நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, May 03, 2019

செங்கம் டிராவல்ஸ் - 8

பகுதி 8
‘‘டேய் வரதா... நீயும் ஒரு வருசமா அவ போறப்ப வர்றப்ப பார்த்துகிட்டுதான் இருக்க... எப்பதாண்டா லவ்வ சொல்லப்போற?’’ என்றான் ரவிக்குமார்.
‘‘என்னைப் பார்த்ததும் அவ பிரண்ட்ஸ்ங்க கிட்ட எதையாவது சொல்லி சிரிச்சு பேசிட்டு போறாளே தவிர, என்னைப் பார்த்து ஒரு நாள்கூட சிரிச்சது கிடையாது... அப்படி இருக்கும்போது எப்படிடா அவகிட்ட போய் பேச முடியும்?’’
‘‘அப்படியே மண்டையில போட்டேன்னா... நாம என்ன சென்னை மாதிரி பெரிய சிட்டியிலயா இருக்கோம்... அங்கதான் முதல் நாள் பார்க்குறது... மூணாவது நாள் சிரிக்கிறது வீக் எண்டுல யார் பைக்கையாச்சும் இரவல் வாங்கிட்டு பிகரை முக்காடு போட வெச்சு பீச், மகாபலிபுரம்னு சுத்துறதுன்னு பிக்கப் டிராப் எல்லாம் ஒரே வாரத்துல முடிஞ்சிடும்...
அவ்வளவு பெரிய ஊர்... அத்தனை லட்சம் ஜனங்க... அங்க அது சாத்தியம்...
ஆனா நம்ம ஊர் அப்படியா... மாவட்ட தலைநகரம்னு பேரு... தேரோடுற நாலு வீதியையும் சேர்த்தே இருக்குறது பத்து தெரு... அம்பது குடும்பம்... நாலு வீதியையும் ஒரு தடவை சுத்துனா முழிச்சவன் மூஞ்சிலேயே நாலு தடவை முழிக்க வேண்டியதா இருக்கு...
அப்படி இருக்கும்போது அந்த பொண்ணு எப்படி உன்னைப் பார்த்து பல்லைக் காட்டும்?... இத்தனை நாளா வீட்டுல மாட்டி விடாம இருக்குறது இருந்தே நாமதான் அதோட ஆசையை புரிஞ்சுக்கணும்...’’ என்று வரதராஜனை நன்றாகவே உசுப்பேற்றினான் அவன்.
‘‘இருந்தாலும் பயமா இருக்குடா...’’ என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, மலர்விழியின் தந்தை வாங்கிக் கொடுத்திருந்த பழைய ஸ்கூட்டியில் மலர்விழியை பின்னால் வைத்துக் கொண்டு ‘கிக்கிக்கீ....’ என்று ஹாரன் அடித்துக்கொண்டு அர்ச்சனா இவர்களை கிராஸ் செய்தாள்.
ஆ என்று வரதராஜன் வாய்பிளந்து அவர்களையே பார்த்துக் கொண்டிருந்ததை மலர்விழி நன்றாக பார்த்தாள்.
‘‘என்னடா இது... அவ பிரெண்ட் பார்க்குறா... இவ என்னைய திரும்பியே பார்க்கலை...’’ என்று வருத்தத்துடன் சொன்னான் வரதராஜன்.
‘‘டேய்... இங்க சென்னை ரெங்கநாதன் தெரு மாதிரி கூட்டமாவா இருக்கு... தெருவே ஓ-ன்னு கிடக்கு... நீயும், நானும் மரத்தடியில ஓரமா நிக்கிறோம்... அவ வண்டி ஓட்டுறதை நீ பார்க்கணும்னுதாண்டா ஹாரன் அடிச்சு காட்டுறா... இன்னுமா புரியலை...’’ என்று ரவிக்குமார் நன்றாக ஸ்குரு போட்டுக் கொண்டிருந்தான்.
‘‘அப்புறம் ஏண்டா திரும்பியே பார்க்கலை...’’
