நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, April 05, 2019

செங்கம் டிராவல்ஸ் - 4


முன்கதை சுருக்கம்:

அர்ச்சனா உறவினர் திருமணத்திற்கு மணமகன் வீட்டாருடன் மதுரைக்கு செல்கிறாள். அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ள பேருந்தில் ‘அவனை’ பார்த்ததும் அதிர்ச்சியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பழைய சம்பவங்கள் தொடர்ந்து கண் முன் தோன்றி அவள் மனதை அலைக்கழிக்கிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு- அர்ச்சனா பள்ளியில் இறுதி ஆண்டு படிக்கும்போது அவன் சுற்றி வந்த நாட்களில் நடந்த சில சம்பவங்கள் இவள் நினைவுக்கு வருகின்றன. அர்ச்சனாவின் தோழிகள் கூட அவனைப் பற்றிக் குறிப்பிட்டு கிண்டல் செய்கிறார்கள்.
பேருந்தில் அவனைப் பார்த்தது முதல் பழைய நினைவுகளில் அர்ச்சனா மூழ்கிவிடுகிறாள். அதனால்தான் பேருந்து நின்று எல்லோரும் டீ குடிக்க இறங்கிச் சென்றது கூட தெரியாமல் சிந்தனையில் இருப்பவளைப் பார்த்து அவள் தாயார் சித்ரா கடிந்து கொள்கிறாள்.
இந்த எண்ண அலைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் பழைய சம்பவங்களின் போது சாட்சியாக இருந்த மலர்விழியிடமே கேட்டு விடலாம் என்று போன் செய்கிறாள்..
*****
செங்கம் டிராவல்ஸ்
தொடர்கதை
திருவாரூர் சரவணன்
பகுதி 4
05–04–2019
சித்ரா வாசல் தெளித்து விட்டு கோலமாவு டப்பாக்கள் அடங்கிய பிளாஸ்டிக் தட்டை எடுத்துக்கொண்டிருக்கும்போதுதான் சத்தம் கேட்டு அர்ச்சனா விழித்தாள்.
சட்டென்று படுக்கையை விட்டு எழுந்து அமர்ந்தவள், ‘‘அம்மா... என்னை எழுப்பதானே சொன்னேன்... இப்ப நீபாட்டுக்கு என்னைய விட்டுட்டு கோலம் போடப் போனா என்ன அர்த்தம்...’’
‘‘ஏண்டி காலையிலேயே இப்படி கத்துற... நான் தண்ணி தெளிக்க எழுந்திரிச்சப்ப நல்லா அசந்து தூங்கிட்டு இருந்த. பொதுவா நல்ல தூக்கத்துல நீ இருக்கும்போது எழுப்புனா பட்டுன்னு கன்னம், கை, காலுன்னு எது சிக்குதோ அங்க ஒரே அறை விடுவ... அது மட்டுமில்லாம நம்ம காலனியில 12 வீடு இருக்கு. ஒரு வீட்டுக்கு கணக்கு வெச்சா ரெண்டரை நாள்தான் கோலம் போடுற முறை வரும். இன்னைக்கு நாம போட்டா அடுத்து 12 நாள் கழிச்சுதான். இதுக்கு ஏன் உன் தூக்கத்தையும் கெடுத்துகிட்டுன்னு விட்டுட்டேன்... அதுக்கு இவ்வளவு கோபமா?’’
‘‘அப்போ மத்த நாள் எப்பவும் போல காலையில ஆறரை மணிக்கு தண்ணி புடிச்சா போதுமா?’’
‘‘அப்படியே ஒரு டேங்கர் லாரி தண்ணியை புடிச்சு ஊத்தப்போற...ச்சே... மணியாகுது வா கோலம்போட...’’ என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறவும், பின்னாலேயே அர்ச்சனாவும் ஓடினாள்.
திடு திடுவென்று அர்ச்சனா ஓடும் சத்தம் கேட்ட அவள் தாய், ’’ஏய்... டி.விக்கு பக்கத்துல ஸ்கார்ப் இருக்கு பாரு. அதை எடுத்து கட்டிகிட்டு வா... பனியில உடம்பு முடியாம விழுந்துட்டன்னா நாலு நாள்ல மிச்சம் இருக்குற அரையாண்டு பரிச்சை கோவிந்தாதான்...’’
