நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, April 26, 2019

தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள்


இளைஞர்கள் முகநூலிலும் சமூக வலைதளங்களிலும்தான் புரட்சி செய்கிறார்கள். வாக்கு அளிக்க செல்வதில்லை என்று கூறிக் கொண்டிருந்தோம். ஆனால் தமிழகத்தின் பல நகரங்களில் இருந்தும் முக்கியமாக சென்னையில் இருந்து வாக்கு செலுத்தும் கடைமையை நிறைவேற்ற மிக மிக அதிக அளவில் சொந்த ஊர்களுக்கு பயணப்பட்டது இளைஞர்கள் கூட்டம்தான். 



ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை, கோடை விடுமுறை என்று இருப்பது தெரிந்தும் போதுமான பேருந்து வசதிகள் செய்யாமல் கோட்டை விட்டு விட்டது வருத்தமான நிகழ்வுதான். இதில் ஓட்டுநர், நடத்துனர்கள் ஓட்டு போட சென்று விட்டதால் அதிகமான அளவில் பேருந்துகளை இயக்க முடியவில்லை என்றும் காரணங்கள் சொல்ப்படுகிறது.
நடந்து முடிந்த சங்கடங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்வோம். இனி வரும் தேர்தல்களிலாவது தீபாவளி, பொங்கல் போன்று தேர்தலையும் ஜனநாயக திருவிழாவாக கருதி மக்கள் கடமையை செய்வதற்கு சொந்த ஊருக்கு செல்ல போதுமான போக்குவரத்து வசதி செய்து கொடுப்பது நல்லது.
டிஜிட்டல் இந்தியா வலுவாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கும் தபால் வாக்கு வசதியை ஏற்படுத்தி, தேர்தல் நேரத்தில் முழுமையாக போக்குவரத்து வசதியை செயல்படுத்துவது முறையாக செய்து முடிக்கக்கூடிய காரியமே. அரசும் தேர்தல் ஆணையமும் இந்த விசயத்தில் கவனம் செலுத்துமா?
பிரபலங்களில் இருந்து சாமானியர்கள் வரை நாலைந்து தேர்தல்களாக இந்த வாக்குச்சாவடியில்தான் ஓட்டு போட்டேன். இப்போது பெயர் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது என்று குமுறினார்கள்.
கடந்த தேர்தல்களில் வாக்களித்திருந்தாலும் இப்போதைய பட்டியலில் பெயர் இருக்கிறதா என்று சரிபார்க்க வேண்டிய கடமை வாக்காளர்களுக்கு உண்டு. அதே சமயம் ஏற்கனவே இருக்கும் பெயர்களை நீக்கும்போது, பதிவு செய்யப்பட்டிருந்த அலைபேசி எண்ணுக்கு குறுந்தகவலாக அனுப்பியிருந்தால் இந்த சிக்கல்களை தவிர்த்திருக்கலாம்.
முக்கியமாக வாக்காளர்பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்து விட்டால், ஒருவர் வீடு மாறி செல்லும்போது புதிய முகவரி இருக்கும் பகுதியிலேயே ஓட்டு போடும் வகையில் அந்த பகுதி வாக்காளர் பட்டியலுக்கு பெயரை இடம் மாற்றிக் கொள்ளும் வசதி வந்து விட்டால் இது போன்ற குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
அது தவிர, வீடு மாறி செல்லும்போது நியாய விலைக்கடை முகவரி, எரிவாயு இணைப்பு முகவரியை மாற்றுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் மாற்றம் செய்வதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இது போன்ற சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என்றால், ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்யும்போது புதிய அஞ்சல்குறியீட்டு எண்ணின் அடிப்படையில் ரேசன் கார்டு, எரிவாயு இணைப்பு, வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட அனைத்திலும் மாற்றங்கள் தானாகவே மாறிக்கொள்ளும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தினால் பொதுமக்கள் மட்டுமின்றி, அரசு அலுவலகங்கள், அதிகாரிகளின் நேர விரயமும் தவிர்க்கப்படும்.
(இந்த கடிதத்தின் சில பகுதிகள் 22–04–2019 திருச்சி, வேலூர், சேலம், ஈரோடு பதிப்பு தினமலர் நாளிதழில் பிரசுரமானவை)

No comments:

Post a Comment