‘‘நாமதாண்டா பின்னால பார்த்துகிட்டே முன்னாடி வண்டியை சரியா ஓட்டுவோம்... பொண்ணுங்க எல்லாம் அப்படியா? அதுலயும் உன் ஆளு இப்பதான் கொஞ்ச நாளா வண்டி ஓட்ட ஆரம்பிச்சிருக்கும்னு நினைக்குறேன்... வண்டி ஓட்டும்போதே திரும்பி பார்த்து கீழே விழுந்து உன் முன்னால அவமானப்பட வேண்டாம்னு ஒரு முன்ஜாக்கிரதையா இருக்கும்...
நீ வேணுன்னா பாரேன்... எப்படியும் வடக்கு கோபுரத்தோட மறுபடி திரும்பி வருவாங்க...’’ என்று அவன் சொல்லி வாய்மூடவில்லை. அர்ச்சனா ஸ்கூட்டியில் திரும்ப வந்துகொண்டிருந்தாள்.
சற்று தொலைவில் வரும்போது இவனைக் கவனித்த மாதிரி இருந்தது. ஆனால் நெருங்கி வரும்போது என்னவோ கனரக வாகனங்கள் செல்லும் சாலையில் டிராபிக்கில் செல்வது போல் முழுக்க முழுக்க சாலையை கவனித்த மாதிரியே சென்றாள்.
‘‘வரதா... பொண்ணு காலேஜுக்கு போக தயாராயிடுச்சு போலிருக்கு... சைக்கிள்ல இருந்து வண்டிக்கு பிரமோசன் ஆயிடுச்சு... அது ஸ்கூட்டி ஓட்டுனா நீ கியர் வண்டி ஓட்டி கெத்து காண்பிச்சாதான் மரியாதை...’’ என்று ரவிக்குமார் வரதராஜனை உசுப்பேற்றிவிட்டாலும் முதலில் அமைதியாகத்தான் இருந்தான்.
‘‘மாப்ள... நீ லைசென்ஸ் எடுத்து ரெண்டு மாசமாயிடுச்சு... ஆனா உன் ஆளு லைசென்ஸ் எடுத்திருக்காது... லைசென்ஸ் இல்லாத ஆளே வண்டி ஓட்டி பந்தா பண்ணும்போது உனக்கு என்ன?’’
‘‘அர்ச்சனா லைசென்ஸ் எடுக்கலைன்னு உனக்கு எப்படி தெரியும்.?’’ என்று சந்தேகமாக கேட்டான் வரதராஜன்.
‘‘டேய்... நாம ஏழாம் வகுப்புல கூடுதலா ஒரு வருசம் அஸ்திவாரம் போட்டதை மறந்துட்டியா... சரி அதை விடு. உன் ஆளுக்கு இன்னும் பதினெட்டு முடிஞ்சிருக்காதுடா... அப்படியே பதினெட்டு முடிஞ்சிருக்குன்னே வெச்சுக்க... நமக்கு தெரியாம உன் ஆளு ஆர்.டி.ஓ ஆபீசுக்கு கையெழுத்து போட போயிருக்க முடியுமா?’’
‘‘அதுவும் சரிதான்... பக்கத்து வீட்டுல எலக்ட்ரீஷியன் சுரேஷ் அண்ணன் இருக்காருல்ல... ஹேவல்ஸ் கம்பெனியில ஏற்பாடு பண்ணி மும்பையில பதினஞ்சு நாள் பேக்டரி விசிட், டூருக்காக போயிருக்காரு. போய் ஆறு நாள்தான் ஆச்சு...
ரெண்டு நாளைக்கு ஒரு தடவை வண்டியை ஸ்டார்ட் பண்ணி நம்ம தெருவுக்குள்ள மட்டும் ஒரு ரவுண்ட் போய் வந்து வச்சிட சொல்லிட்டுதான் போனாரு.
நாளைக்கு செவ்வாய்க்கிழமை. லீவா இருக்குறதால சேந்தமங்கலம் காளி கோயிலுக்கு அர்ச்சனா குரூப் கோயிலுக்கு போகும். நானும், நாளன்னைக்கு புதன் கிழமை ரிசல்ட் வர்றதுனால சேந்தமங்கலம் கோயிலுக்கு போயிட்டு வர்றேன்னு சொல்லி வண்டியை எடுத்துகிட்டு வந்து ஒரு கலக்கு கலக்க வேண்டியதுதான்.
