நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, April 26, 2019

திருவாரூர் புதிய பேருந்து நிலையம்


மக்களின் சில தேவைகள்...
நீ.......ண்ட காலத்திற்குப் பிறகு திருவாரூர் புதிய பேருந்து நிலையம் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது நாம் அறிந்ததே.
எந்த ஒரு ஊரிலும் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்ட பிறகு முதலில் ஏற்படும் சில அசௌகர்யங்களால் மக்கள் அதனை வெறுப்பதும், நாளடைவில் புதிய பேருந்து நிலையமே பழைய பேருந்து நிலையமாகிப் போகும் அளவுக்கு வளர்ச்சி அடைவதும் இயற்கையான நிகழ்வுகள்.
உதாரணத்திற்கு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தையே சொல்லலாம்.
1995 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலகத்தமிழ் மாநாட்டின்போது திறந்து வைக்கப்பட்ட அந்த பேருந்து நிலையத்திற்கு நான் அப்போதே சென்றிருக்கிறேன்.
என்னுடன் வந்த உறவினர், இது என்னடா இவ்வளவு பெரிசா ஏர்போர்ட்(?!) மாதிரி கட்டி வெச்சிருக்கான் என்று கேட்டது நினைவில் இருக்கிறது.
மணிமண்டபம் பகுதியில் இருந்து மீண்டும் புறநகர்ப்பகுதியில் ஐந்து கிலோமீட்டர் தூரம் சென்ற பிறகுதான் தற்போதைய புதிய பேருந்து நிலையத்துக்குள் நுழையும்.
ஆனால் தற்போதைய நிலவரம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. திருச்சி, புதுக்கோட்டை சாலை பிரிவையும் தாண்டி மாநகர எல்லைகள் எங்கோ சென்று கொண்டிருக்கிறது.
திருவாரூரின் நிலையும் இப்போது இருப்பதை விட கண்டிப்பாக நிறைய மாற்றம் பெறும்.
திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் தற்போதைய சவால்கள்:
மன்னார்குடி, திருச்சி, தஞ்சை, வேளாங்கண்ணி பேருந்துகள் நிற்கும் தெற்குப் பகுதியில் கடைகளே இல்லாமல் ஒரே ஒரு உணவு விடுதியும், பயணிகள் ஓய்வறைகளுமாக இருப்பதால் இரவில் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற மனநிலையை தருகிறது.
அந்தப்பகுதியில் எந்த பேருந்துகள் நின்றாலும், புறநகர் காவல்நிலையத்தின் அதிகமான கண்காணிப்பு இருக்க வேண்டியது பேருந்து நிலையத்தின் தென்பகுதியில்தான்.
வேண்டுமென்றால் புறக்காவல் நிலையத்தை அங்கே அமைத்துவிட்டு, பேருந்து நிலைய நுழைவாயிலிலும் எல்லா பிளாட்பாரங்களிலும் புறக்காவல் நிலையம் தென்பகுதியில் இருக்கிறது என்று அறிவிப்பு பலகை வைத்து விடலாம்.
திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தெற்குவீதி, கமலாலயம், மின்சாரவாரியம், கல்லுப்பாலம், புதிய பேருந்து நிலையம், விளமல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக மருத்துவக்கல்லூரிக்கு இரண்டு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.
அதேபோல் ரயில்வேமேம்பாலம், புதிய பேருந்து நிலையம், கல்லுப்பாலம் வழியாக இரண்டு பேருந்துகள் மருத்துவக்கல்லூரிக்கு இயக்கப்பட வேண்டும். தேவையைப் பொறுத்து ஒன்றிரண்டு பேருந்துகள் கூடுதலாக இயக்கிக் கொள்ளலாம்.
இது சரியாக நிறைவேற்றப்பட்டாலே பொதுமக்களில் பெரும்பாலானோரது பிரச்சனை தீர்ந்து விடும்.

No comments:

Post a Comment