சித்ரா சொன்னதிலும் நியாயம் இருக்கவே, வேறு வழியின்றி தலைக்கு ஸ்கார்ப்பை கட்டிக் கொண்டு கோலம் போட வந்தாள் அர்ச்சனா. ஆனாலும் அவள் மனதில் ஒருவேளை அவன் இந்த நேரத்தில் வந்தால், ஸ்கார்ப் கட்டிக் கொண்டிருக்கும் தன்னை அடையாளம் கண்டு கொள்வானா என்ற சந்தேகம் எழுந்தது.
‘‘ம்ச்ஹ... பசங்களுக்கு உடம்பெல்லாம் கண்ணு... அப்படியா நாம அடையாளம் தெரியாம மாறிடப்போறோம்...’’ என்று மைண்ட் வாய்சில் பேசுவதாக நினைத்து வாய்விட்டு உளறினாள் அர்ச்சனா.
‘‘என்னடி ஏதோ புலம்புற... தூங்குறப்ப கண்ட கனவு இன்னும் கலையலையா... இதுக்குத்தான் நீ எழுந்திரிக்க வேணாம்னு சொன்னேன்.’’ என்ற சித்ராவைப் பார்த்து முறைத்து விட்டு, அம்மா போட்ட கோலத்திற்கு வண்ணம் தீட்டுவதில் கவனம் செலுத்தினாள்.
அப்போது யாரோ சைக்கிளை நிறுத்தி ஸ்டாண்ட் போடும் சத்தம். நிமிர்ந்து பார்த்தாள். அவனேதான். சைக்கிள் கேரியரில் நாளிதழ்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
ஒரு பேப்பரை கையில் சுருட்டி எடுத்துக்கொண்டு கோலத்தை மிதிக்காமல் ஓரமாக கீழே உள்ள வீடுகளை நோக்கி சென்றான்.
அடப்பாவி... இன்னைக்கு மார்கழி மாசம்னு இந்த நேரத்துக்கு பேப்பர் எடுத்துட்டு வந்தானா அல்லது தினமுமே இப்படித்தான் வர்றானா... ஒரு நாள் கூட பார்த்ததே இல்லையே என்று நினைத்தவாறு வண்ணம் தீட்டும் வேலையை தொடர்ந்தாள்.
திரும்ப வந்த அவன் ஒருவித தயக்கத்துடனேயே தலையை சொறிந்து கொண்டு ஓரக்கண்ணால் இவளைப் பார்த்துக் கொண்டே இன்னொரு பேப்பரை எடுத்து காலனிக்கு எதிரில் இரண்டு வீடுகள் தள்ளி இருந்த ஒரு வீட்டிற்குள் வீசி எறிந்து விட்டு மீண்டும் மெதுவாக நடந்து வந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றான்.
அர்ச்சனாவின் மனதில், அடுத்து 12 நாள் கழிச்சுதான் கோலம் போட நாம வர்ற மாதிரி இருக்கும். ஆனா அம்மா தினமும் பெரிய கோவிலுக்கு அபிசேகம் பார்க்க போனா ஆறு மணிக்கே தண்ணி புடிச்சு வெச்சிடுவாங்க. அப்ப ஆறரை மணிக்கு இவன் திரும்பி வர்றானான்னு பார்க்க முடியாது. அதுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே இருந்தவள் மனதில் ஒரு யோசனை.
‘‘அம்மா... நான் எல்லா நாளும் யார் கோலம் போட வந்தாலும் கூட வந்து ஹெல்ப் பண்ணப் போறேன்...’’
‘‘ஏண்டி இந்த வேண்டாத வேலை உனக்கு... தினமும் வந்து கோலம் போட்டா ஏதாச்சும் பரிசு தரப்போறாங்களா?’’
‘‘அய்யோ... அம்மா... காணும் பொங்கல் அன்னைக்கு நம்ம ஊர்ல நடக்குற பொங்கல் விளையாட்டு விழாவுல கோலப் போட்டி நடக்கும். இப்போ தினமும் பிராக்டீஸ் ஆனா அதுல கலந்துகிட்டு பிரைஸ் வாங்க சான்ஸ் இருக்கே...
