்ப இங்க வந்து, விசேஷம் நடந்த வீட்டுல போய் விசாரிச்சுட்டு போயிடுறீங்க... இப்படி இருந்தா எப்படி வரன் அமையும்...? புரோக்கர்கிட்ட ஜாதகம் கொடுக்குறது, மேட்ரிமோனியில பதிவு பண்றது இது மட்டும் போதாது.
இந்த மாதிரி சொந்தக்காரங்க கல்யாணத்துக்கெல்லாம் அர்ச்சனாவையும் அழைச்சிட்டு போனாத்தானே நம்ம சொந்தத்துல கல்யாணத்துக்கு பொண்ணு இருக்குன்னே மத்தவங்க தெரிஞ்சுக்க முடியும்?... நீங்க வேணுன்னா பாருங்க... என் பையன் கல்யாணம் முடியுற கையோட அர்ச்சனாவுக்கும் மாப்பிள்ளை முடிவாயிடும்...’’ என்று நம்பிக்கை வார்த்தைகள் பேசியிருந்ததால்தான், பொங்கல் விடுமுறையுடன் மேலும் இரண்டு நாட்கள் சேர்த்து எடுத்துக் கொண்டு ஒரு வாரம் இங்கே வந்து விட்டார்கள்.
அர்ச்சனாவுக்கும் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் ஒரு சில தோழிகள், குடியிருக்கும் வீடு, அலுவலகம் செல்லும் போது சக பயணிகளில் ஒன்றிரண்டு பேருடன் லேசான பழக்கத்துடன் சரி... வேறு யாருடனும் நெருக்கத்தை வளர்த்துக்கொள்ளவில்லை.
பள்ளியில் படித்தவர்களில் மலர்விழி மட்டுமே இன்னும் நெருக்கமான தோழியாக தொடர்கிறாள். கல்லூரியில் படித்தவர்கள் கூட படிப்பு முடிந்து ஒரு ஆண்டுக்குள் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டார்கள்.
அதனால்தானோ என்னவோ இத்தனை ஆண்டுகள் கழித்து வரதராஜனைப் பார்த்ததும் அவனைப்பற்றி ஏற்கனவே தெரிந்த மலர்விழியிடம் பேசுவதற்கு துடித்தாள்.
தொடரும்...

No comments:

Post a Comment