நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, April 05, 2019

தலை இருக்க வால் ஆடலாமா?

நீங்க என்ன சொல்றது? நான் என்ன கேட்குறது என்பது போன்ற மனப்போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. 
மனைவி சொல்வதை கணவன் கேட்பதில்லை. கணவன் சொல்வதை மனைவி கண்டுகொள்வதில்லை. 
ஆசிரியரை மதிக்க வேண்டும் என்று மாணவர்கள் அறிந்து கொள்ளவில்லை. ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்று அடிப்படை ஒழுக்க விதிகள் கூட ஒரு சில ஆசிரியர்களுக்கே யாரும் கற்றுக் கொடுக்கவில்லை. 

Image Credit : Facebook friends.
இப்படி குடும்பம், வணிக நிறுவனம் என்று எந்தப் பக்கம் பார்த்தாலும் கட்டாயம் இருக்கும் இடங்களில் மட்டும் ஒரு சிலர் வேண்டா வெறுப்புடன் தலைமையின் உத்தரவுக்கு கீழ்ப்படிகிறார்கள். நமக்கு உத்தரவிடுபவரின் பேச்சைக் கேட்காவிட்டால் எதுவும் நமக்கு நேரடியாக பாதிப்பு வராது என்று உறுதியாகத் தெரிந்தால் கொஞ்சம் கூட நமக்கு மேலே இருந்து சொல்பவரின் பேச்சைக் கேட்பதில்லை.
பரசுராமர் ஏன் என்று கேள்வி கேட்காமல் தாயாரின் தலையை வெட்டியதுபோல் செய்ய வேண்டும் எல்லா உத்தரவுகளையும் கண்மூடித்தனமாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறவில்லை.
சம்மந்தப்பட்டவர்களின் கருத்துக்களைக் கேட்டு எல்லா சாதக பாதகங்களும் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கலந்து பேசி முடிவெடுக்க வேண்டியது அவசியம்தான்.
ஆனால் போர்க்களத்தில் ஒரு வீரனே தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலையும் அமையும். அதே நேரம் முக்கிய கடமை ராணுவ தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதை செய்ய வேண்டியதுதான் கடமை.
மக்களும் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்காமல் உத்தரவுக்கு கீழ்ப்படிய வேண்டிய சில சூழ்நிலைகள் உண்டு.
அப்படி ஒரு தருணம்தான் திருவாரூர் ஆழித்தேரின் வடம் பிடித்து இழுப்பதும்.
சுமார் 400 டன் எடையுள்ள தேரினை வீதியுலா வருவதற்கு பின்னால் இருந்து புல்டோசர் தள்ளுவது மட்டும் போதாது. மக்கள் சக்தியின் இழுவிசையும் அவசியம்தான். வடம்பிடித்து இழுக்கும்போது சக்கரங்களில் முட்டுக்கட்டை போடப்படுவது, தேர் சக்கரங்கள் நகர வேண்டிய கோணம் போன்ற பல்வேறு நுணுக்கங்கள் அறிந்த சிலர்தான் அந்த பணிகளில் ஈடுபடுகிறார்கள். வர்ணனையாளர் சிவப்புக்கொடி என்று கத்துவது ஏதோ பக்தி முத்திப்போனதால் அல்ல.
அந்த நொடி தேர் நிறுத்தப்பட்டு சக்கரத்தின் கோணம் நகர்த்தப்படுதல் உள்ளிட்ட அதிமுக்கியமான வேலைகள் செய்யப்பட வேண்டும் என்பதற்காகத்தான் சிவப்புக்கொடி சிவப்புக்கொடி என்று பதினைந்து இருபது முறை கத்திய பிறகும் தேர் வடத்தினை இழுப்பதை மக்கள் நிறுத்தவே இல்லை. 
இவ்வளவு பிரமாண்டமான தேரின் ஒவ்வொரு அசைவும், அரை அடி நகர்வும் கூட மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ளாமல் வடத்தை இழுத்தால் போதும், தேர் கட கடவென ஓடி வந்துவிடும் என்ற நினைப்பில் இருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
முட்டுக்கட்டை போடுவதில் ஏற்பட்ட சில முட்டுக்கட்டை காரணம் மட்டுமின்றி, சிவப்புக்கொடி என்று சொன்ன நொடியே வடம் இழுப்பதை நிறுத்தாததும் கூட தெற்குவீதியில் தேர் சிமெண்ட் சாலையை விட்டு இறங்கியதற்கு ஒரு காரணமாக இருக்கும் என்று பலரும் பேசிக்கொண்டிருந்ததை கேட்க முடிந்தது.
–ஷர்வான்.

No comments:

Post a Comment