போன வருசமே முதல் பரிசா பத்தாயிரம் ரூபா பட்டுப்புடவை கொடுத்தாங்க...’’ என்று விழிகள் விரிய பேசினாள்.
பட்டுப்புடவை என்றதுமே சித்ரா கண்களிலும் பிரகாசம்.
‘‘இப்பவாச்சும் புத்திசாலித்தனமா யோசிக்கத் தோணுதே... தாராளமா செய்யி... ஆனா அரைப்பரிச்சையை கோட்டை விட்டுடாதே... அப்புறம் உங்க அப்பாவுக்கு என்னால பதில் சொல்ல முடியாது...’’ என்றாள்.
இங்கே அர்ச்சனாவின் மனநிலை இப்படி என்றால், வரதராஜன் பல நாட்களுக்கு முன்பே ஒருமுறை காலையில் சுமார் ஆறரை மணி அளவில் கைலாசநாதர் கோயில் தெருவுக்கு பேப்பர் போட செல்லும் வகையில் மெதுவாக பேப்பர்லைனைப் பார்த்தான். ஆனால் அன்று காலை முனிசிபல் வாட்டர் பிடிக்க அர்ச்சனா வெளியில் வரவில்லை. வேறு தாய்மார்கள்தான் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அதேசமயம், வழக்கமாக வரும் நேரத்தைக் கடந்து மிகவும் தாமதமாக பேப்பர் வந்தது என்று ஏகப்பட்ட புகார்கள் ஏஜெண்ட்டுக்கு வந்து குவிந்து விட்டது.
‘‘தம்பி வரதராசா... காலையில நீ பேப்பர் போட்டு முடிச்ச பிறகும் கைலாசநாதர் கோயில் தெருவுல சுத்திகிட்டு இருக்குறது எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா?... நானும் உன் வயசை எல்லாம் தாண்டிதான் வந்துருக்கேன்...
இந்த வயசுல சைட் அடிக்காம நாலு புள்ளை பெத்த பிறகா செய்யப்போறே... ஆனா சைட் அடிக்கிறதுக்காக பேப்பரை பொழுது விடிஞ்சு கொண்டு போய் போடுறதுன்னா அது சரி வராது. என்ன பண்றதுன்னு நீயே முடிவு பண்ணிக்க...’’ என்று நாளிதழ் முகவரான கார்த்திகேயன் கறாராக பேசி விட்டதால் வேறு வழியின்றி நாலரை மணிக்கு பேருந்து நிலையம் சென்று இருபது நிமிடங்களில் சப்ளிமெண்டரியாக வரும் கூடுதல் பக்கங்கள், புத்தகம் இருந்தால் அதையும் கோர்த்து எடுத்துக் கொண்டு நான்கு ஐம்பதுக்கு பேப்பர் போட ஆரம்பிப்பான்.
உத்தேசமாக ஒன்றரை மணி நேரம். பெரும்பாலும் காலை ஆறு இருபதுக்கு கடைசி பேப்பர் கொடிக்கால்பாளையம் பகுதியில் போட்டு முடித்ததும் வேக வேகமாக திரும்பி வருவான். கைலாசநாதர் கோவில் தெருவை அடையும்போது மணியும் ஆறரை ஆகியிருக்கும். அர்ச்சனாவும் குடத்துடன் இருப்பாள்.
இன்றும் அவன் எப்போதும்போல் பேப்பர்களை எடுத்துக் கொண்டு வந்தான். வழியில் சில வீடுகளில் கலர் கோலங்கள் போட்டுக் கொண்டிருந்ததை பார்த்ததும், நம்ம ஆளும் இது மாதிரி கோலம் போடுமா இல்லன்னா வழக்கம்போலத்தான் எந்திரிக்குமான்னு தெரியலையே என்று யோசித்துக்கொண்டே வந்தான். அப்போது வாசலில் அர்ச்சனாவைப் பார்த்ததும் அதிகாலைப் பனிக்காற்று இன்னும் கூடுதலாக அவன் மனதில் சில்லிப்பை ஏற்படுத்தியது.
அங்கிருந்து சென்று கொண்டிருக்கும்போது அவன் மனதிலும் ஒரு சந்தேகம். இது காலனி வீடா இருக்கே. எல்லா நாளும் நம்ம பார்ட்டி கோலம் போட வருமா இல்லன்னா முறை வெச்சு அந்த நாட்கள்ல மட்டும்தான் வருமான்னு தெரியலையே...
