நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, April 12, 2019

வார்த்தைகளில் விளையாடலாம்...


திருவாரூர் சரவணன்
கட்டுரை
12–04–2019
இப்போதும் சில பத்திரிகைகளில் குறுக்கெழுத்துப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. சிலவற்றில் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் பரிசு. இன்னும் சிலவற்றில் நூறு அல்லது ஐம்பது ரூபாய்தான் ஒருவருக்கு பரிசாக வழங்கப்படும்.
இன்னும் சில இதழ்களில் மூன்றாம் பக்கம் புதிர்களை கொடுத்து விட்டு பத்தாம் பக்கத்திலேயே விடையையும் பிரசுரம் செய்திருப்பார்கள். அப்படி என்றால் எதையும் நீங்க எழுதி அனுப்ப வேண்டாம். பரிசெல்லாம் கொடுக்குற யோசனை எங்களுக்கு இல்லை, அல்லது அவ்வளவு வருமானம் இல்லை என்று மறைமுகமாக குறிப்பிடுவதாக நாமே புரிந்து கொள்ள வேண்டியதுதான்.
தற்போது படிப்பு, வேலை என்று எல்லா இடங்களிலும் கடுமையான போட்டியின் காரணமாக தமிழ் தெரியாவிட்டால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது, ஆனால் ஆங்கிலத்தை கற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்ற மன நிலையை வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பெற்றோரிடம் கூட பார்க்க முடிகிறது. ஆங்கில வழிக்கல்வி பயிலும் குழந்தைகளுக்கு ஆங்கிலம் தெரிகிறதோ இல்லையோ, தமிழ் சுத்தமாக தெரியவில்லை என்ற நிலையும் ஆங்காங்கே உருவாகி வருவதையும் காண்கிறோம்.
குழந்தைகளை விட்டுவிடுவோம். பெரியவர்களாகிய நமக்கே வழக்கமாக தினசரி நம்முடைய பேச்சுவழக்கில் இருக்கும் வார்த்தைகளை தவிர தமிழில் மற்ற வார்த்தைகள் எந்த அளவுக்கு தெரியும்?
நியாயமாக பதிலளித்தால் அட, எனக்கும் பெரிசா ஒண்ணும் தெரியலையே என்பதை கண்டிப்பாக ஒப்புக்கொள்வோம்.
1993ஆம் ஆண்டுக்கு பின் செயற்கைக்கோள் அலைவரிசைகள் தமிழில் வந்த பிறகு தொலைக்காட்சியில் மூழ்கி இருக்கும் மக்களின் எண்ணிக்கை கோடானு கோடி பேர்.
நல்ல புத்தகத்தை வாசித்தால் அது உங்களை சிந்திக்க தூண்டும் என்று சொல்வார்கள். ஆனால் எந்நேரமும் தொலைக்காட்சியிலேயே மூழ்கி இருப்பவர்களின் சிந்தனை மழுங்கடிக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.
தொலைக்காட்சி மட்டுமல்ல. வீடியோ விளையாட்டுக்கள், இணையம், முகநூல் என்று எதுவுமே நம் கையில் விளக்கேற்ற உதவும் தீக்குச்சியாக இருப்பதை விட கூரையை கொளுத்தும் தீப்பந்தமாக மாறி வரும் தருணங்களே அதிகமாக உள்ளது.
இப்போது குறுக்கெழுத்துப் போட்டி விசயத்திற்கு வருவோம். பரிசுகள் கிடைக்கிறதோ இல்லையோ, புதிர்களை விடுவிக்க முயற்சித்தால் நல்லவிதமாக நிறைய வார்த்தைகளை தினம் தினம் கற்றுக் கொள்ள முடியும்.
உண்மையில் நமக்கு புதிய வார்த்தைகளை அறிமுகம் செய்தும், நம்முடைய புத்திக் கூர்மையை பட்டைதீட்டும் வகையிலான குறுக்கெழுத்துப் புதிர்களில் ஆர்வம் காட்டுவோம். நம் மூளையின் செயல்திறனை அதிகப்படுத்துவோம்.
கடந்த சில வாரங்களாக ஓரிரு மாதமிருமுறை இதழ்களில் மிகவும் சிந்தித்து அப்படியும் கண்டு பிடிக்க முடியாததால் இணையத்தை பயன்படுத்தி குறுக்கெழுத்துப் புதிரை விடுவித்தேன்.
பத்திரிகையை வாங்குபவர்களும் கலந்து கொள்பவர்களும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில்  அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட உச்ச நட்சத்திரத்தின் படத்தின் பெயர் என்ன என்ற அளவில் புதிர்கள் கொடுக்காமல் கடினமாக தயாரித்திருப்பவர்களை பாராட்டலாம்.

No comments:

Post a Comment