படிப்பு, ரிசல்ட்டுன்னு சொன்னா கண்டிப்பா மறுக்க மாட்டாங்க...’’ என்றான் வரதராஜன்.
‘‘அப்படி போடுறா மாப்ள...’’ என்று உற்சாகப்படுத்தினான் அவன்.
சுரேஷ் இல்லாத நேரத்தில் தானே நேரில் வண்டியை கேட்டால் மறுக்க வாய்ப்பு இருக்கிறது என்று முன்யோசனையுடன், அம்மாவிடமே சரணடைந்து விட்டான்.
‘‘வருசம் பூரா ஏனோதானோன்னு படிச்ச... அப்ப கோயிலுக்கு போகலை... முழுப்பரிச்சை நடந்தப்பவும் கோயிலுக்கு போகலை... அப்பல்லாம் போகாம இருந்துட்டு இப்ப ரிசல்ட் வர்றப்ப போனா ஆத்தா மார்க்கை அள்ளிப் போட்டுடுமா?
அப்படி போறதா இருந்தா சைக்கிள்லயே போயிட்டு வாயேன்... எதுக்கு ஊரார் வீட்டு வண்டி... நாளைக்கு எதுனாச்சும் ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆச்சுன்னா வருமா...’’ என்று தொடக்கத்திலேயே மறுத்தாள்.
‘‘இல்லம்மா... நான் அந்த கோயிலுக்கு சைக்கிள்ல அடிக்கடி போயிருக்கேன்...’’ என்றதும், ’’எனக்குத் தெரியாம எப்படா...’’ என்றாள்.
‘‘ம்ப்ச்... சொல்றதை கேளும்மா... இதுவரைக்கும் சைக்கிள்லதான் அந்த கோயிலுக்கு போயிருக்கேன்... இப்ப வண்டியில போனா என் மனசுல ஒரு தன்னம்பிக்கை வரும்மா... ம்... நாமளும் ஸ்கூல் முடிச்சு இப்பவே காலேஜ் போயிட்டதா மனசுல ஒரு எண்ணம் வரும்... அதோட நான் பெரிய வேலைக்கு போயி, வண்டி வாங்கி பூஜை போடுறதுக்கு இன்னும் எத்தனை வருசம் ஆகுமோ... இப்ப இந்த வண்டியை எடுத்துட்டு போய் கோவில்ல பூஜை போட்டு எடுத்தாரேனே...
அது மட்டுமில்ல... சுரேஷ் அண்ணனை அடிக்கடி வெச்சு நான்தான் ஏற்கனவே வண்டி ஓட்டியிருக்கேனே...’’ என்றான்.
‘‘சரி வா...’’ என்று சம்மதித்து பக்கத்து வீட்டுக்கு அழைத்துச் சென்று அனுமதி வாங்கிக்கொடுத்தாள்.
வண்டியை எடுத்துக் கொண்டு கல்தேர் பகுதியில் அரச மரத்து நிழலில் நிறுத்தி வரதராஜனும் அந்த நண்பனும் துடைத்துக் கொண்டிருந்தார்கள்.
அர்ச்சனா சைக்கிளில் செல்லும்போது கோயிலுக்கு செல்லும் வழியில் நாலைந்து இடத்திலாவது எதன் காரணமாகவாச்சும் வண்டியை நிறுத்தி வைத்து, பிறகு அவர்களை ஓவர்டேக் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தான்.
ஆனால் அதற்கு அவசியமில்லாமல் போய்விட்டது.
ஆம்... காலனியில் இருந்த மற்ற தோழிகள் தேர்வுகள் முடிந்ததுமே உறவினர் வீடுகளுக்கு சென்று விட்டதால் மிஞ்சியது மலர்விழியும் அர்ச்சனாவும்தான். சேந்தமங்கலம் மூன்று கிலோ மீட்டர் தூரம்தான் என்றாலும் மயிலாடுதுறை செல்லும் நெடுஞ்சாலையாக இருந்ததால் மலர்விழியை அங்கிருந்த ஒரு வீட்டில் உள்ள டிவிஎஸ் எக்செல் வண்டியிலும், அர்ச்சனாவை ஸ்கூட்டியிலும் அனுப்பி வைத்தார்கள்.