எப்படி இருந்தாலும் சரி... கோலம் போட்டா பேப்பர் போடும்போது பார்ப்போம்... இல்லன்னா திரும்ப வரும்போது கவனிப்போம்... அவ்வளவுதான் என்று தன் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.
இப்படியே மார்கழி மாதம் முழுவதும் அர்ச்சனாவின் தரிசனம் அதிகாலையிலேயே வரதராஜனுக்கு கிடைத்துக் கொண்டிருந்தது.
நடுவில் ஆங்கில புத்தாண்டு பிறந்த அன்று, கீழ் தளத்தில் கடைசி வீட்டுப் பெண்மணி புவனேஸ்வரியுடன் அர்ச்சனா கோலம் போட்டுக்கொண்டிருந்தாள்.
‘‘அக்கா... பேப்பரை வீட்டுலதான் போடணுமா... இல்லன்னா உங்ககிட்டேயே தந்துடவா...?’’ என்று கேட்டான்.
‘‘பரவாயில்லப்பா... என்கிட்டயே கொடு...’’ என்று வாங்கிய புவனேஸ்வரி, அர்ச்சனாவிடம் கொடுத்து, ‘‘அங்க வை...’’ என்றாள்.
சைக்கிளை ஸ்டாண்ட் கிளிப்பை நகர்த்திவிட்டு சைக்கிளில் ஏறப்போன வரதராஜன், ‘‘அக்கா... ஹேப்பி நியூ இயர்...’’ என்றான்.
புவனேஸ்வரி சிரித்துக் கொண்டே, ‘‘சேம் டூ யூ... அது சரி... சாக்லேட் இல்லாம வாழ்த்து சொல்ற?’’ என்று கேட்கவும்,
‘‘அக்கா... கடை எதுவும் திறக்கலை... அதான்...’’ என்று சொல்லிச் சென்று விட்டான்.
அவங்களுக்கு வாழ்த்து சொன்னப்ப அப்படியே எனக்கும் ஒரு வார்த்தை சொன்னாதான் என்னவாம்... என்று தனக்குள் நினைத்துக் கொண்டு கோலத்தை தொடர்ந்தாள் அர்ச்சனா.
ஒருவழியாக மார்கழி மாதம் நிறைவு பெற்று பொங்கல் பண்டிகையும் உற்சாகமாக கடந்தது.
காணும் பொங்கல் அன்று நடைபெற்ற பொங்கல் விளையாட்டு விழாவின் ஒரு பகுதியாக திருவாரூர் கமலாலயம் கரை அருகில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கோலப்போட்டியில் தன் தாயாரிடம் ஏற்கனவே சொன்னதற்காக அர்ச்சனாவும் கலந்து கொண்டாள்.
ஓரளவு எளிமையான வடிவம் எதையாவது தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் ஆழித்தேர் வரைவதற்காக முயற்சி செய்து அது கார்ட்டூன் தேர் மாதிரி ஆகி விட்டதால் முதல் மூன்று பரிசுகளோ ஆறுதல் பரிசோ எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால் பரிசுகள் வழங்கிய துணிக்கடை நிறுவனத்தினர் போட்டியில் கலந்து கொண்டவர்களை சோர்வடையச் செய்யக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் மலிவு விலையில் தலா ஒரு புடவை வழங்கினார்கள்.
அதனால் அர்ச்சனாவின் அம்மாவும் சமாதானமாகி விட்டார்.
பரிசு கிடைக்காத கவலையில்தான் மகள் இப்படி இருப்பதாக நினைத்து, ‘‘கலந்துகிட்டதுக்கே மரியாதை கிடைச்சிருக்கு பார்த்தியா... இப்போ பட்டுப்புடவை பரிசு கிடைக்கலைன்னா என்ன... அடுத்த வருசம் வாங்கிட்டா போச்சு...’’ என்று சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.
ஆனால் அர்ச்சனாவின் கவலை என்னவாக இருக்கும் என்று உங்களுக்கு புரிந்திருக்குமே... ஆம்... கோலங்களை நிறைய பார்வையாளர்கள் வந்து பார்த்துச் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுடன் வரதராஜனும் வந்து பார்த்தானோ பார்க்கலையோ என்று தெரியாததால்தான் மவுனமாக வந்தாள்.
அடுத்து குடியரசு தினம். அன்று காலை பதினோரு மணிக்கெல்லாம் பள்ளி விழாக்கள் முடிந்து விட்டதால் காலனியில் நிறைய பேர் திருவாரூரின் பிரபல திரையரங்கத்தில் பொங்கலுக்கு ரிலீசான ரஜினிகாந்த் படத்திற்கு போவது என்று முடிவெடுத்திருந்தார்கள்.
எப்போதும்போல் மாலையில் தண்ணீர் தூக்க பெரிய கோவில் கிணற்றுக்கு செல்லும் அர்ச்சனாவை பார்க்க நினைத்து சைக்கிளில் உலா வந்து கொண்டிருந்தான் வரதராஜன்.
‘தண்ணி கொடம் எடுத்து தங்கோம் நீ நடந்து வந்தா தவிக்குது... மனசு தவிக்குது...’ என்ற பாடலை முணுமுணுத்துக் கொண்டே சென்ற வரதராஜன், ‘யாரும் இல்லாம ஒரு நாள் கூட தனியா வர மாட்டெங்குறாளே... அப்படி வந்தா இந்த பாட்டைப் பாடி பார்க்கலாம்...
அவ தண்ணி பிடிக்கிறது, கோலம் போடுறதுன்னு உண்மையிலேயே அவ வேலையைத்தான் பார்க்குறாளா? இல்ல, நான் தினமும் பார்க்க வர்றதால இந்த வேலையை எல்லாம் செய்யுறாளான்னு தெரியலை...
என்னடா வரதா... எதுவுமே புரிய மாட்டெங்குதே...’ என்று நினைத்துக் கொண்டே வரதராஜன் வழக்கமாக அர்ச்சனாவை கடந்து செல்லும் இடம் தாண்டியும் சென்றவிட்டான். ஆனால் தண்ணீர் எடுக்கச்செல்லும் அந்த ஆறு பேர் கொண்ட குழுவைக் காணவில்லை.
யோசனையுடனேயே சென்று கொண்டிருந்தபோது அந்த காலனியில் இருந்து இளசுகள் எல்லாம் சைக்கிளில் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தன. சிலருடைய பின்னால் நடுத்தர வயதுப் பெண்கள் ஏறிக் கொண்டார்கள். அர்ச்சனாவின் பின்னாலும் சித்ரா ஏறிக்கொண்டாள்.
‘‘ஆஹா... எல்லாரும் இப்படி கூட்டமா போறாங்கன்னா அநேகமா தலைவர் படத்துக்காத்தான் இருக்கும்... இவங்களை பார்த்துட்டு நாமளும் அங்க போய் நின்னா நல்லா இருக்காதே...’’ என்றவன் மின்னல் வேகத்தில் முடிவெடுத்து வந்த வழியே சைக்கிளை திருப்பிக்கொண்டு மூச்சிறைக்க வேக வேகமாக மற்றொரு தெரு வழியாக ஓட்டிக்கொண்டு சென்று ரஜினி படம் திரையிடப்பட்டிருந்த தியேட்டருக்குள் நுழைந்தான்.
அங்கே சென்றதும்தான் இன்னொரு சந்தேகம். விஜய் படம் இன்னொரு தியேட்டர்ல ஓடுதே... அதுக்கு போயிட்டாங்கன்னா என்ன செய்யுறது? என்று யோசித்துக் கொண்டிருக்குபோதே தியேட்டர் வாசலுக்கு எதிரே சாலையைக் கடப்பதற்காக எல்லாரும் இறங்கி நின்றது தெரிந்தது.
சட்டென்று அவன் சைக்கிளை, தியேட்டர் வளாகத்திற்குள் இருந்த ரவுண்டானா அருகில் நிறுத்தி விட்டு பூட்டி விட்டு நேராக கண்ணாடி கதவு அருகில் சென்றான்.
அப்போது வெளியே வந்த திரையரங்க உரிமையாளர் சொன்னதைக் கேட்டு ஒரு நொடி வரதராஜன் அதிர்ந்தான்.
தொடரும்...

No comments:

Post a Comment