கல்தேருக்கு எதிரில் இருந்த சந்து வழியாக வடக்கு வீதிக்கு சென்றதும் அதுவரை முன்னும் பின்னுமாக சென்று கொண்டிருந்த மலர்விழியும், அர்ச்சனாவும் பக்கம் பக்கமாக வண்டிகளை ஓட்டிச் சென்றார்கள்.
வரதராஜனும் மூன்றாவது கியரிலேயே கணிசமான இடைவெளி விட்டு சென்று கொண்டிருந்தான். வடக்குவீதியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் திரும்பும் இடம் மிகவும் குறுகலான சாலை என்பதால் மறுபடியும் அர்ச்சனாவுக்கு பின்னால் மலர்விழி செல்ல ஆரம்பித்தாள்.
சிறிது தூரத்திலேயே சாலை அகலமாக இருந்தாலும் ஒன்றிரண்டு பேருந்துகளும், லாரி, வேன் போன்றவை வந்ததால் மலர்விழி வேகத்தை அதிகப்படுத்தவோ, அர்ச்சனாவின் பக்கவாட்டில் செல்லவோ முயற்சிக்கவில்லை.
நாலுகால் மண்டபத்தைக் கடந்து சிறிது தூரம் சாலை கிழக்காக சென்று மீண்டும் வடக்கே திரும்பியது. அப்போது வரதராஜனின் பின்னால் அமர்ந்திருந்த ரவிக்குமார், ‘‘டேய்... சட்டுன்னு ரைஸ் பண்ணி உன் ஆளு கிட்டப் போய் திரும்பி பார்த்துட்டு வேகமா போடா... ஒரு நிமிசத்துல கோயில் வாசல் வந்துடும்... அங்க அவங்களுக்கு முன்னால நாம போய் நிக்கணும்... அதுதான் கெத்து...’’ என்றான்.
அதைக் கேட்டுக்கொண்ட வரதராஜன் மூன்றாவது கியரிலேயே வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தி, மலர்விழியைத் தாண்டியதும் அர்ச்சனாவையும் உரசுவது போல் முந்தும்போது அவள் பார்க்க வேண்டும் என்பதற்காக கிளட்சைப் பிடித்து ‘டக்’கென்று கியரை மிதித்தான். கியர் வண்டி ஓட்டுவதைப் பார்த்து அர்ச்சனா பெருமையாக நினைக்க வேண்டும் என்று எதிர்பார்த்து வரை சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.
ஆனால், ஹீரோ ஹோண்டா வண்டியில் கியரை உயர்த்த பின்பக்கம் மிதிக்காமல் ஏதோ நினைவில் முன்பக்கம் அழுத்த, மூன்றாவது கியரில் இருந்து இரண்டாவது கியருக்கு மாறிய வண்டி இஞ்சினுடன் சேர்ந்து கியர்பாக்சும் கர்ண கொடூரமாக கதறியது.
இதை சற்றும் எதிர்பார்க்காத அர்ச்சனா ஆக்சிலேட்டரை திருவியபடியே முன் பிரேக்கையும் அழுத்த சறுக்கிக்கொண்டு சாலையின் இடதுபுறம் விழுந்து உருண்டாள். அவள் விழுந்த இடத்தில் கிடந்த ஒரு கரடுமுரடான கல் அர்ச்சனாவின் முழங்காலுக்கு கீழே பெரிய காயத்தை ஏற்படுத்தி விட்டது. அத்துடன் உருண்டு விழுந்ததில் எங்கெங்கே அடிபட்டிருக்கிறது என்பதை மருத்துவமனைக்கு சென்று பார்த்தால்தான் தெரியவரும்.
விபத்து நடந்த பகுதி வீடுகள் எதுவுமே இல்லாத வயல்வெளிப்பகுதியில் உள்ள சாலை. அந்த நேரம் வயல் வெளியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஆட்கள் யாரும் இல்லை. வரதராஜனும் மிரண்டு போய் அப்படியே பிரேக்கை மிதித்து விட்டான். வண்டி ஆஃப் ஆகி நின்று விட்டது.
பின்னால் வந்த மலர்விழி வண்டியை அப்படியே வண்டியை நிறுத்தி விட்டு அர்ச்சனாவிடம் ஓடினாள்.
அதற்குள் கீழே விழுந்து கிடந்த அர்ச்சனா எழுந்து விட்டாள். அவள் இதயம் தாறுமாறான வேகத்தில் துடித்துக் கொண்டிருந்தது.
அப்போதுதான் ‘‘டேய்... சரிகாஷா சாவுக்கப்புறம் ஈவ் டீசிங் புகாருக்கு கடுமையான தண்டனைன்னு எல்லாருக்கும் தெரியும். அப்படி இருந்தும் நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்கிளா? இவ அண்ணன்கிட்ட சொல்லி முதல் வேலையா உன் பேர்ல ஈவ்டீசிங் புகார் கொடுத்து உன்னைய உள்ள தூக்கி வெச்சி மிதிக்க வெக்கிறோம் பார்...’’ என்று மலர்விழி கத்தினாள்.
‘‘டேய் மாப்ள... வண்டியை எடுறா... இதுக்குமேல இங்க நின்னா தொலைஞ்சோம்... என்னடா யோசிக்கிற... கிளம்புடா...’’ என்று அவன் கத்தினான்.
வரதராஜன் கிக்கரை உதைக்கும்போது ‘வெடுக்’கென்று வண்டியும் நகர்ந்தது.
‘‘டேய்... நியூட்ரல்ல வெச்சு ஸ்டார்ட் பண்ணுடா...’’ என்று கத்தவும், தட்டுத்தடுமாறி வண்டியை நியூட்ரலுக்கு கொண்டு வந்து ஸ்டார்ட் செய்து வேகமாக அடுத்தடுத்த கியரை மாற்றி மயிலாடுதுறை சாலையில் விரைந்தான்.
‘‘இப்ப எதுக்குடா இவ்வளவு வேகம் போற... நம்ம வண்டி அவ மேல மோதலை... அதோட அவ தலையில எல்லாம் அடிபடலை... உயிருக்கு உத்திரவாதம் இருக்கும்... அதனால யாரும் இப்ப துரத்த மாட்டாங்க... ஆனா இப்போ இவ்வளவு வேகம் போய் எங்கயாச்சும் விழுந்து வெச்சா சினிமாவுல வர்ற மாதிரி அவளுக்கு பக்கத்து பெட்ல போட மாட்டாங்க... எவனாச்சும் பார்த்துட்டு ஆமாங்க... ரெண்டு பேர் டூவீலர்ல பறந்துகிட்டு போனாய்ங்கன்னு போலீஸ்கிட்ட போட்டுக் கொடுத்துடுவான். அது தவிர இதுவரை நம்ம வண்டி டேமேஜ் இல்ல... இனிமே டேமேஜ் ஆனா அவளை மோதி தள்ளுனதுலதான் டேமேஜ் ஆயிடுச்சுன்னு ரிப்போர்ட் எழுதிடுவாங்க... நாம செத்தோம்...’’ என்று பேசிக்கொண்டிருக்கும்போதே வண்டாம்பாளை கண் ஆஸ்பத்திரியை கடந்தார்கள்.
‘‘என்னடா இப்படி ஆகிப்போச்சு... சேந்தமங்கலம் காளி கோயிலுக்கு போறதா சொல்லிட்டு வண்டியை எடுத்துட்டு வந்தோம்... இப்ப அதைத் தாண்டி ஓடிகிட்டு இருக்கோம்...’’ என்று வரதராஜன் சொன்னபோது கங்களாஞ்சேரி வெட்டாற்றுப்பாலம் வந்து விட்டது.
அவன் தோளை அழுத்திய ரவிக்குமார், ‘‘வண்டியை நிறுத்துடா...’’ என்றதும், வரதராஜன், ‘‘ஏண்டா இங்க போய் நிறுத்த சொல்ற...’’ என்றான்.
‘‘வரதா... இந்த சிங்கிள் ரோடு எட்டியலூர் வழியா கும்பகோணம் ரோடு வெட்டாத்துப்பாலத்துக்கு போயிடும்... அப்படியே திரும்பி வடகண்டம், திருக்கண்ணமங்கை வழியா காட்டூர், பவித்திரமாணிக்கம் வந்து பஸ் ஸ்டாப் கிட்ட ஒரு காளியம்மன் கோவில் இருக்கு. செவ்வாய்க்கிழமைதானே அங்க பூஜை போட்டுகிட்டு வீட்டுக்கு போயிடலாம்.
ஏதாவது கேள்வி வந்தா சேந்தமங்கலம் காளி கோயிலுக்கு அடிக்கடி போயாச்சு... அதனால ஒரு மாறுதலுக்கு இந்த கோயிலுக்கு போனோம்னு சொல்லிடலாம்... நம்ம வண்டி அவங்க மேல மோதியிருந்தாலோ, நம்ம வண்டி டேமேஜ் ஆகியிருந்தாலோதான் பயப்படணும்...
நல்லகாலம் அப்படி எதுவும் ஆகலை. அதனால நமக்கு எதுவும் தெரியாது... நாம எதையும் பார்க்கலை... அவ்வளவுதான் விசயம்...’’ என்றான் அவன்.
அவன் காட்டிய வழியில் ஆற்றங்கரை ஓரமாக சென்று கொண்டிருந்தபோது வரதராஜன், ‘‘அடிபட்டு ரத்தக்காயம்பட்டவளை அப்படியே விட்டுட்டு வந்துட்டோமேடா... என்னாச்சுன்னு தெரியலையே... அவ என்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பா...’’ என்று கவலையை வெளியிட்டான்.
‘‘போடாங்... அதான் பின்னாலயே வந்துச்சே ஒரு ஜான்சிராணி, அது ஏதாவது வண்டியில தூக்கிட்டு போய் ஆஸ்பத்திரியில சேர்த்துருக்கும்... அது இல்லைன்னா யாரு இப்படி ஓடி வந்துருக்கப் போறா... அந்த கத்து கத்துது... இப்படி சவுண்டு விட்டா எவன் காப்பாத்தப் போவான்... எப்படியாச்சும் தப்பிச்சா போதும்னுதான் ஓட நினைப்பான்... நாமளும் அதைத்தான் செஞ்சோம்.
இதைப்பத்தி நாம யார்கிட்டயும் மூச்சே விடக்கூடாது. ஒண்ணு ஜி.ஹெச்., இல்லன்னா ஜவுளிக்காரத்தெரு மெடிக்கல் சென்டர், மேல்கரை சண்முகம் டாக்டர் இங்கதான் எதுலயாச்சும் அட்மிட் பண்ணியிருப்பாங்க. நான் வேற யாருக்கும் சந்தேகம் வராத அளவுக்கு விசாரிச்சுட்டு வர்றேன்... நீ பயப்படாத...
நாம மோதியிருந்தா எதையும் யோசிக்காம காட்டிக்குடுத்துடுவாளுங்க... ஆனா இது எதிர்பாராம நடந்த விபத்து... அவளே வண்டியில இருந்து சறுக்கி விழுந்ததால நம்மளை அவ்வளவு சீக்கிரம் காட்டிக்கொடுக்க மாட்டாளுங்க... அப்படி சொன்னா, எவ்வளவு நாளா இது நடக்குது அப்படி இப்படின்னு சமூகம் அவளுங்களையே கேள்வி கேட்கும்...
அதையும் மீறி வீட்டுல சொன்னா கூட, நம்மளை நேரடியா குத்தம் சொல்ல முடியாது... ஏதாவது ஆடு குறுக்க வந்துச்சு... நாய் வேகமா பாய்ஞ்சுது... அதனால திடீர்னு வேகத்தை குறைக்காம அவசரத்துல கியரைக் குறைச்சுட்டேன்... அந்த சத்தத்துல இந்த பொண்ணு மிரண்டுபோய் சறுக்கிட்டு விழுந்தா நாங்களா பொறுப்பாக முடியும்னு தில்லா பேச வேண்டியதுதான்...’’ என்று பல விபத்துக்களில் அனுபவப்பட்டவன் போல் பேசினான் ரவிக்குமார்.

அவனுடைய ஆலோசனைப்படி பவித்திரமாணிக்கம் காளி கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு வண்டிக்கும் பூஜை போட்டு விட்டு வீடு திரும்பினார்கள்.
தொடரும்...

No comments:

Post a Comment